privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பீச் வாலிபால்: கமான் இந்தியா! ஒன்பது அங்குலம்தான் பாக்கி!!

பீச் வாலிபால்: கமான் இந்தியா! ஒன்பது அங்குலம்தான் பாக்கி!!

-

நடந்து முடிந்த ஐ.பி.எல்லின் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளைக் குறித்து டெஸ்ட் போட்டி பழம் பெருசுகள் புலம்பித் தீர்த்தனர். சிலரோ கிரிக்கெட் போட்டியை வணிகமயமாக்கம் தின்று தீர்த்தது குறித்து கவலைப்படாமல் அரை நிர்வாண அழகிகள் ஆர்ப்பரித்தது குறித்ததே கவலைப்பட்டனர். இதுவாவது பரவாயில்லை. விளையாட்டை ஆதரித்துத்தான் இந்த வெளிநாட்டுப் பெண்கள் ஆடினர். இப்போது இதை விட குறைவான உடையுடன் கிட்டத்தட்ட முழு அம்மணத்துடன் வீராங்கனைகள் அதிலும் வெளிநாட்டு பெண்கள் பீச் வாலிபால் எனும் விளையாட்டை சென்னையில் ஆடுகின்றனர். சர்வதேச வாலிபால் சம்மேளனம் முதன் முறையாக இந்தியாவில் இந்தப் போட்டியை ஜூலை17 முதல் 20 வரை நடத்துகின்றது.சென்னை எலியட்ஸ் கடற்கரையில் 3000பேர் பார்க்கக்கூடிய காலரி வசதியுடன் போட்டி நடக்கின்றது

வழக்கமான வாலிபால் போட்டிகளில் அறுவர் ஆடும் போது கடற்கரை வாலிபாலில் இருவர் மட்டும் ஆடுவார்கள். இன்னும் சில விதிமுறைகளும் மாறுபடும். இதெல்லாம் பரவாயில்லை. இந்த ஆட்டத்தில் ஆடும் பெண் வீராங்கனைகள் வெறும் காலுடன் ஆடுவதில் பிரச்சினையில்லை. அப்படித்தான் ஆடமுடியும். ஆனால் இவர்கள் அணியும் உடை குறித்தும் ஒரு விதிமுறை உண்டு. அதன் படி பெண்களின் மேல்கச்சைக்கும் இடுப்புக் கச்சைக்கும் இடையில் ஒன்பது இன்ச் இடைவெளி இருக்க வேண்டுமாம். பச்சையாகச் சொன்னால் பிராவுக்கும் ஜட்டிக்கும் இடையில் உள்ள உடலைக் காட்டவேண்டும். அதை மறைத்து உடை அணிந்தால் விளையாடுவதற்கு அனுமதி கிடையாது.

கட்டுப்பெட்டிகளின் தேசமான இந்தியாவின் வீராங்கனைகள் நீச்சல் உடை அணிந்து ஆடுவதற்கு தயாராக இல்லையாம். இதனால் அவர்கள் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்படும் நிலைமை இருந்தது. கடைசியில் போட்டி உள்ளூரில் நடப்பதால் போனால் போகிறதென்று டீ ஷர்ட்,ஷார்ட்டுசுடன் இந்திய வீராங்கனைகள் ஆடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். மற்றப்படி வெளிநாட்டுப் பெண்களெல்லாம் கண்ணைப் பறிக்கும் தம்மாத்துண்டு துணியுடன் சகஜமாக ஆடுகின்றனர். இப்படி நீச்சல் உடை அணிந்து ஆடும் வீராங்கனைகளை அழகிகளாக இரசிப்பதற்கு ஆண் இரசிகர்கள் எலியட்ஸ் பீச்சை மொய்க்கின்றனர். ஒரு விளையாட்டுப் போட்டியை இரசிப்பதற்கு பாலுறவு இரசிகர்கள் படையெடுக்கிறார்கள். பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு இந்த நீச்சல் உடைக் காட்சிகளை பிரசுரிக்கின்றன.

எந்த ஒரு விளையாட்டையும் அதற்குத் தேவையான உடையுடன்தான் ஆட முடியும். எனினும் இந்த அறிவியல் உண்மை ஆண்களுக்கு மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை விளையாட்டின் தேவையை விட ஆண் இரசிகர்களின் தேவை கணக்கில் கொள்ளப்படுகிறது.இதனால் தாலிபான்கள் சொல்வது போல ஓட்டப் பந்தய வீராங்கனைகள் பர்தா போட்டுக்கொண்டு ஓடவேண்டும் என்று நாம் சொல்லவில்லை. ஜிம்னாஸ்டிக் உலகில் சாதனை படைத்த ருமேனியாவின் நாடியாவை நாம் களத்தில் பார்க்கும் போது அவரது உடை நம் கண்களுக்கு முக்கியமாகப் படுவதில்லை. ஒரு மனித உடல் செய்யும் எல்லையில்லா வலிமையுடன் கூடிய நளினத்தை சாதனையாகப் பார்த்து உற்சாகம் அடைகிறோம். இருப்பினும் எல்லா துறைகளிலும் பெண்களை கவர்ச்சிப் பதுமையாக விற்றுவரும் உலகமயமாக்கம் விளையாட்டிலும் அதையே அமல்படுத்துகிறது

