privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்ஐஸ்வர்யா ராயும் அன்னையர் தினமும் !

ஐஸ்வர்யா ராயும் அன்னையர் தினமும் !

-

ம்மா என்ற உணர்வை உலகுக்கு உணர்த்திய தாயே” இது ஜெயலலிதாவை தினமும் கும்பிடும் அடிமை அமைச்சர்கள் வாசகம். இதுல ஏதாவது அர்த்தம் இருக்கா? அதுபோலத்தான் அன்னையர் தினம் கொண்டாடும் சீமாட்டிகளின் செயல்பாடும் அதை கொண்டாடும் ஊடகத் துறை நிலைப்பாடும்!

இந்த வருடம் (2016) மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக ஊடகங்கள் கொண்டாடிய வேளையில், அன்னையர் தின சிறப்பு செய்தியாக 2015-ம் ஆண்டில் தி இந்து தமிழ் நாளிதழில் வந்த ஒரு கட்டுரையை பார்க்க நேர்ந்தது.

கொழு கொழு குழந்தையும் மொழு மொழு அம்மாவுமாக மதர் ஹார்லிக்ஸ் விளம்பரம்
கொழு கொழு குழந்தையும் மொழு மொழு அம்மாவுமாக மதர் ஹார்லிக்ஸ் விளம்பரம்

தாய்மார்களின் தியாகத்தை போற்றுவதுதான் அன்னையர் தினம்; அப்படிபட்ட புனிதமான இந்தினத்தை வியாபாரமாக்கி விட்டார்கள் என்ற வருத்தத்தோடு கால் பக்க சிறப்புக் கட்டுரையையும் முக்கால் பக்கம் கொழு கொழு குழந்தையும் மொழு மொழு அம்மாவுமாக மதர் ஹார்லிக்ஸ் விளம்பரத்தையும் சேர்த்து கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். அது கட்டுரையா விளம்பரமா என்று இனம் காண முடியாத வடிவமைப்பு!

மேலும், தாய்மையின் புனித சின்னமாக ஐஸ்வர்யா ராயை சொல்லி இருந்தார்கள். குழந்தை வளர்ப்பில் அவர் காட்டிய அக்கறையும் பொறுப்பும் ஐஸ்வர்யா ராயின் தியாகத்தை எடுத்துக் காட்டுவதாக கூறியிருந்தார்கள். தமிழகத்து தாய்மார்கள் அனைவரும் ஐஸ்வரியா ராய்யின் தாய்மை உணர்வை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த செய்தியின் கரு.

விறகடுப்புல ஊதாங்குழலோடு ஊதி ஊதி மூக்குல சளியோடு ஒழுகி ஒழுகி பச்சைக் குழந்தைக்காக பால் காய்ச்சும் வேலையெல்லாம் ஐஸ்வர்யாவுக்கு தெரியுமா? கற்ப்பம் தரித்தது முதல் பிள்ளை பேறு நடக்கும் வரை நொடிக்கொருதரம் ஐஸ்வர்யாவுக்கு எத்தனை வேலைக்காரர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? எண்ணிப் பார்த்தால் கற்பனைக்கு எட்டாது நமக்கு. பிள்ளை மேல் ஆசை வரும்போது கொஞ்சுவதும், அந்தக் கொஞ்சலை மற்றவர்கள் அறியவேண்டுமென அலங்காரத்துடன் குழந்தையை கேமரா முன் தூக்கிப் பிடித்து போஸ் கொடுப்பதை தவிர அந்த குழந்தைக்கு என்ன செய்திருப்பார் ஐய்வர்யா?

குழந்தை பசிக்கி அழுதா? தூக்கத்துக்கு அழுதா? உடல் நோவுக்கு அழுதான்னு ஐஸ்வர்யாவுக்கு தெரியுமா?
குழந்தை பசிக்கி அழுதா? தூக்கத்துக்கு அழுதா? உடல் நோவுக்கு அழுதான்னு ஐஸ்வர்யாவுக்கு தெரியுமா?

