Thursday, December 5, 2024
முகப்புஉலகம்அமெரிக்காகாஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !

காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !

-

“”கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும். எங்கள் கருணா… நிதியாகும்” இது நாகூர் ஹனீபாவின் திமுக “கொள்கை’ப் பாடல். போர் நிறுத்தம் ஆயுத உதவி நிறுத்தம் என்று தொடங்கி பத்தே நாளில் அரிசி பருப்பு வசூலில இறங்கிவிட்டார் அண்ணன் கலைஞர். இதுதான் கழகத்தின் கொள்கை.

ஈழமக்களின் கோரிக்கை சோறா, சுயநிர்ணயமா? சுயநிர்ணய உரிமையை இந்தியா எந்த காலத்தில் ஆதரித்திருக்கிறது? காஷ்மீரில் 5 இலட்சத்திற்க்கும் மேற்பட்ட ராணுவத் துருப்புக்களைக் குவித்து ஒரு தேசிய இனத்தை  ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தின் போராட்டத்தை மட்டும் பாலூற்றி வளர்க்குமா என்ன? அதற்கான ஆதாரத்தை இலங்கையில் தேடவேண்டாம். இந்தியாவில் ஈழத்து அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டு வதைக்கப்படுவதை பார்த்தாலே போதுமானது.

2000ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்த சமயத்தில் காஷ்மீரில் 35 சீக்கியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 35 சீக்கியர்களைக் கொன்ற காஷ்மீர் தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து அவர்களில் 5 பேரைக் கொன்றுவிட்டதாக ராணுவம் பீற்றிக்கொண்டது. அந்த 5 பேரும் அப்பாவி மக்கள் என்ற உண்மை அப்போதே அம்பலமானது.

அதே நாட்களில் இராமேசுவரத்தில் இருந்த ஈழ அகதிகள் முகாம் எனும் சிறையில் இருந்து விடுதலையடைவதற்காக ஒரு குடும்பம் மொத்தமாக தற்கொலை செய்து கொண்டது. இந்தியக் கருணையின் முகத்தை இது அம்பமாக்கியது.

இந்தியாவின் தலையில் இருக்கும் காஷ்மீருக்கும், காலில் இருக்கும் ஈழத்திற்கும் துயரமும், ஒடுக்குமுறையும் ஒன்றுதான். துப்பாக்கியும் நிவாரணமும் கூட தோற்றத்தில்தான் வேறானவை. நோக்கத்தில் அவை ஒன்றுதான். மே 2000 இல் வெளியான இந்த உரைவீச்சை காலப்பொருத்தம் கருதி, இந்தியாவின் கருணை முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கம் கருதி இங்கே பதிவு செய்கிறோம்.

பிணங்கள் பேசுகின்றன!

கிளிண்டனின் விஜயத்திற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

யமுனைக் கரையிலிருந்த பன்றிகளும்
ஜதராபாத் நகரப் பிச்சைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள்
நகரத்தின் தூய்மையைக் கிளிண்டனுக்குக் குறிப்பாலுணர்த்த.

நொய்லா கிராமத்துப் பெண்களுக்கு
அதிரடிக் கணினிப் பயிற்சியளிக்கப்பட்டது,
இந்தியாவின் குக்கிராமமும் இணையத்துடன்
பிணைக்கப்பட்டிருப்பதைக் கிளிண்டனுக்கு நிரூபிக்க.

காஷ்மீரில் 35 சீக்கியர்கள் மார்ச் 20-ஆம் தேதி
சுட்டுத்தள்ளப்பட்டார்கள் – காஷ்மீர் பிரச்சினையைக்
கிளிண்டனுக்குப் புரிய வைக்க.

நாடகம் முடிந்தவுடனே ஒப்பனை கலைந்தது;
பன்றிகள் மீண்டும் யமுனைக் கரைக்கு வந்தன;
பிச்சைக்காரர்கள் வீதிக்கு வந்தனர்.

35 சீக்கியர்கள் மட்டும் உயிர்த்தெழவில்லை.

ஏனென்றால் இது நாடகமில்லை.

நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை ஈடேற்ற
அப்பாவிகளைக் கொல்ல முடியுமா? முடியும்.

