Sunday, July 12, 2020
முகப்பு வாழ்க்கை அனுபவம் ஜியோ உலகில் இன்னும் இருக்கிறது சுருக்குப் பை !

ஜியோ உலகில் இன்னும் இருக்கிறது சுருக்குப் பை !

-

ஜியோ போன் சர்வீஸ் சென்டருக்கு ரொம்பவும் வேகமா… நடந்திட்டு இருந்தேன்..  என்ன ஒரு பித்தாலாட்டம், ஸ்மார்ட் போனுக்கு போடுற சிம்முக்கு, 153 ரூபாய ரீஜார்ஜ் செய்துட்டேன்.  ஆனா, நெட் கனெக்ட் ஆகல.  என்னன்னு ரீஜார்ஜ் கடையில கேட்டா, சென்ட் மேசேஜ்-ஐ காட்டி, எங்களுக்கு போய்டுச்சி, நாங்க ஒண்ணும் பண்ண முடியாதுனுட்டாங்க…

சரி, வெயில் தாழ்ந்ததும் போவோம்னு, சாயங்காலம் 5.30 மணிக்கு ஜியோ போன் சர்வீஸ் சென்டருக்கு கிளம்பினேன். சரியான கேள்விக் கேட்டு,  சண்டைப் போடணும்னு  நடந்தேன். வழியில் எங்க பார்த்தாலும் ஜெயலலிதா போஸ்டரு. ரோடைக் கிராஸ் பண்ண முடியாத அளவுக்கு,  அடிமை விசுவாத்தை  அம்மா ஆவிக்கு காட்டியிருந்தாங்க அ.தி.மு.க. அடிமைகள்.. அம்மா இருந்தாலும் இல்லனாலும் பாதிப்பு நமக்குத்தான்னு யோசிச்சிக்கினே வேகமா நடந்தேன்.  எதிர்ல, வயதான அம்மா சிரிச்சிக்கிட்ட கிராஸ் பண்ணாங்க… நானும் சிரிச்சேன்… கடந்து வந்துட்டேன்… ஆனா, எதோ ஒண்ணு, நிறுத்தி திரும்பி பார்க்க வைச்சது….. ஏன்னடானுப் பார்த்தா, அவங்க மாட்டிருந்த சுருக்குப்பை… பல வண்ணங்கள்ள… பளபளத்தது.   என்னக் கடந்து 10 அடி போய்ட்டாங்க…

எங்க ஆயாவோட சுருக்குப்பை ஞாபகம் வந்துடுச்சி.. வயசான, எல்லாரும் சுருக்குப் பையை கடந்துத்தான் வந்திருப்போம். இப்ப காணாம போய்டுச்சினு நடந்தேன்.  இதை அப்புறம் யேசிக்கலாம்… முதல்ல சுருக்குப்பை விற்கும் அம்மாவை பிடிக்கணும்னு…. ஓடிப் பிடித்தேன்..

என்னை பார்த்ததுமே…. அவங்க முகத்துல மகிழ்ச்சி… ”என்ன பை வேணும்…..சின்னது,.. 5ரூ, இது 10ரூ,  பெருசு 20ரூ என்று திக்கி, திக்கி சொல்லி, காலைலயிருந்து இதுதான் வியாபாரம்..”  என்று,  சுருக்குப்பையை  காண்பித்து, வாங்காமல் போய்டாதே… என்பதுபோல் பார்த்தார்.  வாங்கிக்கிறேன்.. என்றதும் சிரிப்பை பதிலாக தந்தார்.

வாஞ்சையாக …பாரு, பாரு எது வேணுமோ … எடுத்துக்க…. என்று  பைகளை பிரித்து, பிரித்து காண்பித்தார்.

எந்த ஊரு?என்றேன்.
சொந்த ஊரு ஆந்திரா பக்கம்.., இங்க வந்து ரொம்ப காலமாகுது…… காஞ்சிபுரம் தாண்டி கீழம்பி…..
புள்ளைங்க… ?

பிறகு,தெலுங்கு கலந்த தமிழில் பேசினார்,

மனக்கு(எனக்கு), நாலு கூத்ரு……. எல்லாருக்கும் கல்யாணம் பண்ணிட்டேன்.  வூட்டுகாரு செத்து,10 வருசம்… அவரு கைரேகை பாப்பாரு…  அப்பா,  …. சஸ்போனு (கக்குஸ்) கிளின்பண்றது……  பொம்பளங்க…. இறங்க முடியாதுல்ல… அதனால, அம்மா இந்த வேலைய கத்துக் கொடுத்துச்சி……அம்மாவும் இந்த வேலைய நல்லா செய்யும்…

தினமும் எவ்ளோ கூலி வரும்?

