privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி

வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி

-

வர்கள் எங்களிட மிருந்து மரங்களைப் பறித்துக் கொண்டார்கள்; மீன்களை அள்ளிக்கொண்டார்கள் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள், பூமி எல்லைகளையே சுரண்டி எடுத்துவிட்டார்கள். பழங்குடி விவசாயிகளின் மண் உரிமை பறிக்கப்பட்ட போது அவர்கள் நெஞ்சிலிருந்து வெடித்த வேதனை இது. சந்தால் பழங்குடிகளுக்கோ இதே போன்ற வேதனை ஆழமானது. நெடுங்காலம் வெட்டிய இடத்திலேயே வெட்டி ரணம் பாய்ந்த வேதனை. 1855-இல் இந்த வேதனைகளுககெல்லாம் அவர்கள் ஓர் விடிவைக் கண்டார்கள், அதுவே சோட்டா நாக்பூர் பிராந்தியமே கிடுகிடுத்த சந்தால் எழுச்சி ஆயுத எழுச்சி

***

Attack_by_600_Santhals_upon_a_party_of_50_sepoys,_40th_regiment_native_infantry
சோட்டா நாக்பூர் பிராந்தியமே கிடுகிடுத்த சந்தால் எழுச்சி ஆயுத எழுச்சி

இந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய பழங்குடி இனம் பீகார் சந்தால் இனம், எல்லாப் பழங்குடிகளையும் போலவே அவர்கள் தங்கள் பாரம்பரிய வீடு போல காட்டை மதித்தார்கள். அதுவே அவர்களின் பிறந்த வீடு; அவர்களின் தொட்டில்; தாய்மடி; அடர்ந்த காடுகளில் எதிரொலிக்கும் எந்தச் சிறு ஒலியும் அவர்களுக்குத் தெரியும், பறவை, செடி, கொடி, விலங்கு, பூச்சிகள் அனைத்தும் தெரியும், காடும் அவர்களை நேசித்து அவர்களுக்கு எல்லாம் கொடுத்தது, தாய் போல – தாலாட்டியது, சீராட்டியது;

சந்தால் கிராமங்களில் உள்ள விளை நிலங்களை எந்த ஒரு தனிநபரும் தனிச் சொத்தாகப் பார்த்ததில்லை; எல்லாருக்கும் பொதுவானது அந்தச் சொத்து. பங்கீடு, மறுபங்கீடு எல்லாம் சந்தால் கிராமப் பஞ்சாயத்துதான் செய்யும். இந்த மரபுகளை அத்துமீறி மிதித்து நசுக்கி அவமதித்து உடைத்துப் போட்டது கிழக்கிந்தியக் கம்பெனி. ஒரே ஒரு சட்டம் போட்டு ஜமீன்தாரி முறையை கிராமங்களில் திணித்தது. இதன்படி மாவட்டங்கள், தாலுக்காக்கள், கிராமங்கள், பழங்குடி வாழும் பகுதிகள் எல்லாவற்றையும் தனியார் சொத்துக்களாக ஜமீன்தார்களுக்கு மாற்றிக் கொடுத்தது.

வரி வசூலிப்பதிலிருந்து தொடங்கி எல்லா அதிகாரங்களும் பிரிட்டிசாரால் ஜமீன்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பிரிட்டிசார் வருவதற்கு முன்னால் வரிகள் தானியமாகச் செலுத்தப்பட்டன, இப்போது பணம் திணிக்கப்பட்டது; பணத்தின் தேவையை ஒட்டி நில விற்பனை, அடகு, நிலம் கை மாறுதல், இருப்பு போன்றவை வழக்கத்தில் புகுத்தப்பட்டன. வியாபாரியும், வட்டிக் கடைக்காரனும் கடன் கொடுத்தார்கள். இதுவரை சந்தால்கள் சந்தித்தேயிராத சட்ட விசயங்களும், அதிகார வர்க்கமும் பேய்களாக வந்து நின்று அச்சுறுத்தின. பயிரிடும் விவசாயிக்கும் ஜமீனுக்குமிடையே ஒரு நூறு இடைத்தரகர்கள் உருவானார்கள்.

