privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைகவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!

கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!

-

ஆகஸ்டு 15, ஆழ்ந்த அனுதாபங்கள்

ருக்குச் செல்லும் பாதையின் துவக்கத்தில்
நிழல் கொடுக்கும் அந்த வேப்பமரம்
இப்போது இல்லை,
தலைமுறைகளுக்கு சுவாசம் ஊட்டிய
பால்சுரந்த கிளைகளின் ஈரம்…
இலைகளின் வாசம்…
கொழுந்துகள் நுனியில் கூசும் சூரியன்…அனைத்தையும்
கொன்ற இடத்தில் கண்டேன் பலகையை;
“பசுமை சுய உதவிக்குழு”
உங்களை அன்புடன் அழைக்கிறது.

………

பெரிசுகள் ஒதுங்கி வெற்றிலைப்போடும்
அழகினைப்பார்த்து கிளிவாய் சிவக்கும்.
மிச்ச சுண்ணாம்பு தடவிய இடத்தின்
மேலே வழியும் மரக்கோந்து வள்ளத்தில்
கை நனைத்து கட்டெறும்புகள் வரையும்
உயிரோவியத்தை காண இனி வழியில்லை!

………

ழைய நினைவுகள் பாதையில் குறுக்கிட்டன…
அதோ…கல்யாண முருங்கை இலை
அடை சுட்டு சாப்பிட்டால்
அடாத சளி நீங்கும்,
இதோ… ஆடாதொடை
கசாயம் குடித்தால் கடும் ஜூரம் போகும்.
அதுதான் துன்னூற்றுப் பச்சிலை
மரு நீக்கும்
அதோ குப்பைமேனி
சொறி, சிரங்கு போக்கும்…
பச்சிலைகளை உறவாக்கி
பாட்டி கூட்டிச் சென்ற வழியெங்கும்
இப்போது கருவை முட்களில்
காய்த்துக் குலுங்கும் சாராய உறைகள்…

………

குட்டையின் புழுக்கம் தாங்காமல்
சட்டையைக் கழற்றிய நல்லபாம்பு
வாதாம் இலைச்சருகில் இறந்துகிடக்குது.
ஆலமரத்து டீக்கடையை
அடையாளம் தேடினாலோ,
“அதெல்லாம் இப்ப இல்லை
அதோ அந்த காய்ந்த வாய்க்கால் தாண்டினால்
முன்பு வேளான் வீடிருந்த இடத்தில்
உடைந்த பானைகள் குவிந்திருக்கும்
அதுக்கு கிழக்கால ஒரு பாழும் கிணறு
அதை ஒட்டி மடிச்ச கீத்து மேல
ஒரு பிளாஸ்டிக் தாள் போட்டிருக்கும்
அதான் இப்ப டீக் கடை” என ஊர் சொல்லுது.

………

வ்வாலும் வீட்டிற்குள் வருவதில்லை
என்ன இருக்கிறது விவசாயி வீட்டில்?
வெறும்பானையை உருட்டி
வெறுத்துப்போன எலி
விழுந்து சாக கழனிப்பானை இல்லாமல்
வீட்டை விட்டே ஓடிவிட்டது.
ஓலையில் செருகிய
கருக்கரிவாளின் கைப்பிடியை கரையான் தின்கிறது
வேலியில் காயும் வெளிர்பச்சை தாவணியை
ஆடு மேய்கிறது.

………

சும்புல் துளிர்க்க வழியின்றி
பன்றிகள் காலில் மிதிபட்டு
பட்டுப்போய்… பொட்டல் வெளியான
வயலின் நடுவே
ஜோடிக்கப்பட்ட மரத்தின் உச்சியில்
கொடி ஒன்று துளிர்க்கிறது
வேடிக்கைப் பார்த்தவர்களிடம் விசாரித்தால்
ஆகஸ்டு பதினைந்து!

துரை. சண்முகம்

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு-2009

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க