privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!

தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!

-

ஈழத்தின் நினைவுகள் – பாகம் 11

vote-012ஈழத்திலிருந்து உயிர் தப்பி, சிதறடிக்கப்பட்ட கனவுகளோடு அந்நிய தேசத்தில் அகதி நான். என் வாழ்வின் அடுத்த நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை இனி யாரால் அல்லது எந்த சட்டதிட்டங்களால் தீர்மானிக்கப்படும், தெரியவில்லை. என் சொந்த எதிர்காலத்தை கூட நிர்ணயிக்க முடியாத பரிதவிப்போடும், என் மீது வலிந்து திணிக்கப்பட்ட  அகதிநிலை பற்றி பல விடை தெரியாக் கேள்விகளுடனும் மனம் பாறையாய் இறுகிக்கிடந்தது. நான் அகதி என்ற யதார்த்தத்தை என்னையுமறியாமல் எனக்குள் மறுதலித்துக்கொண்டே இருந்தேன். மனித மனம் ஓர் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதன் முதற்படிநிலை அதை “மறுதலித்தல்” என்பதுதான் என்ற அறிவு எனக்கு அன்று இருக்கவில்லை.

அந்த உணர்வலைகள் எனக்குள் சற்றே அடங்கியிருந்த வேளையில் என்னை சுற்றிக் கவனித்தேன். அங்கிருந்த ஆயிரக்கணக்கானோரும் ஏதேதோ பேசினார்கள், பெருமூச்சு விட்டார்கள், சாபம் போட்டார்கள், அழுகைக்கும் பேச்சுக்குமிடையே வார்த்தைகளுக்கு தவித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் புதிதாக வந்தவர்களிடம் எந்த ஊரிலிருந்து வருகிறார்கள் என்று தெரிந்து ஈழத்தில் மற்றவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள். யார், யாரோ பெயர்களை எல்லாம் சொல்லி அவர்கள் நலமா என்று ஆவலுடன் பதில் தெரியாத கேள்விகளை கேட்டு பதிலுக்காய் எங்கள் வாயை பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இந்த பொம்மரும், ஆமியும் இல்லையெண்டால் ஊரிலேயே இருந்திருக்கலாம்” என்று எதார்த்தமாய் அங்கலாய்த்தார்கள். எங்களைப்போல் புதியவர்களின் வருகையால் பாதிக்கப்படாதவர்களும் இருந்தார்கள். இவர்கள் தான் யதார்த்தவாதிகள் என்று நினைத்துக்கொண்டேன்.

யார் எப்படி இருந்தாலும் ஈழம், அகதி என்ற பொதுவான ஒற்றுமையைத்தவிர வேறெந்த வேறுபாடும் அங்கே இருந்தது போல் எனக்கு தெரியவில்லை. எனது உணர்வுகளை கடந்து யதார்த்தம் என் அறிவை சுடத்தொடங்கிய போதுதான் அகதி முகாமின் அடிப்படை வசதிகள், வேலை வாய்ப்பு(??), கல்வி, எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரமான நடமாட்டம் இவை பற்றியெல்லாம் சிறிது, சிறிதாக மனம் கிரகிக்கத் தொடங்கியது.

இவர்களில் இனி நானும் ஓர் அங்கம். இந்த வலிகளை இனி ஜீரணிக்க என்னை நான் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஓர் ஓலைக்குடில், அதில் நான்கைந்து சமையல் பாத்திரம், ஓர் அடுப்பு இதையெலாம் உங்கள் வரிப்பணத்தில் தமிழக அரசு கொடுத்தது. இன்ன பிற வசதிகள் என்றால் நான்கு தண்ணீர் குழாய்கள் மட்டுமே. உங்கள் மண்ணில் ஒண்டிக்கொள்ள இடம் கொடுத்து, இரண்டு வேளை சாப்பாடும் கொடுத்ததிற்கு என் போன்ற ஈழத்தமிழர்கள் சார்பில் உங்கள் எல்லோருக்கும் நன்றி.