இதுவரை தனது சொந்த ரத்த பாசங்களோடு மட்டுமே வாழ்ந்த சந்தால்களின் மத்தியில் அந்நியர்கள் ஊடுருவினார்கள்; அவர்களை எதிரிகள் என்றார்கள் சந்தால்கள்.

மொத்தத்தில் பழங்குடிகளின் தாய்ப்பூமியை அவர்களிடமிருந்து பிரித்துவிட்டார்கள். அண்டவந்த ஜமீன்கள் நிலங்களைப்பிடுங்கிக் கொண்டு சந்தால்களைக் காட்டுக்குள் விரட்டினார்கள். சந்தால்கள் புதிய இடங்களில் காட்டை எரித்து விளைநிலங்களை உருவாக்கினார்கள். மீண்டும் ஜமீன்கள் கம்பெனிப் படையின் துணையோடு வந்து அந்த இடத்தையும் பறித்துக் கொண்டார்கள். பலமுறை விரட்டப்பட்ட சந்தால்கள் ஏறக்குறைய கங்கையின் கரைக்கே வந்து விட்டார்கள்.

”சந்தால்கள் சாதுவானவர்கள்; ஒரு பகுதியிலிருந்து விரட்டினால் இன்னொரு இடத்துக்குப் போய் வாழ்ந்து கொள்வார்கள்” என்று ஜமீன்கள் எடை போட்டதை உடைத்தெறியத் தொடங்கிய போதுதான் உண்மையான சந்தால்களை அவர்கள் சந்தித்தார்கள்.

***

times1855
காடும் அவர்களை நேசித்து அவர்களுக்கு எல்லாம் கொடுத்தது, தாய் போல – தாலாட்டியது, சீராட்டியது;

பழங்குடிக்குச் சம்பந்தமேயில்லாத ஆட்கள் ஜமீனின் எடுபிடிகளாக ‘வரியைக் கொடு’ என்ற கட்டளையோடு வந்தார்கள், வரியைக் கட்ட காசு இல்லை என்று கைவிரித்தபோது வலுவந்தமாகச் சந்தால்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஜமீன்களின் கட்டில்களுக்குப் பழங்குடிப் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள், கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டார்கள். இணங்க மறுத்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். படிப்பறிவற்ற சந்தால்களிடமிருந்து 50 முதல் 500 மடங்கு வரை அநியாயக் கந்துவட்டி கறந்தார்கள். சந்தைகளில் போலி எடைகளை வைத்து ஏமாற்றிக் கொள்முதல் நடத்தினார்கள்; ஏழை சந்தால் நிலங்களுக்குள்ளே அத்து மீறி மாடு, குதிரை, யானைகளை இறக்கிப் பயிர்களை அழித்தார்கள்; மோசடிக் கடன் பத்திரங்களில் கைநாட்டு வாங்கி சந்தால் குடும்பங்களைப் பரம்பரைக் கொத்தடிமையாக்கினார்கள். இவை ஜமீனின் ஆதிக்க அடையாளங்கள்.

சவுக்கார்கள் – இவர்களுக்கும் உழைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; இவர்களது பிழைப்பும் மண்ணை நம்பியில்லை. பணமே அவர்களின் கடவுள், ஆடே இல்லாமல் ஆடு வியாபாரம், மாடே இல்லாமல் மாட்டு வியாபாரம் செய்து விடுவார்கள். பயிர், கால்நடை, சந்தால் குடும்பங்களையே கூட வட்டிப் பணத்துக்கு ஈடுகட்டுவர்கள், வட்டிப் பணமே அவர்களின் கடவுள், வெற்றுத் தாளை முன்னால் வைத்துக் கொண்டு மணிக்கணக்காகக் கணக்குப் போட்டு வட்டியை விரித்துப் பெரிதாக்குவார்கள். இவர்கள் அனைவரும மொய்ரா, பனியா, போஜ்பூரி, பட்டியா, வங்காளி வியாபாரக் குடும்பங்கள் வந்தேறிகள்; இவர்கள் ஏராளமான எண்ணைய் வித்துக்கள், கடுகு ஆகியவற்றை மோசடிக் கொள்முதலில் பறித்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் தரகர்களாக மாறினார்கள். இவை சந்தால்களை ஏய்த்த சவுக்கார்களின் சுரண்டல் அடையாளங்கள்.