100ரூபாய் மேல வராது. அதுவும் பாதி சாப்பாட்டுக்கே போய்டும்…. எல்லாம் விலை ஏறிப்போயிடுச்சி….. 12 மணிக்கு சாப்பிட்டது….. டீ…குடிக்கக்கூட ல்ல….. வீட்டில பேரப் புள்ளங்க  பார்த்துட்ட இருக்கும்…. அதுங், திங்கறதுக்கு வாங்கிட்டுப் போவேன்…. காலைல புள்ளங்க, ஸ்கூலுக்கு கிளம்பினதும் வந்துடுவேன்… சாயங்காலம்….. 6,7 மணிக்குப் போவேன்….

வேற வருமானம்?

1000 ரூபா பென்சன் வாங்கறேன்…. வீட்டு வாடகைக் கட்ட அத வைச்சிடுவேன்.

துணி எங்க வாங்குவீங்க?

டைலர்  துணி தைச்சிட்டு, மீதி வெட்டிப் போடும் துணிதான், மாசத்துல்ல ரெண்டு கடையில போய் நிப்பேன்….. கொடுப்பாங்க….. காசு எதுவும் கேட்க மாட்டாங்க…… அவுங்க… கடைய சுத்தப்படுத்திட்டு வருவேன்……தைக்க .ஊசியும்,  நூலும் காசுக்கு, வாரம் …50 ரூபா… குஞ்சரம் கட்ட கயிறு… வாங்குவேன், … நானே கையாலயே தைப்பேன். (குஞ்சரம் பையின் அழகை கூட்டும்)

அந்த குஞ்சர கயிற்றை, தன் கழுத்துலேயும் சரடுபோல் போட்டிருந்தார். கவனித்தப் பின் தெரிந்தது.

எப்ப, வீட்டுக்கு போவீங்க….
நடந்தேதான். வியாபாரமும்… நடந்தேதான். … இப்ப கஷ்டமில்ல… வெயில் காலம் வந்தாதான் கஷ்டம்…
பேசிக்கொண்டிருக்கும்போதே… பக்கத்தில் வேர்கடலை விற்கும் அம்மா, இவரை கைதட்டி அழைத்தார். அவரிடம் சென்றார்…..

அவர்…டீ குடிக்கிறீயா? என்றார்.
டீ வேணாம்…  கடலைக் கொடு என சைகையிலேயே பேசினார்.
அவரும் கைநிறைய வேர்கடலையை அள்ளிக் கொடுத்தார்.
நான் சொன்ன மாரி, டபுள் துணி போட்டு தைச்சிருக்கியா ? என்றார்.
அதுக்கு என்னா? … இப்ப தைச்சித் தாரேன்… காசு மட்டும் கொறைக்காம கொடு…. என்றார்.
காசுல்லாம் கிடையாது… கடலை வாங்கிக்க என்றார்,

இவரும் தைக்க ஆரம்பித்தார். ஒரு பை வாங்கிக் கொண்டு … நான் நகர ஆரம்பித்தேன். அவரை கடந்ததும் ..  என் ஆயாவின் சுருக்குப்பை ஞாபகம் எனக்கு!

அப்பாவுக்கு, எவ்ளோ கஷ்டம் வந்தாலும்,  ஆயாவின் சுருக்குப்பையில் மட்டும் பணம் இல்லாமல் இருக்காது. இப்போது நானும் புடவையின் அடி முந்தானையில்  பணத்தை  முடி,   வெளியில் தெரியாமல் வைப்பதை  என் ஆயாவிடம்தான் கற்றுக் கொண்டேன்.

பள்ளியில் படிக்கும்போது பேனா, நோட்டு  வாங்க  அப்பா பணம் தரவில்லையென்றால், ஆயாவின் பக்கத்தில் நின்று அழுது சாதிப்பது, சினிமா பார்க்க பணம் இல்லை என்று சொன்ன  ஆயாவிடம், ”இல்ல…. நீ வைச்சிருப்பே….. பையைக் காட்டு… ” என அழுது புரண்டு  வாங்கியது மறக்க முடியாது..  வீட்டில் சோறு இல்லாத நேரங்களில்,  ஆயாவின் சுருக்குப்பைதான் எங்களுக்கு இட்லி வாங்கி தந்தது.