அமைதிப்படையின்
அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே
கொல்லப்பட்ட தமிழர்கள்.
இலங்கை அரசின் மீது – தன் ஆளுமையை நிலைநாட்ட
இந்திய உளவுப்படையால் கொலைசெய்யப்பட்ட சிங்கள மக்கள்.

காஷ்மீர் இந்துக்களைக் கொல்வதற்காகவே இந்திய
உளவுத்துறையால் வளர்க்கப்பட்ட போலிப் போராளிக் குழுக்கள்…

அப்பாவிகளைக் கொல்ல முடியும்.

சீக்கியர் கொலை நாடகமில்லையென நிரூபிக்க
மீண்டுமொரு நாடகம் நடத்தியது இந்திய ராணுவம்.

“மார்ச்-24, 25 தேதிகளில் காஷ்மீர்-பிரக்போரா கிராமத்தில்
இடைவிடாமல் நடந்த துப்பாக்கிச் சண்டையில்
சீக்கியரைக் கொன்ற பாக். தீவிரவாதிகளில் 5 பேர்
கொல்லப்பட்டார்கள்.
மற்றவர்களைத் தேடுகிறோம்” என்றது இராணுவம்.

“மார்ச்-21 முதல் ‘காணாமல் போன’ 17 பேரைத் தேடுகிறோம்”
என்றார்கள் அந்தக் கிராமத்து மக்கள்.

“5 பிணங்களையாவது காட்டு” என்றனர் மக்கள்.
“அவர்களைப் புதைத்துப் புல் முளைத்து விட்டது”
என்றது இராணுவம்.

போராட்டம் முளைத்தது.
“5 பிணங்களையும் தோண்டி எடு” என 2000 பேர் திரண்டனர்.

பிணங்களால் பேசமுடியாது என்பது
ஓர் அறிவியல் உண்மை எனினும்

உயிருள்ள மனிதனின் கதறலுக்கு இரங்காத இதயம்
சில நேரங்களில் ‘ஆவிகளின்’ அலறலுக்கு அஞ்சுவது
ஓர் அறவியல் உண்மை.

இராணுவமும் அஞ்சியது. அச்சம் வேறு – இரக்கம் வேறு.

கோழைத்தனம் இரக்கமற்றிருக்கும் போதுதான்
சுறுசுறுப்பாக நடந்து கொள்கிறது.

மீண்டும் துப்பாக்கிச் சூடு. 9 பேர் புதைக்கப்பட்டனர்;
5 பிணங்களும் உயிர்த்தெழுந்தன.

முகம் சிதைந்து உடல் சிதைந்து
மக்கிய தோலும் மக்காத எலும்புமாக
5 மூட்டைகள் அள்ளித்தரப்பட்டன.

65 வயதுக் கிழவர் ஜூமா கான்;
இரண்டு ஆட்டு வியாபாரிகள்;
இரண்டு உள்ளூர்த் தொழிலாளிகள்.

அங்கங்களால் அல்ல; ஆடைகளால்
அடையாளம் கண்டார்கள் உறவினர்கள்.

இவர் அவர்களாயிருக்கக் கூடாதே
என்று அரசும் பதறியது, உறவினர்களும் பதறினர்.
இருவேறு பதற்றங்கள்.

பிணங்களின் அடையாளத்தை உறுதி செய்ய
மரபணுச் சோதனை நடக்கிறது.

தேசத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?
மதத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?
தீவிரவாதத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?
துயரத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போட முடியாது.

காஷ்மீருக்கும் இராமேசுவரத்திற்கும் முடிச்சுப்
போடப்பட்டுள்ளது.

“ஆ, சேது ஹிமாசலம்”- அது பிரம்ம முடிச்சு.

இந்துவின் இகலோக உல்லாசத்திற்குக் காஷ்மீர்.
பரலோக உல்லாசத்திற்கு இராமேசுவரம்.

காஷ்மீரில் இராணுவ முகாம்.
இராமேசுவரத்தில் அகதி முகாம்.

வடக்கே ஆக்கிரமிப்பு; தெற்கே அடைக்கலம்.
வடக்கே ரௌத்திரம்; தெற்கே காருண்யம்.
காஷ்மீரில் கொலை; மண்டபத்தில் தற்கொலை.

