தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டமைப்பை (Cartel) ஏற்படுத்திக் கொண்டு தொடக்கநிலை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்கின்றன என்று இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னால் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் கடந்த ஏழு ஆண்டுகளில் ஊதியம் பாதியாக குறைந்திருக்கிறது என்று மேலும் கூறியிருக்கிறார்.

பெரிய நிறுவனங்களால் ஊழியர்களுக்கு நல்ல ஊதியத்தை வழங்க முடியும். மேலதிகாரிகளுக்கு மென்மேலும் ஊதியத்தை உயர்த்திக் கொடுக்காமல் தொடக்க நிலை ஊழியர்களுக்கு நல்ல ஊதியத்தை நிறுவனங்கள் கொடுக்க முன் வர வேண்டும் என்கிறார் அவர்.
துறை சார் வல்லுனர்களின் கருத்துப்படி ஊதியம் மட்டுமல்ல தொடக்க நிலை ஊழியர்களுக்கான வேலை வாய்ப்புக்களும் 2017 -ம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைந்து விட்டன.
(மூளை) உழைப்புச் சந்தையில் தேங்கிக் கிடக்கும் மிதமிஞ்சிய மென் பொறியாளர்களைப் பயன்படுத்தி இந்த ஆட்குறைப்பை செய்கின்றன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள். இந்த மிதமிஞ்சிய பணியாளர்களைத் தான் முதலாளித்துவ சமூகத்தின் “ரிசர்வ் பட்டாலியன்” என்று மார்க்ஸ் கூறினார். இத்தகைய ரிசர்வ் பிரிவு கூடிக் கொண்டே இருப்பது ஒரு நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை கொண்டு வரும் என்பது முதலாளித்துவ அறிஞர்களே மறுக்க முடியாத உண்மை.
இந்தியா முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கு 2017 -ம் ஆண்டை கொடுங்கனவு என்றே சொல்லலாம். காக்னிசன்ட், டெக் மகிந்திரா, விப்ரோ, இன்போசிஸ் மற்றும் வெரிசான் நிறுவனங்கள் 2017 -ம் ஆண்டில் மட்டும் 5,000 ஊழியர்களுக்கு மேல் ஹைதராபாத்தில் பணிநீக்கம் செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் வெறும் 7 நிறுவனங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 56,000 பணியாளர்கள் வேலைகளை இழப்பார்கள் என்று 2017, மே மாதமே தகவல் வெளியானது.
இன்போசிஸ் நிறுவனம் அடிமட்ட வேலைகளில் தானியங்கிமயப்படுத்தி இருப்பதால் 2015 – 16 -ம் ஆண்டில் 9,000 ஊழியர்களை பணியிலிருந்து விடுவித்ததாக கூறியது. அதே போன்றதொரு காரணத்திற்காக 6,000 ஊழியர்களை காக்னிசன்ட் பணிநீக்கம் செய்திருப்பதாக கூறியது. டி.எக்ஸ்.சி(DXC) நிறுவனம் தன்னுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை 1,70,000-லிருந்து 1,00,000 ஆக குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
2008 -ம் ஆண்டு நெருக்கடியை விட இது மிகவும் மோசமானது என்றும் இது 2018 -ம் ஆண்டும் தொடரும் என்றும் துறைசார் வல்லுனர்கள் கருதுகிறார்கள். டிஜிட்டல் மயமும், தானியங்கி தொழில்நுட்பமும் பாரம்பரிய வேலைகளுக்கு பெரிய இடையூறை ஏற்படுத்தியிருப்பதாக தகவல் தொழில்நுட்ப சேவை மேலாண்மை நிறுவனமான இன்செடோவின் (Incedo) மனிதவளத்துறை துணைத்தலைவரான அருண் பால் கூறுகிறார்.
புதிதாக ஊழியர்களை வேலைக்கு எடுப்பதும் கூட 50 – 70 விழுக்காடு குறைந்திருப்பதாக திறன்களுக்கான பயிற்சி நிறுவனமான டேலன்ட்ஸ்பிரின்ட் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சந்தனு பால் கூறினார். முன்பு எதிர்கால புதிய சேவை வாய்ப்புகளுக்காக ஒரு குறிப்பிட்ட அளவு ஊழியர்களை எடுத்து “பெஞ்ச்”சில் வைத்திருந்தன ஐ.டி. நிறுவனங்கள். தற்போது ஒப்பந்த முறையையும் தாண்டி தற்காலிக ஒப்பந்த பணியமர்த்தல் முறையை பின்பற்றுகின்றன.
தானியங்கி தொழில் நுட்பங்கள் எதிர்காலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பது வெறும் குறிப்பிட்டத் திறன்களின் அடிப்படையில் மிக சொற்பமாகவே இருக்கும்.
மேலும் இந்திய ஐ.டி ஊழியர்களின் வேலையிழப்பு என்பதை இந்தியாவின் பிரச்சினையாக சுருக்கி பார்க்க முடியாது. உலகமய சக்கரத்தில் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ள இந்தியாவின் சேவைத்துறை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் இலாப நட்டங்களை கணக்கில் கொண்டு தான் தீர்மானிக்கப்படுகிறது. இந்திய சேவைத்துறையை கட்டுப்படுத்தும் தரகு முதலாளிகளோ தொழில்முனைவோர்களை இந்திய ஆளும் வர்க்கங்களின் துணைக்கொண்டு பிஞ்சிலேயே சாகடிக்கின்றனர்.
தானியங்கி தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடாக திகழும் முதலாளித்துவ ஜெர்மனியில் அதனால் ஏற்படும் வேலையிழப்பு அமெரிக்காவை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. ஏனெனில் ஜெர்மனியின் தொழிலாளர்கள் சங்கம் முதலாளிகள் மற்றும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலையிழப்பிற்கு பதில் ஊதிய உயர்வை சமரசம் செய்துக் கொள்கின்றனர்.
ஆனால் இந்தியாவில் அப்படி சமரசம் கூட செய்து கொள்ளும்படியான சூழல் இல்லை. ஏனெனில் இந்தியா முதலாளித்துவ ஜெர்மனும் அல்ல மோகன் தாஸ் கூறுவது போல சம்பள உயர்வையும் தரகு முதலாளிகள் கொடுக்கவும் போவதில்லை. ஓட்டச்சுரண்டும் முதலாளிகள் கூட கூட்டாக தான் அதை செய்ய வேண்டியிருக்கிறது எனில் சுரண்டப்படும் மக்களும் ஒன்று சேர்ந்துதானே அதை முறியடிக்க முடியும்.
மேலும் :
- 56,000 layoffs and counting: India’s IT bloodbath this year may just be the start
- Hyderabad: Mass layoffs shake IT industry in 2017
- Top IT firms conspired to keep salaries of engineers low, Infosys & TCS should fix it: Ex Infosys CFO