குழந்தை பசிக்கு அழுதா? தூக்கத்துக்கு அழுதா? உடல் நோவுக்கு அழுதான்னு ஐஸ்வர்யாவுக்கு தெரியுமா? தூக்கத்தில எழுந்து ஒண்ணுக்கு, கக்கா போன குழந்தைக்கி ஈரத் துணி மாத்தி  வேற சட்ட போட கண்ணு முழிக்குமா அந்தம்மா? குஷன் மெத்தையில ஈரம் படாத டயப்பர் கட்டி ஏசி ரூமுல சினுங்குன சத்தத்துக்கு பல வேலைக்காரர்கள் காத்திருக்க இத்தனை ஆள் ஜனத்துக்கு மத்தியில தூங்குற குழந்தைக்கி இந்த அம்மா என்னத்த தியாகம் பண்ணிச்சு? அந்த குழந்தைக்காக கண்ணு முழிச்சு வேலை செய்யுற வேலைக்கார அம்மாதான் தியாக அற்பணிப்பு உள்ளவர். ஆனா அவரையெல்லாம் ஊடகங்கள் பாக்காது! என்ன இருந்தாலும் மேக்கப்போ, கிளிசரினோ இல்லாத முகமாச்சே!

பத்திரிகையில படிச்ச ஒரு செய்தி ஞாபகத்துக்கு வருது. கொடுங்கையூரைச் சேர்ந்த மணிகண்டன் – அமுதா-ன்னு பாதையோர கூலி தொழிலாளி தம்பதிங்க, அவங்களோட பத்து வயசு ஆண் பிள்ளைய பாதுகாப்பா வளர்க்க தனியார் காப்பகத்துல சேத்துருக்காங்க. அந்த காப்பகத்துல ஏதோ விசப்பூச்சி கடிச்சி அவுங்க பிள்ளைய அரசு மருத்துவமனையில சேத்தும் சிகிச்சை பலனில்லாம இறந்து போயிருச்சாம்.

அரை வயிரு கால் வயிறு கஞ்சி குடிச்சுட்டு வெயில்லையும் மழையிலயும் சென்னையின் சாக்கட நாத்துல உள்ளங்காலையும் விட்டு வைக்காத கொசுக்கடியில யாருக்காக வாழ்க்கையை அற்பனித்தார்கள்.
அரை வயிரு கால் வயிறு கஞ்சி குடிச்சுட்டு வெயில்லையும் மழையிலயும் சென்னையின் சாக்கட நாத்துல உள்ளங்காலையும் விட்டு வைக்காத கொசுக்கடியில யாருக்காக வாழ்க்கையை அற்பணித்தார்கள்?

பாதையோர வாழ்க்கை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த வறுமையில கூட பிள்ளைய பாதுகாப்பான எடத்துல காசு கொடுத்து தங்க வச்சு நல்லா படிக்க வைக்க தன் சக்திக்கும் மீறி செலவழித்து, பாசத்தோடு வாழ்ந்தவங்க இன்னைக்கு பிள்ளையை பறி கொடுத்துட்டு நிக்குறாங்க.

அரை வயிரு கால் வயிறு கஞ்சி குடிச்சுட்டு வெயில்லையும் மழையிலயும் சென்னையின் சாக்கட நாத்தத்துல உள்ளங்காலையும் விட்டு வைக்காத கொசுக்கடியில பிள்ளையாவது நல்லா வரட்டுமுன்னு கனவு கண்டாங்க! இனி அவுங்களுக்கு யாரு ஆறுதல் சொல்வாங்க? இல்லாதப்பட்டவனோட பாசத்தையும், கஷ்டத்தையும் புரிஞ்சிக்கிறதுக்கு ஐஸ்வர்யா படத்த போடுறவங்களுக்கு முடியவே முடியாது.

