Thursday, May 1, 2025
முகப்புகளச்செய்திகள்தலித் மக்களின் பாரத் பந்த் : ஒன்பது பேர் சுட்டுக் கொலை !

தலித் மக்களின் பாரத் பந்த் : ஒன்பது பேர் சுட்டுக் கொலை !

-

ந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பெயரளவிற்கு கூட பயன்படுவதில்லை. இருப்பினும் நம்மூர் கொங்கு வேளாளர் சங்கங்கள் முதல் புதுதில்லி உச்சநீதிமன்றம் வரை இந்த பெயரளவு சட்டத்தைக் கூட பொறுத்துக் கொள்வதில்லை.

சமீபத்திய தீர்ப்பு ஒன்றில் உச்சநீதிமன்றம் இச்சட்டத்தினை நீர்த்துப் போகும் வண்ணம் உத்தரவிட்டிருந்தது. 1989-ம் ஆண்டில் இயற்றப்பட்டு 2016-ல் திருத்தப்பட்ட இந்த வன்கொடுமைச் சட்டம் (The Scheduled Castes And The Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989 (POA Act) தனிப்பட்ட பிரச்சினைகளின் பொருட்டு மிரட்டுவதற்கு பயன்படுவதாக நீதிமன்றம் பொருமியிருந்தது. அதனால் இவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தது.

மேலும் இவ்வழக்கில் ஒருவரை கைது செய்ய வேண்டுமென்றால் உயர் அதிகாரியிடம் அனுமதி வாங்குவதற்கும், வழக்கை பதிவு செய்வதற்கு முன்பே ஆரம்பகட்ட விசாரணை செய்து முடிவெடுப்பதற்கும் கூறியிருந்தது. மொத்தத்தில் இனி இவ்வழக்கில் ஆதிக்க சாதி வெறியர்களை கைது செய்யக் கூடாது என்றும் இத்திருத்தங்களை மொழிபெயர்க்கலாம்.

தேசிய குற்றப்பதிவு மையத்தின் National Crime Records Bureau (NCRB) புள்ளிவிவரங்களின் படி 2010 முதல் 2016-ம் ஆண்டு வரை உள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம். இவ்வாண்டுகளில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் தலித் மக்கள் மீதான வழக்குளில் 91%, பழங்குடி மக்கள் மீதான வழக்குகளில் 90% வழக்குகள் விசாரணை நிலையில் இருந்தன. 2016 முடிவில் பெரும்பான்மையான வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்ட விகிதம் 2010-ல் 38%-த்தில் இருந்து 2016-ல் 16%-மாக குறைந்தது. பழங்குடிகள் மீதான வழக்குகளில் குற்றம் நிரூபணம் 2010-ல் 26%-த்தில் இருந்து 2016-ல் 8%-மாக குறைந்திருக்கிறது. வருட சராசரியைப் பார்த்தால் இன்னும் மோசமான நிலை.

2016-ல் தலித் மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு மொத்த வழக்குகளில் 1.4% மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். பழங்குடி மக்கள் பிரிவில் அதே ஆண்டில் .8% மட்டுமே தண்டிக்கப்பட்டனர். ஆக இந்தியா முழுவதும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களின் படி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை.

ஊர், காவல்துறை, அதிகார வர்க்கம், நீதிமன்றம், ஓட்டுக் கட்சிகள் அனைத்திலும் பார்ப்பனிய ஆதிக்க சாதி வெறியர்கள் கோலேச்சிக் கொண்டிருக்கும் போது இந்த வழக்குகள் பதிவாவதும், விசாரிக்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் மிக மிக அரிது.

ஜூலை 2016-ம் ஆண்டில் குஜராத்தில் பார்ப்பன இந்துமதவெறியர்கள் பசுவைக் கொன்றதாக உனா தாலுகாவின் மோடா சமாதியாலா கிராமத்தில் தலித் இளைஞர்களை கொடூரமாக தாக்கியதை வீடியோவாகவே பார்த்திருக்கிறோம். இது குஜராத் தலித் மக்களிடம் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியதோடு, போராட்டத்தின் ஊடாக ஜிக்னேஷ் மேவானி போன்ற தலைவர்களை உருவாக்கியது.

