Wednesday, October 16, 2024
முகப்புஉலகம்ஈழம்தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!

தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!

-

ஈழத்தின் நினைவுகள் – பாகம் 11

vote-012ஈழத்திலிருந்து உயிர் தப்பி, சிதறடிக்கப்பட்ட கனவுகளோடு அந்நிய தேசத்தில் அகதி நான். என் வாழ்வின் அடுத்த நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை இனி யாரால் அல்லது எந்த சட்டதிட்டங்களால் தீர்மானிக்கப்படும், தெரியவில்லை. என் சொந்த எதிர்காலத்தை கூட நிர்ணயிக்க முடியாத பரிதவிப்போடும், என் மீது வலிந்து திணிக்கப்பட்ட  அகதிநிலை பற்றி பல விடை தெரியாக் கேள்விகளுடனும் மனம் பாறையாய் இறுகிக்கிடந்தது. நான் அகதி என்ற யதார்த்தத்தை என்னையுமறியாமல் எனக்குள் மறுதலித்துக்கொண்டே இருந்தேன். மனித மனம் ஓர் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதன் முதற்படிநிலை அதை “மறுதலித்தல்” என்பதுதான் என்ற அறிவு எனக்கு அன்று இருக்கவில்லை.

அந்த உணர்வலைகள் எனக்குள் சற்றே அடங்கியிருந்த வேளையில் என்னை சுற்றிக் கவனித்தேன். அங்கிருந்த ஆயிரக்கணக்கானோரும் ஏதேதோ பேசினார்கள், பெருமூச்சு விட்டார்கள், சாபம் போட்டார்கள், அழுகைக்கும் பேச்சுக்குமிடையே வார்த்தைகளுக்கு தவித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் புதிதாக வந்தவர்களிடம் எந்த ஊரிலிருந்து வருகிறார்கள் என்று தெரிந்து ஈழத்தில் மற்றவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள். யார், யாரோ பெயர்களை எல்லாம் சொல்லி அவர்கள் நலமா என்று ஆவலுடன் பதில் தெரியாத கேள்விகளை கேட்டு பதிலுக்காய் எங்கள் வாயை பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இந்த பொம்மரும், ஆமியும் இல்லையெண்டால் ஊரிலேயே இருந்திருக்கலாம்” என்று எதார்த்தமாய் அங்கலாய்த்தார்கள். எங்களைப்போல் புதியவர்களின் வருகையால் பாதிக்கப்படாதவர்களும் இருந்தார்கள். இவர்கள் தான் யதார்த்தவாதிகள் என்று நினைத்துக்கொண்டேன்.

யார் எப்படி இருந்தாலும் ஈழம், அகதி என்ற பொதுவான ஒற்றுமையைத்தவிர வேறெந்த வேறுபாடும் அங்கே இருந்தது போல் எனக்கு தெரியவில்லை. எனது உணர்வுகளை கடந்து யதார்த்தம் என் அறிவை சுடத்தொடங்கிய போதுதான் அகதி முகாமின் அடிப்படை வசதிகள், வேலை வாய்ப்பு(??), கல்வி, எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரமான நடமாட்டம் இவை பற்றியெல்லாம் சிறிது, சிறிதாக மனம் கிரகிக்கத் தொடங்கியது.

இவர்களில் இனி நானும் ஓர் அங்கம். இந்த வலிகளை இனி ஜீரணிக்க என்னை நான் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஓர் ஓலைக்குடில், அதில் நான்கைந்து சமையல் பாத்திரம், ஓர் அடுப்பு இதையெலாம் உங்கள் வரிப்பணத்தில் தமிழக அரசு கொடுத்தது. இன்ன பிற வசதிகள் என்றால் நான்கு தண்ணீர் குழாய்கள் மட்டுமே. உங்கள் மண்ணில் ஒண்டிக்கொள்ள இடம் கொடுத்து, இரண்டு வேளை சாப்பாடும் கொடுத்ததிற்கு என் போன்ற ஈழத்தமிழர்கள் சார்பில் உங்கள் எல்லோருக்கும் நன்றி.

முகாம் என்ற பெயரில் ஒற்றை மரம் கூட இல்லாத பொட்டல் வெளியில் போடப்பட்ட குடிசைகளுக்கு நடுவே நிழலுக்காய் மனம் தவித்த போது என் வீட்டு மாமரமும், தென்னையும் என் உயிருக்குள் நிழற்குடை விரித்தன. அகதி முகாமில் அதிகாலை இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையே குளிரக்குளிர குளித்த போதெல்லாம் ஈழத்தில் என் வீட்டு கிணற்றடியும் நான் குளிப்பதற்காய் கட்டப்பட்ட மறைப்பும் என் நினைவுகளில் வந்து, வந்து போயின. கண்கள் பனித்தன. அதிகாலை மூன்று மணிக்கு இருள் கவிழ்ந்திருந்தாலும் என் அந்தரங்கம் இப்படி பொது வெளியில் கடை விரிக்கப்பட்டு விட்டதோ என்ற ஓர் உணர்வு என் மெய் தாள வைத்தது. இது தவிர, அதிகாலையில் சூரியன் சந்திரனை எதிர்த்திசையில் விரட்டுமுன், அந்த இருள் பிரியாத பொழுதிலேயே முகாமிலிருந்து நீண்ட தொலைவிலிருந்த சவுக்குத்தோப்பில் காலைக்கடன் முடித்தாக வேண்டும். இதுவே ஓர் அகதி முகாம் பெண் அகதியின் அன்றாட நிகழ்ச்சி நிரல்.

இதையெல்லாம் படிப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கூடத் தோன்றலாம். அப்படி ஒரு வாழ்கையை வாழ்ந்து பார்த்தால் தான் அதிலுள்ள கஷ்டமும், வலியும் புரியும். இந்த அன்றாட நிகழ்வுகளின் ஒவ்வோர் அங்கத்திலும் என் மண்ணும், வீடும், மனிதர்களும் என் நினைவுகளை நிலை கொள்ள விடாமல் அலைக்கழித்தன. மறுபடியும் என் ஊருக்கே திரும்பி ஓடவேண்டும் போல் துக்கம் தொண்டையை அடைக்கும். அந்த உணர்வுகளிலிருந்து தப்பிக்கொள்ள எனக்கு மட்டுமா இந்த விதி, இது இங்குள்ள எல்லோருக்கும்தானே என்று என்னை நானே சமாதப்படுத்த முயன்று தோற்றும் போனேன். எனக்கு பைத்தியம் பிடிப்பததை தவிர்க்க என்னை சுற்றி நடப்பதை வேடிக்கை பார்ப்பதும் என் வழமைகளில் ஒன்றாய்ப்போனது. அந்த அகதி முகாமில் வெயில், மழை, காவற்துறை, அதிகாரிகள், அகதி மனிதர்கள் இவற்றை தவிர வேறேதும் என் கண்ணில் படவில்லை. ஓர் அசுவாரசியத்தோடு இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தேன். இதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?

என்னால் ஏற்கவும் முடியாமல், மறுப்பதற்கு மாற்று வழியும் இல்லாமல் அந்த அகதி முகாம் வாழ்க்கைக்கும், வழமைக்கும்  என்னை பழக்கப்படுத்திக்கொள்ள ஆரம்பத்தில் நிறையவே சிரமப்பட்டேன். அகதி முகாமில் எல்லோரும் பெயரளவில் உண்டு, உறங்கி, இவையிரண்டிற்கும் இடையே எந்தவொரு வேலைவெட்டியும் அல்லது வெட்டி வேலையும் இல்லாமல் இருப்பதை முரண் நகையாய் பேசித் தீர்த்தார்கள். அப்படி அவர்கள் பேசி தீர்த்த வார்த்தைகளில் ஒளிந்திருந்த வலிகள் என் மனதை ஆழமாய் கீறிவிட்டுச் சென்றன. நான் முகாமிலிருந்த காலங்களில் யாருமே ஏதாதவது வேலை கிடைத்ததாக சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை, பார்த்ததில்லை.