முகாம் என்ற பெயரில் ஒற்றை மரம் கூட இல்லாத பொட்டல் வெளியில் போடப்பட்ட குடிசைகளுக்கு நடுவே நிழலுக்காய் மனம் தவித்த போது என் வீட்டு மாமரமும், தென்னையும் என் உயிருக்குள் நிழற்குடை விரித்தன. அகதி முகாமில் அதிகாலை இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையே குளிரக்குளிர குளித்த போதெல்லாம் ஈழத்தில் என் வீட்டு கிணற்றடியும் நான் குளிப்பதற்காய் கட்டப்பட்ட மறைப்பும் என் நினைவுகளில் வந்து, வந்து போயின. கண்கள் பனித்தன. அதிகாலை மூன்று மணிக்கு இருள் கவிழ்ந்திருந்தாலும் என் அந்தரங்கம் இப்படி பொது வெளியில் கடை விரிக்கப்பட்டு விட்டதோ என்ற ஓர் உணர்வு என் மெய் தாள வைத்தது. இது தவிர, அதிகாலையில் சூரியன் சந்திரனை எதிர்த்திசையில் விரட்டுமுன், அந்த இருள் பிரியாத பொழுதிலேயே முகாமிலிருந்து நீண்ட தொலைவிலிருந்த சவுக்குத்தோப்பில் காலைக்கடன் முடித்தாக வேண்டும். இதுவே ஓர் அகதி முகாம் பெண் அகதியின் அன்றாட நிகழ்ச்சி நிரல்.

இதையெல்லாம் படிப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கூடத் தோன்றலாம். அப்படி ஒரு வாழ்கையை வாழ்ந்து பார்த்தால் தான் அதிலுள்ள கஷ்டமும், வலியும் புரியும். இந்த அன்றாட நிகழ்வுகளின் ஒவ்வோர் அங்கத்திலும் என் மண்ணும், வீடும், மனிதர்களும் என் நினைவுகளை நிலை கொள்ள விடாமல் அலைக்கழித்தன. மறுபடியும் என் ஊருக்கே திரும்பி ஓடவேண்டும் போல் துக்கம் தொண்டையை அடைக்கும். அந்த உணர்வுகளிலிருந்து தப்பிக்கொள்ள எனக்கு மட்டுமா இந்த விதி, இது இங்குள்ள எல்லோருக்கும்தானே என்று என்னை நானே சமாதப்படுத்த முயன்று தோற்றும் போனேன். எனக்கு பைத்தியம் பிடிப்பததை தவிர்க்க என்னை சுற்றி நடப்பதை வேடிக்கை பார்ப்பதும் என் வழமைகளில் ஒன்றாய்ப்போனது. அந்த அகதி முகாமில் வெயில், மழை, காவற்துறை, அதிகாரிகள், அகதி மனிதர்கள் இவற்றை தவிர வேறேதும் என் கண்ணில் படவில்லை. ஓர் அசுவாரசியத்தோடு இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தேன். இதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?

என்னால் ஏற்கவும் முடியாமல், மறுப்பதற்கு மாற்று வழியும் இல்லாமல் அந்த அகதி முகாம் வாழ்க்கைக்கும், வழமைக்கும்  என்னை பழக்கப்படுத்திக்கொள்ள ஆரம்பத்தில் நிறையவே சிரமப்பட்டேன். அகதி முகாமில் எல்லோரும் பெயரளவில் உண்டு, உறங்கி, இவையிரண்டிற்கும் இடையே எந்தவொரு வேலைவெட்டியும் அல்லது வெட்டி வேலையும் இல்லாமல் இருப்பதை முரண் நகையாய் பேசித் தீர்த்தார்கள். அப்படி அவர்கள் பேசி தீர்த்த வார்த்தைகளில் ஒளிந்திருந்த வலிகள் என் மனதை ஆழமாய் கீறிவிட்டுச் சென்றன. நான் முகாமிலிருந்த காலங்களில் யாருமே ஏதாதவது வேலை கிடைத்ததாக சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை, பார்த்ததில்லை.

