Thursday, May 1, 2025
முகப்புசெய்திபசுவின் பெயரால் படுகொலை செய்வது நாங்கள் தான் - பாஜக எம்.எல்.ஏ. ஒப்புதல் !

பசுவின் பெயரால் படுகொலை செய்வது நாங்கள் தான் – பாஜக எம்.எல்.ஏ. ஒப்புதல் !

-

“பசுப் பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் பல்வேறு உதிரி அமைப்புகளும், தனி நபர்களும் தான் பசு அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களால் தான் பிரதமர் மோடிக்கும் பாஜக-விற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.” பாஜக ஆட்சியில் பசுவின் பெயரில் நடைபெற்றுவரும் கொலைகளுக்கு, அரசியல் புரோக்கர் குருமூர்த்தி வகையறாக்களின் பதில் இதுதான்.

ராம்கர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ ககியான்தேவ் அகுஜா

இத்தகைய கொலைகாரர்களுக்கு பாஜக எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.-களும் பின்னிருந்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்பது அக்லக் கொலையிலிருந்து அம்பலப்பட்டிருந்தாலும், தற்போது அதற்கு நேரடியாக சாட்சியமளித்திருக்கிறார் இராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ ஒருவர்.

இராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தது ராம்கர் தொகுதி. இத்தொகுதியின் எம்.எல்.ஏ -வான பாஜகவைச் சேர்ந்த ககியான்தேவ் அகுஜா என்பவர் கடந்த டிசம்பர் 26 அன்று பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “எங்கள் தாயைப் போன்ற பசுவைக் கொல்பவர்கள், அதே போல கொல்லப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார். இராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் மட்டும் பசுக் கடத்தல் என்ற பெயரில் இதுவரை மூன்று இசுலாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நெருங்கும் சூழலில், “நான் மற்றவர்களைக் கொல்லச் சொல்லவில்லை. ஆனால் ஆல்வார் மக்கள் கோபக்காரர்கள். அவர்களும் என்னைப் போலவே பசுவை தாயைப் போல நேசிப்பவர்கள். ஆகவே பசுவைக் கடத்துபவர்களையோ, வதைப்பவர்களையோ அவர்கள் தாக்குவார்கள். தங்கள் தாயிடமிருந்து கிடைத்த உத்தரவு போல எண்ணிக் கொண்டு அவர்கள் அதனைச் செய்வார்கள்” என்று கூறியிருக்கிறார் அகுஜா.

இந்த அகுஜா எந்த ஒரு உதிரி அமைப்பைச் சேர்ந்தவரும் அல்ல. பாஜக-வைச் சேர்ந்தவர் தான். அதுவும் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு தற்போதே அங்கு வகுப்புவாதத்தைத் தூண்டி தனது இந்து ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள அகுஜா முயற்சிக்கிறார்.

கடந்த நவம்பர் 2017 -ல் அல்வார் பகுதியில், பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற உமர் எனும் முசுலீமைக் கொன்று அவரது உடலை இரயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றனர் சங்க பரிவாரக் கிரிமினல்கள். இத்தகைய கொலைகாரர்களுக்கு ‘பசுப் பாதுகாவலர்கள்’ என்று பெயர் சூட்டி மகிழ்கின்றன ஊடகங்களும், சங்க பரிவாரக் கும்பலும். இந்தக் கொலை அகுஜாவின் தொகுதியான ராம்கரில் தான் நடந்துள்ளது என்பது கவனித்தில் கொள்ளப்பட வேண்டியது.

இதே அல்வார் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், 2017 -ல் தனது பால் பண்ணைக்காக பசுக்களை அரசு சான்றிதழ்களோடு இராஜஸ்தானிலிருந்து வாங்கிச் சென்று கொண்டிருந்த முதியவர் பெஹ்லூகானையும் அவருடன் வந்த முசுலீம்களையும் கடுமையாகத் தாக்கியது சங்கபரிவாரக் கும்பல். இதில் பெஹ்லூகான் மரணமடைந்தார். சாத்வி கமல் என்கிற பெண் சாமியார் இப்படுகொலையை வெளிப்படையாக வரவேற்றார்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வருகின்றன. இராமர் கோவில், பசுப் பாதுகாப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிஹாத் என புதுப் புது வகைகளில் இந்நாட்டில் கலவரங்களுக்கு அச்சாணியிட்டு ஓட்டு வேட்டை நடத்தி வருகிறது.

மேலும் :