சமீப காலங்களில் கூட இங்குள்ள தமிழ் தொலைக்காட்சியில் தமிழகத்தில் ஒளிபரப்பான ஈழத்தமிழர்களின் அகதி முகாம் வாழ்வு பற்றிய Talk Show பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களின் பற்றாக்குறை வாழ்வு, மூட்டை தூக்கிப்பிழைப்பதைத் தவிர வேறு வழியில்லாத அவலம், உயர் கல்விக்கு வாய்ப்போ, வசதியோ இல்லாமை, ஓர் முகாமிலுள்ள அகதி TVS 50 வாங்குவதில் கூட உள்ள சிக்கல்கள் பற்றியெல்லாம் கண்ணீருக்கும், சிரிப்புக்கும் நடுவே சொல்லித் தீர்த்தார்கள். எங்களுக்குத்தான் எங்கள்  உறவுகள் படும் அவஸ்தைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போலிருந்தது. ஈழத்தமிழா இது தான் உன் விதியா என்று நெஞ்சு கனத்தது. இலங்கை வான்படை, தரைப்படை, கடற்படை என்று எந்த படை உயிர் குடிக்கும் என்று தெரியாத நிலையிலும் ஈழத்தில் நாங்கள் எதையோ செய்து சுயதேவைகளை பூர்த்தி செய்து கொண்டோம்.

அகதியான அவலம் மானம் “மானியமாய்” எங்களைப் பார்த்து பல்லை இளித்தது. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கியது ராவணனின் நெஞ்சம் மட்டுமல்ல, எங்களினதும்தான். வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடான இந்தியாவின் வறுமைக் கோட்டைத் தாண்டத் துடிக்கும் மக்கள், அதை அழிக்கமுடியாத அரசியல், பொருளாதார கொள்கை வகுப்புகள் இதையெல்லாம் நினைத்துப்பார்க்கும் போது இந்த மானியம் போதுமா அல்லது பற்றாக்குறையா என்று கணக்குப்பார்க்க, குறை கூற மனம் ஒப்பவில்லை. இது தான் எங்கள் விதியோ? இதுவே நிரந்தரமாகிவிடுமோ என்றபயமும், தன்மானமும் தான் உயிரை பாடாய்ப் படுத்தியது. சொந்த மண்ணில் எல்லோருக்குமே ஏதோவொரு தொழில், போதுமோ, போதாதோ ஏதோ வருமானம் என்று எல்லாத்தையுமே போர் தின்றது போக இப்போது மீதியுள்ளது உயிர் மட்டுமே. அந்த உயிரும் கூட இந்த அகதி முகாம் வாழ்வில் கசந்து முகாமிற்கும் ஈழத்திற்குமிடையே அல்லாடிக்கொண்டிருந்தது.

குண்டுகள் உயிர் குடிக்கவில்லை. ஒருவேளை உணவேனும் உயிர்ப்பயமின்றி உண்ண முடிகிறது. சரி, அடுத்தது என்ன என்று யோசித்தபோது குறுக்கும், மறுக்குமாக “ஆமி, பெடியள்” விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்தான் கண்ணில் பட்டார்கள். தலைமுறைக்கும் இவர்கள் இதைத்தான் விளையாடப் போகிறார்களா? அவர்களின் எதிர்காலம் அகதி முகாமுக்குள்ளேயே முடக்கப்படப் போகிறதா? என் அடுத்த தலைமுறைக்கு நான் எதை விட்டுச் செல்லப்போகிறேன்? அகதி அந்தஸ்தையும், அவலச் சொத்தையுமா? அல்லது, இந்த உலகம் பழிக்கும் படி, படிக்காத முட்டாள் கூட்டம் என்ற அவப்பெயரா? அகதி வாழ்வின் எச்சங்கள் இவைகள் தானென்றால் எங்களுக்கு ஓர் சேரியும், இருண்ட எதிர்காலமும்தான் விதியாகிப் போகும்.

ஆகவே, ஈழத்தமிழன் எதை இழந்தாலும் கல்வியை இழக்கக்கூடாது. முகாமில் எங்கள் அடிப்படை தேவை ஏதோ வகையில் திருப்தி இல்லாமலே தீர்ந்தாலும், அடுத்து கல்விக்கும் இந்த அகதிமனம் ஆசைப்பட்டது. அது பற்றி விசாரித்த போதுதான் சொன்னார்கள். அந்த ஊரிலிருந்து நிறைய தூரத்தில் ஓர் சிறிய பாடசாலை மட்டுமே இருக்கிறதாம் என்று. பள்ளிக்கூடம் இருக்கிறது. அறிவும், திறமையும் எங்கள் குழந்தைகளிடமும் இருக்கிறது. ஆனால், நிர்வாகம் எதிர்பார்க்கும் இத்யாதிகள் ஈழத்தமிழர்களிடம் இருக்கிறதா, தெரியவில்லை. ஆனால், ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று வருவதை பார்த்த பின்தான் தெரிந்து கொண்டேன், அகதி அட்டையை காட்டினால் அனுமதி கிடைத்தது என்று சொன்னார்கள். பிறகேன் எல்லாக்குழந்தைகளும் பாடசாலை செல்லவில்லை? நூறு குழந்தைகள் படிக்குமிடத்தில் எப்படி ஆயிரம் குழந்தைகள் படிக்க முடியும். உங்கள் கல்வியை பங்கு கேட்க நாங்கள்!

இப்போது புரிந்தது ஏன் முகாமிலுள்ள எல்லாக்குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகவில்லை என்று. பிச்சை புகினும் கற்கை நன்றே. யார் சொன்னது? ஞாபகமில்லை. ஆனால், அந்த சொற்கள் மட்டும் பசுமரத்தில் ஆணியாய் மனதில் பதிந்து போனது. அடிமை சகதியிலிருந்து விடுபட எங்களுக்கு கல்வியும் முக்கியம். எங்கள் வலிகளிலிருந்து அதை புரிந்து கொண்டு எல்லா ஈழத்தமிழர்களும் படிக்க வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. இப்போதெல்லாம் அகதி முகாமிலிருந்து கொண்டே படித்து ஒரு சிலர் மட்டுமே அப்படி தமிழ்நாட்டில் முன்னேறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.  தமிழ்நாட்டில் அகதி முகாமில் எல்லாக்குழந்தைகளுக்கும் கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறதா தெரியவில்லை. ஆம் கிடைக்கிறது என்று நீங்கள் யாராவது சொன்னால் சந்தோசப்படுவேன். உலகில் எந்த குழந்தைக்கும் கல்வி கனவாய் போகாமல் அது மெய்ப்பட வேண்டும். கல்விக்காகவே அன்று நாங்கள் முகாமிலிருந்து வெளியேற வேண்டுமென்று நினைத்தோம்.

சிங்கள ராணுவம் இல்லாத இடமெல்லாம் எங்களுக்கு சொர்க்கபுரிதான். அது அகதி முகாமே ஆனாலும். முட்கம்பி இல்லாத முகாம், காலில் பூட்டப்படாத விலங்குகளோடு சுதந்திர அடிமைகளாய் வலம் வந்தோம். போர் பூமியைத்தாண்டி, அகதி முகாமிற்கு வெளியே இன்னோர் இயல்பான உலகம் இயங்குவதை பார்க்க, அதில் நாங்களும் ஓர் அங்கமாக கலந்து போக ஆசைதான். ஆனால், சங்கடங்களும் எங்களுக்கு அங்கே தான் ஆரம்பித்தன.

முதலில், முகாமை விட்டு யாருமே வெளியே போக முடியாது என்றார்கள். பிறகு, சிலர் வெளியே சென்று வந்ததைப் பார்த்து, விசாரித்தோம். வெளியே சென்று வருவதன் நடைமுறைகளை சொன்னார்கள். யாராவது முகாமிற்கு வெளியே வேலையாக செல்வதானாலும் பொறுப்பிற்கு இரண்டு பேரை முகாமில் விட்டுச் செல்ல வேண்டும். மறுபடியும் திரும்பி முகாமிற்கு வருவோம் என்று கையெழுத்து போட்டு கொடுத்து விட்டுத்தான் செல்லமுடியும். யாரும் எங்களை அடிபணிய வைத்து அழைத்து வரவில்லை. சங்கிலிகளால் எங்கள் கை, கால்கள் பிணைக்கப்படவில்லை. ஆனாலும், முகாமிற்குள் முடக்கப்பட்ட போது அடிமை போல் உணர்ந்தேன். அதை தவிர்க்க முடியவில்லை.

