தமிழகத்தை ஆளும் அடிமை எடப்பாடி அரசு கடந்த ஜனவரி 20, 2018 முதல் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சாதாரண மக்களால் தாங்க முடியாத அளவிற்கு பேருந்து கட்டணம் சுமார் 100% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவது நேற்று முதல் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்சிகளும், மக்களும், மாணவர்களும் பல்வேறு இடங்களில் நேரடியாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
*********
1. விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து ஜனவரி 22, 2018 அன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தது. இப்போராட்டத்தில் எடப்பாடி அரசைக் கண்டித்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


2. நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஜனவரி 22, 2018 அன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

3. சென்னை கவின் கல்லூரி மாணவர்கள் திங்கள் கிழமை (22-01-2018) காலையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.



4. மதுரை – கடந்த சனிக்கிழமை (20-01-2018) அன்று காலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் முன்னால் சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசு முன்னணியில் நின்ற 6 பேரைக் கைது செய்து இழுத்துச் சென்றது. சுமார் 2 மணிநேரம் வரை இந்த மறியல் போராட்டம் நீடித்தது.

5. திருவண்ணாமலை ஜனவரி 22, 2018 அன்று திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்று தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

6. உளுந்தூர்பேட்டை: ஜனவரி 21, 2018 அன்று காலை உளுந்தூர்பேட்டையில் இருந்து விருதாச்சலம் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணம் செய்த பயணிகள், கூடுதல் கட்டணத்தைத் தர முடியாது எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து நடத்துனருக்கு பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

7. திருப்பூர்: ஜனவரி 22, 2018 அன்று திருப்பூரில் அரசு சிக்கண்ணா கலை கல்லூரி மாணவர்களும், தனியார் கல்லூரி மாணவர்களும் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரியலூரில் 3000 கல்லூரி மாணவர்களும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

8. திண்டுக்கல்: ஜனவரி 20,2018 அன்று பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் மற்றும் சென்னை பிராட்வே-யிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டங்களை நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதே நாளில் தக்கலை, மதுரை ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
