privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!

அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!

-

“ஏன் பாஸ் இத்தன பேர் சேர்ந்து அடிச்சாங்களே, நீங்க திருப்பி ஒரு அடி கூட அடிக்கலையா” ” அடிக்கும்போது அந்தக் கூட்டத்துல ஒருத்தன் சொன்னான்… எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவன்டான்னு , அவ்வ்வ்வ்வ்வ்”
-வைகைப் புயல் வடிவேலு

22.9.08 சென்னை போரூரில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பதினோராவது மாநாட்டுப் பிரச்சாரத் துவக்க விழா மற்றும் பெரியாரின் பிறந்த நாள் விழாக் கூட்டத்தின் போது இந்து முன்னணிக் குண்டர்கள் புகுந்து தாக்கினர். கற்களை வீசியும், நாற்காலிகளை எரிந்தும் நடத்தப்பட்ட தாக்குதலில் பல தோழர்கள் காயமடைந்தனர். கூட்டமும் அத்தோடு முடிந்தது. கலை இலக்கியவாதிகளின் கூட்டமென்பதாலோ என்னவோ யாரும் திருப்பியடிக்கவில்லை.

இதைக் கண்டித்து த.மு.எ.ச 30.9.08 செவ்வாய்க்கிழமையன்று அதே இடத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தின் தலைப்பு “மதவெறித் தாக்குதலுக்கு எதிராக….”. கண்டனக் கூட்டத்தைக்கூட இந்து மதவெறிக்கு எதிராக என்று போடுவதற்கு சி.பி.எம் தோழர்கள் தயங்கும் போது இந்து முன்னணி நிச்சயமாகக் கொஞ்சிக் குலாவும் என எதிர்பார்க்கமுடியுமா?

கூட்டத்தில் பேசியவர்கள் சொன்னதை பார்க்கும் போது முந்தைய கூட்டத்தில் அப்படி ஒன்றும் இந்து மதவெறியைத் தாக்கி தோழர்கள் பேசியதாகத் தெரியவில்லை. கலை நிகழ்ச்சிகள் முடிந்து பேசும்போது ஒருவர் நமது ஊரில் மாரல் (moral) போலீஸ் ஒருவர் இருக்கிறார்; அவரால் தசாவதாரம் படம் தயாரிப்பு முடிவதற்குள் பிரச்சினை ஏற்பட்டது என்றாராம். உடனே பார்வையாளர்களில் ஒருவர் ராம கோபாலன் என்று சொன்னாராம். உடனே இந்து முன்னணியினர் தாக்கத் தொடங்கினராம். ஒருவேளை உண்மையிலேயே இந்துமதவெறியைத் விமரிசித்திருந்தால்… பாவம் அந்த அப்பாவிப் பிள்ளைகளை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
(படிக்க-http://santhipu.blogspot.com/2008/09/11-130-22-2008.html)

நமக்குத் தெரிந்து சி.பி.எம் கட்சியினர் பல இடங்களில் இந்து மதவெறியர்களிடமிருந்து அடி வாங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் கண்டனக் கூட்டத்தைத்தான் நடத்தினார்களே ஒழிய பதில் தாக்குதல் செய்யவில்லை. என்ன இருந்தாலும் ஜனநாயகவாதிகளாயிற்றே! சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பாரதி இல்லத்தில் த.மு.எ.ச கூட்டத்தில் இந்து முன்னணியினர் உள்ளே புகுந்து அடித்தனர். அதற்கும் திருவல்லிக்கேணியில் இதே போலதொரு மாபெரும் கண்டனக் கூட்டம் நடந்தது. கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற காட்டுமிராண்டிக்கால செய்கைகளெல்லாம் ஜென்டில்மென் சி.பி.எம் தோழர்கள் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆடு பசித்தாலும் கறி தின்னாதே!