இப்போது நான் அகதியா அல்லது அடிமையா? எனக்குள் குழம்பிக்கொண்டிருந்தேன். இந்த குழப்பத்துடனேயே முகாமில் என் நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அடித்துப் பெய்த மழையில் அங்கிருந்த குடிசைகள், பாத்திரங்களோடு நாங்களும் இரவிரவாய் தூங்காமல், உட்காரவும் இடம் இல்லாமல் கால்கள் கடுக்க மழை வெள்ளத்தில் மிதந்தோம். வெள்ளம் வடிகிற மாதிரி தெரியவில்லை. அதற்கு பிறகு வருவது வரட்டும் என்று முகாமை விட்டு அன்றோடு வெளியேறினோம்.

முகாமிலிருந்து வெளியேறி உறவினர் ஒருவரின் உதவியுடன் வெளியே வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். வீடு கட்டி முடித்த கையோடு, புத்தம் புது வீட்டில் வாடைகைக்கு அமர்த்தப்பட்டோம். முகாமில் ஒரு விதமான கஷ்டம் என்றால் வெளியில் அது வேறோர் விதமாக இருந்தது. இதை சொல்வதா வேண்டாமா என்று பலமுறை யோசித்து விட்டு தயக்கத்தோடுதான் சொல்கிறேன்.

நாங்கள் இருந்த தெருவில் இருந்தது எல்லாமே பிராமண சமூகத்தினரின் வீடுகள்தான். நாங்களிருந்த வீட்டின் உரிமையாளரும் பிராமணரல்லாத ஒருவர். அந்த தெருவில் எங்கள் வீட்டிற்கு அருகில் ஓய்வுபெற்ற ஒரு பிராமணர் இருந்தார். அவருடைய வாழ்நாள் குறிக்கோள் அந்த தெருவை ஓர் “அக்ரஹாரம்” ஆக்குவதுதான் என்று அவரே சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இருந்ததோ பிராமணரல்லாத ஒருவரின் வீடு. அவருடைய ஆசைக்கு குறுக்கே அந்த வீடும், நாங்களும் இருந்தது அவருக்கு பொறுக்கவில்லை என்பது அவரின் பேச்சில் வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த வன்மைத்தை எல்லாம், “கள்ளத்தோணிகள், நீங்கள்ளாம் பெரியாரின் ஆட்களடி, உங்கள இங்கிருந்து தொரத்தணும்” இப்படியெல்லாம் தான் கொட்டித்தீர்த்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.

எங்களைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் காவல் துறையிடம் பற்றவைத்தார். இவரின் உளவியல் சித்திரவதை தாங்க முடியாமல் ஒருநாள் வீட்டை காலி செய்கிறோம் என்று வீட்டின் உரிமையாளரிடம் சொன்னோம். அவர் ஏன் என்று காரணங்களை  கேட்டு விட்டு, “நீங்கள் வீட்டை காலி செய்யவேண்டியதில்லை. மிகுதியை தான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். அவர் யாரிடம் என்ன பேசினாரோ தெரியவில்லை. கொஞ்ச நாள் பிரச்சனையில்லாமல் இருந்தோம். நான் தமிழ்நாட்டில் என்றென்றும் நன்றி சொல்லவேண்டிய மனிதர்களில் ஒருவர். இன்னொருவர் எங்களை தன் சொந்த சகோதரிகளைப்போல் பாசம் காட்டிய ஓர் ஆட்டோக்காரர். எப்பொழுதாவது சினிமாவுக்கும் எங்களை இவர்தான் கூட்டிக்கொண்டு போவார். சினிமா ஆரம்பிக்கவும் தூங்குகிறவரை, அது முடிந்ததும் பத்திரமாய் தட்டியெழுப்பி கூட்டி வருவோம்.

அடுத்து, நாங்கள் இருந்த தெருவிலிருந்த மற்றைய பிராமணர்கள். “நீங்கள்ளாம் சிலோன் அகதிகளா…” என்று தொடங்கிய நட்பு. எங்களிடம் பாரபட்சம் பார்க்காமல் நட்பு கொண்டவர்கள். என் கசப்பான அகதி வாழ்க்கைக்கு சின்ன, சின்ன சுவாரசியங்களை சேர்த்த மனிதர்கள்.

தமிழ்நாட்டில் வெளியே தங்கியிருப்பதால் காவல் துறையிடம் பதிந்துகொள்ள வேண்டும் என்று வேறு சொன்னார்கள். அந்த நடைமுறையை செவ்வனே செய்துமுடிக்கு முன், பேசாமல் ஊருக்கே திரும்பி போய் குண்டடிபட்டு அல்லது சிங்கள ராணுவத்திடம் சித்திரவதைப்பட்டு செத்துப்போகலாம் என அழுகைதான் வந்தது. அப்படி எங்களை நாய் படாத பாடாய்   படுத்திவிட்டார்கள். இவ்வளவு அக்கப்போருக்கு நடுவிலும் என்னால் என்னையே சமாதானப்படுத்திக்கொள்ள மனமும், வாழ்வும் ஒட்டவில்லை. ஈழத்திற்கு ஓடிப்போக வேண்டும்போலிருந்தது. வீட்டில் அழுது புரண்டு ஒப்புதல் வாங்கி மறுபடியும் நான் இலங்கை போனேன்.

இந்த பதிவை முடிக்குமுன், இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக ஈழத்தமிழ் அகதிகள் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். அண்மையில் கூட சிலபேர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். புலத்திலிருந்து பணம் வருபவர்கள் ஓரளவுக்கு வசதியாய் இருக்கிறார்கள். முகாமிலிருப்பவர்களின் வாழ்வுதான் இன்னும் சவால்களுடனேயே நகர்கிறது. அண்மையில் கூட இவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவது பற்றிய அரசியல் அறிக்கைகள், தொலைக்காட்சி வழங்கப்பட்டது என்று செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.

இதையெல்லாம் ஏற்பதும், மறுப்பதும் அவர்களின் தனிப்பட்ட முடிவு. யார் அகதியானாலும் அவர்கள் அரவணைக்கப்பட வேண்டியவர்களே. அதில் எங்களுக்கு நிச்சயமாய் வருத்தமில்லை. ஆனால், என் நெஞ்சை அறுக்கும் விடயம் இந்தியாவில் திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கும் அடிப்படை வசதி, உயர்கல்வி, வாழ்வாதாரத்திற்கேற்ப வருமானம் தரும் வேலை வாய்ப்புகள் எல்லாமே ஈழத்தமிழ் அகதிகளுக்கு சாத்தியமற்றுப் போகிறதே, ஏன்? தமிழ்நாட்டையும் தாண்டி படகுகளில் கடல் மேல் தங்கள் உயிரை பணயம் வைத்து அவுஸ்திரேலியா தங்களை அரவணைக்கவில்லை என்று தெரிந்தும் அங்கே போய் உயிர் தத்தளிக்கிறார்களே ஏன்? புரியவில்லை. யோசித்தால் வலி தான் மிஞ்சுகிறது.

–          ரதி

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. நிதர்சனமானப் பதிவு. கையறு நிலையிலேயே இருக்கிறோம் என்றுக் கூறிக்கொண்டே நம் சகோதரர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டோம். அவர்களுக்கு ஈழம் அமைத்துக் கொடுப்பதை காலம் தீர்மானிக்கட்டும். அவர்களது இன்றைய வாழ்வியலுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய முன்வருவோம். ஒரு சிலருக்கு, என்னால் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். 
    ஈழத்தமிழ் அகதிகளுக்கு, இந்தியாவில் நிரந்தர வேலை வாய்ப்பு பெற தடையிருப்பதாகக் கேள்விப்பட்டேன். இது குறித்த விளக்கங்களை யாரும் அளித்தால் மகிழ்வேன். 

  2. நான்கு சுவற்றுக்குள் இருக்கும் பத்திரம் நாம் பார்ப்பதையும் சுருக்கி விடுகிறதே என்று நெகிழ வைக்கும் இடுகை.