அரசாங்கம் – ஜமீன், சவுக்கார் இருவரையும் பாதுகாக்கும் கம்பெனித் துரைமார்களையும், அதிகாரிகளையும்தான் சந்தால்கள் அரசாங்கமாகப் பார்த்தார்கள். துரைகளின் பங்களாக்களை, அவர்களை ஏற்றிச் செல்லும் ரயில்களை வெறுத்தார்கள். எழுச்சியின்போது ரயில் நிலையங்கள் தாக்கப்பட்டன; அரசாங்க அலுவலகங்கள், துரைமாரின் பங்களாக்கள், சிறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ரயில் ரோடு நாகரிகம் அல்ல, சுரண்டலின் சின்னம் சந்தால்களுக்கு. ரயில் ரோடு கொண்டு வந்த துரைமார்கள் சந்தால் பெண்களைக் கற்பழித்ததை, வரமறுத்தவர்களைக் கொன்றதை, வேலைகளுக்காகச் சிறுவர்களைக் கடத்திச் சென்றதை அவர்கள் மறக்கவில்லை.

ஜமீன், சவுக்கார், சர்க்கார் – இந்த மூன்று பேரின் கூட்டினை எதிரி, அந்நியர் என்று சந்தால்கள் அறிவித்தார்கள். அவர்களின் அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க எழுச்சிப் பிரகடனம் செய்தார்கள்.

சிறுசிறு எதிர்ப்புக்களாகத் தொடங்கி எழுச்சியாகப் பரிமாணம் கொண்டது சந்தால் பழங்குடிப் போராட்டம். ஒவ்வொரு எதிர்ப்பின் போது சந்தால்கள் கைது செய்யப்பட்டார்கள்; அவர்களின் கைகள் முதுகில் பிணைத்துக் கயிற்றால் கட்டப்பட்டன; சந்தால்களின் பார்வையில் கயிறுகள் அடக்குமுறைக் கருவிகள், ஒரு சாதாரண எளிய உழைப்பாளி சந்தால் கோச்சோ ஜமீன் தரோகாவுக்குச் சவால் விட்டான்; கோச்சோ சொன்னான்: ”எத்தனை ஆயிரம் அடி கயிறு உனக்குக் கிடைத்துவிடும், பார்த்து விடலாம்; அமைதியான எல்லாச் சந்தால்களையும் கட்டிப் போட்டு இழுத்துச் சென்று ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விடுவாயா, பார்த்து விடுவோம்.”

சவால்கள் இல்லாமல் உழைக்கும் விவசாயிகளின் போராட்ட வரலாறுகள் இல்லை. ’எங்கள் நியாயத்தைக் கேட்கிறோம்’ என்ற உழைப்பவர் உரத்துக் கூறுவார்கள். ’என்ன அநியாயம், இப்படியும் நடக்குமா?’ என்று ஆண்டைகள் தாண்டிக் குதிப்பார்கள் அதுதான் வாடிக்கை.

”எதுக்குடா இங்க வந்தீங்க?”
“எங்களுக்குச்சேர வேண்டியதைக் கேக்க.”
”அது என்னடா சேர வேண்டியது, கொள்ளையடிக்க வந்திருக்கோமுன்னு சொல்லடா நாயே…”
“அப்புடி நீ நெனச்சா அப்புடியே வெச்சுக்குவோம்.”
– இது 1905-ஆம் ஆண்டில் ரசிய விவசாயிகள் எழுச்சியில் ஒரு நிகழ்ச்சி.

”வரியக் கொடுடா என்றா கேட்கிறான்? அவனை வெட்டி வீசுங்கள்! எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் நியாயத்துக்காகக் கலகம் செய்யுங்கள் ஆயுதங்களை கர்ரூ நதியில் ரத்தம் போகக் கழுவி எடுங்கள்!”
– இது சோட்டா நாக்பூர் ‘கோல்’ பழங்குடிகளின் வீரச் சூளுரை.