எல்லாவற்றுக்கும் மேல் டெல்லி சி.பி.எம் தலைமையகத்தையே பா.ஜ.க தொண்டர்கள் சூறையாடிய போது எச்சூரி கூட இப்படித்தான் பாசிஸ்ட்டுகள் நடந்து கொள்வார்கள் என்று சான்றிதழ் அளித்தார். பாசிஸ்ட்டுகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதா பிரச்சினை? அவர்களை எப்படி எதிர் கொள்வது என்பதுதானே விசயம் என்று நாம் கேட்டால் ” இல்லை தோழர் நாமும் பாசிஸ்ட்டுகள் மாதிரி செய்ய முடியாது, இது ஜனநாயக நாடு, எல்லாம் ஜனநாயக முறைப்படிதான் செய்ய முடியும்” என்று கழுத்து அறுபடும் வண்ணம் வகுப்பெடுப்பார்கள்.

போகட்டும். நாம் மீண்டும் கண்டனக் கூட்டத்திற்கு திரும்புவோம். கூட்டத்தில் பத்திரிகையாளர்கள், பிற அமைப்புத் தலைவர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் பேசினர். இவ்வளவு பேர் நம்மளைப் பற்றி பேசுகிறார்களே என்று ஒரு வாரத்துக்கு முந்தி தாக்குதல் நடத்திய இந்து முன்னணிக்காரர்கள் தங்களை மாபெரும் ஹீரோக்களாக கருதியிருக்கக்கூடும். வீடு புகுந்து நாலு சாத்து சாத்த வேண்டிய சில்லறைகளுக்கு ஜனநாயகத்தின் பெயரால் அர்ச்சனை! இதுகூடப் பரவாயில்லை. அடிபட்டு தையல் போட்ட தோழர்களுக்கெல்லாம் துண்டுகளை பொன்னாடையாகப் போட்டு பாராட்டினார்களே அதைத்தான் கடுகளவு கூட சகிக்க முடியவில்லை. திருப்பி அடித்திருந்தால் கூட போராளிகள் என்று கவுரவிக்கலாம். அடிபட்டதையே சிலாகிப்பதைப் பார்க்கும் போது அனாமதேயங்களிடம் அடிவாங்கும் வடிவேலுவே மேல் என்று தோன்றுகிறது.

நக்கீரன் கோபால் பேசும் போது குஜராத்தை நரவேட்டையாடிய மோடி என்ற பேடியை வீட்டிற்கு வரவேற்று நாற்பது வகை உணவுகளைக் கொடுத்து சீராட்டுவதற்கு போயஸ் தோட்டம் இருக்கும் போது இவர்கள் தாக்காமல் என்ன செய்வார்கள் என்றார். இந்த இடத்தில் தோழர்கள் கண்டிப்பாக நெளிந்திருக்க வேண்டும். நாம் மேடைக்கு சற்றுத் தொலைவில் இருந்ததால் நெளிவு சுளிவுகளை தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி அம்மாவோடு தோட்டத்தில் மேய்வதற்குக் காத்திருக்கும் தோழர்களுக்கு கோபாலின் பேச்சு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்வதுதான் தர்மம். இதன்றி சங்கடப்படுவதில் பொருளில்லை.

ஓவியர் வீரசந்தானம் பேசும்போது அடிபட்ட தோழர்களெல்லாம் வாட்டசாட்டமாக இருக்கிறார்கள், இவர்களா அடிபட்டார்கள், திருப்பித் தாக்கியிருக்க வேண்டாமா என்றார். உடனே பொங்கி வந்த கோபத்துடன் அடுத்து செந்தில்நாதன் ஆவேசமாக விளக்கமளித்தார். த.மு.எ.ச ஒன்றும் கோழைகளின் கூட்டமல்ல, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டக்கூடிய அஹிம்சாவாதிகளல்ல, இந்தக் கூட்டத்தில் கூட இந்து முன்னணியினர் தாக்கினால் அவர்களை துரத்தி வீடு புகுந்து அடிப்போம் என்றெல்லாம் கர்ஜித்தார். இது உண்மைதானா என்று கூட்டத்தைச் சுற்றிப் பார்த்தோம். கூட்டத்தில் சுமார் 500பேர்கள் இருந்தனர். எங்கும் சிவப்பாடை அணிந்த ஒரு தொண்டரைக்கூட கம்புடன் பார்க்கவில்லை. போலீசுதான் கர்ம சிரத்தையோடு அருகாமை சந்து பொந்துகளிலெல்லாம் சுற்றி வந்து பாதுகாப்பு கொடுத்தது. ஒருவேளை போலீசார்தான் வீடு புகுந்து அடிப்பார்கள் என்று பொருள்பட பேசியிருப்பாரோ என்னவோ தெரியவில்லை.