  3. ரதி,

    உங்கள் பதிவு பல்விதமான உணர்வலைகளைத் தூண்டியது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ‘பிராமணர்’பிரச்சனையை இருந்த வீட்டை விட்டு வேறோரிடத்தில் வீடு தேடியபோது நாங்களும் அனுபவித்தோம். ஒரு மனிதர் நீதிமன்றத்தில் கேட்பதுபோல “முதலில் நீங்கள் வெஜிடேரியனா நான் வெஜிடேரியனா என்று சொல்லுங்கள். அப்புறம் பேசலாம்”என்றார். இத்தனைக்கும் அது தொடர்மாடிக் குடியிருப்பு. ஒரு தொடர்மாடிக் குடியிருப்பில் இவ்வித கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது நீதியானதா? அதை அந்த நிர்வாகம் எப்படி அனுமதிக்கிறது?

    இதையெல்லாம் நாங்கள் கேட்கக்கூடாது… இம்மென்றால் சிறைவாசம் அம்மென்றால் வனவாசம் என்பது எல்லா இடங்களிலும் அமுலில் இருக்கிறது.

    எங்கள் மனிதர்களைப் பற்றித் தொடர்ந்து எழுதுங்கள் ரதி. அதனால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்றாலும், நமது ஆற்றாமையாவது வெளிப்படட்டும்.

    • தமிழ் நதி. ரதி குறிப்பிட்டிருப்பது பிராமணர் பிரச்சினை இல்லை. குறுகிய மனப்பான்மை கொண்ட ஒருவரின் பால் எழுந்த பிரச்சினை. அவர் பிராமணர் என்பது உபரித்தகவல் அவ்வளவுதான். அந்தத் தெருவில் இருந்த பிற பிராமணர்கள் நட்புடன் இருந்ததாகவே எழுதி இருக்கிறார். கவனிக்கவும். இவர் போன்ற சாதி வெறி கொண்டவர்கள் எந்த ஆதிக்க சாதியிலும் அல்லது எந்த “கெட்டோ” மனநிலை கொண்ட மதத்திலும் பிறந்திருக்கலாம்.

      நீங்கள் எழுதியிருக்கும் சைவ அசைவ உணவு விவகாரத்திலும் உங்கள் பக்கம் நியாயம் இல்லைஎன்று நினைக்கிறேன். மதியாதார் தலை வாசல் மிதிக்காமல் நமக்குப் பொருத்தமான இடம் பார்த்துக் கொள்வதுதான் நமக்கு அழகு. தன வீட்டுக்குள் என்ன செய்யலாம் கூடாது என்பதை நிறுவிக் கொள்வது அவரவர் உரிமை. பிராமண வீட்டில் அசைவமும் முஸ்லிம் வீட்டில் பன்றியும் சமைக்க முடியாது. இதற்குப் போய் “இம்மென்றால்…” வசனமெல்லாம் அதிகம்.

      • வித்தகன்,

        tamilnathy தன்னுடைய கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் என்று தான் எனக்கு தோன்றுகிறது. 

        //மதியாதார் தலை வாசல் மிதிக்காமல் நமக்குப் பொருத்தமான இடம் பார்த்துக் கொள்வதுதான் நமக்கு அழகு. //

        இப்போது நிலைமைகள் எப்படியோ தெரியாது. அந்நாட்களில் ஈழத்தமிழர்கள் என்பதாலேயே வீடு வாடகைக்கு கொடுக்க நிறையப்பேர் தயங்கினார்கள். 

        • ரதி, அந்நாளில் மட்டுமல்ல, இப்போதும் ஈழத்தமிழர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் வீடு வாடகைக்கு கிடைக்காது, அதுவும் பார்ப்பனர்களிடத்தில் கிடைக்கவே கிடைக்காது. 

          மற்ற சாதியினர் ஈழத்தமிழர் விசயத்தில் கொஞ்சம் கரிசனம் காட்டினாலும் இசுலாமியர்களை சேர்ப்பதில்லை…  ஈழத்தமிழர்கள் – இசுலாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் போல அனைத்து ஊடகங்களுக்கும் சித்தரிப்பதால் வந்த வினை.

        • வித்தகன்,

          என் வீட்டில் அசைவம்  சமைக்கக்கூடாது என்பதும் பார்ப்பனர்களுக்குத்தான் வீடு கொடுப்பேன் என்பதும் ஒன்றா?பிந்தயது சமூக ஒடுக்குமுறையாக உங்களுக்கு படவில்லையா?சாதியப்பிடிமானம் அனைத்து சாதியிடத்திலும் இருந்தாலும் அனைத்தும் ஒன்றில்லை. தேவரும் பார்ப்பனரும் சாதி பார்ப்பதால் இருவரும் சமாமாகி விடுவதில்லை.
          உங்கள் பார்வையில் சிக்கலான சமூக பிரச்சனைகளை அதன் பல பரிமாணங்களில் பாராமல் மேலோட்டமான கணிப்பும் அதர்கான தீர்வுமே உள்ளது. இது என்னதான் நல்லென்னத்தின் அடிப்படையில் அமைந்தாலும் எதையுமே தீர்க்கமுடியாத  ஒரு கருத்துமுதல்வாத கண்ணோட்டம். 
          சமூக பிரச்சனைகை தீர்க்க மார்க்சிய கண்ணோட்மே சிறந்த வழி. அதனைப்பற்றிய அறிமுகத்தை நீங்கள் பெறுவது அவசியம். முடிந்தால் வினவு தோழர்களுடன் உரையாடிப்பாருங்கள்

      • //என் வீட்டில் அசைவம் சமைக்கக்கூடாது என்பதும் பார்ப்பனர்களுக்குத்தான் வீடு கொடுப்பேன் என்பதும் ஒன்றா?//

        நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை.

        ஒன்று பழக்க வழக்கம் சம்பந்தப் பட்டது. பிந்தியது வருணாசிரம சிந்தனை.

        முதல் நிலைப்பாடு தனி மனித உரிமை. பிந்தையது சமுக அநீதி.

        ஒன்று பொறுத்துக் கொள்ளப் பட வேண்டியது. இன்னொரு அடியோடு களையப்பட வேண்டியது.

        அதனால்தான் தமிழ் நதியின் குற்றச்சாட்டை நான் பெரிய குற்றமாக எண்ணவில்லை. சாதியைக் காரணம் காட்டி அவருக்கு வீடு கொடுக்காமல் இருந்திருந்தால் அது பெரும் தவறு. என் வீட்டில் அசைவம் செய்பவர்களுக்கு இடமில்லை என்பது தனி மனித உரிமை.

        அவ்வளவுதான்.

        • //ஈழத்தமிழர்கள் – இசுலாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் போல அனைத்து ஊடகங்களுக்கும் சித்தரிப்பதால் வந்த வினை//

          உண்மை. மாற்று ஊடகங்கள்தான் இந்தத் தவறை சரி செய்ய வேண்டும்.

        • //உங்கள் பார்வையில் சிக்கலான சமூக பிரச்சனைகளை அதன் பல பரிமாணங்களில் பாராமல் மேலோட்டமான கணிப்பும் அதர்கான தீர்வுமே உள்ளது. சமூக பிரச்சனைகை தீர்க்க மார்க்சிய கண்ணோட்மே சிறந்த வழி. அதனைப்பற்றிய அறிமுகத்தை நீங்கள் பெறுவது அவசியம். //

          எனக்கும் விருப்பம்தான். இந்த வருடம் வேலைப் பளு அதிகமாக இருந்தாலும் வினவை விடாமல் படித்துத் தான் வருகிறேன்.
          ஒரு சரியான நாளில் அது நடக்கும்.

          ஆனாலும் நான் மேம்போக்கு என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் கருத்து. நான் சொல்ல ஒன்றுமில்லை.

        • வித்தகன்!
          நீங்கள் மேலோட்டமான கணிப்பை கொண்டிருக்கிறீர்கள் என்பதை உதாரணங்களோடு விளக்காமல் விட்டது என்னுடைய தவறு. விரிவாக வேறொரு சந்தர்பத்தில் எழுதுகிறேன். 

          மேலோட்டமானது என்பது ஒரு derogatory கருத்தாக நான் சொல்லவில்லை. நான் உட்பட எல்லோருமே சமூக மாற்றங்களை பற்றி சிந்திக்கும் போது இப்படித்தான் துவங்குகிறோம். அங்கிருந்து துவங்கினாலும் சமூகத்தை முற்போக்கான திசையில் உந்தித்தள்ள  எது உதவுமோ அந்த வழிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் கருத்து.  

