privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்கவிஞர் சுகுமாரன் நினைவில் கா....ர...ல் மார்க்ஸ் !

கவிஞர் சுகுமாரன் நினைவில் கா….ர…ல் மார்க்ஸ் !

-

marx_1“இன்னொரு பிறவி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு சொல்லுங்கள், அடுத்த பிறவியில் என்னவாக இருக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு, மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன் என்று மார்க்ஸ் பதிலளித்தார்” என்று உயிரோசை இணைய இதழில் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்கவிஞர் சுகுமாரன்.

“மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன்!” வாழ்க்கையின் துன்பங்களால் நைந்து போன ஒரு மனிதன், களைத்துத் துவண்ட ஒரு தருணத்தில் சொல்லியிருக்கக் கூடிய வார்த்தைகள்! எனினும் மார்க்ஸ் இங்ஙனம் சொல்லியிருக்கக் கூடுமா?

“இதுநாள் வரை தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். நமது பணி அதனை மாற்றியமைப்பதுதான்” என்று பிரகடனம் செய்த ஒரு மேதை,

“இயற்கையின் நடத்தையை ஆளும் இயக்க விதிகளை மனிதன் கண்டு பிடித்துவிடலாம், ஆனால் தன்னுடைய (மனித குலத்துடைய) இயக்கத்தை ஆளும் விதிகளை மட்டும் கண்டுணரவே முடியாது” என்று தனக்கு முன் தானே பிரமித்து நின்ற மனிதகுலத்தை, அந்தப் பிரமிப்பிலிருந்து விடுவித்த ஒரு தத்துவஞானி,

தாங்களே உருவாக்கும் வரலாறு, தங்களை எப்படி வனைந்து உருவாக்குகிறது என்ற சூட்சுமத்தை அவிழ்த்துக் காட்டியதன் மூலம், தாம் விரும்பும் விதத்தில் தம்மை உருவாக்கிக் கொள்வதற்கான வழிமுறையை மனிதகுலத்துக்குக் கற்றுக் கொடுத்த ஒரு மாபெரும் அறிவியலாளன்,

“நான் மனிதனாகப் பிறக்க விரும்பமாட்டேன்” என்று சொல்லியிருக்கக் கூடுமா?

மார்க்சியத்தைத் தமது வாழ்க்கை நடைமுறைக்கான வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, ஒரு தத்துவ ஞானம் என்ற முறையில் மார்க்சியத்தைப் புரிந்து கொண்ட யாருக்கும் எழும்பியிருக்க வேண்டிய கேள்வி இது. ஆனால் சுகுமாரனுக்கு அது எழும்பவில்லை.

அவரைப் பொருத்தவரை, ‘எப்பவோ எதிலேயோ படித்தது’ என்று சர்வசாதாரணமாக பழைய நினைவிலிருந்து போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகிற அளவுக்கு, மிகச்சாதாரண விசயமாக அது இருந்திருக்கிறது.

ஒருவேளை மார்க்ஸ் அவ்வாறு கூறியிருந்தால்?

அவ்வாறு கூறுவதற்குத் தேவையான கசப்புகளை சகிக்கவொண்ணாத அளவில் அவர்மீது திணித்திருந்தது வாழ்க்கை. அருமைக் குழந்தைகளின் பட்டினிச்சாவு, அதனைக் கண்டு துடித்த காதல் மனைவியின் கண்ணீர், கற்பூரவாசம் அறியாத கழுதைகளான கடன்காரர்களின் தரம் தாழ்ந்த ஏச்சு, தொழிலாளி வர்க்கத்தின் துயரத்துக்காகக் கண்ணீர் சிந்துவதை நிறுத்திவிட்டு, தன் குடும்பத்தின் துயர்தீர்க்க ஒரு குமாஸ்தா வேலையின் மீது தன்னை அறைந்து கொள்ளலாம் என்று எண்ணத் தூண்டிய இதயம், அதனை அனுமதிக்க மறுத்த சிந்தனை, நண்பர்களின் கொள்கைரீதியான பிரிவு, அவரை நிலைகுலையச் செய்த ஜென்னியின் மரணம்…ஒரு முறை அல்ல, ஒரு நூறு முறை அவரை இவ்வாறு சொல்லத்தூண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு.