“ஏப்ரல் 7-ஆம் தேதி இரவு மண்டபம் ஈழ அகதிகள்
முகாமையொட்டிய தமிழ்நாடு தங்கும் விடுதியில்
ஒரு ஆணும் இரு பெண்களும் ஆறு மாதக் குழந்தையும்
உள்ளிட்ட ஈழத்தமிழ்க் குடும்பமொன்று
நஞ்சு குடித்துத் தற்கொலை செய்து கொண்டது.”

“சில நாட்களுக்கு முன் இதே விடுதியில்
நான்கு அகதிகள் தீக்குளித்து இறந்தனர்.”

-இங்கும் பிணங்கள் பேசின.

“எங்கள் உடல்களை எரியூட்ட 3000 ரூபாய் வைத்துள்ளோம்.
நகைகளை முகாமிலுள்ள அகதிகளிடம் கொடுத்து விடுங்கள்.
நாங்கள் அகதிகள். இந்தியா வந்து
கஷ்டப்பட்டதால் தற்கொலை செய்து கொள்கிறோம்.”

பிணங்களை அடையாளம் காண இங்கே
மரபணுச் சோதனை தேவையில்லை.

அவர்களுடைய அடையாளம் தெரிகிறது.

அவர்கள் மரணத்திற்குப் பின்னும்
மானத்தை இழக்க விரும்பாதவர்கள்.

பணம் வைக்கவில்லையென்றால்
தங்கள் பிணத்தைக் கவுரவமாக எரியூட்டமாட்டார்களோ
என்று நம்மைச் சந்தேகிப்பவர்கள்.

உயில் எழுதி வைக்காவிட்டால் நகைகளைக் களவாடக்கூடும் என்று
நம்மை மதிப்பிட்டிருப்பவர்கள்.

எம் சாவுக்கு நீங்களே காரணம் என்று
குற்றம் சாட்டத் தயங்கித் தம் நிலையையே
காரணம் சொல்லுமளவு நாகரீகமானவர்கள்.

நீங்கள்? –
“அகதிகள் தற்கொலை” என்ற செய்தியின் மீது
உங்கள் இரக்கம் நிறைந்த கண்கள் நின்று கலங்கினவா?
முலைக்காம்பில் நஞ்சுதடவிப் பிள்ளைக்குப் பாலூட்டிய

அந்தத் தாயின் பாசத்தை அறிவீர்களா?

ஆறுமாதப் பிள்ளையின் எதிர்கால நலனை முன்னிட்டு
அவனைக் கொலை செய்த தந்தையின் அக்கறையை அறிவீர்களா?

அதிதி (விருந்தினன்) கிளிண்டன் ஐந்து நாட்கள் தங்கிய செலவு
அகதிகளுக்கு ஆயுள் முழுதும் சோறுபோடக் காணும் என்ற
அக்கிரமத்தை அறிவீர்களா?

அகதி முகாமில் பிறந்து அகதி முகாமில் வளர்ந்து
முகாமின் மதிற்சுவரைத் தாண்ட அனுமதிக்கப்படாத
ஈழத்தமிழ் இளைஞனை அகதி என்பீர்களா கைதி என்பீர்களா?

அகதியின் மகன் அகதியாகலாம்; கைதியாக முடியுமா?

ஈழப்போராட்டத்தைக் கருவிலேயே சிதைத்தது இந்திய அரசு;
அந்தக் கருச்சிதைவின் ரத்தம்தான் – அகதிகள் – அறிவீர்களா?

துப்பாக்கியின் நிழலில் வாழ்ந்திருக்கிறீர்களா?

உங்களை ‘ஏய்’ என்று அழைத்து
கிட்ட வந்தவுடன் எட்டி உதைக்கும் சிப்பாய்;

உங்கள் மனைவின் மார்பை
உங்கள் கண்முன்னே சோதனையிடும் சிப்பாய்;

நீங்கள் உரிமை கேட்பதனால்தான்
தனது வாழ்க்கை முச்சந்தியில் நிற்பதாக நம்பும் சிப்பாய்;

இந்தியத் துப்பாக்கியின் நிழல் ஈழத்தில் பதிந்திருக்கிறது.
காஷ்மீரில் படிந்திருக்கிறது.