சந்தால் கோச்சோவின் சவால் வெற்றுச் சவால் அல்ல. அவர்கள் போராட்ட வரலாற்றின் பக்கங்களே சாட்சி.

***

warweb

1855-இன் மைய நாட்கள், சந்தால் பகுதி ராஜ்மகால் குன்றுகள் ரத்தத்தால் சிவந்து கொண்டிருந்தன. சந்தால் ஆயுதப் போராட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது.

அது ஒரு மண் குடிசை உள்ளே 45 சந்தால் வீரர்கள் மறைந்திருந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் ஆங்கிலச் சிப்பாய்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியான துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கினார்கள்; ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதில் சென்றது. அம்புகள் சீறிப் பாய்ந்தன. அனேகமாக குடிசை சல்லடைக் கண்களாகத் துளைக்கப் பட்டுவிட்டது – இனியும் ஒட்டிக் கொண்டு ஊசலாடும் ஒரே ஒரு கதவைத் தவிர வேறு தடுப்புக்கள் இல்லை. எதிரி வீரர்கள் கதவைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தனர்.

அங்கே அவர்கள் கண்ட காட்சி – சுற்றிலும் சக போராளிகள் மார்பிலும் தோளிலும் உடலின் பல இடங்களிலும் குண்டு பாய்ந்து செத்துக்கிடக்க ஒரே ஒரு முதியவர் மட்டுமே உயிரோடு நின்றிருந்தார். ”சரணடைந்து விடு, பிழைத்துக் கொள்வாய்” என்று ஒரு ஆங்கிலேயச் சிப்பாய் அவரைப் பார்த்துக் கத்தினான். அடுத்த கணம் ஓர் அசைவு – ஒரே எட்டில் முதிய வீரர் அந்தச் சிப்பாய் மீது பாய்ந்தார், கையிலிருந்த சண்டைக் கோடரியால் ஒரே வெட்டில் வீழ்த்தினார். அடுத்த நொடியில் அவரும் சாய்ந்தார். அந்த முதிய வீரர் உடம்பு முழுவதும் ஏற்கெனவே ஏராளமான குண்டுகள் பாய்ந்து ரத்தம் கொப்பளித்து வழிந்து கொண்டிருந்தது. அந்நியப் படை அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றது.

முட்டாள்கள், கோழைகள் என்று சந்தால்களைத் தூற்றிய ஆங்கிலேயக் கம்பெனிப் படைகளும் சரி, ஜமீன் – சவுக்கார்களும் சரி எழுச்சியின் போது கிலி பிடித்து நடுங்கினார்கள்.

santals
சுற்றிலும் சக போராளிகள் மார்பிலும் தோளிலும் உடலின் பல இடங்களிலும் குண்டு பாய்ந்து செத்துக்கிடக்க ஒரே ஒரு முதியவர் மட்டுமே உயிரோடு நின்றிருந்தார்

சந்தால்கள் சமவெளி மக்களில் பல்வேறு தாழ்ந்த சாதிப் பிரிவினரை போராட்டத்தின் நட்புச் சக்திகளாக வென்றெடுத்ததைப் பார்த்துப் பதறினார்கள்.

பெண்கள் கூட சந்தால்களுக்காக உளவு வேலை பார்த்ததையும், தங்கள் உளவுகளை முறியடித்ததையும் கண்டு பீதி அடைந்தார்கள்.

பழங்குடிக் கலையின் கருவிகளான முழவுகளும், குழலும் போராட்ட காலத்தில் செய்தி அறிவிப்புக்கருவிகளாகவும், வீர எழுச்சி இசையாகவும் மாறியதைக் கண்டு வெருண்ட ஆங்கிலேயே எடுபிடி போலீசும், ராணுவமும் கைதுகளின் போது முழவுகளையும், குழலையும் கூடப் பறித்தார்கள்; செய்தி வாசிக்கும் வழிகளை அடைத்து விட்டதாகக் கருதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் விரைவிலேயே புதிய முழவுகள், புதிய குழல்கள் களத்திற்கு விரைந்ததைக் கண்டு தூக்கம் இழந்தார்கள்.