ஒரு வேளை சொல்லியிருந்தால்?

சொல்லியிருந்தால் அது அந்த மாமனிதனின் ஒரு துயரப் பெருமூச்சு.

பீத்தோவனின் பேனாவிலிருந்து தெறித்து விழுந்து, அவரே அறியாமல் அவரது சிம்பனியின் அழகைத் துலங்கச் செய்த ஒரு அபசுரம்.

ஒரு மாவீரனின் கண்ணில் கசிந்த கவிதைத் துளி.

தீஞ்சுவை இனிப்பில் கலந்த ஒரு கல் உப்பு.

மார்க்ஸ் அவ்வாறு கூறியிருந்தால், அது இரக்கமற்ற இதயத்திலிருந்தும் ஒரு துளி கண்ணீரை வரவழைக்க வேண்டும். தனது அந்தக் கூற்றின் சுவடு கூடப் படாமல் வாழ்ந்து காட்டிய அந்த வீரனின் மன உறுதி நமக்கு வியப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த மாமனிதன் சொற்களால் சிந்திய கண்ணீர் மனித குலத்தின் இதயத்தைப் பிழிய வேண்டும்.

என்ன சொல்ல வருகிறார் சுகுமாரன்? எதற்காக இதனைச் சொல்ல வருகிறார் சுகுமாரன்?

இத்தகையதொரு சர்ச்சைக்குரிய மேற்கோளைத் தனது நினைவிலிருந்து அகழ்ந்தெடுத்து வாசகர்களுக்கு அவர் வழங்கியிருப்பதன் நோக்கம் என்ன?

நம்பிக்கை என்ற சொல்லின் அடித்தளத்திலிருந்து புனிதங்களை அகற்றி விட்டு, அறிவியல் பீடத்தின் மேல் அதனை அமர்த்திய ‘உலகின் மாபெரும் நம்பிக்கைவாதி’ என்று கொண்டாடப்படும் மார்க்ஸ் “இன்னொரு அவநம்பிக்கை வாதிதான்” என்று பணிவுடன் சுட்டிக் காட்டுகிறாரா?

அல்லது “கடவுள் செத்துவிட்டார். அதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்” என்று கம்யூனிஸ்டுகளை கலாய்க்கிறாரா?

அல்லது உலகம் போற்றும் கம்யூனிஸ்டு ‘திரு உரு’வின் பின்புறத்தில் நம் கண்ணில் இதுவரை படாத ஒரு சொட்டை இருக்கிறது என்று கவனத்தை ஈர்க்கிறாரா?

இவற்றில் முதல் இரண்டும் அவரது நோக்கம் என்றால் அதனை அசட்டுத்தனம் என்றோ, தனது அசட்டுத்தனம் குறித்த பிரக்ஞை இல்லாத ஒரு “அதிமேதாவி’யின் அபத்தமான உளறல் என்றோ விட்டுவிடலாம்.

திரு உருவின் ஊனத்தைச் சுட்டிக் காட்டுவது சுகுமாறனின் நோக்கமென்றால், இலக்கியவாதி என்ற அந்தஸ்தையே அவர் இழக்க நேரிடும்.

“குறையில்லாத மனிதன் இருக்க முடியாது; நல்லது-கெட்டது, கறுப்பு-வெள்ளை என்று உலகத்தை இரட்டைப் பரிமாணத்தில் பார்ப்பது தவறு” என்பன போன்ற வேத வசனங்களைத் தமது இலக்கியக் கொள்கையாகவும், கொள்கைப் பற்று என்பதையே கூடா ஒழுக்கமாக கொண்டு வாழும் தங்களது வாழ்க்கையை நிறுத்துப் பார்த்து நியாயப்படுத்திக் கொள்வதற்கான எடைக்கற்களாகவும் வைத்திருக்கும் இலக்கியவாதிகள் மனிதர்களின் “ஊனம்” குறித்து அதிர்ச்சி கொள்ள முடியாது.