உங்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

மரங்களைப் போலத் துப்பாக்கியும் நிழல் தரும்.
அதன் கீழே கூனிக் குறுகி ஒடுங்க வேண்டும்.

குறுகமறுத்தால் சுடும். அதே துப்பாக்கிதான்…
கார்கில் போரின் போது தேசபக்தியுடன் நீங்கள்
ஆயுதபூசை நடத்தினீர்களே அதே துப்பாக்கிதான்.
இந்திய இறையாண்மையின் காவல் தெய்வங்களாகச்
செங்கோட்டையால் வழிபடப்படும் அதே துப்பாக்கிதான்.

தேசத்தின் வெளிப்புறம் திரும்பிய
துப்பாக்கி முனைகளைக் காட்டிலும்
உட்புறம் திரும்பிய முனைகளே அதிகமென்பதை அறிவீர்களா?

இந்தியத் துப்பாக்கியின் தோட்டாவை
நெஞ்சிலேந்தியவர்களெல்லாம் அந்நியர்களென்றால்
அந்த அந்நியர்களில் பெரும்பான்மையோர்
இந்தியர்கள் என்பதை அறிவீர்களா?

கடந்த பத்தாண்டுகளில் காஷ்மீரில்
இந்திய இராணுவம் அழித்த உங்கள் வரிப்பணம்
ஒரு இலட்சம் கோடி;
அழித்த உயிர்கள் 20,000.

ஈழத்துக்குப் போன இந்திய அமைதிப்படை
கொன்ற கணக்கும் இல்லை; தின்ற கணக்கும் இல்லை.
ஒரு இலட்சம் கோடி ரூபாய்!-
ஒரு துண்டு நிலமும்
25,000 பணமும் தந்திருந்தால்
4 கோடி விவசாயக் குடும்பங்கள்
20 கோடி இந்தியர்கள்
இரண்டு வேளை சோறு தின்றிருப்பார்கள்.

ஒரு உயிரைக் கொல்ல 5 கோடி ரூபாய்!

சியாச்சின் பனிப்பாறைக்காக 15 ஆண்டுகளாக
பாகிஸ்தானுடன் போர். ஒரு நாளைக்குப் பத்து கோடி.
வயிற்றுக்குப் போரிடப்போன சிப்பாய்கள்
மூச்சுக்காற்று உறைந்து விரைத்துச் சாகிறார்கள்-
இரு தரப்பிலும்தான்.

எதை நிரூபிக்க இந்தக் கொலைகள்?
“மன்னும் இமயமலை எங்கள் மலையே”-
உந்தன் மலையா?
உன் காலடி நிலம் உனக்குச் சொந்தமா?

காஷ்மீரின் பனிமலையை, பழத்தோட்டங்களை
வாங்கப் போவது யார், நீங்களா?
டால் ஏரியில் படகு விட்டுப் பனிச்சறுக்கு விளையாடி
மாலை நேரத்தில் மதுவருந்தி மயங்கப் போவது யார் – நீங்களா?

ஓபராய், தாஜ், ஹாலிடே இன் நட்சத்திர-விபச்சார விடுதிகளின்
உரிமையாளர் யார்-தாங்களா?

ஜுமா கானின் கல்லறை மேல்
வசந்தமாளிகை எழுப்பப் போவது யார்-நீங்களா?

நீங்களே ஆகட்டும், உங்கள் எசமானர்களே ஆகட்டும்.
காஷ்மீர் ஜுமா கானின் தாயா, உங்களது கூத்தியாளா?
இமயத்தின் கம்பீரத்தையும்
கள்ளமின்மையையும் அமைதியையும்
கவிதை போலச் சொல்லும்
காஷ்மீர்ப் பெண்களின் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.
அவளது இதயத்தைக் குத்தீட்டியால் கிழித்துவிட்டு
உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுவீர்களா?

பெண்ணைக் கைப்பற்றலாம், மண்ணையும் கைப்பற்றலாம்.
தோண்டுமிடமெல்லாம் ஜுமா கான்களின் குரல் ஒலிக்கும் –
சம்மதமா?

