privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகாஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !

காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !

-

“”கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும். எங்கள் கருணா… நிதியாகும்” இது நாகூர் ஹனீபாவின் திமுக “கொள்கை’ப் பாடல். போர் நிறுத்தம் ஆயுத உதவி நிறுத்தம் என்று தொடங்கி பத்தே நாளில் அரிசி பருப்பு வசூலில இறங்கிவிட்டார் அண்ணன் கலைஞர். இதுதான் கழகத்தின் கொள்கை.

ஈழமக்களின் கோரிக்கை சோறா, சுயநிர்ணயமா? சுயநிர்ணய உரிமையை இந்தியா எந்த காலத்தில் ஆதரித்திருக்கிறது? காஷ்மீரில் 5 இலட்சத்திற்க்கும் மேற்பட்ட ராணுவத் துருப்புக்களைக் குவித்து ஒரு தேசிய இனத்தை  ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தின் போராட்டத்தை மட்டும் பாலூற்றி வளர்க்குமா என்ன? அதற்கான ஆதாரத்தை இலங்கையில் தேடவேண்டாம். இந்தியாவில் ஈழத்து அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டு வதைக்கப்படுவதை பார்த்தாலே போதுமானது.

2000ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்த சமயத்தில் காஷ்மீரில் 35 சீக்கியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 35 சீக்கியர்களைக் கொன்ற காஷ்மீர் தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து அவர்களில் 5 பேரைக் கொன்றுவிட்டதாக ராணுவம் பீற்றிக்கொண்டது. அந்த 5 பேரும் அப்பாவி மக்கள் என்ற உண்மை அப்போதே அம்பலமானது.

அதே நாட்களில் இராமேசுவரத்தில் இருந்த ஈழ அகதிகள் முகாம் எனும் சிறையில் இருந்து விடுதலையடைவதற்காக ஒரு குடும்பம் மொத்தமாக தற்கொலை செய்து கொண்டது. இந்தியக் கருணையின் முகத்தை இது அம்பமாக்கியது.

இந்தியாவின் தலையில் இருக்கும் காஷ்மீருக்கும், காலில் இருக்கும் ஈழத்திற்கும் துயரமும், ஒடுக்குமுறையும் ஒன்றுதான். துப்பாக்கியும் நிவாரணமும் கூட தோற்றத்தில்தான் வேறானவை. நோக்கத்தில் அவை ஒன்றுதான். மே 2000 இல் வெளியான இந்த உரைவீச்சை காலப்பொருத்தம் கருதி, இந்தியாவின் கருணை முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கம் கருதி இங்கே பதிவு செய்கிறோம்.

பிணங்கள் பேசுகின்றன!

கிளிண்டனின் விஜயத்திற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

யமுனைக் கரையிலிருந்த பன்றிகளும்
ஜதராபாத் நகரப் பிச்சைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள்
நகரத்தின் தூய்மையைக் கிளிண்டனுக்குக் குறிப்பாலுணர்த்த.

நொய்லா கிராமத்துப் பெண்களுக்கு
அதிரடிக் கணினிப் பயிற்சியளிக்கப்பட்டது,
இந்தியாவின் குக்கிராமமும் இணையத்துடன்
பிணைக்கப்பட்டிருப்பதைக் கிளிண்டனுக்கு நிரூபிக்க.

காஷ்மீரில் 35 சீக்கியர்கள் மார்ச் 20-ஆம் தேதி
சுட்டுத்தள்ளப்பட்டார்கள் – காஷ்மீர் பிரச்சினையைக்
கிளிண்டனுக்குப் புரிய வைக்க.

நாடகம் முடிந்தவுடனே ஒப்பனை கலைந்தது;
பன்றிகள் மீண்டும் யமுனைக் கரைக்கு வந்தன;
பிச்சைக்காரர்கள் வீதிக்கு வந்தனர்.

35 சீக்கியர்கள் மட்டும் உயிர்த்தெழவில்லை.

ஏனென்றால் இது நாடகமில்லை.

நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை ஈடேற்ற
அப்பாவிகளைக் கொல்ல முடியுமா? முடியும்.

அமைதிப்படையின்
அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே
கொல்லப்பட்ட தமிழர்கள்.
இலங்கை அரசின் மீது – தன் ஆளுமையை நிலைநாட்ட
இந்திய உளவுப்படையால் கொலைசெய்யப்பட்ட சிங்கள மக்கள்.