          தவறான புரிதலை உங்கள் மனதில் ஏற்படுத்தியமைக்கு மன்னிக்கவும்

        • //தவறான புரிதலை உங்கள் மனதில் ஏற்படுத்தியமைக்கு மன்னிக்கவும்//

          கேள்விக்குறி.

          எனக்கு மன வருத்தம் எதுவும் இல்லை நண்பா.
          தொடர்ந்து பேசுவோம்.

  4. நாங்கள் நாடற்ற அகதிகள் தமிழகத் தமிழன் நாடிருந்தும் அகதி தான்

    இனமானம் உள்ளவர்கள் தமிழகத்தில் ஆட்சியில் வரும் வரை ஈழத்தமிழன் என்ன தமிழகத் தமிழனுக்கும் இதே கதி தான்

    அது தமிழக மாக்களிடம் தான் தங்கியிருக்கின்றது

  5. “இந்தியாவில் திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கும் அடிப்படை வசதி, உயர்கல்வி, வாழ்வாதாரத்திற்கேற்ப வருமானம் தரும் வேலை வாய்ப்புகள் எல்லாமே ஈழத்தமிழ் அகதிகளுக்கு சாத்தியமற்றுப் போகிறதே, ஏன்?”
    காரணம் திபெத்தியர்கள் உண்டவீட்டுக்கு ரெண்டகம் நினைப்பதில்லை…

  6. தமிழ்நாட்டில் இப்போது 115 அகதி முகாம்களில் 73, 241 அகதிகளும் முகாமுக்கு வெளியே காவல்துறை பதிவுடன் 31,382 அகதிகளும் வாழ்ந்து வருவதாக அரசு 2009 ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் கூறுகிறது. அகதிகளாக வந்து உயிர்நீத்தவர்களின் எண்ணிக்கை ஏக்கங்களுடன் ஒரு தலைமுறை குறைந்து விட்டது. இந்தியாவுக்கு அகதிகளாக வருவபர்களுக்கு அகதி அந்தஸ்து மட்டும் கிடையவே கிடையாது. அகதிகளாக வந்து 15 தொடக்கம் 20 வருடங்களாக குற்றவாளிகளைப்போல் முகாம்களில் அடக்கி காவல்துறையின் நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை போன்ற உணர்வோடு வைத்திருக்கிறது தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு. இலங்கை தமிழகதிகள் சொத்து சேர்ப்பதோ அல்லது சொந்த வீடுகள் வாங்குவதோ தடைசெய்யப்பட்டுள்ளது என கலைஞர் கருணாநிதி அவர்கள் கலெக்டர்கள் மற்றும் எஸ். பிக்களின் மாநாட்டில் 2008ம் ஆண்டு யூன் மாதம் 19ம் தேதி அறிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் சொத்துக்களுடன் சேர்த்து உயிர்களும் அழிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அகதிகளின் அன்றான வாழ்க்கையில் சாதரண கனவுகளும் சிதைக்கப்படுகிறது. அகதிகளின் வாழ்க்கைଡ଼’அ8யும் அகதிகளின் வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையும் மனித உரிமை மிரல்களின் உதாரணங்களாகவே உள்ளது. முகாம்களில் வாழும் அகதிகளுக்கான மனிதௌரிமை பாதிப்புகளைப் பேசுவதற்கு எல்லோரும் ஏதோ ஒருவகையில் அச்சத்துடனே கானப்படுகின்றனர் அல்லது ஒட்டுரிமை இல்லாத இவர்களால் தங்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்கிற எண்ணம் முதலாளிய அரசியல்வாதிகளிடம் கானப்படுகிறது. இவர்களுக்கான மனித உரிமைகள் எவைகள் என எதுவும் வரைமுறைப்படுத்தப்படவில்லை.

    பல ஆண்டுகளுக்குப்பிறகு தமிழ்நாட்டு அரசங்காத்தால் அறிவிக்கப்படுகிற இலவசத்திட்டங்களால் இதுவரை நடந்த நடந்துகொண்டிருக்கிற மனிதௌரிமை அவலங்களை மூடிமறைக்க முடியாது.

    80 களுக்குப் பிறகு போராளிகளும் அகதிகளும் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இந்திய அரசின் வழிகாட்டலுக்கு ஒத்துவர போராட்டக்குழுக்கள் மறுத்ததால் போராளிகளும் அகதிகளும் வேறுபாடின்றி காவல்துறையின் நேரடி பார்வையில் இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் விளைவே முகாம்கள். அந்த முகாம்களே நிரந்தரமான தமிழ் அகதிகளின் வாழ்க்கையாகவும் மாறிவிட்டது.
    இலங்கை அரசின் 83 இனக்கலவரம் 90 களில் நடத்திய பாரிய ஆயுத யுத்தம் போன்ற காரணங்களால் தாயகத்தை விட்டு அதிகமான அகதிகள் இந்தியாவுக்கு கடல்மார்க்கமாக களவாகவும் விமானம் மூலமும் வந்தனர். வசதி வாய்ப்புள்ள பெரும்பான்மையான தமிழர்கள் ஐரோப்பிய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். சமூக பொருளாதார பின்தங்கிய நிலையில் உள்ள பெரும்பான்மையான தமிழர்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் கொடுக்ககூடிய தமிழ்நாட்டை விட்டால் வேறு வழியில்லை. வெளிநாடுகளிலிருந்து உதவிபெற்று வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் முகாம்களுக்கு வெளியே காவல் நிலையத்தில் பதிந்து அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். முகாமுக்கும் முகாமுக்கு வெளியேயும் அகதிகளாக வாழ்கின்றவர்கள் காவல்துறையின் நேரடிக்கண்காணிப்பில் உள்ளார்கள் என்பதுதான் மறுக்கப்படாத உண்மை. அதுவும் குறிப்பாக முகாமில் இருக்கின்ற அகதிகளின் நிலை மிகவும் பரிதாபகரமானது.

    அன்றிலிருந்து இன்றுவரை அகதிகள் தமிழ்நாட்டில் குற்றவாளிகளைப்போலவும் வேண்டாத விருந்தாளிகளாகவும் இருக்கின்றார்கள். ராஜீவ் காந்தி கொலையுண்டாவதற்கு முன்னரே காவல் துறையின் கண்கானிப்பில் இருந்த அகதிகள் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட பின்னர் மொத்த அகதிகளும் விடுதலைப்புலிகளாக சித்திரிக்கப்பட்டார்கள் என்பதை விட அனைவரையும் குற்றவாளிகளாக கருதியது காவல்துறை, பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் தமிழக மக்கள் மத்தியில் அதற்காக மறைமுகமாகவும / நேரடியாகவும் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டிருந்தன.
    95ல் உலகத்தமிழர் மாநாடு நடந்தபோது எல்லா முகாம்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டதும் முகாம்களை சுற்றி காவலர்கள் நிறுத்தப்பட்டதும் உலகத்தமிழர் (மா)நாடு வெட்கித்தலை குனிந்தது.
    சிங்கள மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கும் உழைப்புகள் சுரண்டப்படுவதற்கும் தமிழர்கள்தான் காரணம் என்று சிங்கள மக்கள் மத்தியில் இனவாத தீயை இலங்கை அரசு கூறியதை போன்று தமிழ்நாட்டில் குண்டுவெடிப்பு, கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களுக்கு இலங்கை அகதிகள்தான் காரணம் என்று வெளிப்படையாக ஊடகங்களூடாக தெரிவித்தார்கள்.

    முகாம்களையும் முகாம் மக்களும் தமிழ்நாட்டு சேரிவாழ் உழைக்கும் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள், அடிப்படைப்பிரச்சனைகள், வாழ்விடங்களைப்போல் சரிவர கவனிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. முகாம்களுக்கு வந்து பார்த்தால் தெரியும்.

    தற்போது இந்திய/தமிழ்நாட்டு அரசாங்கம் அகதிகள் குடும்பத்தலைவருக்கு மாதம் ரூ 400 உம் அடுத்த 12 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ரூ 280 உம் குழந்தைகள் இருந்தால் முதல் குழந்தைக்கு ரூ 90உம் மற்ற குழந்தைகளுக்கு ரூ70 உம் உதவித்தொகையாக கொடுத்துவருகின்றன.
    முகாமிலிருந்து வெளியில் வேலைக்கு சென்று வர 2009க்கு பிறகுதான் அரசு சட்டவரைமுறை கொண்டுவந்துள்ளது.