பேச்சுவாக்கில் செந்தில்நாதன் தில்லை நடராசன் கோவிலில் ஓதுவார் ஆறுமுகச்சாமியின் தமிழுக்கான போராட்டத்தைக் குறிப்பிட்டார். அது ஏதோ சி.பி.எம் சம்பந்தப்பட்டது என்பது போல மறைமுகமாகப் பேசினார். இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய மக்கள் கலை இலக்கியக் கழகத்தை தெரிந்தே இருட்டடிப்பு செய்தார். உண்மையில் இந்தப் போரட்டத்தில் பார்ப்பனர்கள் என்ற சொல் இருக்கிறது என்ற காரணத்திற்காக சி.பி.எம் கட்சியினர் விலகிக் கொண்டதுதான் வரலாறு. பார்ப்பன இந்து மதத்தின் சித்தாந்த்தத் தலைமையாக விளங்கும் பார்ப்பனர்களை அப்படி அழைப்பதைக் கூட பொறுக்க முடியாத கட்சிதான் இந்தியாவில் இந்துவத்தை வேரறுக்கப் போகிறதாம். கேப்பையில் நெய் வடிந்தாலும் வடியும்.

கவிஞர் சூரியதீபன் பேசும்போது ஒரிசாவில் இந்துமதவெறியர்கள் செய்யும் கலவரங்களைச் சொல்லி, லட்சுமாணனந்தாவை மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்ததை எடுத்துக்காட்டி இந்து மதவெறியர்களை அடக்கும் செயலை மாவோயிஸ்ட்டுகள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை தேவைப்பட்டால் நாமும் செய்யவேண்டும் என்றார். நேபாள் மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிதைப்போல இந்திய மாவோயிஸ்ட்டுகளும் யூ டர்ன் அடித்துத் திரும்பவேண்டும் என்று பேசிவரும் சி.பி.எம் கட்சியனர் இதற்கு என்ன சொல்வார்கள்? உடனே ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு சங்க பரிவாரத்தை வேட்டையாடக் கிளம்பி விடுவார்களா, இல்லை காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு மதவெறி அரசியலை எதிர்க்க “போர்க்குணமிக்க” முறையில் போராடுவார்களா?

தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் பேசும்போது இந்துத்வவாதிகள் ஒரு திட்டத்துடன் இருப்பதுபோல நாமும் ஒரு திட்டத்துடன் செயல்படவேண்டுமென்றார். பெரியாரும், அம்பேத்காரும் அதற்கான வழிமுறைகளை உருவாக்கித் தந்துள்ளார்கள் என்றவர், இந்துக்களாக வாழ்ந்து கொண்டு இந்துப் பண்டிகைளைக் கொண்டாடிக் கொண்டு, சாதியத்தைக் கடைபிடித்துக் கொண்டே இந்துத்வவாதிகளை எதிர்க்க முடியாது என்றார். நமக்கு சி.ஐ.டி.ய ஆட்டோ சங்கம் நடத்தும் ஆயுத பூஜையும், தீக்கதிரின் தீபாவளி சிறப்பு மலரும், சோமநாத் சட்டர்ஜி பேரனுக்கு செய்த பூணூல் கல்யாணமும், நான் முதலில் ஒரு இந்து அப்புறம்தான் ஒரு கம்யூனிஸ்ட்டு என்று ஒரு மேற்கு வங்க அமைச்சர் பேசியதும் நினைவில் வந்து போனது. இதன்படி பார்த்தால் சுத்தமான இந்துக்களாக வாழும் சி.பி.எம் கட்சியனர் என்றைக்குமே இந்து மதவெறியர்களை எதிர்க்க முடியாது என்றாகிறது.