காஷ்மீர் இந்துக்களைக் கொல்வதற்காகவே இந்திய
உளவுத்துறையால் வளர்க்கப்பட்ட போலிப் போராளிக் குழுக்கள்…

அப்பாவிகளைக் கொல்ல முடியும்.

சீக்கியர் கொலை நாடகமில்லையென நிரூபிக்க
மீண்டுமொரு நாடகம் நடத்தியது இந்திய ராணுவம்.

“மார்ச்-24, 25 தேதிகளில் காஷ்மீர்-பிரக்போரா கிராமத்தில்
இடைவிடாமல் நடந்த துப்பாக்கிச் சண்டையில்
சீக்கியரைக் கொன்ற பாக். தீவிரவாதிகளில் 5 பேர்
கொல்லப்பட்டார்கள்.
மற்றவர்களைத் தேடுகிறோம்” என்றது இராணுவம்.

“மார்ச்-21 முதல் ‘காணாமல் போன’ 17 பேரைத் தேடுகிறோம்”
என்றார்கள் அந்தக் கிராமத்து மக்கள்.

“5 பிணங்களையாவது காட்டு” என்றனர் மக்கள்.
“அவர்களைப் புதைத்துப் புல் முளைத்து விட்டது”
என்றது இராணுவம்.

போராட்டம் முளைத்தது.
“5 பிணங்களையும் தோண்டி எடு” என 2000 பேர் திரண்டனர்.

பிணங்களால் பேசமுடியாது என்பது
ஓர் அறிவியல் உண்மை எனினும்

உயிருள்ள மனிதனின் கதறலுக்கு இரங்காத இதயம்
சில நேரங்களில் ‘ஆவிகளின்’ அலறலுக்கு அஞ்சுவது
ஓர் அறவியல் உண்மை.

இராணுவமும் அஞ்சியது. அச்சம் வேறு – இரக்கம் வேறு.

கோழைத்தனம் இரக்கமற்றிருக்கும் போதுதான்
சுறுசுறுப்பாக நடந்து கொள்கிறது.

மீண்டும் துப்பாக்கிச் சூடு. 9 பேர் புதைக்கப்பட்டனர்;
5 பிணங்களும் உயிர்த்தெழுந்தன.

முகம் சிதைந்து உடல் சிதைந்து
மக்கிய தோலும் மக்காத எலும்புமாக
5 மூட்டைகள் அள்ளித்தரப்பட்டன.

65 வயதுக் கிழவர் ஜூமா கான்;
இரண்டு ஆட்டு வியாபாரிகள்;
இரண்டு உள்ளூர்த் தொழிலாளிகள்.

அங்கங்களால் அல்ல; ஆடைகளால்
அடையாளம் கண்டார்கள் உறவினர்கள்.

இவர் அவர்களாயிருக்கக் கூடாதே
என்று அரசும் பதறியது, உறவினர்களும் பதறினர்.
இருவேறு பதற்றங்கள்.

பிணங்களின் அடையாளத்தை உறுதி செய்ய
மரபணுச் சோதனை நடக்கிறது.

தேசத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?
மதத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?
தீவிரவாதத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?
துயரத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போட முடியாது.

காஷ்மீருக்கும் இராமேசுவரத்திற்கும் முடிச்சுப்
போடப்பட்டுள்ளது.

“ஆ, சேது ஹிமாசலம்”- அது பிரம்ம முடிச்சு.

இந்துவின் இகலோக உல்லாசத்திற்குக் காஷ்மீர்.
பரலோக உல்லாசத்திற்கு இராமேசுவரம்.

காஷ்மீரில் இராணுவ முகாம்.
இராமேசுவரத்தில் அகதி முகாம்.

வடக்கே ஆக்கிரமிப்பு; தெற்கே அடைக்கலம்.
வடக்கே ரௌத்திரம்; தெற்கே காருண்யம்.
காஷ்மீரில் கொலை; மண்டபத்தில் தற்கொலை.

“ஏப்ரல் 7-ஆம் தேதி இரவு மண்டபம் ஈழ அகதிகள்
முகாமையொட்டிய தமிழ்நாடு தங்கும் விடுதியில்
ஒரு ஆணும் இரு பெண்களும் ஆறு மாதக் குழந்தையும்
உள்ளிட்ட ஈழத்தமிழ்க் குடும்பமொன்று
நஞ்சு குடித்துத் தற்கொலை செய்து கொண்டது.”