    அரசின் உதவியாக பாய் மற்றும் ஆடைகள் வழங்குதல் என வருடத்திற்கு ஒருமுறை கொடுக்கப்படுகிறது. சர்க்கரை 2கிலோ மற்றும் மண்ணெண்ணை 5லீட்டர் ஆகியன ஒரு மாதத்திற்கு கொடுக்கப்படுகின்றன. அரிசி பெரிய நபர் ஒருவருக்கு மாதம் 12கிலோ வீதம் 55பைசாவுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த அரிசி பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லாததால் பலர் வெளியில் விற்றுவிடுகிறார்கள். இட்லி அரசியாகவும், ஏழைக் கூலித்தொழிளாளர்களுக்கும் உள்ளூர் கடை முதலாளிகளே 6 அல்லது 7 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு அதிக இலாபத்துக்கு விற்றுவிடுகின்றனர். அதுமட்டுமல்லாது அருகில் இருக்கின்ற ஏழைக் கூலித்தொழிளாளர்கள், கட்டிட வேலைசெய்கின்ற தொழிலாளர்கள் வந்து இந்த அரிசியை வாங்கிக்கொண்டு போகின்றனர்.

    தொண்டு நிறுவனங்கள் முகாமுக்குள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசியலில் ஈடுபட்ட ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியின் மகன் நடத்துகிற OFERR என்கிற தொண்டு நிறுவனத்தை மட்டும் அரசாங்கம் அனுமதித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த நபர் மட்டுமல்லாமல் காவல்துறை மற்றும் உளவு அமைப்புகளுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழக மற்றும் இந்திய அரசுக்கு அகதிகள் பற்றிய தகவல்களை அளித்துகொண்டிருக்கின்றன. பிற தொண்டு நிறுவனங்கள் அகதிகளுக்கு சேவை(?) செய்வதை இத்தொண்டு நிறுவனம் தடுத்துவைத்துள்ளது.

    முகாம்களுக்குள் இருக்கின்ற முகாம் நலச்சங்கங்கள் முகாம் மக்களுக்கு சார்பாக முடிவெடுத்து அதிகாரிகளை கேட்க முடிவெடுத்தால் அவர்கள் காரணம் கேட்கப்படாமல் கூண்டோடு தனித்தனியாக முகாம் விட்டு முகாம் மாற்றப்படுகிறார்கள். வேண்டாமடா சாமி தொல்லை என்று பலரும் இதற்கு பயந்து வெளியே வேதணையைக் காட்டிக்கொள்ள முடியாமல் மெளனமாக இருக்கின்றார்கள்.

    சந்தேகத்தின் பேரில் பலர் வெளியே வரமுடியாத சிறைச்சாலைகளில் (கேட்டால் சிறப்பு முகாம் என்று சொல்வார்கள். செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ளது) அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பல வருடங்களாக வயதுகளையும் ஆசைகளையும் தொலைத்துக்கொண்டு அதற்குள் வாழ்ந்து(?) தொலைகிறார்கள்.

    முகாமில் வாழும் அகதிகள் பல்வேறு சீரழிவுக் கலாச்சரங்களுக்குள் மாட்டிக்கொண்டுள்ளனர். இளவயது திருமணங்கள், போதைப்பழக்கங்கள், பிறன்மனையை நாடுதல், விபச்சாரம் போன்ற பல்வேறு சீரழிவுகள் மத்தியில் இருக்கிறார்கள். முகாமின் கட்டுமானங்களும் அதைச்சுற்றியுள்ள சுழ்நிலைகளும் இவைகளுக்கு வசதியாக இருக்கின்றன என்பதுதான் உண்மை. குறிப்பாக அகதிபெண்கள் மீது பாரிய அடக்குமுறைகள் நடந்துவருகின்றன. வேலைத்தளங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மெளனமாக வலிகளை தாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். பருவம் வந்து பக்குவமே அடையாமல் இடுப்பில் தன் குழந்தைகளை தூக்கிவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    அகதிகள் அனைவரும் அன்றாடக் கூலிகளாகவே பயன்படுத்தப்படுகிறார்கள். அதுவும் மிகக்குறைந்த கூலியே கொடுக்கப்படுகிறது. கூலியை பிடித்து வைத்துகொண்டு வேலையை வாங்குதல், ஏதாவது எதிர்த்து கேட்டால் உடனே வேலையை விட்டு சம்பளத்தை கொடுக்காமல் நிறுத்துதல், காவல்துறையின் உதவிகொண்டு அடக்குதல் போன்றன சர்வசாதாரணமாக நடக்கின்றன. அகதிகள் குறைந்த கூலிக்கு அமர்த்தி மறைமுக அடிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். முகாம்களுக்கு முன்னால் வந்து நின்று வாகனங்களில் அள்ளிச்செல்கின்ற குழந்தை தொழிளார்களை கேட்பதற்கு நாதியில்லை.

    கல்வி கற்பதற்கு அனுமதிக்கிற அரசு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலைவாய்ப்பளிக்க மறுக்கிறது. படித்த பல இளைஞர்கள் யுவதிகள் வீடுகளுக்கு வர்ணம் பூசுகின்ற வேலைகளுக்கும், சாராய பார்களிலும், கூலித் தொழிலுக்கும் போய்க்கொண்டிருக்கிறார்கள். படித்த இளைஞர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்ற காரணம்காட்டியே தடுக்கப்படுகின்றனர். கூலித்தொழிலும் கூலியைப்போன்று குறைவான நாட்கள் மட்டும்தான் கிடைக்கிறது. பணிப்பாதுகாப்பு, வேலைப்பாதுகாப்பு எதுவும் கிடையாது. இவர்களின் இலட்சியங்கள், ஆசைகள் எல்லாம் கண்ணுக்கு முன்னால் குண்டு வீசாமல் அழிக்கப்படுகின்றன. சில அரசியல்வாதிகளுக்கும் சில குண்டர்களுக்கும் அடியாட்களாகவும் உள்ளார்கள். இவர்கள் தான் தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழ் அகதிகள்.

    ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் கோரி வாழ்பவர்கள் பயண அனுமதிபத்திரம் (୔ரவெல் Document) வாங்கி இந்தியா, இலங்கை ஏன் பல்வேறுநாடுகளுக்கும் போய்வர முடியும். ஆனால் இந்தியாவில் இருக்கின்ற அகதிகள் பக்கத்தில் உள்ள முகாம்களுக்கு போவதென்றாலும் உடனே போய்வர முடியாது. அனுமதியில்லாமல் போய் சிலநேரம் மாட்டிக்கொண்டால் காவல்துறையினரின் கிடுக்கிப்பிடியிலிருந்து தப்பிக்கமுடியாது.

    பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு இலங்கையில் என்ன பிரச்சனை நடக்கிறது என்பதே இன்னும் தெரியாமல் இருக்கின்றார்கள். அகதிகள் பலருக்கே பிரச்சனையைப்பற்றி சரியான தெளிவில்லாமல் திசைதிருப்பபட்டிருக்கிறார்கள். கொத்து கொத்தாக தமிழ்மக்களை கொன்று குவித்தபோது வெளிநாடுகளில் அகதிகள் மத்தியில் போராட்டங்கள் நடத்தியபொழுது தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் யாரும் தெருவில் இறங்கி போராடவில்லை. இது ஒரு கசப்பான உண்மை. அரசியல் கட்சிகள் நடத்திய உண்ணாவிரததின்போது அரசியல் கட்சிகளின் ஆதரவு/வற்புறுத்தல் போன்ற காரணங்களால் ஒரு சில முகாம்களில் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள்.

    அப்படியானால் இந்தியாவில் இருக்கின்ற இலங்கைத் தமிழ் அகதிகள் தள்ளி நின்று வேடிக்கை பார்க்குமளவுக்கு குற்றம் நடந்தது என்ன?