டென்னீஸ் உலகை எடுத்துக் கொள்ளுங்கள். மரியா ஷரபோவா, வீனஸ் வில்லியம்ஸ், ஏன் நமது சானியா மிர்சா வரை உள்ள வீராங்கனைகள் அனைவரும் நம் மூளையில் எப்படி சேமிக்கப் பட்டிருக்கிறார்கள்? இவர்களது பிரபலாமான ஆட்ட இலாவகமெல்லாம் நமது சித்தரிப்பில் இல்லை. அவர்களது குட்டைப் பாவாடை காற்றில் தூக்கிய காட்சிகளைத்தான் ஊடகங்கள் நம்மிடம் சேர்ப்பிக்கின்றன. அறுத்துப் போட்ட ஆட்டிறைச்சியைப் போல டென்னீசு உலகில் பெண் வீரர்கள் அழகிகளாக தொங்கவிடப்படுகின்றனர். பல வீராங்கனைகள் ஆட்டத்தில் முன்னேறுவதை விட மாடல்களாக மாறுவதுதான் அதிகமாக நடக்கின்றது.வீராங்கனைகள் விளம்பர அழகிகளாக மாறுவதும், விளையாட்டு இரசிகர்கள் பொறுக்கிகளாக மாற்றப்படுவதும் ஒருங்கே நடக்கின்றது. பெரும் மூலதனமிட்டு நடத்தப்படும் தொழிலாக மாற்றப்பட்ட இன்றைய விளையாட்டுப் போட்டிகளின் கைங்கரியத்தில் ஆண் வக்கிரத்திற்கு தீனி போடும் வகையில் பெண்ணுடல் மாற்றப்படுகின்றது. மிச்சம் மீதி வைக்காமல் எல்லா வழிகளிலும் பெண்ணுடல் உலகின் கவனைத்தைப் பெறும் வகையில் கட்டியமைக்கப்படுகின்றது.

பீச் வாலிபால் இந்த வக்கிரத்தின் உச்சம். மேற்குலகின் குளிர்தட்பவெட்ப நாடுகளில் வாழும் மக்கள் சூரியக் குளியல் போடுவது வழக்கமான விசயம்.ஆனால் கடற்கரையை வைத்து முக்கியமாக நீச்சல் உடை பெண்களை மையமாக வைத்து அங்கே பல பொழுது போக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிரபலமான பேவாட்ச் எனும் நீச்சல் உடை அழகிகளின் டி.வி. தொடர் இதற்கோரு எடுத்துக்காட்டு. இதில் நடித்த பமீலா ஆண்டர்சனின் பெருத்த மார்பகங்களும், தொடைகளும்தான் இரசிகர்களிடம் புகழ் பெற்றன. நீச்சல் உடை அழகிகள் ஆடிப்பாடும் நிகழ்ச்சிகள் எம்.டிவியில் நேரடியாக காட்டப்படுகின்றன. அமெரிக்காவில் போதைப் பொருட்கள், கடின ராக் இசை, பிகினி உடை அழகிகள், ஆட்டம் பாட்டம் முதலியனவற்றைக் கொண்டாடுவதற்கு பல கடற்கரைக் கிளப்புகள் இருக்கின்றன. இந்த அழகியலின் விதிகளோடுதான் பீச் வாலிபால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால்தான் டிரஸ் கோட் எனும் பெயரில் பிகினி உடை அணிவதை இவ்விளையாட்டில் விதிமுறையாக வைத்திருக்கிறார்கள். ஆகவே பீச் வாலிபால் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அது கடற்கரை கொண்டாட்டத்தின் ஒரு பகுதி. இதில் நீச்சல் உடை அழகிகள் வீராங்கனைகள் என்ற பெயரில் ஷோ நடத்துகின்றனர்.

எலியட்ஸ் கடற்கரையில் நடக்கும் போட்டியில் பெண்கள் நாகரிகமான உடை அணிந்து விளையாட வேண்டும் இல்லையேல் போட்டியை அனுமதிக்கக் கூடாது என்று பா.ஜ.கவின் சேலை கட்டிய பெண்கள் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்திருக்கின்றனர். பாரத மாதாவின் உடையை உருவி பன்னாட்டு முதலாளிகளுக்குக் கூட்டிக் கொடுத்த கட்சி கடற்கரை வாலிபாலுக்காக கண்ணீர் விடுவது நல்ல வேடிக்கைதான். முதலாளிகளுக்கு விபச்சாரம் – மக்களுக்கு கற்பு – இதுதான் பா.ஜ.கவின் அரசியல் விபச்சார ஒழுக்கம். இது எண்ணையின் பெயரால் ஏழை நாடுகளைச் சுரண்டி அந்தப் பணத்தை அமெரிக்க நிறுவனங்களில் மூலதனமிட்டு ஆட்டம் போடும் அரபு ஷேக்குகள் தங்களது நாட்டுப் பெண்களை மட்டும் பர்தா சாக்குகளில் மூடிப் பாதுகாக்கும் ஒழுக்கத்திற்கு நிகரானது.மக்கள் பிரச்சினைகளுக்காக மனமுருகும் இந்த வேடதாரிகளை  முறியடிப்பதும் கடற்கரை வாலிபாலுக்கு நாம் காட்டும் எதிர்ப்பும் வேறுவேறல்ல.

பார்ப்பனிய நிலப்பிரபுத்துவம் பாதுகாப்பு என்ற பெயரில் பெண்ணை அடிமைப் படுத்துகிறது. உலகமயத்தின் முதலாளித்துவமோ சுதந்திரம் என்ற பெயரில் பெண்ணைக் கடித்துக் குதறுகிறது. இத்தகைய வக்கிர நிகழ்ச்சிகளை நாம் உடனுக்குடன் எதிர்ப்பது அவசியம். அந்தப்போராட்டத்தில் விளக்குமாற்றுடனும், செருப்புடனும் உழைக்கும் பெண்கள் நிறைந்திருக்கவேண்டும். அப்போதுதான் பெண்ணை மரியாதை செய்யும் அழகை நாம் கற்றுக் கொள்ளவும் பெற்றுத் தரவும் முடியும்.

______________________________________________