“சில நாட்களுக்கு முன் இதே விடுதியில்
நான்கு அகதிகள் தீக்குளித்து இறந்தனர்.”

-இங்கும் பிணங்கள் பேசின.

“எங்கள் உடல்களை எரியூட்ட 3000 ரூபாய் வைத்துள்ளோம்.
நகைகளை முகாமிலுள்ள அகதிகளிடம் கொடுத்து விடுங்கள்.
நாங்கள் அகதிகள். இந்தியா வந்து
கஷ்டப்பட்டதால் தற்கொலை செய்து கொள்கிறோம்.”

பிணங்களை அடையாளம் காண இங்கே
மரபணுச் சோதனை தேவையில்லை.

அவர்களுடைய அடையாளம் தெரிகிறது.

அவர்கள் மரணத்திற்குப் பின்னும்
மானத்தை இழக்க விரும்பாதவர்கள்.

பணம் வைக்கவில்லையென்றால்
தங்கள் பிணத்தைக் கவுரவமாக எரியூட்டமாட்டார்களோ
என்று நம்மைச் சந்தேகிப்பவர்கள்.

உயில் எழுதி வைக்காவிட்டால் நகைகளைக் களவாடக்கூடும் என்று
நம்மை மதிப்பிட்டிருப்பவர்கள்.

எம் சாவுக்கு நீங்களே காரணம் என்று
குற்றம் சாட்டத் தயங்கித் தம் நிலையையே
காரணம் சொல்லுமளவு நாகரீகமானவர்கள்.

நீங்கள்? –
“அகதிகள் தற்கொலை” என்ற செய்தியின் மீது
உங்கள் இரக்கம் நிறைந்த கண்கள் நின்று கலங்கினவா?
முலைக்காம்பில் நஞ்சுதடவிப் பிள்ளைக்குப் பாலூட்டிய

அந்தத் தாயின் பாசத்தை அறிவீர்களா?

ஆறுமாதப் பிள்ளையின் எதிர்கால நலனை முன்னிட்டு
அவனைக் கொலை செய்த தந்தையின் அக்கறையை அறிவீர்களா?

அதிதி (விருந்தினன்) கிளிண்டன் ஐந்து நாட்கள் தங்கிய செலவு
அகதிகளுக்கு ஆயுள் முழுதும் சோறுபோடக் காணும் என்ற
அக்கிரமத்தை அறிவீர்களா?

அகதி முகாமில் பிறந்து அகதி முகாமில் வளர்ந்து
முகாமின் மதிற்சுவரைத் தாண்ட அனுமதிக்கப்படாத
ஈழத்தமிழ் இளைஞனை அகதி என்பீர்களா கைதி என்பீர்களா?

அகதியின் மகன் அகதியாகலாம்; கைதியாக முடியுமா?

ஈழப்போராட்டத்தைக் கருவிலேயே சிதைத்தது இந்திய அரசு;
அந்தக் கருச்சிதைவின் ரத்தம்தான் – அகதிகள் – அறிவீர்களா?

துப்பாக்கியின் நிழலில் வாழ்ந்திருக்கிறீர்களா?

உங்களை ‘ஏய்’ என்று அழைத்து
கிட்ட வந்தவுடன் எட்டி உதைக்கும் சிப்பாய்;

உங்கள் மனைவின் மார்பை
உங்கள் கண்முன்னே சோதனையிடும் சிப்பாய்;

நீங்கள் உரிமை கேட்பதனால்தான்
தனது வாழ்க்கை முச்சந்தியில் நிற்பதாக நம்பும் சிப்பாய்;

இந்தியத் துப்பாக்கியின் நிழல் ஈழத்தில் பதிந்திருக்கிறது.
காஷ்மீரில் படிந்திருக்கிறது.

உங்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

மரங்களைப் போலத் துப்பாக்கியும் நிழல் தரும்.
அதன் கீழே கூனிக் குறுகி ஒடுங்க வேண்டும்.

