Thursday, May 1, 2025
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்ஹாக்கிங் - காலத்தின் வரலாறு !

ஹாக்கிங் – காலத்தின் வரலாறு !

-

முனைவர் ஹாக்கிங் இறக்கும் போது அவருக்கு வயது 76. ஆனால், 21-ம் வயதில் அரிய வகை நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டார் ஹாக்கிங். அவர் ஒரு சில ஆண்டுகள்தான் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தாலும் 76 வயது வரை வாழ்ந்தார்.

அறிவியலை பொய்யாக்கி கடவுளின் கருணையால் அவர் தனது வாழ்க்கையை நீடித்துக் கொள்ளவில்லை. மருத்துவர்கள் ஊகித்த நிகழ்தகவை அவர் தாண்டினார், அவ்வளவுதான். அறிவியலின் முன்னேறிய கோட்பாடுகளில்  பல ஆண்டுகள் ஆய்வு செய்த பிறகு 2010-ல் வெளியான தனது புத்தகத்தில் “இந்த உலகின் இயக்கத்தை தொடங்கி வைக்க கடவுள் என்ற புனைவு  அவசியமில்லை” என்று குறிப்பிட்டார், ஹாக்கிங்.

அவரை தாக்கிய நோய், அவரை சக்கர நாற்காலியில் முடக்கி செயற்கை குரல் கருவி மூலமாக  மட்டுமே பேச முடியும் என்ற நிலைக்கு தள்ளியது. ஆனால், அவர் அந்த வரம்புகளை உடைத்தெறிந்து மிக வெற்றிகரமான, புகழ்பெற்ற இயற்பியலாளராக சாதித்து காட்டினார்.

இயற்பியலின் இரு மகத்தான கோட்பாடுகளான ஐன்ஸ்டீனின் பொது சார்பு நிலை கோட்பாட்டையும், குவாண்டம் இயக்கவியலையும் இணைத்து கருந்துளைகள் ஆற்றலை துளித்துளியாக இழந்து மறைந்து போகின்றன என்பதை அவர் கண்டுபிடித்தார். இந்த நிகழ்முறை அவரது பெயரால் ஹாக்கிங் அலைவீச்சு என்று அழைக்கப்படுகிறது.

அண்டவியல் பற்றிய ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள ஹாக்கிங் வாட்டிகன் நகருக்கு சென்றிருந்த போது, போப் அங்கு கூடியிருந்த அறிவியலாளர்களிடம், “பெரு வெடிப்புக்குப் பிறகு உலகம் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்தது என்பதை ஆய்வு செய்வதில் பிரச்சனையில்லை. ஆனால் பெருவெடிப்பு குறித்தே ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அது படைப்பின் தருணம், எனவே கடவுளின் பணி” என்றாராம். ஆனால், ஹாக்கிங் பெருவெடிப்பின் ஆரம்ப தருணங்களை பற்றி ஆய்வு செய்தார். ஐன்ஸ்டீனின் பொது சார்பு கோட்பாட்டின்படி காலவெளி பெருவெடிப்பில் தொடங்கி கருந்துளைகளில் முடிகிறது என்று ரோஜர் பென்ரோஸ் என்ற கணிதவியலாளருடன் இணைந்து, நிரூபித்துக் காட்டினார்.

இயற்பியலின் நவீன கண்டுபிடிப்புகளை பொது மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் “காலத்தின் சுருக்கமான வரலாறு” என்ற புத்தகத்தை எழுதினார், ஹாக்கிங். அந்த புத்தகம் 1988-ல்  வெளியாகி 1 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றிருக்கிறது.

ஹாக்கிங் தனது தனிப்பட்ட புகழையும், விருதுகளையும் விட அறிவியலின் முன்னேற்றத்தை பெரிதாக மதித்தார். எனவே, 1990-களின் இறுதியில் அவருக்கு “சர்” பட்டம் வழங்க பிரிட்டிஷ் அரசு முன் வந்த போது, அரசு அறிவியலுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான கருத்து வேறுபாட் டின் காரணமாக ஹாக்கிங் அதை நிராகரித்தார்.

“நரம்பு மண்டல நோய் இருப்பதாக தெரிய வந்த போதே எனது வாழ்வுக் காலம் முடிந்து விட்டதாக நினைத்தேன். அதற்கு பிறகு கிடைத்த ஒவ்வொரு  நாளும் போனஸ்தான்” என்று கூறினார் ஹாக்கிங். போனஸ் ஆக கிடைத்த வாழ்நாளை கொண்டே மனித குலத்துக்காக மகத்தான பணிகளை செய்திருக்கிறார், ஹாக்கிங். முழு வாழ்நாளையும் எதிர்கொண்டுள்ள நமக்கெல்லாம் அவரது வாழ்க்கை ஒரு முன் மாதிரி.

நன்றி : new-democrats.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க