களத்தில் பல முறை ஆங்கிலேயப் படைகள் சிதறி ஓடின. தன்னை ஒத்த 25 அதிகாரிகளை இழந்துவிட்டுத் திக்குமுக்காடிய மேஜர் பர்ரோஸ் படையை விட்டுவிட்டுத் தலை தெறிக்கத் தப்பி ஓடினான். அவன் அறிக்கையில் எழுதினான்; ”கலகக்காரர்கள் உறுதியாக நின்று போர் செய்தார்கள். கைகளால் அம்பு எறிந்தார்கள்; கால்களாலும் வில் நாண் இழுத்து அம்பு எறிந்தார்கள், கைக் கோடரிகளாலும் கூடச் சண்டை போட்டார்கள்.”

“ராஜ்மகால் குன்றுகள் சிவந்தன” என்று எழுதுவது இலக்கிய வருணனை அல்ல. ஆக்கிரமிப்பாளரை விரட்டிய போரில் அப்பிராந்தியத்தில் ரத்த ஆறு தான் ஓடியது, பல ஆயிரம் ரத்த சாட்சிகளின் வரலாறுகள் மக்களிடையே கதைகளாக, பாடல்களாக உலவுகின்றன.

எழுச்சிக்குத் தலைமை தாங்கிய சீது, கானு என்ற தியாக வீரர்கள் இன்றும் உடன் இருப்பதுபோல் பசுமையான நினைவுகளை சந்தால்கள் பல தலைமுறைகளாகக் காப்பாற்றி வருகின்றனர்.

***

சீது கானு
சீது கானு

சீது, கானு மற்றும் பிற தலைவர்கள் சந்தால் மக்களோடு கலந்து ஐக்கியமாகிப் போராடியவர்கள். இலையால் செய்யப்பட்ட தொன்னையில் மஞ்சளும், எண்ணெய்யும் எடுத்துக் கொண்டு அவர்கள் பல கிராமங்களுக்குச் சென்றார்கள். அது ஒரு பொது நிகழ்வுக்கான அழைப்பு போல. கூட்டாக மீன் பிடிக்க வேட்டை ஆட இவ்வாறு செய்தி சொல்வார்கள். இப்போது போராட்டத்துக்கும் அதையே ரகசியத் செய்தி அறிவிப்பாக மாற்றிக் கொண்டார்கள். அதேபோல சால்மரக் கிளைகள் கூட்டத்துக்கான அறிவிப்பாக அனுப்பப்பட்டது. இதைக் கொண்டு வருவோரிடம் “எங்கே கூட்டம்?” என்று கேட்டு அறிந்து கொள்வார்கள்.

சந்தால் எழுச்சி ஆலோசனைக் கூட்டத்துக்கே 7000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அடுத்த கூட்டத்தில் 10,000 பேர் கூடி விவாதித்து எழுச்சி பற்றி முடிவு செய்தார்கள் எழுச்சியைக் குறிப்பிட வேட்டை, மீன் பிடித்தல் என்ற சங்கேதச் சொற்களை சந்தால்கள் பயன்படுத்தினார்கள். இதில் அனைத்து சந்தால்களும் கலந்து கொண்டார்கள். வயது வித்தியாசம் கிடையாது; சண்டைக்குப் பயன் படமாட்டார்கள் எனக் கருதப்படும் நோயாளிகள் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தினார்கள்.

தலைவர் என்பவர் வீரரில் ஒருவர். கற்பனைக் கதாநாயகர்களாக, சூப்பர் ஹீரோக்களாகத் திரைப்படங்களில் காட்டுகிறார்களே அவர்களைப் போல் அல்ல. சந்தால் தலைவரும் போரிடுவார் சாதாரண மக்களும் போரிடுவார்கள். கூடுதலாக அவர் தலைமை தாங்கி வழிநடத்துவது சிறப்பம்சமாகும். இதனால்தான் சீது, கானு புகழ் இன்றளவும் நின்று நிலைக்கிறது.

