தெற்கு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த 15 வயது சிறுவனை இராணுவத்தினர் தாக்கியதால் மனமுடைந்த அவன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான்.
செப்டம்பர் 17-ம் தேதி அருகில் இருந்த இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள், 15 வயதான யாவர் அகமது பட்-ஐ கைது செய்து அடித்துள்ளனர். இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட யாவர் அதே நாளில் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கிறான்.
இந்த சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் அருகில் உள்ள தாகாப் கிராமத்தில் உள்ள இராணுவ முகாம் மீது கிரானேடு வீசப்பட்டதாக கூறி, பலரை கைது செய்துள்ளது இராணுவம்.

“யாவரை அதே இராணுவ முகாமைச் சேர்ந்தவர் அழைத்துக்கொண்டு போனார்கள். பல மணி நேரம் கழித்து அதே நாளில் விடுவிக்கப்பட்டபோது அவனுடைய அடையாள அட்டையை பறித்துக்கொண்டார்கள். அன்று மாலை அவன் என்னிடம் ‘இராணுவத்தினர் தன்னை அடித்ததாகக் கூறினார். ஆனால், அந்த சம்பவத்தைப் பற்றி பெற்றோரிடமோ மற்ற குடும்ப உறுப்பினர்களிடமோ எதுவும் கூறவில்லை” என்கிறார் யாவரின் சகோதரி சைமா.
பத்தாம் வகுப்பு படித்து வந்த தனது சகோதரன் அந்த சம்பவத்தால் மிகவும் கலக்கமுற்று இருந்ததாகக் கூறுகிறார் சைமா.
“அன்று பணிக்காக வெளியே சென்றான். காலை 11 மணியளவில் திரும்பி வந்த அவன், அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டான். அவன் எதுவும் உண்ணவில்லை. அவன் எப்போதும் என்னுடைய அறையில்தான் தூங்குவான். அன்று அவனுடைய அம்மாவுடன் சென்று உறங்கினான். என் மனைவியும் அவன் அடிக்கடி ஜன்னலை திறந்து வாந்தி எடுப்பதாகக் கூறினார். பிறகு தலைவலிக்கிறது என்றான். அதன்பின் மாவட்ட மருத்துவமனைக்கு இரவு 11.30 மணிவாக்கில் அழைத்துச் சென்றோம்” என்கிறார் யாவரின் தந்தை அப்துல் ஹமீது பட்.
“அன்றிரவு அவன் விசத்தை குடித்துவிட்டான்” என்கிறார் சைமா. “மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவனுடைய நிலைமை ஆபத்தான கட்டத்துக்குச் சென்றிருந்தது” என்கிறார் இறந்துபோன யாவரின் உறவினர் ஒருவர்.
அந்த மருத்துவமனையிலிருந்து ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட யாவர், இரண்டு நாள் கழித்து செப்டம்பர் 19 அன்று சிகிச்சை பலினின்றி இறந்திருக்கிறான்.
படிக்க:
♦ காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்
♦ கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்
“மருத்துவர்கள் உங்கள் மகன் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் உயிரோடு இருக்கமாட்டான். ஏதேனும் பேசுவதென்றால் இப்போதே பேசிக்கொள்ளுங்கள் என்றார்கள். அவனைக் காப்பாற்றும்படி அவர்களிடம் கெஞ்சிவிட்டு, அவனைக் காணச் சென்றேன்.
‘எங்களுக்கு இதை ஏன் செய்தாய்?’ என அவனிடம் கேட்டேன்.
‘காஷ்மீருக்காக நான் எனது வாழ்க்கையை தியாகம் செய்கிறேன்’ என்றான் அவன்” என நிகழ்ந்ததை நினைவுகூறுகிறார் அப்துல்.

ஐந்து சகோதரிகள் அடங்கிய ஏழு பேரில் யாவர், மிகவும் பலகீனமானவன் என்கிறார் அவருடைய தந்தை. காவலர்களாலோ, பாதுகாப்புப் படையினராலோ இதுவரை யாவர் கைதுக்கு ஆளானதில்லை எனவும் விவசாயியான அவர் கூறினார்.
அருகில் இருந்த கிராமத்தில் ஒரு கார் பழுதுநீக்கம் கடையில் யாவர் பணிக்குச் சென்றிருக்கிறான். அப்போதுதான் இராணுவம் அவனை அழைத்துச் சென்றுள்ளது.
போலீசு இது தற்கொலை வழக்கு என்கிறது. யாவரின் குடும்பம் சொல்வதைப் போல அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என இராணுவத்தினர் சொன்னதாகவும் போலீசு கூறுகிறது.
யாவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவன் தொடர்ச்சியாக ‘காஷ்மீர் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது’ என கூறிக்கொண்டிருந்ததாக அவனுடைய உறவினர் கூறுகிறார்.
காஷ்மீரில் இளஞ்சிறார்கள் பாதுகாப்புப் படையினரால் கைதாவதும் சித்ரவதைக்குள்ளாவதும் சில சமயம் கொடுமைகள் தாங்க முடியாமல் இறந்துபோவதும் தொடர்கதையாகிவிட்டது. இவ்வளவு அடக்குமுறைகளை ஏவி விட்டிருக்கும் மோடி அரசாங்கம், ஒவ்வொரு காஷ்மீரியையும் தழுவிக்கொள்வதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
கலைமதி
நன்றி: த வயர்.