    இந்திய தமிழக உளவுத்துறைக்கு கிடைத்த வெற்றி என்பதா? அல்லது இலங்கை போராட்ட களத்திலும் வேடிக்கைதான் பார்த்தார்கள் அகதிகள் தளத்திலும் வேடிக்கைதான் பார்த்தார்கள் என்பதுதான் உண்மையா? அங்கேயும் பேச விடவில்லை… இங்கேயும் பேச விடவில்லையா?

    யாரோ போராடி நமக்கு சுதந்திரம் வாங்கித்தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு

    யாரையாவது நம்பி நம்மை பாதுகாப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு

    நம்பிக்கை ஏமாற்றங்கள் எல்லாம் உயிர்களுக்குதான்.

    நம்ப நட! நம்பி நடவாதே! என்கிற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது.

    வெளிநாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் நடத்திய போராட்டங்களைக்கூட தமிழ்நாட்டு ஊடகத்துறை எடுத்துசெல்லவில்லை. தமிழ்நாட்டு ஊடகத்துறை நிறுவனங்கள் எதுவும் தமிழனின் கைகளில் இல்லை அதனால் எதுவும் செய்ய முடியவில்லை என்று பத்திரிகையாளர்கள் தங்கள் பங்குக்கு கூறி தப்பிவிடுகிறார்கள். பத்திரிகையாளர்கள் எந்த மட்டத்திலும் இந்த போராட்டத்தை எடுத்து செல்லவில்லை என்பது தனிக்கதை. ஒருபக்கம் பிழைப்புவாதம் ஒருபக்கம் அச்சுறுத்தப்படல். பிரதிகளின் விற்பனையை பெருக்க தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்வது.

    இலங்கை அரசுக்கும் இந்திய மேலாதிக்க அரசுக்கும் பெரிய அளவில் இந்திய ஊடகங்கள் பெரும் உறுதுணையாக இருந்தன/இருக்கின்றன என்பது யாராலும் மறுக்கப்படாத உண்மை.

    வாக்கு அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை பகடைக்காயாக பயன்படுத்துவது ஊரறிந்த விசயம் என்பதை இந்த வன்னிப்பகுதியில் நடந்த உக்கிர போராட்டத்தின்போது தோலுரித்து காட்டிவிட்டார்கள். அதைவிட தமிழக மக்களை குழப்பு குழப்பு என்று மாறி மாறி குழப்பிவிட்டார்கள். தங்களுடைய அரசியல் கூட்டுகளை ஏற்படுத்திக்கொள்ள ஈழத்தமிழர்கள் பிரச்சணை பயன்படுத்தப்பட்டதுதான் பெரிய வேதணையாக இருந்தது.
    இலங்கை தமிழ் மக்களின் உண்மையான தலைவன் நான் நான் என்று போட்டி போடும் அரசியல்வாதிகள் இதே தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்களின் உண்மையான தொழிலாளர் பிரச்சனைகளை பேசத் தயாரில்லை.

    ஐரோப்பிய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழ் அகதிகளால் கிடைக்கிற லாபம் தமிழகத்தில் உள்ள அகதிகளிடம் இல்லையோ என்னவோ?

    இலங்கை தமிழ் அகதிகள் ஒரே மொழியாக இருந்தாலும் அந்நியப்படுத்தப்படுகிறார்கள், சொந்த தாயகத்தின் மண்ணிலிருந்தும் அந்நியப்படுத்தப்படுகிறார்கள்.
    இத்தனை வருடங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக சீரழிக்கப்பட்டு வேண்டாத விருந்தாளிகளாக இருந்த அகதிகள் மீது தீடிரென்று தமிழக அரசு கரிசனம் காட்டுவதன் நோக்கம் என்ன? இலவச தொலைக்காட்சி, சீரமைப்பு என திட்டங்களும், என்ன என்ன திட்டங்கள் செய்யப்பட்டன என்று மக்களுக்கு காட்டும் திட்டங்களை அறிவிப்பதும் ஏன்? புரியவில்லையா? முயற்சி செய்துபாருங்கள் விடை தெரியும்.

    ଭ அகதிகள் இருக்கின்ற நாடுகளில் அகதி அந்தஷ்து சரிவர கையாள வேண்டும். இந்தியா இதுவரை பின்பற்றி வருகிற அகதிகள் கொள்கையை மாற்றி அமைக்கவேண்டும்!

    ଭ அகதிகளின் மனித உரிமைகள் மதிக்கப்பட்டு அவர்களுக்கான கெளரவத்தை அந்ததந்த அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும்.

    ଭ உலக நாடு முழுவதும் உள்ள அகதிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும்!

    ଭ அகதிகள் அவரவர் நாடுகளில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்!

    ଭ அகதிகள் சொந்தநாடுளுக்கு திருப்பிஅனுப்பும் முன் அவர்களுக்கான நாடுகளில் உயிருக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்!

    ଭ அகதிகளாக மாற்றப்பட்ட காரணத்தை அறிந்து சரியான நீண்டகாலத்திட்டத்தை அமைத்து உலக நாடுகளின் அகதிகள் உருவாக்கத்தை எதிர்க்கும் உண்மையான மக்கள் அமைப்புகளுடன் சேர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

  7. அகதி,
    முதலில் உங்களுக்கு என் நன்றிகலந்த வணக்கம். நிறைய தரவுகளுடன் தமிழ்நாட்டில் வாழும் ஈழத்து அகதிகளின் அவலத்தை crystal clear ஆக சொல்லியிருக்கிறீர்கள். என்னை மிகவும் பாதிக்கும் விடயம் இந்த அகதி முகாம் மனிதர்கள் நீங்கள் சொல்வது போல் உயிரற்ற ஜடப்பொருளாய் கூலித்தொழில் முதல் காமக்கழிவின் கழிப்பறைகளாய் exploit செய்யப்படுவது தான். 
    //முகாமில் வாழும் அகதிகள் பல்வேறு சீரழிவுக் கலாச்சரங்களுக்குள் …..// என்று தொடங்கும் பந்தியில் நீங்கள் சொன்னது அகதிகளின் கலாச்சார சீரழிவல்ல போராடும் ஓர் இனத்தின் அத்திவாரத்தையே அசைக்கும், அடுத்த தலைமுறையின் போராட்ட சிந்தனையை மழுங்கடிக்கும் அவலங்கள். இவைதான் அகதிவாழ்வின் எச்சங்களாகிவிடப்போகின்றனவா என்று யோசித்தால் என் இனத்தின் எதிர்காலமே ஏதோ சூனியத்திற்குள் தள்ளப்பட்டது போன்ற உணர்வை தடுக்க முடியவில்லை.
    ஆனால் எப்படி இதிலிருந்து என் உறவுகளை மீட்டெடுப்பது என்பதும் புரியவில்லை என்பதை குற்ற உணர்வோடு ஒப்புக்கொள்கிறேன். 

    வினவு, 
    ஈழத்து அகதிகளின் அவலத்தை உள்ளதை உள்ளபடி வெளிக்கொணர்வதில் பொறுப்புணர்வோடு தமிழக ஊடகங்கள் செய்யவேண்டிய ஓர் தார்மீக கடமையை நீங்கள் உங்கள் தளத்தில் களம் அமைத்து கொடுத்து செய்துகொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என் போன்ற ஈழத்தமிழர்கள் சார்பில் ஒரு கோடி நன்றிகள். 

    • ரதி, உங்கள் பாரட்டைப் பெறுமளவுக்கு நாங்கள் எதுவும் செய்ய இயலவில்லை என்பது அகதியின் செய்தியிலேயே இருக்கிறது. இலங்கையில் அரசால் முகாமில் அடைபட்டிருக்கும் மக்களை மீட்க முடியவில்லை என்றால் கூட அதைப் புரிந்து கொள்ள முடியும். பாசிச அரசின் அடக்குமுறையை எதிர்த்து அங்கே ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் தமிழகத்தில் இத்தனை வருடங்களாக ஈழத்தமிழ் மக்கள் கோழிகளைப் போல கூடையில் அடைபட்டு ஆயுள் கைதிகளாக வாழ்கிறார்கள். இத்தனை கோடி தமிழர்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் குற்ற உணர்ச்சியே மேலிடுகிறது. மற்றவர்களைக்கூட முகாமில்அனுமதிக்கும் உளவுத்துறை எங்களைப் போன்ற அமைப்புகளை மட்டும் நுழையவிடுவதில்லை. வறிய நிலையிலிருக்கும் அகதி மக்களை அரசியல் ரீதியாக திரட்டுவதும் நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. இதற்கு என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்.

