Saturday, May 3, 2025
முகப்புசெய்திபா.ஜ.க ஆட்சியில் கொலைகள் - குற்றங்கள் அதிகரிப்பது ஏன் ?

பா.ஜ.க ஆட்சியில் கொலைகள் – குற்றங்கள் அதிகரிப்பது ஏன் ?

-

டந்த எட்டாண்டுகளில் மாட்டை முன்வைத்து நடந்த வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களில் சுமார் 51 சதவீதம் பேர் முசுலீம்கள். இந்த எட்டாண்டுகளில், மோடி ஆட்சிக்கு வந்த கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சுமார் 97 சதவீத வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன – மொத்தம் 63 கொலைகள். நடந்த கொலைகளில் சரிபாதி பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களிலேயே நடந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் தவிர சுமார் 124 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர் – சென்னை ஐ.ஐ.டியில் தாக்கப்பட்ட மாணவர் சூரஜ் உட்பட.

மாட்டை முன்வைத்து நடந்த வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களில் சுமார் 51 சதவீதம் பேர் முசுலீம்கள்

மேற்படி புள்ளிவிவரங்களை இந்தியாஸ்பெண்ட்ஸ் எனும் இணையதளம், ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சேகரித்துத் தொகுத்துள்ளது. இந்தி உள்ளிட்ட பிற வட்டார மொழி ஊடகங்களில் வெளியான செய்திகள், ஊடகங்களின் கவனத்துக்கு எட்டாத சம்பவங்கள் மற்றும் பாரதிய ஜனதா ஆளும் மாநில போலீசாரால் பதிவு செய்யவே படாத வழக்குகளையும் கணக்கில் கொண்டால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சில நூறாவது இருக்க வேண்டும்.

மத்தியில் பாரதிய ஜனதாவின் ஆட்சி அமைந்த பின் பொதுவில் வன்முறைகளின் எண்ணிக்கை அச்சமூட்டும் அளவுகளில் உயர்ந்துள்ளது; குறிப்பாக முசுலீம்களுக்கும், தலித்துகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடக்கும் வன்முறைகளின் எண்ணிக்கை அபாயகரமான எல்லைகளைக் கடந்துள்ளது. முந்தைய ஆட்சிக் காலங்களிலும் இது போன்ற வன்முறைகள் உண்டு தானெனினும், வன்முறையில் ஈடுபடுவோருக்கு அரசு பாதுகாப்பு இருந்ததில்லை. பாரதிய ஜனதா ஆட்சியில் அதிகாரத்தின் துணை கிடைத்திருப்பதோடு, சிதறிக் கிடந்த ரவுடி கும்பல்கள் ஹிந்து யுவவாகினி, கோரக்சக் தள் போன்ற இயக்கங்களின் கீழ் அமைப்பு ரீதியில் ஒன்று திரட்டப்பட்டுள்ளனர்.

இது போன்ற இயக்கங்களுக்கு மேலிருந்து கீழ் மட்டம் வரையில் போலீசு மற்றும் அரசு அதிகார வர்க்கத்தின் ஆதரவு இருப்பதால், ஊடகங்களில் செய்தி வெளியாவதையோ, பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டிப்பதையோ பற்றிக் கொஞ்சமும் தயக்கமின்றி தொடர்ந்து கொலைச் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

கடந்த மாதம் ஜெவாரில் இருந்து புலந்ஷாகர் நோக்கி எட்டுப் பேர் கொண்ட குடும்பம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. அவர்கள் பயணித்த வாகனத்தின் சக்கரத்தை பஞ்சர் ஆக்கித் தடுத்து நிறுத்திய ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று, அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது. துப்பாக்கி முனையில் ஆண்களை கட்டிப் போட்ட அந்த கும்பல், நான்கு பெண்களைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் வட இந்திய சுற்றுப் பயணம் சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த தம்பதியினரை காஸியாபாத் அருகே சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதையெல்லாம் தடுக்க வேண்டிய காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?

காவல் துறையைக் கொண்டு தான் ரோமியோ எதிர்ப்புப் படை ஒன்றை கட்டியுள்ளார் பாரதிய ஜனதா முதல்வர் ஆதித்யநாத்

காவல் துறையைக் கொண்டு தான் ரோமியோ எதிர்ப்புப் படை ஒன்றை கட்டியுள்ளார் பாரதிய ஜனதா முதல்வர் ஆதித்யநாத். இந்த படையின் பிரதான பணி, எங்கே யார் காதலிக்கிறார்கள் என்பதை மோப்பம் பிடித்துத் திரிவது. கடந்த 27ம் தேதியன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஆதித்யநாத், ரோமியோ எதிர்ப்புப் படை உருவாக்கப்பட்ட பின் உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வரின் அறிவிப்பு காலை பத்து மணிக்கு வெளியாகிறது; அதற்கு இரண்டு மணி நேரம் கழித்து அதே உத்திர பிரதேசத்தில் ஹிந்து யுவ வாகினி அமைப்பைச் சேர்ந்த மூவர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்படுகின்றனர். இதற்கு முன் விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் பர்தா அணிந்து கொண்டு இசுலாமிய பெண்களிலிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

மொத்தத்தில் ஆதித்யநாத்தின் வருகைக்குப் பின் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்ன? இதற்கான பதிலை அந்தக் கட்சியைச் சேர்ந்தவரின் வாயிலிருந்தே கேட்கலாம்.