எனக்கு தெரிஞ்சு எங்கூர்ல யசோதான்னு 12-வது படிச்சுட்டு இருந்த பொண்ண கட்டிக் கொடுத்தாங்க. அவளும் கையில பிள்ளையோட இருக்கும் போது மறுவருசமே ஆம்படையான் இன்னொருத்தியோட ஒதுங்கிட்டான். கிட்டத்த அவளும் விதவைதான். இன்னைக்கி வருசம் பத்தாச்சு. அரையேக்கர் நிலம், ஒரு பசுமாடு வச்சுகிட்டு, 5000 ரூவா சம்பளத்துக்கு பக்கத்து டவுனுல கடை வேலைக்கு போறா.

அதே டவுனுல யசோதாவோட பிள்ளை ஆங்கிலக் கல்வி படிக்குது. விடியக் காலையில எழுந்து வீட்டு வேலைய முடிச்சுட்டு, பாலை கறந்து டிப்போல கொடுத்துட்டு சமையல முடிச்சு பிள்ளைய பள்ளிக்கூடம் கெளப்பி தனக்கும் ஒரு டப்பாவுல சோத்த அடைச்சு எடுத்துட்டு பிள்ளைய சைக்கிள்ள உக்கார வச்சு மூச்சு முட்ட மிதிச்சுட்டு போகும். பொழுது சாய வீட்டுக்கு வந்து மாட்டுக்கு பசியாத்தி அந்த புள்ள சமச்சு சாப்பிட்டு பிள்ளைக்கி பாடம் சொல்லி கொடுக்கும் போதே தூங்கி விழுந்துருவா. இந்த அசதியும் களைப்பும் யாருக்காக? ஏமாத்துன ஆம்படையானையும், அவனை தட்டிக் கேக்காத சமூகத்தையும் ஒதுக்கிவெச்சுட்டு தன்னோட பிள்ளைய ஆளாக்குறதுக்கு யசோதா படுற பாட்டுல ஊசி நுனியளவாவது ஐஸ்வர்யா ராய் படுவாங்களா?

அம்பத்தஞ்சு வயசை தாண்டிய ஒரு விதவை தாய், 25 வயசு கால் நடக்கமுடியாத மாற்றுத் திறனாளி மகனை பாதுகாக்க படும் பாட்டை பக்கத்துல இருந்து பாத்துருக்கேன். பார்த்தால் எதிரிக்கும் கண்ணுல ரத்தம் வரும். கையும் காலும் செயலிழந்து உக்காந்த இடதை விட்டு நகர முடியாது. கிராமங்கரதால கழிப்பறையும் கிடையாது. தோட்டத்து கொல்லைக்கி தூக்கிட்டு போயி வெளிக்கு போக வச்சு கால் கழுவி, குளிப்பாட்டி பிறகு வீட்டுக்கு கூட்டி வந்து சாப்பாடும் ஊட்டி விடுவாங்க.

இது போக அவனுக்கு முகச் சவரமும் செய்வாங்க. பாக்குறவங்க, கடவுளே அந்த பையன கொண்டுட்டு போயிருன்னு சொல்லுவாங்க. ஆனா அந்த அம்மா, தன்னோட மகன் இப்படி இருக்கானேன்னு அழுவாங்களே தவிர இவ்வளவு சிரமப்பட்றோமேன்னு அலுத்துக்காம பராமரிச்சு அழகு பாப்பாங்க. எனக்கு அவன விட்டா வேற யாரு இருக்கான்னு சொல்லுவாங்க. தாய்மையின் சின்னம் ஐஸ்வர்யா அம்மா அவங்க புள்ளையோட கக்காவை தொட்டிருப்பாங்களாங்கறதே சந்தேகம்தான்!