மார்க்ஸ் வெறுப்பு கொள்ளக்கூடாதா? லெனின் கோபம் கொள்ளக கூடாதா? பகத்சிங் கண்ணீர் விடக் கூடாதா? அவை மனிதர்களுக்கு உரியவை இல்லையா? அந்த வெறுப்பும் கோபமும் கண்ணீரும்தான் அவர்களது ஆளுமையை நிர்ணயிக்கும் அளவுகோல்களா?

அவற்றின்பால் வாசகர்களின் கவனத்தை வேலை மெனக்கெட்டு ஈர்க்கிறாரே சுகுமாரன், அது எதற்காக? ஊனத்தைச் சுட்டிக் காட்டும் பொருட்டு அவர் இதனைச் செய்திருந்தால், புனித திருஉருவைத் தொழுகின்ற ஒரு எம்ஜியார் ரசிகனின் தரத்தில் அவர் இருக்கிறார் என்பதை அவரே புரிந்து கொள்ளட்டும். அறிவு பூர்வமாக இதனைச் செய்திருப்பாரானால் தனது நோக்கத்துக்கு அவர் விளக்கம் கூறட்டும்.

ஒரு இலக்கியவாதியின் வாயிலிருந்து எந்த நோக்கமும் இல்லாமல் தற்செயலாக வெளிப்படுவதற்கு ‘சொற்கள்’ எனப்படுபவை, பின்புறத்திலிருந்து வெளிப்படும் வாயு அல்லவே!

0000

“மார்க்ஸ் இவ்வாறு பதிலளித்திருப்பது உண்மைதானா?” என்று தெருக்கூத்தாடி எங்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். confessions என்ற தலைப்பில் தன்னுடைய மகளின் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் மார்க்ஸ். இதே போன்ற பதில்களை மார்க்ஸின் மனைவி ஜென்னியும், எங்கெலஸும் கூட அளித்திருக்கின்றனர். பொருட்செறிவும் வேடிக்கையும் கலந்த அந்தப் பதில்கள், அவர் எழுதிக் குவித்த ஆயிரம் பக்கங்களில் அரைப்பக்கத்துக்குக் கூடக் காணாது. அவற்றை ஒரு வரிப் பிரகடனமாகவோ, மார்க்சியத்தின் சாரமாகவோ, மார்க்சுடைய ஆளுமையின் வெளிப்பாடாகவோ புரிந்து கொண்டு மேற்கோள் காட்டுவதை, மிகவும் மரியாதையான சொற்களில் சொல்லுவதென்றாலும் முட்டாள்தனம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

எனினும் வாசகர்களுக்கு என்ன விதமான தெளிவை ஏற்படுத்தும் பொருட்டு இந்த மேற்கோளை சுகுமாரன் கையாண்டிருக்கிறார் என்று தெரிந்து கொள்ளாமல், முட்டாள்தனம் என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துவது நியாயமல்ல என்பதால், உயிரோசைக்குச் சென்று அவருடைய கட்டுரையைப் படித்தோம்.

கம்யூனிஸ்டு அறிக்கையை இலக்கிய நோக்கில் வாசித்து அதன் நடையைப் பற்றி உம்பர்ட்டோ ஈகோ என்ற இத்தாலிய சிந்தனையாளர் எழுதியுள்ள ஆழமான கட்டுரையொன்றை சுகுமாரன் படித்தாராம்.

அதன்உட்பொருள் என்னவாக இருந்தாலும் அது கொண்டிருக்கும் இலக்கியக் குணமே அந்தவெளியீட்டை இந்த அளவு வலிமையுள்ள பிரதியாக ஆக்கியது” என்கிறாராம் ஈகோ.

உலகமயமாக்கல்என்ற சொல்லைப் பயன்படுத்தாமலேயே நூற்றியறுபது ஆண்டுகளுக்கு முன்பு அதன்விளைவுகளைப் பற்றி கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்கிறாராம் உம்பர்ட்டோ ஈகோ.

“உலகமயமாக்கலை எதிர்க்கும் எல்லா சக்திகளும் முதலில் பிளவுபடுத்தப்படும். பின்னர் குழப்பப்படும். அதன் பின்னர் அந்தச் சக்திகளே உலகமயமாக்கலை ஆதரித்துப் போராடத் தொடங்கும்” என்ற உண்மையை மார்க்சின் பிரகடனத்திலிருந்து ஈகோ வாசித்துக் கண்டு பிடித்திருக்கிறாராம். “இந்த உண்மை இன்றைய நிஜம்

என்று கூறும் சுகுமாரன் கீழ்க்கண்டவாறு தொடர்கிறார்.