பேசுங்கள்-காஷ்மீரின் பிணம் பேசுகிறது.
இராமேசுவரத்தின் பிணம் பேசுகிறது.
பேசுங்கள் – இந்தியர்களே!

புதிய கலாச்சாரம் – மே, 2000

இந்த கட்டுரையை ஒத்த பல அரிய உரைவீச்சுக்கள் ”போராடும் தருணங்கள்” எனும் கட்டுரைத் தொகுப்பில் (புதிய கலாச்சாரம் வெளியீடு) உள்ளது.

கிடைக்குமிடம்:

புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
e-mail: pukatn@gmail.com, vinavu@gmail.com


 

  1. Nice article!
    appa unmail nalla sinthanai!!
    ayya adimaipaddu anupavipavanukuthan avan kastam purium!
    Nalla padaipu!!
    Mannithanai manithanai valavidungal!
    Addimaipadutha ninaikathirkal!

  2. There is another air attack in Sri Lanka, by Air Tigers. Indian central government will use this incident as an excuse to support Sri Lankan government for it’s “war on terrorism”. Because Indian government fears, that his own militant groups will follow and immitate LTTE. Every groep learns from other one in the world. It is just common sence. I don’t get, why Tamil Nationalists couldn’t understand the real face of Indian government.

  3. “மரங்களைப் போலத் துப்பாக்கியும் நிழல் தரும்.
    அதன் கீழே கூனிக் குறுகி ஒடுங்க வேண்டும்.”

    மனதில் ஆழப் பதிய ஆணியடிக்கும் வரிகள்.

  4. நெஞ்சை பிழியும் உண்மை…
    காசு வாங்கிக் கொண்டு கொலை செய்யும் கூலிபடைக்கும் … நாட்டை காக்கிறேன் என்று சொந்த நாட்டு மக்களையே அதுவும் கோடிக்கணக்கில் நமது வரிப்பணத்தில் செலவு செய்து கொலை செய்யும் ராணுவத்திற்கும் என்ன வேறுபாடு…?

  5. //அகதி முகாமில் பிறந்து அகதி முகாமில் வளர்ந்து
    முகாமின் மதிற்சுவரைத் தாண்ட அனுமதிக்கப்படாத
    ஈழத்தமிழ் இளைஞனை அகதி என்பீர்களா கைதி என்பீர்களா?//
    …………………………………………………………..
    …………………………………………………………..
    அருமையான பதிவு.
    தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

  6. enna seiyalam,verum anuthapankal soru podum entral.ulakil varumaia illai,kannir thuyar thudaikkum entral ulagil thunpame illai,
    nichaya nan sappidum ovoru sotrilum penavadi.veru vazhiye illathu nanum nirkiren kuttravali koondil.

  7. நாசமாப்போச்சு!
    காஷ்மீரையும் ஈழத்தையும் முடிச்சுப் போட்டுட்டீங்களே.
    நேரடியாக மோதினால் தோல்விதான் என்பதால், பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியாவினுள் ஊடுறுவவிட்டு, காஷ்மீர் மக்களின் மனதில் பிரிவினைவாத எண்ணத்தைத் தூவி ஒரு proxy யுத்தத்தை நடத்திவருகிறது பாக்-ராணுவம். தயவு செய்து காஷ்மீரோடு ஒப்பிட்டு, தமிழ் ஈழப் போராட்டத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்.
    காஷ்மீருக்கு இந்திய அரசுதரும் சிறப்புச் சலுகைகள் வேறு எந்த இந்திய மாநிலத்திற்கும் கிடைக்காது; ஆனால், இலங்கையில் தமிழன் நிலை படுமோசம்; பவுத்த-சிங்கள எதேச்சாதிகார நாய்களின் காட்டாட்சியில் தமிழனுக்கு நியாயமாகக் கிடைக்கக் கூடிய உரிமையும் கிடைப்பதில்லை;

    பாலஸ்தீனிற்கு வரும் உலக ஆதரவில் 1000ல் ஒரு பங்கு கூட தமிழ் ஈழத்திற்கு கிட்டுவதில்லை என்று வருந்திக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், தயவு செய்து ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்!”

    நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் – ஈழத்தமிழர் ஒரு கால்த்திலும் இந்தியாவை எதிரிகளாகப் பார்க்க மாட்டார்கள்! ஈழத்தில் நடைபெரும் போராட்டம் இந்தியாவிற்கு எந்தவகையிலும் எதிரானதல்ல என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களென்றால், தயவு செய்து ஈழப்போராட்டைத்தைக் கொச்சைபடுத்தாதீர்கள்.

  8. ஈழ தமிழர்கள் போராடுவது தங்கள் சொந்த மண்ணிற்காக.தங்கள் சொந்த மண்ணில் உரிமையுடன் வாழவேண்டும் என்பதே அவர்கள் போராட்டத்தின் குறிக்கோள். அவர்கள்,மற்றவர் நாட்டை அபரிக்கவில்லை.மற்றவர் நிலபரப்பை கேட்கவில்லை. பிட்டிஷார் ஆண்டதற்கு முன் அங்கு யாழ்பாண சமஸ்தானம்,கண்டி சமஸ்தானம்,கோட்டை சமஸ்தானம் என்று மூன்று இருந்தது.ஆங்கிலேயர்கள் அதை ஒன்றாக்கினார்கள். விடுதலை கொடுக்கும் போது,பெரும்பாலாக உள்ள சிங்களவரிடம் கொடுத்து விட்டார்கள். முதலில் சிங்களவார்கள்,தமிழர்கள் ஒற்றுமையுடன் தான் வாழ்ந்து வந்தார்கள். ஆனால்,சில ஆண்டுகளில்,இலங்கை சிங்கள பொள்த்தர்களுக்கு மட்டும் என்று எண்ணினார்கள்.தமிழர் உரிமைகளை பறித்தார்கள். சிங்களபொள்த்தர்கள் மட்டுமே ,இலங்கையில் குடியரசு தலைவராக ஆகலாம் என்று சட்டத்தை ஏற்படுத்தினார்கள். கல்வி,வேலைவாய்ப்புகளில் ஒதுக்கினார்கள். இந்தியாவில்,சிறுபாண்மை இனமாக உள்ள சீக்கியர்கள் பிரதமராக முடிகிறது.தமிழர் குடியரசு தலைவராக முடிகிறது. ஆனால்,இலங்கையில்,சிங்கள பொள்த்தர்கள் மட்டுமே குடியரசு தலைவராக முடியும் மேலும் அறவழியில் போராடிய செல்வநாயகம் போன்றவர்களை ,அடித்து உதைத்தார்கள். ஈழதமிழ்பெண்களை,ஈழதமிழர் இளைஞ்ர்களை கொன்றார்கள். சிறையில் அடைக்க பட்ட குட்டி மணியின் கண்களை பிடிங்கி மிதித்து ,சித்திரவதை செய்து கொன்றார்கள். விடுதலை புய்லிகள்,சிங்கள வீரர்களை போரில் கொன்றிருக்கிறார்கள்.ஆனால்,யாரையும் அணுஅணுவாக சித்திரவதை செய்ததில்லை. எந்த சிங்கள பெண்னையும் கெடுத்ததில்லை. சிங்கள இராணுவம்,ஈழ தமிழர்களை கொன்றும்,சித்திரவதை செய்தும் வருகிறது.இலட்சகணகான பேர் இதுவரை கொலை செய்யபட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தான் ஈழதமிழர்கள் ஆயுத போராட்டத்தில் இறங்கினார்கள். நாம் வாழும் நாட்டில்,சில இடங்களில் மயானம் இருக்கும்,ஆனால்,ஈழதமிழர்கள் மயானங்களுக்கு நடுவில் தான் வாழ்கிறார்கள். நம் தொலைகாட்சியில்,வானொலியில் பிறந்தநாள் வாழ்த்துகளை கேட்போம். ஆனால்,ஈழத்தில் தொலைந்து போனவர்கள் செய்தியும்,இறந்தவர் விபரமும் தான் ஒலிக்கும். இப்படி ,சிங்கள பயங்கிரவாதிகள் செய்யும் அட்டுழியங்கள் எண்ணில் அடங்கா