எனக்கு அவன விட்டா வேற யாரு இருக்கான்னு சொல்லுவாங்க.
எனக்கு அவன விட்டா வேற யாரு இருக்கான்னு சொல்லுவாங்க – மாதிரிப் படம்

பூங்கோதைன்னு ஒரு அம்மா, 50 வயசு ஆகுது.  பொண்ணோட காதல் கல்யாணத்த போன மாசம் செஞ்சு முடிச்சாங்க. காதலை அவ்வளவு எளிதில் ஏத்துக்காத ஒரு ஆதிக்க சாதியைச் சேந்தவங்க. இந்த கல்யாணத்த எப்படி ஏத்துகிட்டாங்கன்னு வியப்பா இருந்துச்சு. ஆனா அதுக்கு காரணம் அவங்க வாழ்க்கையில அனுபவிச்ச வேதனையும் வலியும் தான்னு பிறகு தெரிஞ்சுது.

அந்த அம்மாவுக்கு கல்யாணம் முடிஞ்சு குழந்தை பிறந்த கொஞ்ச நாள்லையே வேற ஒரு பொண்ணாட தொடர்பு வச்சுகிட்டு தரிகெட்டு போய்ட்டான் புருசங்காரன். குடுமபத்த பாக்காம எல்லா வரவு செலவும் தொடர்பு வெச்சுக்கிட்ட பெண் வீட்டோட வச்சுகிட்டான். மனசு மாற மாட்டானானு காத்துருந்தவங்க ஒரு கட்டத்துல சுயமரியாதையோட முடிவெடுத்தாங்க. இனியும் அவனோட வாழ முடியாதுன்னு சொல்லி சொத்துல பங்கு கேட்டு கோர்ட்டுல கேசு போட்டாங்க. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி புருசனும் செத்துட்டான், கேசும் முடியல. புருசனோட கூடப் பிறந்தவங்க சொத்துல பங்கு குடுக்க விரும்பாம தொந்தரவு கொடுத்தாங்க.

ஆனா விடாம போராடி போன வருச ஆரம்பத்துலதான் (2015) சொத்து இவங்க பக்கம் தீர்ப்பாச்சு. ஆனா 27 வருசமா அவங்க பட்ட அவமானமும் வறுமையும் எப்படியெல்லாம் சித்ரவதை செஞ்சுருக்கும்?ஒரு பொண்ணா நெனச்சு பாத்தா இதயம் நடுங்குது.

பொண்ண படிக்க வச்சு ஆளாக்க களை பறிச்சு, நடவு நட்டு, அறுப்பறுத்து-ன்னு சீசனுக்கு தக்க எல்லா வேலைக்கும் போவாங்க. கறவை எருமை மாடு வச்சு டீக்கடைக்கு பால் கொடுப்பாங்க. இவ்வள கஷ்டப்பட்டு வாழ்ந்த அவங்களுக்கு என்னத்த தந்துச்சு இந்த ஊரும் உறவும்? மனசுக்கு புடிச்சவன கல்யாணம் பண்ணிட்டு மகளாவது சந்தோசமா இருக்கட்டுன்னு தைரியமா பச்ச கொடி காட்டிட்டாங்க அந்தம்மா. மகளுக்காக பனாமா தீவுல கருப்பு பணத்தை சேத்து வச்சு பாடுபடும் ஐஸ்வர்யா அம்மாவும், பூங்கோதை அம்மாவும் ஒண்ணா?

மல்லிகாவுக்கு ரெண்டாவது பொண்ணுக்கு மூளை வளர்ச்சி கிடையாது, சரியா பேச வராது, நடக்கவும் முடியாது. 21 வயசாச்சு. எந்த நல்லது கெட்டதுக்கும் விட்டுட்டு போக முடியாது. 14 வயசுல வயசுக்கு வந்துருச்சு. நல்ல நெலமையில உள்ளவங்களுக்கே மாதவிடாய்  கஷ்டமா இருக்கும். அந்த பொண்ணுக்கு மாத விலக்கு நாட்கள்ல நரக வேதனையா இருக்கும். கொஞ்சம் கவனம் தப்பினாலும் நாப்கீன ரத்தக் கறையோட கையல எடுத்து வச்சுக்கும். ஒரு நாள் ரெண்டு நாள் கிடையாது, ஏழு வருசமா கண்ணு முழிச்சு கைக் குழந்தையப் போல பாதுகாப்பாங்க மல்லிகா அம்மா. ஐஸ்வர்யாவாக்கு ஆயிரத்தெட்டு விதங்கள்ள உதவி செய்யுறதுக்கு ஆளுங்க, பணம் எல்லாம் இருக்கிறதையும், மல்லிகா அம்மா மாதிரி ஏதுமில்லாத அபலைப் பெண்ணுங்களையும் ஒண்ணா ஒப்பிட்டு பாக்க முடியுமா?