அம்பேத்கர் பத்து இலட்சம் மக்களுடன் புத்த மதத்திற்கு மாறியதே தீர்வு என்று பேசிய புனித பாண்டியன் மதமாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.இந்த அணுகுமுறையை ஈழத்தமிழர்களுக்கு அமல்படுத்தினால் என்ன ஆகும்? அங்கே ஈழத்தமிழர்களை வேட்டையாடுவதை புத்த பிட்சுக்கள் வலியுறுத்தும் போது என்ன செய்வது? ஈழத்தில் மட்டும் கிறித்துவ மதத்திற்கு மாறவேண்டுமா? சாதியும், தீண்டாமையும் மதம் மாறினாலும் தாழ்த்தப்பட்ட மக்களை விட்டுவிடாமல் கட்டிப்போடும்போது, மதமாற்றம் முழுவிடுதலை அளிக்காது. பார்ப்பனியத்தின் சாதிய சமூகத்தை அதன் அரசியல், சமூக, பொருளாதார அடிப்படைகளிலிருந்து வீழ்த்தும் வரை இந்துத்வம் அழியாது.

போரூரில் கணேசன் காந்தி எனும் இந்துமுன்னணி வட்டார ரவுடியின் தலைமையில் அணிதிரண்டு தாக்கியவர்களை ஒன்னும் செய்யமுடியாத த.மு.எ.ச இலக்கியவாதிகளுக்கு இவ்வளவு பெரிய விசயமெல்லாம் செய்யவேண்டுமென்றால் அதற்கு இந்துவாகவே வாழ்ந்து கொண்டு போய்விடலாம் என்பார்கள். அல்லது வர்க்கப்போரட்டம் ஓன்றே சர்வரோக நிவாரணி என்று வகுப்பெடுப்பார்கள். நடைமுறையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மார்க்சியத்தின் வர்க்கப்போராட்டம் அவர்களுக்கு உதவிசெய்வதை கண்டால் காரல் மார்க்சுக்கே கோபம் வரும்! என்ன செய்வது, மார்க்ஸ்தான் உயிருடன் இல்லையே!

த.மு.எ.சவின் பேச்சாளர்கள் எல்லோரும் ஒரு விசயத்தை மட்டும் வலியுறுத்தினர். அதுதான் கருத்துரிமை! அதாவது இந்துவத்தை விமரிசனம் செய்தால் பதிலுக்கு இந்துமுன்னணி கூட்டம் போட்டு பதில் சொல்லவேண்டுமாம். இதுதான் ஜனநாயகமுறையாம். இதை விடுத்து தாக்குவது என்பது மதவெறியாம். இந்த முக்கியமான பாலபாடம் தெரியாததால்தான் இந்தியாவில் இந்து மதவெறியர்கள் இவ்வளவு நாள் கலவரம் செய்து பல்லாயிரம் பேரைக் கொன்றிருக்கிறார்கள் போலும். இனி இந்து முன்னணியின் ஒவ்வொரு கிளைக்கும் த.மு.எ.ச தோழர் ஒருவரை அனுப்பி வகுப்பெடுப்பதுதான் பாக்கி. இதை இராம கோபாலனிடம் விளக்கி கன்வின்ஸ் செய்தால் முடிந்தது பிரச்சினை! இந்தப் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் பாசிசத்தை மதிப்பிடுவதையும், அதை எதிர்கொள்வதையும் நினைத்தால் புல்லரிக்கிறது.

பெரியார் திராவிடர் கழகத்தின் விடுதலை இராஜேந்திரன் பேசும் போது இன்றைக்கு இடதுசாரி இயக்கங்களெல்லாம் பெரியாரின் கொள்கைகளைப் பேசிவருவது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார். போரூரில் தாக்கியவர்கள் எல்லாம் பார்பனர்கள் அல்ல பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் என்று பேசிய ராஜேந்திரன் அவர்களும், தலித்துக்களும் பார்ப்பனிய இந்து மதத்தால் அடிமைகளாக நடத்தப்படுவதை விளக்கினார். இதையெல்லாம் எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களும் முன்வரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.