“மார்க்சின் நூல்கள் மீண்டும் அவரது தாய்மொழியான ஜெர்மனியில் மறுபதிப்புப் பெறுகின்றன. .. உலகப் பொருளாதாரச் சிக்கல் தங்களுடைய வாழ்க்கையை அவலமாக்கியிருக்கிறது; மார்க்ஸ்கனவு கண்ட சமுதாயத்தில் மனிதமிருக்கிறது என்று அவர்கள் நம்புவதாகவும்மர்டோக்கின் நாளிதழ் கட்டுரை வெளியிட நேர்ந்திருக்கிறது.

இது காரல் மார்க்சின் நான்காம் பிறவி” என்று பெர்லின் பல்கலைக்கழகப் பேராசிரியர் வோல்ப் காங்க் விப்பர்மான் வியக்கிறார்.முந்தைய மூன்று ஜென்மங்களிலும் மார்க்ஸ் வரவேற்கப்பட்டார். விவாதிக்கப்பட்டார்.அவருடைய கருத்துகள் திரிக்கப்பட்டன. கடைசியில் வீசியெறியப்பட்டன.

நான்காவது ஜென்மத்தில் மார்க்ஸ் என்ன ஆவார்?

“மார்க்ஸ் உயிரோடிருந்தபோது அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று.மறுபிறவி ஒன்று இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு சொல்லுங்கள். நீங்கள் என்னவாக இருக்க விரும்புவீர்கள்?’

மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன்என்பது மார்க்ஸின் பதில்.

இத்துடன் சுகுமாரனின் கட்டுரை முடிவடைகிறது.

0000

1.கம்யூனிஸ்டு அறிக்கை அதன் இலக்கியத் தரம் காரணமாகத்தான் 160 ஆண்டுகளான பின்னரும் உயிரோடு இருக்கிறது.

2.உலகமயமாக்கலை எதிர்க்கும் சக்திகளே அதனை ஆதரித்துப் போராடத் தொடங்குவார்கள் என்ற உண்மையை மார்க்சின் எழுத்திலிருந்து ஈகோ கண்டுபிடித்திருக்கிறார். அது இன்று நிஜமாகிவிட்டது.

3.மார்க்சின் நூல்கள் இன்று பெருமளவில் விற்பனையாகின்றன. மார்க்சுக்கு இது நாலாவது பிறவி என்கிறார் ஒரு ஜெர்மன் பேராசிரியர்.

4.ஆனால் மார்க்சோ “எனக்கு மீண்டும் மனிதனாகப் பிறப்பதிலேயே விருப்பமில்லை” என்று கூறியிருக்கிறார்.

சுகுமாரனின் கட்டுரையில் கண்டுள்ள மேற்கூறிய நான்கு பாயிண்டுகளில் முதல் இரண்டும் உம்பர்ட்டோ ஈகோவால் முன்மொழியப்பட்டு சுகுமாரனால் வழிமோழியப்பட்டவை. மூன்றாவது பாயிண்டு ஜெர்மன் பேராசிரியருடையது. நான்காவது பாயிண்டு சுகுமாரனின் சொந்த எழுத்து.

கம்யூனிஸ்டு அறிக்கை அதன் இலக்கியத்தரம் காரணமாகத்தான் இத்தனை காலம் உயிரோடு இருக்கிறதாம். இந்த மதிப்பீட்டை தரம் தாழ்ந்த நகைச்சுவை என்பதா, சின்னத்தனமான தந்திரம் என்பதா?

முதலில் கேள்வி பதில் வடிவத்தில் எங்கெல்ஸால் எழுதப்பட்ட அறிக்கை, பொருத்தமானதாக இல்லை என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருமே முடிவு செய்து, அதன் பின்னர் எழுதப்பட்டதுதான் தற்போது நாம் படிக்கும் கம்யூனிஸ்டு அறிக்கை.

மார்க்சினுள் கருக்கொண்டிருந்த பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் வீரியமிக்க கவித்துவ வெளிப்பாடாக, (பீத்தோவனின் இசை?)