தாய்மையின் அற்பணிப்புக்கு அடையாளம் ஐஸ்வர்யான்னு சொல்லுறவுங்க இந்தப் பெண்களை யாருக்கு அடையாளமுன்னு சொல்வாங்க? இவர்கள் மட்டும் அல்ல நம் கற்பனைக்கும் எட்டாத அவலங்களில் எத்தனையோ தாய்மார்கள் பிள்ளைகளுக்காக வாழ்கிறார்கள். நன்றி கொண்டாட்டம் குதுகுலம் எல்லாம் இவர்கள் வாழ்க்கைக்கு பொருத்தமில்லாதது.

எத்தனையோ தாய்மார்கள் தாய்ப்பால் குடுக்க கூட தெம்பில்லாத நிலையில உடம்பை உருக்கி பாலா குடுப்பத பார்த்திருக்கிறோம். பால் இல்லாத மார்பை சும்மா சப்பவிட்டு ஏக்கத்தை மட்டும் போக்கி பசியை போக்க முடியாத நிலையில் தாய்மார்கள் கண்ணீர் சிந்தி தமது ஏழ்மையை சபிக்கும் போது அன்னையர் தினமும் தந்தையர் தினமெல்லாம் அர்த்தமற்றது.

ஒரு நாளை கூட சும்மா விடமாட்டாங்க போலருக்கு. வருசம் பூராவும் எல்லா உணர்ச்சிகள் உறவுகளுக்கு சிறப்பு தினமுன்னு சொல்லி கேளிக்கை பரிசுன்னு வியாபர உலகமா மாத்திட்டாங்க. இந்த உறவுகளோட எதார்த்தம் என்ன, அதுல வறுமையோட இடம் என்ன, அதை மீறி மக்கள் எப்படி உயர்ந்த பண்போடு வாழ்றாங்கங்கறதெல்லாம் எந்த ஊடகமும் புரிஞ்சிக்கிறது இல்ல.

தாய்மையின் அற்பனிப்புக்கு அடையாலம் ஐஸ்வர்யா என்றால் இவர்கள் யார்?
தாய்மையின் அற்பணிப்புக்கு அடையாளம் ஐஸ்வர்யா என்றால் இவர்கள் யார்?

அம்மா என்ற சொல்லை அர்த்தப்படுத்தும் விதமாக சுருக்கமாக கவிதை போல் எழுதி அனுப்புங்கள், சிறந்ததை வெளியிடுவோம் என்கிறது தி இந்து பத்திரிக்கை. ஆனாப் பாருங்க, இந்து பத்திரிக்கை எதிர்பார்க்கிறதை விட நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே ஒரு ‘கவிதையை’ சொல்லியிருக்காங்க.

வினவு தளத்துல “உதவும் கரங்கள்” சேவை நிறுவனத்தை பத்தி ஒரு கட்டுரை போட்டிருக்காங்க. அதுல அந்த நிறுவனத்தை ஆரம்பிச்ச வித்யாகர் சொன்ன ஒரு விசயம் நினைவுக்கு வருது. உதவும் கரங்கள் இல்லத்துல்ல இருக்கும் எய்ட்ஸ் குழந்தைங்களை ஐஸ்வர்யா ராய் பார்க்கறதுண்ணும், அத வைச்சு எய்ட்ஸ் விழிப்புணர்வை ஊட்டுறதுண்ணும் ஒரு திட்டம் போடுறாங்க. ராய் அம்மா உலக அழகி ஆனதுக்கு பிறகு இது மாதிரி இல்லங்களுக்கு விஜயம் செய்யுறதை ஒரு விதியா வெச்சுருக்காங்க, அழகிப் போட்டி நடத்துறவுங்க!