      • வினவு தயவு செய்து ஒரு கண்டன கூட்டமாவது போடுங்களேன் ப்ளீஸ்

      • thiruma kuruma வைகோ ஸ்டைல் இல்லாமல் உண்மையா அந்த மக்களுக்கு எதாவது செய்யுங்கள் ப்ளீஸ்

  8. வித்தகன்,

    “நீங்கள் எழுதியிருக்கும் சைவ அசைவ உணவு விவகாரத்திலும் உங்கள் பக்கம் நியாயம் இல்லைஎன்று நினைக்கிறேன். மதியாதார் தலை வாசல் மிதிக்காமல் நமக்குப் பொருத்தமான இடம் பார்த்துக் கொள்வதுதான் நமக்கு அழகு. தன வீட்டுக்குள் என்ன செய்யலாம் கூடாது என்பதை நிறுவிக் கொள்வது அவரவர் உரிமை.”

    என்று எழுதியிருந்தீர்கள். நீங்கள் எனது பின்னூட்டத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். தனிவீடு ( independent house ) என்றால் வேறுவிடயம். அப்படியான இடங்களில் நாங்கள் அதைக்குறித்துப் பேசவும் துணியமாட்டோம். ஏனென்றால், பழக்கமற்ற மாமிச உணவு நாற்றம் ஒருவருக்கு அருவருப்பைக் கொடுக்கிறதென்றால், அதிலொரு நியாயம் இருக்கிறது.

    நான் குறிப்பிட்டது ஏறத்தாழ 150 வீடுகள் இருக்கக்கூடிய தொடர்மாடிக் குடியிருப்பு (high rise apartments ) அதில் பிராமணர்களுக்குத்தான் வீடு கொடுப்பேன் என்று அடம்பிடிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு மனிதர்களை அவர்களது உணவுப்பழக்கத்தின் காரணமாக ஒதுக்கிவைப்பதாகாதா? இது ஓரிடத்தில் மட்டும் நடக்கவில்லை. ஜெயின்ஸ் அபார்ட்மென்ட் காவலாளி சொல்கிறார். “இங்கே பிராமணர்களுக்கு மட்டும்தான் வீடு கொடுப்பார்கள்”என்று. இன்னொருவர் சொல்கிறார். “நான் பிராமணன் இல்லை. ஆனால்…. அக்கம்பக்கத்தில் சில பிராமணக் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் கண்டிப்பாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். பிராமணரல்லாதவர்களுக்கு வீடு கொடுக்கக்கூடாதென்று”இதை என்னவென்று சொல்வீர்கள்? இது இன்னொருவரின் தனிமனித வெளியில் பிரவேசிப்பது இல்லையா?

    ‘இம்மென்றால் வனவாசம் அம்மென்றால் சிறைவாசம்’என்பது இந்தக் கட்டுரையின் பொருட்டு மட்டும் சொல்லப்பட்டதில்லை. நினைப்பதையெல்லாம் இங்கே பேசக்கூடிய, எழுதக்கூடிய சுதந்திரம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். மீறி எழுதினால் ஆட்டோ வரும் இல்லை பிடித்துப்போக காவற்துறையிலிருந்து வருவார்களென்பதை மனதில் வைத்தே அப்படிச் சொன்னேன். அதிலும் அகதிகளுக்கென்று தனியான சட்டங்கள் உண்டு. அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் இரண்டாந்தரக் குடிமக்களே. அதை நீங்கள் அனுபவித்திருக்கச் சாத்தியமில்லை.

    • //அகதிகளுக்கென்று தனியான சட்டங்கள் உண்டு. அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் இரண்டாந்தரக் குடிமக்களே. அதை நீங்கள் அனுபவித்திருக்கச் சாத்தியமில்லை.//

      அனுபவித்ததில்லைதான். ஆனால் பிறரின் வலியை உணர்ந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்சினை அகதிகள் சார்ந்தது அல்ல என்பதால்தான் அதற்கும் இதற்கும் முடிச்சிட வேண்டாம் என்று நினைக்கிறேன். நான் வீடு தேடும் காலத்திலும் இதே பிரச்சினையை சந்தித்திருக்கிறேன். எனவே அனுபவிக்காமல் பேசுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.

      நான் ஒரு வேளை அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு வைத்திருக்கும் பிராமணர் எனில் என் வீட்டை சைவ உணவு சமைப்பவர்களுக்கே வாடகைக்குத் தருவேன் என்று முடிவு எடுப்பது என் தனி உரிமை. ஆனால் பிராமணர் அல்லாதவருக்கு தரமாட்டேன் என்று சொல்வது பெரும் குற்றம் . சமையல் கட்டுப்பாடை என் வீடு வாடகைக்கு வேண்டுமென்பவர்கள் பொறுத்துக் கொண்டுதான் குடிவர வேண்டும். (நான் முஸ்லிமாக இருந்தால் பன்றிக் கறி சமைக்க விட மாட்டேன்) ஆனால் நான் உங்களிடம் சாதிப் பேச்சு பேசினால் என் மேல் நீங்கள் கண்டிப்பாக வழக்குத் தொடர வேண்டும்.

  9. அண்மையில் முகாமுக்கு வெளியில் தங்கியிருக்கிற ஈழத்தவர்கள் சிலரின் வீடுகளுக்கு காவல்துறை வந்து, “நீங்கள் சொந்தமாக வாகனம், வீடு எதுவும் வைத்திருக்கிறீர்களா? வைத்திருந்தால் அது சட்டப்படி குற்றம்”என்று விசாரணை நடத்திவிட்டுச் சென்றிருக்கிறது. ஆக, ஈழத்தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஏதிலிகளாக இருக்கவேண்டுமென்பதே அதிகார வர்க்கத்தின் ஆசை போலும்.

  10. தோழர் அகதி எழுதியுள்ள அகதிகள் நிலைமையை படித்ததும் மனம் பதறுகிறது. சில தகவல்களை நண்பர்கள், முதலாளித்துவ பத்திரிகைகள் மூலம் படித்துள்ளேன் என்றாலும் தோழர் அகதியின் பின்னூட்டம் இந்த அரசின் கோரமான அடக்குமுறைகள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்து விட்டது.

    தோழர் அகதியின் பின்னூட்டத்தையே ஒரு தனி பதிவாகவோ அல்லது சிறு வெளியீடாகவோ வெளியிட்டு தமிழகம் முழுக்க செயல்படும் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளின் மூலமாக பிரசாரம் செய்யலாம். அது ஒரு அரசியல் விளைவை மக்களிடம் கொண்டு செல்லும். தமிழினவாத ஒட்டுப்பொரிக்கி கும்பல்களான வைகோ,பழநெடுமாறன், திருமா, கருணாநிதி, ராமதாஸ் போன்ற கையாலாகாதவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த உதவும். வினவு இதை உடனடியாக செய்தால் நல்லது.

  11. எதையோ தேடிப்போக இது என் கண்களில் இடறியது. ஈழ, திபெத்திய அகதிமுகாம்களின் படங்களில் தெரியும் வேறுபாடுகளையும் தவறவிடாமல் பார்க்கவும். 

    http://keetru.com/vizhippunarvu/sep06/students

  12. திபெத்தியர்கள் ராஜீவையோ .. இந்தியாவையோ எதற்கும் பழிப்பதில்லை…
    ராஜீவை கொல்லுவீங்க..பிறகு அவனோட பொண்டாட்டி ஆட்சியிலே திபெத்தியர்களுக்கு கட்டி கொடுக்கும் வீடு மாதிரி உங்களுக்கும் வேணும் என்று உரிமையோடு கேட்பீர்கள் .. புலிக்கு பந்தம் பிடிப்பவர்களுக்கு தான் இப்போ எல்லாம் எரியும்…..

  13. boss en Amma na 1990 oru agathi mugamuku ponnaga inum varalla விழுப்புரம் மாவட்டம் புத்து பட்டில தான் இருக்கனு கேள்வி பட்ட pls ungaluku thrincha yarum eruntha avnga Numper sent pana mudiuma

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க