இனி வரவிருக்கும் அவரது ஆய்வுகளின் கம்பீரமான துவக்கவுரையாக, (ஷேக்ஸ்பியர்?)

ஒரு முன்வரைவுக்கேயுரிய தயக்கத்தின் நிழலும் படியா வண்ணம் முதலாளித்துவத்தின் தலைவிதியை அறுதியிட்டுக் கூறிய இறுதித்தீர்ப்பாக (விவிலியத்தின் தீர்க்கம்?),

படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நமது உள்ளத்தில் புதுப்புனலாகப் பொங்குகிறது கம்யூனிஸ்டு அறிக்கை.

இதுதான் கம்யூனிஸ்டு அறிக்கை வழங்கும் அனுபவம். இந்த அனுபவம் அதன் உட்பொருளுடன் இணைந்த அனுபவம். ஷேக்ஸ்பியரையும் பீத்தோவனையும் அறியாத கம்யூனிஸ்டு அறிக்கையின் 99% வாசகர்களுக்கு ஏற்படும் அனுபவம். அவர்களது மனதை அது இன்னமும் ஆட்சி செய்வதற்கான முதற்காரணம் அதன் உட்பொருள்தான்.

“அதன் உட்பொருள் என்னவாக இருந்தாலும்” ரசனை இன்பத்தை வழங்குவதற்கு கம்யூனிஸ்டு அறிக்கை, மியூசிக் அகாதமி கச்சேரி இல்லை. எனினும் சுகுமாரன் கூற்றுப்படி பார்த்தால், உம்பர்ட்டோ ஈகோ அந்த அறிக்கையைப் படிக்கும்போது அவரது செவி பீத்தோவனையும், சிந்தனை ஷேக்ஸ்பியரையும், இதயம் விவிலியத்தையும் தன்னுணர்வற்று ஒப்பு நோக்கிக் கொண்டிருந்திருக்கின்றன என்று தெரிகிறது.

“கம்யூனிஸ்டு அறிக்கையையும், மூலதனம் நூலையும் இலக்கியம் என்ற முறையில் ரசியுங்கள், கட்சி இலக்கியம் என்ற முறையில் கற்காதீர்கள்” என்றுதானே நம்மூர் இலக்கியவாதிகளும் இளைஞர்களை ஆற்றுப்படுத்துகிறார்கள்! இதற்கு இத்தாலியிலிருந்து உம்பர்ட்டோ ஈகோவின் தேவ சாட்சியம் தேவையா என்ன?

ஐநூறும் அறுநூறும் கொடுத்து உம்பர்ட்டோ ஈகோவை வாங்கி அவர் வழியாக கம்யூனிஸ்டு அறிக்கையைப் சுகுமாரன் புரிந்து கொள்வது பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் நாலணாவுக்கு என்.சி.பி.எச்சில் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து தன் சொந்தக் கருத்து என்ன என்பதையும் சுகுமாறன் சொல்லியிருக்கலாம்.

அப்படிப் படிக்காததன் விளைவைப் பாருங்கள்!

உலகமயமாக்கத்தின் எதிர்ப்பாளர்கள் கூட அதனை ஆதரித்துப் போராடுவார்கள் என்று மார்க்ஸ் கூறியதாக உம்பர்ட்டோ ஈகோ கூறியிருப்பதாகவும், அது இன்று நிஜமென்று நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார் சுகுமாரன்.

கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ் எங்கே அவ்வாறு கூறியிருக்கிறார் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுவாரா சுகுமாரன்?

உலகமயமாகி வரும் முதலாளிவர்க்கத்தை ஒழிக்க, தொழிலாளிகளையும் உலகமயமாகச் சொன்னார் மார்க்ஸ். “உலகத தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற புகழ்பெற்ற அறைகூவலின் பொருள் இதுதான்.

முதலாளித்துவம் தான் உயிரோடு இருப்பதற்காகவே உலகமயமாக்கலைத் திணிக்கிறது என்று மார்க்ஸ், அறிக்கையில் விளக்குகிறார். முதலாளித்துவம் தோற்றுவிக்கும் நெருக்கடிகளும் பேரழிவும் அதன் அழிவை எப்படி தவிர்க்கவியலாத அவசியமாக்குகின்றன என்று நிறுவுகிறார். நிஜம் என இன்று மீண்டும் நிரூபிக்கப் பட்டிருப்பது இதுதான்.