சமீப காலங்களில் கூட இங்குள்ள தமிழ் தொலைக்காட்சியில் தமிழகத்தில் ஒளிபரப்பான ஈழத்தமிழர்களின் அகதி முகாம் வாழ்வு பற்றிய Talk Show பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களின் பற்றாக்குறை வாழ்வு, மூட்டை தூக்கிப்பிழைப்பதைத் தவிர வேறு வழியில்லாத அவலம், உயர் கல்விக்கு வாய்ப்போ, வசதியோ இல்லாமை, ஓர் முகாமிலுள்ள அகதி TVS 50 வாங்குவதில் கூட உள்ள சிக்கல்கள் பற்றியெல்லாம் கண்ணீருக்கும், சிரிப்புக்கும் நடுவே சொல்லித் தீர்த்தார்கள். எங்களுக்குத்தான் எங்கள்  உறவுகள் படும் அவஸ்தைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போலிருந்தது. ஈழத்தமிழா இது தான் உன் விதியா என்று நெஞ்சு கனத்தது. இலங்கை வான்படை, தரைப்படை, கடற்படை என்று எந்த படை உயிர் குடிக்கும் என்று தெரியாத நிலையிலும் ஈழத்தில் நாங்கள் எதையோ செய்து சுயதேவைகளை பூர்த்தி செய்து கொண்டோம்.

அகதியான அவலம் மானம் “மானியமாய்” எங்களைப் பார்த்து பல்லை இளித்தது. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கியது ராவணனின் நெஞ்சம் மட்டுமல்ல, எங்களினதும்தான். வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடான இந்தியாவின் வறுமைக் கோட்டைத் தாண்டத் துடிக்கும் மக்கள், அதை அழிக்கமுடியாத அரசியல், பொருளாதார கொள்கை வகுப்புகள் இதையெல்லாம் நினைத்துப்பார்க்கும் போது இந்த மானியம் போதுமா அல்லது பற்றாக்குறையா என்று கணக்குப்பார்க்க, குறை கூற மனம் ஒப்பவில்லை. இது தான் எங்கள் விதியோ? இதுவே நிரந்தரமாகிவிடுமோ என்றபயமும், தன்மானமும் தான் உயிரை பாடாய்ப் படுத்தியது. சொந்த மண்ணில் எல்லோருக்குமே ஏதோவொரு தொழில், போதுமோ, போதாதோ ஏதோ வருமானம் என்று எல்லாத்தையுமே போர் தின்றது போக இப்போது மீதியுள்ளது உயிர் மட்டுமே. அந்த உயிரும் கூட இந்த அகதி முகாம் வாழ்வில் கசந்து முகாமிற்கும் ஈழத்திற்குமிடையே அல்லாடிக்கொண்டிருந்தது.

குண்டுகள் உயிர் குடிக்கவில்லை. ஒருவேளை உணவேனும் உயிர்ப்பயமின்றி உண்ண முடிகிறது. சரி, அடுத்தது என்ன என்று யோசித்தபோது குறுக்கும், மறுக்குமாக “ஆமி, பெடியள்” விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்தான் கண்ணில் பட்டார்கள். தலைமுறைக்கும் இவர்கள் இதைத்தான் விளையாடப் போகிறார்களா? அவர்களின் எதிர்காலம் அகதி முகாமுக்குள்ளேயே முடக்கப்படப் போகிறதா? என் அடுத்த தலைமுறைக்கு நான் எதை விட்டுச் செல்லப்போகிறேன்? அகதி அந்தஸ்தையும், அவலச் சொத்தையுமா? அல்லது, இந்த உலகம் பழிக்கும் படி, படிக்காத முட்டாள் கூட்டம் என்ற அவப்பெயரா? அகதி வாழ்வின் எச்சங்கள் இவைகள் தானென்றால் எங்களுக்கு ஓர் சேரியும், இருண்ட எதிர்காலமும்தான் விதியாகிப் போகும்.