“ஆபத்தான லட்சக்கணக்கானவர்களைக் கொண்ட படை ஒன்று எங்களைப் பின் தொடர்கின்றது, இந்தப் படை எங்கள் கட்டுப்பாட்டிலேயே இல்லை” என்கிறார் முக்தேஷ்வர் மிஷ்ரா. இவர் உ.பி பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர். உத்திர பிரதேசத்தில் பாரதிய ஜனதாவின் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆற்றிய பங்கு குறித்து நியூஸ்லாண்ட்ரி இணைய பத்திரிகை நடத்திய இரகசியப் புலனாய்வில் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்படி புலனாய்வின் போது பொதுவாக அரசின் மேல் அதிருப்தியுடன் இருந்தவர்களை தங்களது அணியைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக மதவெறியூட்டி மூளைச் சலவை செய்தோம் என்றும், அவ்வாறு மூளைச் சலவை செய்தவர்களைக் கொண்டு சமூகத்தில் சிறுபான்மை வெறுப்பை விதைத்தோம் என்பதையும், அதைக் கொண்டு தேர்தல் வெற்றிகளை எவ்வாறு அறுவடை செய்தோம் என்றும் விரிவாக எடுத்துரைக்கிறார்.
மிஷ்ரா இந்துத்துவ அரசியல் அமைப்பின் கீழ்மட்டத்தில் இருப்பவர். எதார்த்தத்தில் இந்துத்துவ அரசியலால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் “கைமீறிச் சென்று விட்டார்கள்” என்பதல்ல பிரச்சினை. உண்மையில் இவர்கள் “கைமீறிச்” செயல்பட வேண்டும் என்பதே இந்துத்துவ கும்பலின் நோக்கம். அதாவது, தொடர்ந்து சமூகத்தை சிறிதும் பெரிதுமான வன்முறைச் சம்பவங்களின் மூலம் பதற்றத்தில் வைத்திருப்பது, மேலும் பதற்றத்தில் உள்ள சமூகத்தை மதரீதியில் பிளந்து “இந்து” ஓட்டுக்களை அறுவடை செய்வது என்பதே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் உத்தி.

இதே உத்தியைத் தான் நாடெங்கும் வெவ்வேறு வடிவங்களில் அமல்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா பிரமுகர் கடந்த 22ம் தேதி அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்படுகின்றார். அறிவாள் வெட்டு விழுகின்றது. இதற்காகவே காத்திருந்ததைப் போல் ஹெச்.ராஜா தாக்கியவர்கள் முசுலீம்கள் என்று அறிவிக்கிறார். அக்கட்சியின் குஞ்சு குளுவான்களான கே.டி ராகவன், கல்யாண் ராமன் போன்றவர்கள் தமிழ்நாட்டில் தாலிபான்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டது என்று கொளுத்திப் போடுகின்றனர்.

தமிழக பாரதிய ஜனதாவின் பார்ப்பன கோஷ்டி தங்கள் ஆவர்தனத்தை ஆரம்பித்து கலவரத்துக்காக வாயில் ரத்தம் ஒழுக காத்திருந்த வேளையில், சூத்திர கோஷ்டியைச் சேர்ந்த தமிழிசை சௌந்திரராஜனோ ‘தாலிபான்களுக்கு’ எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவிக்கிறார். இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்டவர்களை கடந்த 27ம் தேதி போலீசார் கைது செய்கின்றனர் – பிடிபட்ட குற்றவாளிகள் நால்வரும் இந்துக்கள். தனிப்பட்ட பகையின் காரணமாகவே தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது போலீசு விசாரனையில் தெரியவந்துள்ளது.

மொத்தத்தில் நாடு முழுவதையும் மதரீதியான பதற்றநிலையில் வைத்திருக்கும் தங்களது உத்தியை தீவிரப்படுத்தியுள்ளது இந்துத்துவ கும்பல். தமிழகத்தில் ஓரளவுக்கு ஜனநாயக உணர்வு மிச்சமிருப்பது ஹெச். ராஜா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பாம்புகளின் விருப்பத்திற்கு தடையாக உள்ளது. எனினும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் முறியடிக்காதவரை தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவு இல்லை என்பது மட்டும் உறுதி.

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க