இன்றைய உலகமயமாக்கல் என்பது முதலாளித்து உலகமயமாக்கல். இதனால் பாதிக்கப்பட்டவர்கள்தான் மார்க்ஸின் நூல்களை வாங்குவதற்கு வரிசையில் நிற்கிறார்கள். உலகமயமாக்கத்தின் தீவிர விசுவாசியான மன்மோகன் சிங் சுவிசேச சபையினர் கூட “அல்லேலுயா” என்று உரக்கச் சத்தமிடப் பயந்து அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிஜம்.

அமெரிக்காவிடம் பட்ட செருப்படி தினமணி வைத்தியநாதனையே புரட்சிக்காரனாக்கியிருக்கிறது. நாலு நாட்களுக்கு முன் தினமணி தலையங்கம் எழுப்பியிருக்கும் புரட்சி முழக்கத்தையாவது சுகுமாரன் படித்துப் பார்க்க வேண்டும். சலிப்பூட்டும் அன்றாட உலக நடப்புகளில் இலக்கிய மனம் ஈடுபாடு கொள்வது கடினம் என்பது புரிகிறது. எனினும் இந்த உலகத்தில் வாழ நேர்ந்த துரதிருஷ்டத்துக்காகவாவது நிஜம் என்ன என்பதைத் புரிந்து கொள்ள பேப்பரைப் புரட்டிப் பார்த்துக் கொள்வது அவசியமாக இருக்கிறதே!

sugumaranமார்க்சுக்கு இது நாலாவது பிறவி என்பது அடுத்த பாயிண்டு. அவர் மனிதனாகப் பிறப்பதையே விரும்பவில்லை என்பது சுகுமாறன் சுட்டிக் காட்டும் கடைசி பாயிண்டு.

மார்க்ஸ் கனவு கண்ட சமுதாயத்தில்தான் மனிதம் இருக்கிறது என்று உலகமே அவர் நூலை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிப் படிக்கிறதாம். கோடீசுவரன் முர்டோக்கின் ப்த்திரிகையே இந்த உண்மையை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாம். நாலாவது பிறவி என்று ஜெர்மன் பேராசிரியர் சொல்கிறாராம்.

ஆயினும் சுகுமாரன் என்ன சொல்கிறார்?

“மீண்டும் ஒரு முறை பிறப்பதில் தனக்கே விருப்பமில்லை” என்று மார்க்சே கூறியிருப்பதாக சுகுமாரன் சொல்கிறார். இது போகிற போக்கில் எடுத்தாளப்பட்ட ஒரு மேற்கோளல்ல. அவர் எழுதியிருக்கும் கட்டுரையின் முத்தாய்ப்பு.

“தத்துவத்தைப் படைத்தவரே அதன் மீது நம்பிக்கை இழந்து விட்ட சூழலில், அந்த மனிதனின் எழுத்தைப் படிப்பதற்கு புதிதாக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறதே, என்ன உலகமடா!” என்று சுகுமாரன் மனதிற்குள் விரியும் இகழ்ச்சிப் புன்னகையா?

மார்க்சியம் எனும் மடமையில் மூழ்காமல் மக்களைத் தடுக்க, மார்க்சின் மேற்கோளாலேயே எழுப்ப விரும்பிய தடுப்புச் சுவரா?

அவநம்பிக்கைவாத மார்க்சியம் எனும் புதியதொரு சிந்தனைப்பள்ளியைத் தோற்றுவிக்க விழையும் துவக்கப்புள்ளியா?

அல்லது “ஆ” என்று வாசகர்களை அதிசயிக்க வைக்கும் அற்ப நோக்கத்துக்காக முத்தாய்ப்பு வரியில் தன்னிச்சையாக முகிழ்த்த வார்த்தைக் கழைக்கூத்தா?

இல்லை, சுகுமாரன் தான் எழுத விரும்பிய கவிதையை, மார்க்சின் கையைக் கொண்டு எழுத வைத்திருக்கும் கீழ்த்தரமான தந்திரமா?