ஆகவே, ஈழத்தமிழன் எதை இழந்தாலும் கல்வியை இழக்கக்கூடாது. முகாமில் எங்கள் அடிப்படை தேவை ஏதோ வகையில் திருப்தி இல்லாமலே தீர்ந்தாலும், அடுத்து கல்விக்கும் இந்த அகதிமனம் ஆசைப்பட்டது. அது பற்றி விசாரித்த போதுதான் சொன்னார்கள். அந்த ஊரிலிருந்து நிறைய தூரத்தில் ஓர் சிறிய பாடசாலை மட்டுமே இருக்கிறதாம் என்று. பள்ளிக்கூடம் இருக்கிறது. அறிவும், திறமையும் எங்கள் குழந்தைகளிடமும் இருக்கிறது. ஆனால், நிர்வாகம் எதிர்பார்க்கும் இத்யாதிகள் ஈழத்தமிழர்களிடம் இருக்கிறதா, தெரியவில்லை. ஆனால், ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று வருவதை பார்த்த பின்தான் தெரிந்து கொண்டேன், அகதி அட்டையை காட்டினால் அனுமதி கிடைத்தது என்று சொன்னார்கள். பிறகேன் எல்லாக்குழந்தைகளும் பாடசாலை செல்லவில்லை? நூறு குழந்தைகள் படிக்குமிடத்தில் எப்படி ஆயிரம் குழந்தைகள் படிக்க முடியும். உங்கள் கல்வியை பங்கு கேட்க நாங்கள்!

இப்போது புரிந்தது ஏன் முகாமிலுள்ள எல்லாக்குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகவில்லை என்று. பிச்சை புகினும் கற்கை நன்றே. யார் சொன்னது? ஞாபகமில்லை. ஆனால், அந்த சொற்கள் மட்டும் பசுமரத்தில் ஆணியாய் மனதில் பதிந்து போனது. அடிமை சகதியிலிருந்து விடுபட எங்களுக்கு கல்வியும் முக்கியம். எங்கள் வலிகளிலிருந்து அதை புரிந்து கொண்டு எல்லா ஈழத்தமிழர்களும் படிக்க வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. இப்போதெல்லாம் அகதி முகாமிலிருந்து கொண்டே படித்து ஒரு சிலர் மட்டுமே அப்படி தமிழ்நாட்டில் முன்னேறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.  தமிழ்நாட்டில் அகதி முகாமில் எல்லாக்குழந்தைகளுக்கும் கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறதா தெரியவில்லை. ஆம் கிடைக்கிறது என்று நீங்கள் யாராவது சொன்னால் சந்தோசப்படுவேன். உலகில் எந்த குழந்தைக்கும் கல்வி கனவாய் போகாமல் அது மெய்ப்பட வேண்டும். கல்விக்காகவே அன்று நாங்கள் முகாமிலிருந்து வெளியேற வேண்டுமென்று நினைத்தோம்.

சிங்கள ராணுவம் இல்லாத இடமெல்லாம் எங்களுக்கு சொர்க்கபுரிதான். அது அகதி முகாமே ஆனாலும். முட்கம்பி இல்லாத முகாம், காலில் பூட்டப்படாத விலங்குகளோடு சுதந்திர அடிமைகளாய் வலம் வந்தோம். போர் பூமியைத்தாண்டி, அகதி முகாமிற்கு வெளியே இன்னோர் இயல்பான உலகம் இயங்குவதை பார்க்க, அதில் நாங்களும் ஓர் அங்கமாக கலந்து போக ஆசைதான். ஆனால், சங்கடங்களும் எங்களுக்கு அங்கே தான் ஆரம்பித்தன.