***

execlow
கலகக்காரர்கள் உறுதியாக நின்று போர் செய்தார்கள். கைகளால் அம்பு எறிந்தார்கள்; கால்களாலும் வில் நாண் இழுத்து அம்பு எறிந்தார்கள், கைக் கோடரிகளாலும் கூடச் சண்டை போட்டார்கள்

எதிரிகள் சந்தால்களின் அம்புகளுக்கு மட்டுமல்ல, அவர்கள் உருவாக்கி நடைமுறைப்படுத்திய மக்கள் மன்றத்திற்கும் அஞ்சினார்கள். எதிரிகளை அண்டிப் பிழைத்த கூலி எழுத்தாளர்கள் ”ரத்த வெறி பிடித்த இந்தக் காட்டு மிராண்டிகளுக்கு எதிராகப் பயங்கரத்தைக் கட்ட விழ்க்காமல் இந்த எழுச்சியை நாம் அடக்க முடியாது” என்று அரசைத் தூண்டி எழுதினார்கள்.

14 இடங்களில் ஒரே நேரத்தில் கலகம் வெடித்த போது ஒரிரு இடங்களில் ஓரிரு கொலைகள் மட்டுமே நடந்தன. கொலை அவர்களின் நோக்கம் அல்ல. அவ்வாறிருந்தால் பல ஆயிரக்கணக்கான பண்ணைகளின் தலைகள் வெட்டப்பட்டிருக்கும். ஆனால், மக்கள் மன்றத்தில் விவாதித்து முடிவெடுத்த வழக்குகளில் கொடூரமான வட்டிக்காரனுக்கும், பண்ணைக்கும் கடுமையான தண்டனை வழங்கவும் தவறவில்லை.

வட்டிக்கடை முதலாளிகளுக்கு மகாஜன்கள் என்று பெயர். எழுச்சியின் போது ஒரு மகாஜன் விசாரணையில் சிக்கினான். பழங்குடிகள் அவன் கையில் தாம்பட்ட கொடுமைகளை விவரித்தார்கள். அநியாயமாக இழந்த நிலங்கள், கண் போல் வளர்த்த மாடுகள், ஆடுகள், உயிராக நேசித்து வளர்த்து அவனுக்குக் கொத்தடிமையாக அனுப்பட்ட தன் மகன் – இப்படி கொடூரங்களை வரிசைப் படுத்தினார்கள். பலர் பாழாக்கப் பட்ட தம் வாழ்க்கையை சாட்சியமாக பலர் முன்னே திறந்து வைத்தார்கள். இறுதியில் அவனுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. அவ்வளவு கொடூரனை ஆடு வெட்டுவது போல வெட்டித் தீர்க்க யாருக்கும் இஷ்டமில்லை; எத்தனை சந்தால் குடும்பங்கள் எவ்வளவு வருடங்கள் எவ்வளவு வேதனைகள்?

அந்த மகாஜன் மன்றத்தின் நடுவே நிறுத்தப்பட்டான்.
– பாதங்கள்: அவை சந்தால் மண்ணை மிதித்துத்துவைத்து அழித்தவை; முதலில் அவை வெட்டப்பட்டன.
நான்கணாவைத் திரும்ப வாங்கி விட்டோம் என்று சொன்னார்கள் சந்தால்கள்.
ஓங்கிய வாளுக்கு அடுத்த குறி கால்கள், அவை சந்தால்களை இஷ்டப்படி எட்டி உதைத்தவை;
பெண்களை மானபங்கப்படுத்தி உதைத்தவை.
எட்டணா சேர்ந்து விட்டது இப்போது.

உடல்: சுரண்டலின் அருவெறுப்பான அடையாளம், இருதுண்டாக வெட்டப்பட்டது.
பணிரெண்டனா வசூலாகி முடிந்தது.
தலை: வட்டி மூலதனத்தின் பீடம் – ஒரே வெட்டில் கிள்ளி எறியப்பட்டது.
கோரமாக அலறிக் கொண்டிருந்த அதன் கண்கள் அணைந்தன.
கடைசியில் பதினாறு அணாக்களும் முழுசாக வசூலிக்கப்பட்டு விட்டன.

