மராட்டிய மாநிலத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி ஒன்றின் அருகே கடந்த 2008 -ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பை அறிவோம். காவிக் கும்பலால் நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கரவாதம் குறித்து தற்போதைய செய்தி இது. கடந்த 9 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் சாத்வி பிரக்யாசிங், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த லெப். கர்னல் பிரசாத் புரோகித் உட்பட 8 பேர்களின் மீதும் கடுமையான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (27.12.2017) அன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சாத்வி பிரக்யா இந்த குண்டுவெடிப்புக்கான சதித்திட்டம் தீட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறியிருந்தது. மேலும் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை, சாத்வி முன்னரே விற்று விட்டதாகவும் கூறியது. அந்த அடிப்படையில் சாத்வியை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் தங்களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கும் படி சாத்வி பிரக்யா மற்றும் வேறு 7 பேர் முன் வைத்த கோரிக்கை மனு கடந்த 27.12.2017 அன்று விசாரணைக்கு வந்தது. இதில் தே.பா.மு. (என்.ஐ.ஏ) தரப்பில், சாத்வி பிரக்யா சிங்-கின் மீது சுமத்தப்பாட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் வழக்கிலிருந்து அவரை விடுவிக்கலாம் எனக் கூறியது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாத்வி பிரக்யாவை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது எனக் கூறியிருக்கிறது. இச்சம்பவத்தில் குற்றம் சட்டப்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குப் பிரிவுகளில் ஊபா சட்டத்தின் சில பிரிவுகள் மற்றும் மராட்டிய நிறுவனமயப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை மட்டும் சிறப்பு நீதிமன்றம் நீக்கியுள்ளது.
அதே சமயத்தில், சாத்வி பிரக்யா சிங் மீதான குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்ற தேசிய புலனாய்வு முகமையின் வாதத்தை நிராகரித்துள்ளது சிறப்பு நீதிமன்றம். சாத்வி பிரக்யா “குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகக் குறைவாக இருப்பதாக” தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த அடிப்படையில் அவருக்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றோ அல்லது அதற்கான ஆதாரம் இல்லை என்றோ தேசிய பாதுகாப்பு முகமை வைக்கக் கூடிய வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வழக்கில் சாத்வி பிரக்யாசிங், லெ.கர்னல். பிரசாத் புரோகித், ராஜேஷ் உபாத்யாய, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி மற்றும் அஜய் ரஹிர்கர் ஆகியோர் மீது குற்றவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தனது உத்தரவில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். அவர்கள் மீது ஊபா சட்டப் பிரிவு 16,18 -ன் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப் பட்ட குற்றப் பத்திரிக்கையில் சாத்வி பிரக்யாசிங், சியாம் சாஹூ, ப்ரவீன் டகல்கி மற்றும் சிவ்நாராயண் கல்சங்கரா ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறி அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து விடலாம் என தேசிய பாதுகாப்பு முகமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய உத்தரவில் சிறப்பு நீதிமன்றம், சியாம் சாஹூ, பிரவீன் டகல்கி மற்றும் சிவ்நாராயண் கல்சங்கரா ஆகியோரை மட்டும் வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது. அதே போல இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜெகதீஷ் மாட்ரே, ராகேஷ் தாவ்டே ஆகியோரை, ஆயுதங்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்கைச் சந்திக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு முகமையின் அதிகாரிகள் தன்னை அணுகி குற்றவாளிகளை விடுவிக்க ஒத்துழைக்குமாறு மறைமுகமாக மிரட்டியதை இவ்வழக்கில் ஆஜராகி பின்பு விலகிய அரசுத் தரப்பு வழக்கிறிஞரான ரோஹினி சாலியன் அம்பலப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது நீதிமன்றமும் அதனை உறுதி செய்திருக்கிறது.
இப்படி நாடறிந்த ஒரு பயங்கரவாத சம்பவத்தின் குற்றவாளிகளை பகிரங்கமாக மத்திய அரசும் அதன் புலனாய்வுத் துறையும் காப்பாற்றுகிறது என்றால் இங்கே நிலவுவது அரச பயங்கரவாதமன்றி வேறு ஏது?
காவிக் கும்பலை ஒழித்துக் கட்டினாலே தீவிரவாதம் தானாக இந்த நாட்டில் இருந்து ஒழிந்து விடும்.