முதலில், முகாமை விட்டு யாருமே வெளியே போக முடியாது என்றார்கள். பிறகு, சிலர் வெளியே சென்று வந்ததைப் பார்த்து, விசாரித்தோம். வெளியே சென்று வருவதன் நடைமுறைகளை சொன்னார்கள். யாராவது முகாமிற்கு வெளியே வேலையாக செல்வதானாலும் பொறுப்பிற்கு இரண்டு பேரை முகாமில் விட்டுச் செல்ல வேண்டும். மறுபடியும் திரும்பி முகாமிற்கு வருவோம் என்று கையெழுத்து போட்டு கொடுத்து விட்டுத்தான் செல்லமுடியும். யாரும் எங்களை அடிபணிய வைத்து அழைத்து வரவில்லை. சங்கிலிகளால் எங்கள் கை, கால்கள் பிணைக்கப்படவில்லை. ஆனாலும், முகாமிற்குள் முடக்கப்பட்ட போது அடிமை போல் உணர்ந்தேன். அதை தவிர்க்க முடியவில்லை.

இப்போது நான் அகதியா அல்லது அடிமையா? எனக்குள் குழம்பிக்கொண்டிருந்தேன். இந்த குழப்பத்துடனேயே முகாமில் என் நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அடித்துப் பெய்த மழையில் அங்கிருந்த குடிசைகள், பாத்திரங்களோடு நாங்களும் இரவிரவாய் தூங்காமல், உட்காரவும் இடம் இல்லாமல் கால்கள் கடுக்க மழை வெள்ளத்தில் மிதந்தோம். வெள்ளம் வடிகிற மாதிரி தெரியவில்லை. அதற்கு பிறகு வருவது வரட்டும் என்று முகாமை விட்டு அன்றோடு வெளியேறினோம்.

முகாமிலிருந்து வெளியேறி உறவினர் ஒருவரின் உதவியுடன் வெளியே வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். வீடு கட்டி முடித்த கையோடு, புத்தம் புது வீட்டில் வாடைகைக்கு அமர்த்தப்பட்டோம். முகாமில் ஒரு விதமான கஷ்டம் என்றால் வெளியில் அது வேறோர் விதமாக இருந்தது. இதை சொல்வதா வேண்டாமா என்று பலமுறை யோசித்து விட்டு தயக்கத்தோடுதான் சொல்கிறேன்.

நாங்கள் இருந்த தெருவில் இருந்தது எல்லாமே பிராமண சமூகத்தினரின் வீடுகள்தான். நாங்களிருந்த வீட்டின் உரிமையாளரும் பிராமணரல்லாத ஒருவர். அந்த தெருவில் எங்கள் வீட்டிற்கு அருகில் ஓய்வுபெற்ற ஒரு பிராமணர் இருந்தார். அவருடைய வாழ்நாள் குறிக்கோள் அந்த தெருவை ஓர் “அக்ரஹாரம்” ஆக்குவதுதான் என்று அவரே சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இருந்ததோ பிராமணரல்லாத ஒருவரின் வீடு. அவருடைய ஆசைக்கு குறுக்கே அந்த வீடும், நாங்களும் இருந்தது அவருக்கு பொறுக்கவில்லை என்பது அவரின் பேச்சில் வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த வன்மைத்தை எல்லாம், “கள்ளத்தோணிகள், நீங்கள்ளாம் பெரியாரின் ஆட்களடி, உங்கள இங்கிருந்து தொரத்தணும்” இப்படியெல்லாம் தான் கொட்டித்தீர்த்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.

எங்களைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் காவல் துறையிடம் பற்றவைத்தார். இவரின் உளவியல் சித்திரவதை தாங்க முடியாமல் ஒருநாள் வீட்டை காலி செய்கிறோம் என்று வீட்டின் உரிமையாளரிடம் சொன்னோம். அவர் ஏன் என்று காரணங்களை  கேட்டு விட்டு, “நீங்கள் வீட்டை காலி செய்யவேண்டியதில்லை. மிகுதியை தான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். அவர் யாரிடம் என்ன பேசினாரோ தெரியவில்லை. கொஞ்ச நாள் பிரச்சனையில்லாமல் இருந்தோம். நான் தமிழ்நாட்டில் என்றென்றும் நன்றி சொல்லவேண்டிய மனிதர்களில் ஒருவர். இன்னொருவர் எங்களை தன் சொந்த சகோதரிகளைப்போல் பாசம் காட்டிய ஓர் ஆட்டோக்காரர். எப்பொழுதாவது சினிமாவுக்கும் எங்களை இவர்தான் கூட்டிக்கொண்டு போவார். சினிமா ஆரம்பிக்கவும் தூங்குகிறவரை, அது முடிந்ததும் பத்திரமாய் தட்டியெழுப்பி கூட்டி வருவோம்.