மார்க்சின் அந்த மேற்கோளை எந்தப் புத்தகத்தில் படித்தோம் என்று அலமாரியைத் துழாவுவதை விட, அப்படியொரு மேற்கோள் இருப்பதாகவே கொண்டாலும், “அது தன் நினைவில் ஆழப் பதிந்தது ஏன், அந்தக் கட்டுரையின் இறுதி வாக்கியமாக வந்து விழுந்தது ஏன்?” என்ற கேள்விகளுக்கு விடை காண சுகுமாரன் தன்னைத் துழாவவேண்டும்.

____________________________________

 

 

  1. //மார்க்சின் அந்த மேற்கோளை எந்தப் புத்தகத்தில் படித்தோம் என்று அலமாரியைத் துழாவுவதை விட, அப்படியொரு மேற்கோள் இருப்பதாகவே கொண்டாலும், “அது தன் நினைவில் ஆழப் பதிந்தது ஏன், அந்தக் கட்டுரையின் இறுதி வாக்கியமாக வந்து விழுந்தது ஏன்?” என்ற கேள்விகளுக்கு விடை காண சுகுமாரன் தன்னைத் துழாவவேண்டும்.

    //

    This is the essense of this Article.. Good One…

  2. //தத்துவத்தைப் படைத்தவரே அதன் மீது நம்பிக்கை இழந்து விட்ட சூழலில், அந்த மனிதனின் எழுத்தைப் படிப்பதற்கு புதிதாக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறதே, என்ன உலகமடா!” என்று சுகுமாரன் மனதிற்குள் விரியும் இகழ்ச்சிப் புன்னகையா? //

    இதுதான் மேட்டர்.. நல்ல கட்டுரை வினவு

  3. அருமையான உளவியல் சார்ந்த கட்டுரை வினவு. இந்த சமூகத்தை இப்படி தான் மாட்ற்றனும்னு போராட வரும் இளைய தலைமுறையினரிடம் தான் இப்படிப் பட்ட சுகுமறம் பொன்றொரது கேடு கெட்ட எழுத்துகள் சேரும் பொழுது அவர்கள் சந்தப்ப்பவாதிகள் ஆகி விடுவார்கள். தாம் கொன்ட கொள்கையின் மீது அவர்களை நம்பிக்கை இழக்க வைக்கும் இது போன்ற சதிகளை இப்படி தான் அடிச்சி உடைக்கனும்.

    வாழ்த்துக்களுdaன் பாட்டாளி

  4. It is a common sight in all little magazines criticising communism with their half-baked knowledge on Marxism and Sukumaran is no exception from that. Sukumaran should come out with an explanation for his reckless comment. He shouldn’t hide himself behind the outdated literary concepts like ‘The Death of the Author’. The timely intervention of Vinavu would have sent a strong message to all those who are in the pipeline of Sukumaran that Marxism is not a Philosophy which can be taken for granted.

  5. உண்மையில் மார்க்ஸ் அப்படி கூறியிருக்கக்கூடுமா?

    தோழர் தியாகு எழுதிய மார்க்ஸியம் ஆனா ஆவன்னா புத்தகத்தில் நான் படித்ததை இங்கு கூற விரும்புகிறேன்.

    “பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காவும், அவர்தம் துயரங்களை களைவதற்காகவும் இன்னல் எதுவரினும் விஞ்ஞான நோக்கையே உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தார் மார்க்ஸ். இதனால் அரும் அவர் மனைவி மக்களும் அடைந்த துயரங்கள் எண்ணிலடங்கா.

    தனது இலட்சிய வாழ்க்கையினால் தம் மனைவி மக்களுக்கு ஏற்பட்ட இன்னல் மார்க்சின் மனத்தை ஆழமாக பாதித்திருக்க வேண்டும். அதனால் தான், “இந்த வாழ்க்கையை மீண்டும் வாழ வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு மார்க்ஸ் “இப்போது செய்து கொண்டிருப்பதையே மறுபடியும் செய்வேன், திருமணம் செய்து கொள்வதைத் தவிர” என்று பதிலளித்தார்.”

Leave a Reply to proletarian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க