“அம்பானி” பற்றிய மொக்க மீம்சுக்கே அடக்குமுறை என்றால் அம்பானி அதானி மொள்ளமாரித்தனதிற்கு மூச்சே விட முடியாது !
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்சு நிறுவனத்தின் 40 -வது ஆண்டுவிழா டெல்லியில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, “ரிலையன்சு குடும்பத்தின்” மீதான தன்னுடைய முழுமையான ஈடுபாட்டை உணர்ச்சிகரமான தன்னுடைய உடல்மொழிகளால் வெளிப்படுத்தினார். அது பின்னர் 2018 -ம் ஆண்டின் “முதல் வைரல் மீம்சாக” சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதையே ஒரு பொழுதுபோக்கு செய்தியாக (Trending News) ஸ்கூப்வூப் (ScoopWhoop), டெய்லிஓ (DailyO), ஸ்டோரிபிக் (Storypick) உள்ளிட்ட இணையத்தள ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால் பின்னர் அவை எவ்வித அறிவிப்புமின்றி அந்த இணையதளங்களிலிருந்து நீக்கப்பட்டன.
சமூக வலைதளங்களில் பரவிய ஆனந்த் அம்பானி குறித்த அந்த மீம்ஸ்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் விவாதம் செய்யப்படுகின்றது. இது போன்ற மீம்ஸ்களை வெளியிடும் முன் இதனால் யார் பாதிக்கப்பட போகிறார்கள் என்று நாம் யோசிக்க வேண்டும் என்று ஆனந்த் அம்பானிக்கு ஆதரவாக ஸ்டோரிப்பிக்கின் (Storypick) இரக்னா ஸ்ரீவஸ்தவா போன்றோர் மல்லுக் கட்டுகின்றனர்.
உப்பு சப்பில்லாத செய்தி என்ற அளவில் ஓரணா தேறாத அந்த பதிவுகள் உடனடியாக நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன?
டிசம்பர், 2013 -ல் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியிலிருந்து திரும்பி அதிவேகமாக வந்த ஆனந்த் அம்பானியின் கார் ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலியானார்கள். ஆனால் விபத்து நடந்த போது காரை ஒட்டி வந்தவர் நிறுவனத்தை சேர்ந்த நடுத்தர வயது ஓட்டுனர் தான் என்று ரிலையன்சு நிறுவனம் சாதித்தது.
ஆனால் விபத்தை நேரில் பார்த்தவர்கள் வண்டியை ஒட்டியது ஆனந்த் அம்பானி தான் என்று கூறினார்கள். இச்செய்தி பெரும்பாலான ஊடகங்களில் வெளிவராமல் அப்பா அம்பானி ‘பார்த்துக்’ கொண்டார். அரசல் புரசலாக இதனை வெளியிட்ட இந்துஸ்தான் டைம்சும், டைம்ஸ் ஆப் இந்தியாவும் பின்னர் ஜகா வாங்கிக் கொண்டு செய்தியை நீக்கின.

அமித்ஷாவின் மகன் ஜே அமித்சாவின் முறைக்கேடுகளை அம்பலப்படுத்திய தி வயர் பத்திரிக்கையை மிரட்டியது, அமித்ஷாவின் சொத்து 300 மடங்கிற்கு மேல் அதிகரித்திருப்பதை குறித்த கட்டுரை ஒன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் இருந்து நீக்கப்பட்டது, அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட முறைக்கேடான வரிச்சலுகைகளை அம்பலப்படுத்திய ஈ.பி.டபிள்யு பத்திரிக்கையின் புலனாய்வு ஆசிரியரான இரஞ்சோய் தாக்கூர்த்தாவை பதவி விலக செய்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இந்திய தரகு முதலாளிகளின் காட்டு தர்பாரை எடுத்துச் சொல்லுகின்றன. அதில் சமீபத்திய வரவு இந்த மீம்ஸ் சென்சார்.
இரஞ்சோய் தாக்கூர்த்தாவின் பதவி விலகலுக்கு பிறகு தற்போது பிரபலமான அரசியல் விஞ்ஞானியான கோபால் குரு ஒரு நிபந்தனையின் பேரில் அடுத்த ஐந்தாண்டிற்கு ஈ.பி.டபிள்யுவின் புதிய ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதாவது புலனாய்வுக் கட்டுரைகளுக்கு பதிலாக ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் அந்நிபந்தனை.
கடன் மற்றும் முதலீடுகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை இந்தியாவின் பெரிய ஊடக குழுமங்களில் (NDTV, News Nation, India TV, News24, Network 18) முகேஷ் அம்பானி, மகேந்திரா நஹதா மற்றும் தொழிலதிபர் அபே ஒஸ்வல் ஆகிய மூவரும் கொட்டியிருக்கிறார்கள். இந்த ஊடகங்களை 20 முதல் 70 விழுக்காடு வரை இம்மூவரும் கட்டுப்படுத்துகிறார்கள் என்று கேரவன் இணையப் பத்திரிக்கை தன்னுடைய கட்டுரையில் கூறியிருக்கிறது.
இந்நிலையில் மொக்கையான செய்திகள், கேலி கிண்டல்கள்களையே சகித்துக் கொள்ள முடியாத இந்த ஆளும் அதிகார வர்க்கம் தங்களது மொள்ளமாரித்தனத்தை அம்பலபடுத்தினால் எங்கனம் சகித்துக்கொள்ளும்? இதுதான் இந்தியாவின் ஜனநாயகம்!
செய்தி ஆதாரம் :
- Ambani Scion is Out of Coverage Area as News Sites Take Down Published Stories
- The Big Five: The Media Companies That The Modi Government Must Scrutinise To Fulfill Its Promise Of Ending Crony Capitalism
- Political Scientist Gopal Guru Appointed New Editor of EPW