அடுத்து, நாங்கள் இருந்த தெருவிலிருந்த மற்றைய பிராமணர்கள். “நீங்கள்ளாம் சிலோன் அகதிகளா…” என்று தொடங்கிய நட்பு. எங்களிடம் பாரபட்சம் பார்க்காமல் நட்பு கொண்டவர்கள். என் கசப்பான அகதி வாழ்க்கைக்கு சின்ன, சின்ன சுவாரசியங்களை சேர்த்த மனிதர்கள்.

தமிழ்நாட்டில் வெளியே தங்கியிருப்பதால் காவல் துறையிடம் பதிந்துகொள்ள வேண்டும் என்று வேறு சொன்னார்கள். அந்த நடைமுறையை செவ்வனே செய்துமுடிக்கு முன், பேசாமல் ஊருக்கே திரும்பி போய் குண்டடிபட்டு அல்லது சிங்கள ராணுவத்திடம் சித்திரவதைப்பட்டு செத்துப்போகலாம் என அழுகைதான் வந்தது. அப்படி எங்களை நாய் படாத பாடாய்   படுத்திவிட்டார்கள். இவ்வளவு அக்கப்போருக்கு நடுவிலும் என்னால் என்னையே சமாதானப்படுத்திக்கொள்ள மனமும், வாழ்வும் ஒட்டவில்லை. ஈழத்திற்கு ஓடிப்போக வேண்டும்போலிருந்தது. வீட்டில் அழுது புரண்டு ஒப்புதல் வாங்கி மறுபடியும் நான் இலங்கை போனேன்.

இந்த பதிவை முடிக்குமுன், இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக ஈழத்தமிழ் அகதிகள் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். அண்மையில் கூட சிலபேர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். புலத்திலிருந்து பணம் வருபவர்கள் ஓரளவுக்கு வசதியாய் இருக்கிறார்கள். முகாமிலிருப்பவர்களின் வாழ்வுதான் இன்னும் சவால்களுடனேயே நகர்கிறது. அண்மையில் கூட இவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவது பற்றிய அரசியல் அறிக்கைகள், தொலைக்காட்சி வழங்கப்பட்டது என்று செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.

இதையெல்லாம் ஏற்பதும், மறுப்பதும் அவர்களின் தனிப்பட்ட முடிவு. யார் அகதியானாலும் அவர்கள் அரவணைக்கப்பட வேண்டியவர்களே. அதில் எங்களுக்கு நிச்சயமாய் வருத்தமில்லை. ஆனால், என் நெஞ்சை அறுக்கும் விடயம் இந்தியாவில் திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கும் அடிப்படை வசதி, உயர்கல்வி, வாழ்வாதாரத்திற்கேற்ப வருமானம் தரும் வேலை வாய்ப்புகள் எல்லாமே ஈழத்தமிழ் அகதிகளுக்கு சாத்தியமற்றுப் போகிறதே, ஏன்? தமிழ்நாட்டையும் தாண்டி படகுகளில் கடல் மேல் தங்கள் உயிரை பணயம் வைத்து அவுஸ்திரேலியா தங்களை அரவணைக்கவில்லை என்று தெரிந்தும் அங்கே போய் உயிர் தத்தளிக்கிறார்களே ஏன்? புரியவில்லை. யோசித்தால் வலி தான் மிஞ்சுகிறது.

–          ரதி

vote-012

தொடர்புடைய பதிவுகள்