எங்களுக்கு வந்த மழைக்கால ஜூரத்துக்கு காபியாகவும் குரோசின் மாத்திரையாகவும், வெயிலின் அம்மைக்கு இளநீராகவும் மாறிய சுருக்குபை,   பொங்கலுக்கு துணி எடுக்க வசதியில்லாம  இருந்தபோது, சீட்டிதுணியில் (காட்டன்) பாவாடையாக மாறியது எங்கள் ஆயாவின் சுருக்குப்பை!

இப்படி…  பழைய நினைவில் நடந்துக்கொண்டே சென்றதில் வந்து விட்டது ஜியோ சர்வீஸ் சென்டர்.

வாங்க மேடம்., லேட்டா வந்திருக்கீங்க….. சீக்கிரம் சொல்லுங்க…. என்றார் ஊழியர்.

என் போனை டேபிளில் வைத்து……153 ரூபாய் ரீஜார்ஜ் செய்தேன்…. டச் போனுக்கு அது செல்லாதாம்… ஜியோ போனுக்குத்தான் போகுமாம்….. இப்ப நான் என்ன செய்யறது…

சாரி மேடம்… நாங்க ஒண்ணும் செய்ய முடியாது…..

ரீஜார்ஜ் பண்ண தேதியிலிருந்து 28 வது நாள் டான்னு… எனக்கு  நெட்டு கட் ஆகுது….. போன்  பேசறது கட் ஆகுது…. எல்லாமே சிஸ்டமேடிக்கா இருக்கு…. ஆனா….. ஏத்துக்காத சிம்முக்கு நான், பணம்  தெரியாமல் போடுறேன்…. அது எப்படி? உடனே …அம்பானி கல்லா பெட்டிக்கு போய்டுது…. இதுக்கு உங்க சிஸ்டமேடிக் வேலை செய்யாதா?…… என்றேன்.

சாரி மேடம்…. நீங்க கஸ்டமர் கேருக்கு போன் போட்டு சொல்லுங்க…. நாங்க எதுவும் பண்ண முடியாது….

கஸ்டமர் கேருக்கும் போன் போட்டேன்… போன காசு …போனதுதானாம்…. இந்த, பிரச்சனை நிறைய இருக்காம்….. நாங்க தெரியப்படுத்திடுறோம்….. மேடமுனு வைச்சிட்டாங்க…. கடைசியில் என்னுடைய பணம் 153, அபேஸ்… டூ… அம்பானி.

ரூபாய், 153 ஏமாந்துட்டோமேன்னு வீட்டுக்கு திரும்பி நடக்கும்போது, சுருக்குப்பை குப்பு ஆயா… சிரித்துக் கொண்டே என்னை கடந்து போனார். அவருக்கு பை தைப்பதற்கு தையற்காரங்க இருக்காங்க. பையை வித்து கடலை கொடுக்கும் அம்மாக்கள் இருக்காங்க.ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசை! இவங்கள அழிச்சிட்டு வால்மார்ட்டு, அம்பானி, டாடான்னு நாடு மாறுனதுக்கு பிறகு நம்ம வருமானம் எப்படி போவுது, என்ன ஆச்சுன்னு கண்டே பிடிக்க முடியாது!

– லட்சுமி.

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. Its true, i loss Rs. 1500 for Jio phone.

    Every 28 days we have to pay for 153 Rs. After one month i surrender Jio phone to customer care and also i stopped to recharge Jio sim also.

    Thereafer i am using vodafone Rs. 250 for three month.

  2. இது-அதாவது,’சுருக்குப் பை’ விசயம்- கதையோ, கற்பனையோ ஆனால் மிகவும் அருமை!கல்வி,மருத்துவம், போக்குவரத்து.. என எது தனியாரிடம் இருந்தாலும் இத்தகைய பித்தலாட்டந்தான். எனக்கும்

  3. நீ இன்னாத்துக்கு ஜியோ ஃபொன் வாங்குறே. வெறும் BSNL போதாது. அத்தவிடு அந்த் ரெண்டு கெயவிகளும் சுருக்கு பையிக்கு கடலைய பண்டமாற்று பண்ணிக்கிச்சுனா GST வரிய யாரு கட்டுரது.

Leave a Reply to Rangan.M பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க