சந்தால் போராளிகள் மகிழ்ச்சியில் குதித்து ஆடினார்கள் ஆக்கிரமிப்பாளரில் ஒருவன் அழிக்கப்பட்டது அவர்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்து தான். விசாரணையையோ, மன்றங்களையோ எல்லா பழங்குடிக் கிராமங்களும் வரவேற்றன; ஆனால் ஆங்கிலேயரின் அடிவருடிகளும், ஜமீன்களும் எதிர்த்தார்கள்.

”இந்த விரல்களால்தானே வட்டிக் காசை வாரிக் கொண்டாய்? கொள்ளைப் பணத்தை அள்ளிக் கொண்டாய்? பசியால் துடித்த ஏழைகளின் வாயிலிருந்து சோற்றைப் பறித்தது உன் கைகள் தானே?” – இப்படி வட்டிக்கடை தீனதயாள் ராயின் தலை வெட்டப் பட்டு, ஊர்ச்சந்தையில் ஈட்டி முனையில் செருகப்பட்டது. பழங்குடிகள், சந்தால் அல்லாத ஏழைகள் இதை வரவேற்றார்கள்.

எதிரிகள் ஆங்கிலேயருக்குத் தகவல் அனுப்பி எதிர்த் தாக்குதல் தொடுக்க அவசரமாக முயற்சி எடுத்தார்கள்; பகல்பூர் ஜமீன்கள், உள்ளூர் அவுரிப் பயிர் முதலாளிகள், முர்ஷிதாலாத் பகுதி நவாப் நசீம், ஐரோப்பிய அவுரி முதலாளிகள் ஆகியோர் அரசுக்கு பணம் உட்பட எல்லா உதவிகளும் தாராளமாகக் கொடுத்தார்கள்.

எதிர்த் தாக்குதல் கொலை வெறியோடு நடத்தப்பட்டது. சந்தால் கிராமங்கள் பல முழுக்க அழிக்கப்பட்டன. பயிர்கள், வீடுகள், பெண்கள், குழந்தைகள் என்று கண்ணில் பட்டதையெல்லாம் ஆங்கிலேய வெறிநாய்கள் குதறின. சந்தால் மக்களை கொலைக்காரர்கள், கொள்ளையர்கள் என்று பழி தூற்றியவர்களே பல ஆயிரம் கொலையினைச் செய்தார்கள்.

அதுபோதாதென்று சந்தால்களின் எல்லாக் கிராமங்களின் மீதும் ’தண்டத் தொகை’ விதிக்கப்பட வேண்டும் என்றும் எல்லா சந்தால்களுமே தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆங்கிலேயரின் ஊதுகுழலான ஏடு எழுதியது. அந்த ஏட்டின் பெயர் வேடிக்கையானது ”இந்தியாவின் நண்பர்கள்”.

***

sido-kanhuஅன்று சீதுவும் கானுவும் மற்ற தலைவர்களும் ஆங்கிலேய கம்பெனி வெறிநாய்களால் தூக்கிலிடப்பட்டார்கள். சந்தால்கள் அந்த மாபெரும் வீரர்களைக் காடுகளில் கூவி அழைத்தார்கள். காடுகளுக்குள்ளே பாய்ந்து சென்ற அந்தக் குரல்கள் சீது, கானுவைத் தேடிச் சென்றன! இன்று அதே பரம்பரையில் வரும் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் இதோ பதில் குரல் கொடுக்கிறார்கள்.

அன்று இருபத்தைந்தாயிரம் சந்தால் வீரர்கள் கொடுத்த இன்னுயிர்கள் இன்றும் புரட்சிக் கனல் மணக்கும் பூக்களாக போராட்டத் தடமெங்கும் மணம் வீசி எழுச்சி ஊட்டிக் கொண்டு தான் இருக்கின்றன!

– பஷீர்
புதிய கலாச்சாரம், ஜூலை 1995.