குறுகமறுத்தால் சுடும். அதே துப்பாக்கிதான்…
கார்கில் போரின் போது தேசபக்தியுடன் நீங்கள்
ஆயுதபூசை நடத்தினீர்களே அதே துப்பாக்கிதான்.
இந்திய இறையாண்மையின் காவல் தெய்வங்களாகச்
செங்கோட்டையால் வழிபடப்படும் அதே துப்பாக்கிதான்.

தேசத்தின் வெளிப்புறம் திரும்பிய
துப்பாக்கி முனைகளைக் காட்டிலும்
உட்புறம் திரும்பிய முனைகளே அதிகமென்பதை அறிவீர்களா?

இந்தியத் துப்பாக்கியின் தோட்டாவை
நெஞ்சிலேந்தியவர்களெல்லாம் அந்நியர்களென்றால்
அந்த அந்நியர்களில் பெரும்பான்மையோர்
இந்தியர்கள் என்பதை அறிவீர்களா?

கடந்த பத்தாண்டுகளில் காஷ்மீரில்
இந்திய இராணுவம் அழித்த உங்கள் வரிப்பணம்
ஒரு இலட்சம் கோடி;
அழித்த உயிர்கள் 20,000.

ஈழத்துக்குப் போன இந்திய அமைதிப்படை
கொன்ற கணக்கும் இல்லை; தின்ற கணக்கும் இல்லை.
ஒரு இலட்சம் கோடி ரூபாய்!-
ஒரு துண்டு நிலமும்
25,000 பணமும் தந்திருந்தால்
4 கோடி விவசாயக் குடும்பங்கள்
20 கோடி இந்தியர்கள்
இரண்டு வேளை சோறு தின்றிருப்பார்கள்.

ஒரு உயிரைக் கொல்ல 5 கோடி ரூபாய்!

சியாச்சின் பனிப்பாறைக்காக 15 ஆண்டுகளாக
பாகிஸ்தானுடன் போர். ஒரு நாளைக்குப் பத்து கோடி.
வயிற்றுக்குப் போரிடப்போன சிப்பாய்கள்
மூச்சுக்காற்று உறைந்து விரைத்துச் சாகிறார்கள்-
இரு தரப்பிலும்தான்.

எதை நிரூபிக்க இந்தக் கொலைகள்?
“மன்னும் இமயமலை எங்கள் மலையே”-
உந்தன் மலையா?
உன் காலடி நிலம் உனக்குச் சொந்தமா?

காஷ்மீரின் பனிமலையை, பழத்தோட்டங்களை
வாங்கப் போவது யார், நீங்களா?
டால் ஏரியில் படகு விட்டுப் பனிச்சறுக்கு விளையாடி
மாலை நேரத்தில் மதுவருந்தி மயங்கப் போவது யார் – நீங்களா?

ஓபராய், தாஜ், ஹாலிடே இன் நட்சத்திர-விபச்சார விடுதிகளின்
உரிமையாளர் யார்-தாங்களா?

ஜுமா கானின் கல்லறை மேல்
வசந்தமாளிகை எழுப்பப் போவது யார்-நீங்களா?

நீங்களே ஆகட்டும், உங்கள் எசமானர்களே ஆகட்டும்.
காஷ்மீர் ஜுமா கானின் தாயா, உங்களது கூத்தியாளா?
இமயத்தின் கம்பீரத்தையும்
கள்ளமின்மையையும் அமைதியையும்
கவிதை போலச் சொல்லும்
காஷ்மீர்ப் பெண்களின் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.
அவளது இதயத்தைக் குத்தீட்டியால் கிழித்துவிட்டு
உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுவீர்களா?

பெண்ணைக் கைப்பற்றலாம், மண்ணையும் கைப்பற்றலாம்.
தோண்டுமிடமெல்லாம் ஜுமா கான்களின் குரல் ஒலிக்கும் –
சம்மதமா?

பேசுங்கள்-காஷ்மீரின் பிணம் பேசுகிறது.
இராமேசுவரத்தின் பிணம் பேசுகிறது.
பேசுங்கள் – இந்தியர்களே!

புதிய கலாச்சாரம் – மே, 2000

இந்த கட்டுரையை ஒத்த பல அரிய உரைவீச்சுக்கள் ”போராடும் தருணங்கள்” எனும் கட்டுரைத் தொகுப்பில் (புதிய கலாச்சாரம் வெளியீடு) உள்ளது.

கிடைக்குமிடம்:

புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
e-mail: pukatn@gmail.com, vinavu@gmail.com