  9. ப்ரியன் சரவணன், வெங்கடேஷ் அண்ட் கோ,

    காஷ்மிரத்து மக்களுக்கு சலுகை என்பதெல்லாம் வெறும் புளுகை. அங்கிருந்து வந்து சென்னையில் படிக்கும் மாணவனை கேட்டுப்பார். அவன் சொல்லுவான், தமிழ் நாட்டுலே நீங்கள் வாழ்க்கையை அமைதியாக கழிக்கிறீர்கள். ஆனால் என் உள்ளமோ என் தாய்க்கு இந்நேரம் என்ன கதியோ, என் தந்தைக்கு என்ன கதியோ என் சகோதரனுக்கும் சகோதரிக்கும் என்ன கதியோ என கலங்கும் உள்ளமும் கண்களும் உங்களுடைய குருட்டுக் கண்களுக்கும் செவிட்டு காதுகளுக்கும் இருட்டு இதயங்களுக்கும் எப்படி விளங்கும்? தமிழ் நாட்டில் கூட எத்தனை சலுகைகள். ஆனால் நீங்கள் எத்தனை அனுபவித்து இருப்பீர்கள் என்பதை சொல்லுங்கள்.

    மேடை பேச்சும் நிஜ வாழ்க்கையும் ஒன்றல்ல. அங்கு இராணுவத்துக்கு இருக்கும் சிறப்பு சலுகையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் விசாரணை இல்லை. உங்களுக்கு இந்த முழு உலகத்தையும் கொடுத்துவிட்டு உங்களை சுற்றி ஆயுதமேந்தி நிற்கும் படையை நிற்க சொன்னால் நீங்கள் மிக நிம்மதியாக வாழ்ந்து கழிப்பீர்களோ? கிழிப்பீர்கள். உங்கள் அம்மா அக்கா தங்கை மகள் பெண்டாட்டி எல்லோர் கற்பையும் நாசப்படுத்தி அவர்களோடு உங்களின் ஆண்களையும் கொலை செய்துவிட்டு நீங்கள் சொன்ன அதே வாக்கியத்தை (சலுகையை) சொல்லிக் காட்டினால் நீங்கள் வேண்டுமானால் உங்கள் புத்தியை பின்னால் வைத்துக் கொண்டு மெச்சி விட்டு போங்கள்.

    எந்த இரத்தமனாலும் கண்நீரனாலும் அது அநியாயமாக வெளி வந்தால் அதற்கு காரணமானவன் எவனாக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டியவன் தான். மனித நீதி என்பது உங்களிடம் செத்து மத இன வெறி உங்களிடம் இருக்கு. அதனால் தான் உங்கள் உள்ளம் சிறுத்து இருண்டு கிடக்குது. மீண்டு வெளியே வாரும். மனித நேயத்திற்கு குரல் கொடும். அது யாராக இருந்தாலும் சரி.

  10. காஷ்மீரிகளுக்கு எது சலுகை

    தோண்டப்பட்ட கண்களா?
    அறுக்கப்பட்ட முலைகளா?
    அழிக்கப்பட்ட பெண்மையா?
    திருகி எறியப்பட்ட தலைகளா?
    தீயில் எரிக்கப்பட்ட உடல்களா?

    திவிரவாதிகள் என்ற பெயரில் அரசே ஏற்படுத்தி வைத்திருக்கும் கொலைகார
    கும்பல் நடத்தும் இன அழிப்புதான் எவ்வளவு தெரியுமா?

    இருந்தும் ஈழப்போராட்டத்தை காஷ்மீருடன் ஒப்பிட இயலாதுதான்.
    இந்திய இராணுவத்திற்கும் சிங்கள இராணுவத்திற்கும் ஒன்றுமை நிறைய இருக்கிறது அதில் ஒருதுளிதான் இராணுவத்தின் கூலிப்படைகள் நடத்தும் பாலியல் கொடுமைகளும், கொலைகளும்.

    இழப்புகளெல்லாம் நமக்கு செய்திகள்தான்
    இழந்து நிற்பவருக்கு அதுதான் வாழ்க்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க