privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்நீதிமன்றம் வேலைக்காகாது - தி இந்துவுக்கும் நீதிபதி சந்துருவுக்கும் புரிய வைத்த உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் வேலைக்காகாது – தி இந்துவுக்கும் நீதிபதி சந்துருவுக்கும் புரிய வைத்த உயர்நீதிமன்றம்

-

தி இந்துவும் நீதிபதி சந்துருவும் டாஸ்மாக் விசயத்தில் மழுப்புவது ஏன்?

மிழ்நாடெங்கிலும் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று போர்க்குணமிக்க போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். தமிழக அரசோ கடையை திறந்தே தீருவேன் என்று கலெக்டர் முதல் தலையாரி வரை, போலீசு ஏவல் படையோடு அலைகிறது!

நெடுஞ்சாலை, பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் அருகில் டாஸ்மாக் கடை இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கு இங்கு ஒரு நாதியும் இல்லை! போதாக்குறைக்கு போராடும் பெண்களை அடக்குவதற்கு சிறப்பு அனுமதி வேண்டும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறது!

நீதிமன்றம், சட்டமெல்லாம் மக்களை ஒடுக்குவதற்குத்தான் என்பதை நாம் பிரச்சாரம் செய்வதற்கு முன்பே இதுபோன்ற சில தருணங்களில் அரசே முந்திக் கொள்கின்றன! ஆனால் இப்படிப்பட்ட அரசிடம் முடிந்த வரை நியாயமாக போராடிப் பார்க்க வேண்டும், நீதிமன்றங்களிடம் மக்கள் நலனை எடுத்துச் சொல்லி நீதியைப் பெற முடியும் என்று தி இந்து பத்திரிக்கையும் நீதியரசர் சந்துருவும் நினைக்கின்றனர்.

தி இந்துவின் மூத்த பத்திரிக்கையாளர் டி.எல். சஞ்சீவ் குமார் அவர்கள் இங்குள்ள அரசு, காவல் துறையின் அட்டூழியங்களைப் பார்த்துவிட்டு மக்களை, குறிப்பாக இளைஞர்களை கிராமப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்த சொன்னார். அரசை குறை கூறுவதை விட்டுவிட்டு கீழிருந்து உள்ளாட்சிக்கு நல்லவர்கள் வந்தால் இந்த அமைப்பை திருத்திவிடலாம் என்று கருத்து கூறினார். எடுத்துக்காட்டாக கிராம சபையைக் கூட்டி மக்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை இங்குள்ள அதிகார வர்க்க அமைப்புகளால் எதிர்க்க முடியாது, சட்ட பாதுகாப்பு உண்டு என்று கூறினார்.

அந்த கிராமசபை தீர்மானம் குறித்த வரலாற்றை நீதியரசர் சந்துரு விளக்குகிறார்:

“மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த கிராமமான கலிங்கப் பட்டியில் மதுக்கடையை மூடவைத்த பெருமை அங்குள்ள மக்களுக்கு உரித்தாகும். அந்த கிராமத்தின் கிராம சபை கலிங்கப்பட்டியில் மதுக்கடை வேண்டாமென்று தீர்மானம் நிறைவேற்றிய அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கூறி அந்த மதுக்கடைக்கு மூடுவிழாவிற்கான தீர்ப்பை அளித்தது. அந்த அடிப்படையிலேயே ஏற்கெனவே பல தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கியிருந்தது. (உதாரணம்: வடமலபுரம் கிராமம் 2013).

ஆனால் கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளை நீர்த்துப்போக செய்துவிட்டது. சில்லறை மதுபானக்கடைகளை அமைப்பதற்கான விதிகளின் கீழ் டாஸ்மாக் நிர்வாகம் எங்கு வேண்டுமானாலும் மதுக்கடை களை அமைத்துக் கொள்ளலாம் என்றும், கிராம சபைகளுடைய தீர்மானங்கள் கடைகள் அமைப் பதைக் கட்டுப்படுத்த முடியா தென்றும் தீர்ப்பளித்துள்ளது. இது மது ஒழிப்பிற்காகப் போராடும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.”