மோடியின் குஜராத்தில் இப்படி ஒரு தலித் தலைவர் வருவதும், இந்துமதவெறியர்களை எதிர்த்து பெரும் போரட்டம் நடத்தப்படுவதும் எதைக் காட்டுகிறது? காலம் காலமாக அடங்கிக் கிடந்த தலித் மக்கள் இனிமேலும் பொறுக்கமாட்டார்கள் என்பதை உலகுக்கு அறிவித்தது. இவ்வளவிற்கும் அந்த கிராமத்தில் கொல்லப்பட்ட பசுவை கொன்ற ‘குற்றவாளி’ ஒரு சிங்கம் என்பது பின்னர் நடந்த விசாரணையில் தெரியவந்தது.

இதுதான் இந்திய சூழ்நிலையின் ஒரு வகைமாதிரி. இதில்தான் வன்கொடுமை சட்டங்களை நீர்த்துப் போகவைக்கும் வேலையினை உச்சநீதிமன்றம் செய்தது. இதை எதிர்த்து வட இந்தியாவில் தலித் அமைப்புகள், ஜனநாயக சக்திகள் நேற்று 02.04.2018 பாரத் பந்த் வேலை நிறுத்தத்தை நடத்தினர். இந்துமதவெறியர்களின் கோட்டையான ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தலித் மக்கள் பெரும் எதிர்ப்பினை காண்பித்தனர். ரயில் மறியல், சாலை மறியல், போலீசோடு மோதல் என்று இந்தப் போராட்டம் போர்க்குணமிக்க முறையில் நடந்தது.

அடங்கிக் கிடந்த தலித் மக்கள் இப்படி போராட்டம் நடத்துவது இந்துமதவெறியர்களுக்கு பொருக்குமா? எல்லா இடங்களில் போலீசார் கடுமையான முறையில் தடியடி, துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் மத்தியப் பிரதேசத்தில் ஆறு பேரும், உத்திரப்பிரதேசத்தில் இருவரும், ராஜஸ்தானில் ஒருவரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ஒன்பது பேர்களில் ஏழு பேர் தலித் மக்கள் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மத்திய அரசின் ரிசர்வ் போலீசு படையினர் இந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த துப்பாக்கி சூட்டை போலீசு மட்டும் நடத்தவில்லை. பல இடங்களில் பார்ப்பனிய ஆதிக்க சாதியினரும் நடத்தியிருக்கின்றனர். மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் – சம்பல் வட்டாரத்தில் தலித் மக்கள் மீதான வன்முறை அதிகம் நடந்திருக்கிறது. பல இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யுமாறு ஓநாய் பாஜக அரசு கருணையோடு மனு போட்டிருக்கிறது. பா.ஜ.கவை அண்டிப் பிழைக்கும் ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலித் பிழைப்புவாதிகள் தமது முகமூடிகளை காப்பாற்றுவதற்கு சிரம்பப்படுகின்றனர்.

இந்த மாநிலங்களில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட தலித் மக்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த மாபெரும் எதிர்ப்பை பார்த்த ஆளும் வர்க்கம் இனி ஒரு போராட்டம் நடக்க கூடாது எனும் வகையில் அடக்குமுறையை கையில் எடுத்திருக்கிறது.

ஆனால் உனாவில் திருப்பி அடித்த தலித் மக்கள் தற்போது வட இந்தியா முழுவதும் திருப்பி அடித்திருக்கின்றனர். தெற்கே தமிழகத்தில் மோடி அரசுக்கு எதிராக எழும்பியிருக்கும் போராட்டம் வடக்கே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமைப் போராட்டமாக பா.ஜ.கவை நோக்கி பாய்ந்திருக்கிறது.

பார்ப்பன இந்துமதவெறியர்களுக்கான கல்லறை இந்தியாவெங்கிலும் கட்டப்படும் என்பதை நேற்றைய பாரத் பந்த் காட்டிவிட்டது.

மேலும் :

Bharat Bandh: 9 killed as angry Dalits take to the streets, Madhya Pradesh most affected

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க