சங்க பரிவாரத்தால் சித்தாந்த ரீதியாக அணிதிரட்டப்பட்டுள்ள மக்களிடம் இப்படிப் பிரச்சாரம் செய்வது சரிதான். அதே சமயம் அது போர்க்குணமிக்க முறையிலும், சித்தாந்த ரீதியில் தாக்குதல் நிலையிலும் இருக்கவேண்டும். அப்போதுதான் சாதி, மொழி, பண்பாட்டு வகையில் பார்ப்பனியத்தால் அடிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களை விடுவிக்க முடியும். சி.பி.எம் கட்சியோ இந்துமதத்தின் ஆன்மாவாக இருக்கும் சாதிய சமூகத்தை மறுத்து நல்ல இந்து மதம் ஒன்று இருப்பதாக கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ.எஸ் இன் இந்து மதம் வன்முறையானதாம், இவர்களுடையது சாத்வீகமானதாம். பாம்பில் நல்ல பாம்பு, கெட்ட பாம்பு!

இறுதியில் பேசிய த.மு.எ.சவின் தமிழ்ச்செல்வன் பெரியாரையும், அம்பேத்காரையும் இப்போதுதான் என்றில்லை வெகுகாலமாகவே பேசிவருவதாகச் சொன்னார். அப்புறம் பாரதியாரையும், பாரதிதாசனையும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும் முறையே பார்ப்பனிய எதிர்ப்புக்காகவும், வர்க்கப் போரட்டத்திற்காகவும் தோளில் தூக்கிச் சுமப்பதாகச் சொன்னார். கூட்டத்திலும் பாரதி, காந்தியின் படங்களை தூக்கியவாறு தொண்டர்கள் அமர்ந்திருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நிகழ்ச்சிகளில் தேசியக்கவி என்று கொண்டாடப்படும் பாரதியாரை த.மு.எ.ச வும் கொண்டாடுகிறது. இப்போது ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் இந்துமதவெறியர்கள் தாக்குவதை, அவர்கள் தலைவர்கள் இது மதமாற்றத்திற்கு எதிரான போர் என்று பிரகடனம் செய்கிறார்கள். பாரதியும் மதமாற்றத்தைக் கண்டித்து அப்போதே எழுதியிருக்கிறார். என்றால் பாரதி யாருக்குச் சொந்தமாக இருக்கமுடியும்? பங்காளிகள் பேசி முடிவு செய்து கொள்ளட்டும்.

டிசம்பர் 18 முதல் 21 வரை சென்னையில் நடைபெற இருக்கும் த.மு.எ.ச மாநில மாநாட்டை மதவெறி எதிர்ப்பு, தலித் விடுதலை, பெண்விடுதலை, தமிழ் வளர்ச்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற ஐந்து அம்சங்களுக்காக நடத்தப் போகிறார்களாம். தற்போது போரூரில் இந்து முன்னணி தாக்குதல் நடத்தியதால் தமிழகம் முழுவதும் மதவெறியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப் போகிறார்களாம். ஷாபனா ஆஸ்மியும், நடிகர் அமீர் கானும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று தமிழ்ச்செல்வன் பேசினார். கோகோ கோலாவின் விளம்பரத் தூதராக இருக்கும் அமீர் கானை வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு! நல்ல பொருத்தம்தான்.

அதிலும் கூட மதவெறியைத்தான் எதிர்க்கப் போகிறார்கள். ஏதோ நாட்டில் ஆயிரம் மதவெறிகள் இருப்பதை போல. இந்தியாவில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று இரண்டாக மதப்பிரிவுகளை பிரிக்கலாம். இப்போது பெரும்பான்மையின் பெயரால் சிறுபான்மை ஒடுக்கப்படுகிறது. இதை இந்து மதவெறி என்று கூட சொல்வதற்கு கூச்சப்படும் கோமாளிகளின் கூட்டம் எப்படி இந்துத்வத்தை எதிர்கொள்ளும்?
அதிகபட்சம் அடுத்த தேர்தல் முடிந்த பின் சி.பி.எம் கட்சி காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு பா.ஜ.கவை எதிர்ப்பதுதான் நடக்கப்போகிறது. இதற்கு இவ்வளவு பெரிய போர்முழக்கம் செய்வது பொருத்தமாக இல்லை.

பபூன்கள் சீரியஸாக நடித்தாலும்….சிரிப்புதான் வரும்!

________________________________