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு டி.எல். சஞ்சீவ் குமார் உருவாக்கிய உள்ளாட்சியின் மகிமையை ஒரே நொடியில் உளுத்துப்போகச் செய்துவிட்டது! இனி என்ன செய்தாலும் இந்த அரசு அமைப்பிற்குள் இருந்துகொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற முடியாது என்பது எதார்த்தமாக இருக்கிறது. இல்லை இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லவேண்டும் என்று சஞ்சீவ்குமார் சொல்வாரா தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் செலவு செய்து வழக்கு நடத்தும் அளவுக்கு கிராம சபைகள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என அவர் சொல்லமாட்டார். இது எங்களது பணிவான ஊகம் மட்டுமே!

கிராமங்களில் ஒரு சொலவடை புழக்கத்தில் உண்டு. பாலியல் கனா கண்டவன் வெளியே சொல்லமாட்டான் என்பார்கள். ஆனால் தி இந்து அப்படியல்ல. அரசைப் பற்றிய தான் உருவாக்கிய கவர்ச்சி கரைந்துவிடக் கூடாது என்பதில் ‘ஏன் இப்படி ஒரு தீர்ப்பு?’ என்று நீதியரசர் சந்துருவிடம் ஒப்பாரி வைத்திருக்கிறது [1].

நீதிபதி சந்துரு

நீதிபதி சந்துரு அவர்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பார்த்துவிட்டு ‘மதுக்கடைகளை சட்டப்படி ஒழிப்பது எப்படி?’ என்று தான் எழுதிய கையேட்டை கிழித்து கீழே போடுவதைத் தவிர வேறுவழியில்லை என்று கூறியிருக்கிறார்.

“சில்லறை வர்த்தக மதுபானக் கடைகளை எந்த இடத்தில் அமைக்கலாம் என்பதை இறுதியாக செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது” (அதாவது கிராம சபைக்கு இல்லை) என்று இரட்டை ஆட்சியின் தன்மையை போட்டுடைக்கிறார். இந்த தீர்ப்பு சட்டப்படி சரிதான் என்றாலும் தார்மீக ரீதியில் அதாவது மக்கள் நலனை கருத்தில் கொண்டு பார்த்தால் சரியில்ல என்பதாக கூறுகிறார்.

“உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பு மக்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு விரோதமாக உள்ளது” என்று வேறு விளக்குகிறார். அதாவது இங்குள்ள அரசு அமைப்புகள் தோற்றுப்போனது மட்டுமல்ல சீர்குலைந்து மக்களுக்கு எதிராக போய்விட்டது என்று கட்டமைப்பு நெருக்கடிக்கு விளக்கம் தருகிறார்.

“மக்கள் நீதிமன்றங்களை வெகுவாக நம்பியிருக்கிறார்கள். அந்த நிலை மாறிவிடுமோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறும் சந்துரு அவர்கள் நீதிமன்றங்களை நம்பி பயனில்லை, சட்டப்பேரவைகளை நாடுங்கள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.

இறுதியில் உள்ளாட்சிக்கு அதிகாரம் இல்லை என்று பத்திரிக்கையாளர் டி.எல்.சஞ்சீவ் குமாரும் நீதிமன்றங்களை நம்பிப் பயனில்லை; அது மக்களுக்கு விரோதமாக இருக்கிறது என்று சந்துரு அவர்களும் யதார்த்தமாக அறிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்களுக்குத்தான் நேரமில்லை. அதிகாரத்தை தாங்களே கையிலெடுத்து டாஸ்மாக்கை ஒழிக்காவிட்டால் வேறு வழியில்லை என்பதை உணர்ந்து களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர்!

செய்தி ஆதாரம்:

தீர்ப்புகளுக்குப் பின்னால் சமூக பார்வையும் மக்கள் நலனும் முக்கியம்!- ‘டாஸ்மாக்’ கடை தொடர்பான தீர்ப்பு குறித்து நீதியரசர் சந்துரு கருத்து