எய்ட்ஸ் குழந்தைங்கள தொட்டு தூக்குறதுக்கு அந்த அம்மாவுக்கு மனசு வரலை. தூக்காம இருந்தாலும் இமேஜுக்கு பிரச்சினை. கடைசியில மருத்துவருங்ககிட்ட கேட்டுகிட்டு தூக்குறதால ஒண்ணும் பிரச்சினை இல்லைன்னு உறுதி செஞ்சுகிட்டு சென்னை வந்தாங்களாம். இத வித்யாகரே அந்த பேட்டியில சொல்லியிருப்பாரு!

ஒரு முன்னுதாரணமான அம்மாவை, ஐஸ்வர்யா ராய் மாதிரி ஆளுங்ககிட்ட பார்க்கவே முடியாது. 26 வயசுல கொல்லப்பட்ட நிகாரகுவா நாட்டைச் சேர்ந்த் போராளி இடானியா தன்னோட குட்டி பொண்ணுக்கு எழுதுன கடிதத்தின் ஒரு பகுதியோட இந்தக் கட்டுரைய முடிக்கிறேன்!

“அன்னை என்பவள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவள் மட்டுமல்ல,
எல்லாக் குழந்தைகளும் தனது கருப்பையிலிருந்து தோன்றியவர்கள் போல,
எல்லா மக்களின் வலிகளையும்
அன்னை என்பவள் நன்கு அறிவாள்.

ஒரு நாள்
நீ
மனித குலத்தின் மீது பேரன்பு கொண்ட
உண்மையாக பெண்ணாக உருவாக வேண்டும்
என்பதே என் விருப்பம்.”

– சரசம்மா

  1. An article awakening the common people to a rude reality. It shows how far removed from reality is our print media even of the regional variety. I wish this was published in the very same paper.

  2. ஆம்! அவ்வப்போது இப்படிப்பட்ட ,மக்கள் மனதைநெருடும் கட்டுரைகள் தேவையே!நல்ல உள்ளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்! ஜெயாவை சாடுவது சரி;அவர் போலி அம்மா! ஆனால் அய்ஸ்வர்யாவின் தாய்மையை கொச்சைப்படுத்துவது தவறு! ஏழையானாலும், பணக்காரரானாலும் தாய்மை உணர்வு ஒன்றுதான்! ஆனால் அதையும் விளம்பரமாக காசாக்கிகொள்ளும் வித்தையை மக்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும்! சென்றவருடம் இரண்டு தாலி கட்டி கொண்ட நடிகைக்கு ரெட்டை வருமானம், டி வி ஒளிபரப்பு உரிமைக்கு காசு வாங்கிகொண்டு மக்களை மகிழ்வித்தார்கள்!

    வியாபாரநோக்கத்துடன் கொழு கொழு குழந்தையை காட்டி உண்மைக்கு புறம்பான வாக்குறுதி அளிக்கும் விளம்பரங்களை தடைசெய்யலாம்! மக்கள்தான் ஏமாளிகளாயிற்றே ! அண்மையில் திருச்சி பேருந்தில் ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தைக்கு வெளினாட்டு கலர் பானம் வாஙகி கொடுத்தார், உடம்புக்குநல்லதுங்க என்றார் என்னிடம்! அதன் கெடுதல்களை,நான் எவ்வளவோ சொல்லியும் அவர்நம்பவில்லை ! காணொளி விளம்பரங்களின் தாக்கம் புரிகிறதா?

Leave a Reply to Venkat பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க