privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்தி.மு.கதி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?

தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?

-


vote-012எதோ ஒரு பெந்தகோஸ்தே சுவரொட்டி! உற்றுப் பார்த்தால் சுவிஷேகராக நம்ம குமரி முத்து. அதாங்க ஒன்றறைப் பார்வையுடன் WinAmp தீம் மீயுசிக் போல சிரிப்பாரே, மறந்துவிட்டீர்களா? தி.மு.கவின் பிரச்சார பேச்சாளராகவும் குமுரி முத்துவை அறிந்திருக்கிறேன். தகவல் பிழை என்றால் லக்கிலுக் திருத்துவார். அவர் வேறு எதையும் தி.மு.கவில் திருத்த முடியாது என்பது வேறு விசயம்.

சினிமாவில் பிரபலமாகி சுவிஷேகர்களாக ஏவி.எம்.ராஜன், தீபா, நக்மா இன்னும் நமக்கு தெரியாமல் பலர் இருக்கலாம். சினிமா உலகிலிருந்து கர்த்தரின் ராஜ்ஜியத்திற்கு அவர்கள் இடம்பெயர்வது ஒரு சுவாரசியமான ஆய்வுக்குரியது. அதை விடுத்தால் சினிமா பிரபலங்கள் சந்தை ஓய்ந்ததும் இப்போது தொலைக்காட்சிக்கு ஒதுங்குகிறார்கள். முன்பு அரசியலுக்கும் ஒதுங்கினார்கள்.

சென்ற தேர்தலில் சிம்ரன், கோவை சரளா, முரளி, செந்தில் என்று அ.தி.மு.க களை கட்டியபோது தியேட்டரில் சினிமா, பத்திரிகையில் சினிமா, தொலைக்காட்சியில் சினிமா, இப்போது அரசியல் கூட்டத்திலுமா என்று சிலர் அதிர்ந்திருக்கலாம். பலரும் இரசித்திருப்பார்கள் – அதிலும் சிம்ரன் ஸ்டைலாக தமிலில் இரட்டை லீஃப்புக்கு ஓட்டு கேட்டது நாகப்பட்டினம் சுனாமி காட்சிகளை விட தமிழ் மக்களிடம் பசுமையாய் பதிந்திருக்கும்!

இருந்தாலும் தி.மு.கவில் இருக்கும் சினிமா பிரபலங்களை, நெப்போலியன், சந்திரசேகர் போன்றவர்களை அ.தி.மு.க போலவே மதிப்பிட முடியாது. அவர்களிடம் கொஞ்சமாவது திராவிட பூண்டு வாசனை அடிக்கும். குமரி முத்துவும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். தீப்பொறி அ.தி.மு.கவுக்கு கட்சி மாறியது ஒரு ரகமென்றாலும் குமரி முத்து இப்படி ‘பகுத்தறிவு’ இயக்கத்திலிருந்து சம்மர்சால்ட் அடித்து அய்யோ பாவம் பெந்தகோஸ்தே அழுகைக்கு எப்படி போனார்?

யோசித்துப் பார்க்கையில் குஷ்பு இருக்குமிடத்தில் குமரிமுத்துவுக்கு என்ன வேலையிருந்திருக்கும்? சாமானியர் குமரி முத்துவின் கட்சியாய் இருந்த தி.மு.க இப்போது சீமான்கள்-சீமாட்டிகளின் கட்சியாக நிலைபெற்றுவிட்டதுதான் காரணமோ?
___________________________________________________________

குஷ்பு தி.மு.கவில் சேர்வது உறுதியானதும் அறிவாலயம் அல்லோகலப்பட்டது. தி.மு.கவின் உயர்மட்டக்குழு சந்திக்கும் முக்கியமான இடம் காமராக்களின் மின்னும் புனித ஒளி பட்டுத்தெறிப்பதற்கு ஏற்ப பயபக்தியுடன் தயார் செய்யப்பட்டது. எல்லா அமைச்சர்களும், பகுதித் தளபதிகளும் வெள்ளை வெளேர் உடைகளுடன் கடமையுணர்வோடு ஆஜர்.

நெற்றிப் பொட்டு, மனைவிமார்களின் சுமங்கலிப் பொட்டு, தாலி, பட்டுச்சேலை சகிதம் அம்மா அக்மார்க் தமிழ்பெண்ணாக வருகிறார். அய்யாவுக்கும், தளபதிக்கும் சால்வை போர்த்துகிறார். தளபதி தி.மு.க உறுப்பினர் படிவத்தை நிரப்பி அம்மையாரின் கையெழுத்தை கோருகிறார். அம்மா எழுத்து கோலுக்காக நிமிர்ந்த போது தளபதி தனது எழுத்தாணியையே தருகிறார். உறுப்பினர் கட்டணத்திற்கான தொகையையும் தளபதியே சட்டைப் பையிலிருந்து எடுத்து தருகிறார். அன்பழகன், துரை.முருகன், ஸ்டாலின், கருணாநிதிக்கு அருகே அம்மாவும் உயர்மட்டக்குழு ஆலோசகர் போல அமர்ந்திருக்க ஒளிப்படக் கருவியின் மின்னல்கள் வெட்ட, ஊடகங்களில் செய்திகள் இடியாய் ஒலிக்கின்றன.

தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?
____________________________________________

குஷ்புவின் திருமணத்திற்கு முந்தைய பாதுகாப்பான உறவு, தமிழச்சிகளின் கற்பு, பா.ம.க, வி.சிக்களின் எதிர்ப்பு, 23 வழக்குகள், உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லாம் எல்லாரும் அறிந்திருப்பீர்கள். அந்தியூர் விஜயாவை விட குஷ்புவின் ‘தியாகம்’ ததும்பும் போராட்டம் தமிழ் மனங்களுக்கு முக்கியமானதில்லையா? இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை குஷ்புவும் இழக்கத் தயாரில்லை.

அரசியலென்றால் சாக்கடை என்ற ஆனந்த விகடனது நடுத்தர வர்க்க சலம்பல்கள் மேல்தட்டுக்கு பொருந்தாது. தங்களது தொழிலுக்கு பாதுகாப்பாகவோ, தொழிலை விரிவுபடுத்தவோ, அம்பானி, மல்லையா, இராமசாமி, அமிதப், வினோத் கன்னா, சஞ்சய் தத், ஹேமமாலினி போன்ற முதலாளிகள், நட்சத்திரங்களெல்லாம் எம்.பிக்களாகவோ இல்லை அரசியல் கட்சிகளின் லாபி பிரச்சார்களாகவோ பவனி வரும்போது, கோவில் கட்டப்பட்ட நாட்டில் இலட்சகணக்கான இரசிகர்களைக் கொண்ட குஷ்பு, சொந்தப்படம் எடுக்கும் வண்ணம் ஆளாகிவிட்டவர், இல்லத்தரசிகளை ஜாக்பாக்ட் அடிக்க வைத்தவர் இந்த பொன்னாண தருணத்தை இழப்பாரா என்ன?

இந்தியா டுடே பத்திரிகை திருமணத்துக்கு முந்தைய பாதுகாப்பான உறவு குறித்து, குஷ்புவை விருந்தினர் பக்கமாக எழுதச் சொன்னதற்கு என்ன காரணம்? இந்தியா டுடே கடந்த இருபதாண்டுகளில் வளர்ந்துவிட்ட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளை அப்பட்டமான பிரச்சாரமாக, வாய்ப்புகளாக, அறிமுகங்களாக வாரம் தோறும் பளபளப்பு தாளில் வடிக்கின்ற பத்திரிகை. உலகமயமாக்கத்தால் ஆதாயம் அடைந்த பிரிவினருக்கு இந்தியாவின் சமூக அமைப்பு எண்ணிறந்த வாய்ப்புளை உருவாக்கி கொடுத்திருப்பதை பறைசாற்றுவதே அதன் நோக்கம். அப்படியே அதைவைத்து நுகர்வு கலாச்சாரத்தை விற்பனை செய்யும் முதலாளிகளின் விளம்பரங்களை வைத்து கல்லாவும் கட்டும்.

இந்த திட்டத்திற்கு உட்பட்டே செக்ஸ் சர்வேக்களும் விதவிதமான ஆணுறை விளம்பரங்களுக்கிடையே கொட்டப்படுகின்றன. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வின் பின்னே ஆணுறைகளில் விற்பனையும் இருக்கிறது, அதை சற்றே பயத்துடன் அணுகும் பெண் மனங்களும் இருக்கிறது. விற்பனைக்காக வாடிக்கையாளரின் மனங்களைத் தயார் செய்யும் பணிதான் இந்தியா டுடேயின் ஊடக தந்திரம். அப்படித்தான் அங்கே குஷ்பு வருகிறார்.

குஷ்புவே திருமணத்திற்கு முந்தைய உறவை பாதுகாப்பாக பின்பற்ற சொல்லிவிட்டார் என்றால் அது ஆணுறைகளின் விற்பனையை தமிழ் சென்டிமெண்ட்டை தாண்டி அதிகரித்து விடதா என்ன? இந்தப் பிரச்சினையில் சீமாட்டிகளுக்கே உரிய முறுக்கு குஷ்புவிடம் வெளிப்பட்டாலும் அதை வைத்து தான் ஒரு முன்னுதாரணமான ஆளுமையாக முன்னிறுத்தப்படுவோம் என்பதும் அவருக்கு சற்று தாமதமாக கூட தெரியாமலா போயிருக்கும்? சில தற்செயலான விசயங்களுக்கு பின்னே திட்டமிட்ட உத்தி அவசியமாக தோன்றலாம் என்பது அரசியலில் சகஜம்.

தமிழ் கற்புக்கரசர்களின் கூச்சலைத் தவிர்த்து தமிழகம் ஒன்றும் அதனால் அதிர்ந்துவிடவில்லை. குஷ்புவின் தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் இந்த விளம்பரத்தை வைத்து சூடு பிடித்தன. ராதிகா போல குஷ்புவும் தமிழ் இல்லத்தரசிகளின் நேசத்திற்குரிய நட்சத்திரமாக நிலைபெற்றார். தொழிலிலும் ராதிகா அளவுக்கு இல்லையென்றாலும் ஒரு தொழில் முனைவராக ஆளானார். பொருத்தமாக அவரது இயக்குநர் கணவரும் இப்போது நடிகராக நிலைபெற்றுவிட்டார்.

மேல்தட்டினரது தொழிலும், அதற்கேற்ற பண்பாடு குறித்த சிந்தனைகளும் கட்டுப்பாடாய் சேர்ந்தே இயங்குகின்றன. ஒன்றின் தேவையை பிறிதொன்று நிறைவு செய்கின்றது. குஷ்புவின் கற்பு விவகாரத்தில் இந்த உள் கூட்டணியை பலரும் காணாமல் அதை வெறும் பாலியல் சுதந்திரமாகவோ, இல்லை கற்பாகவோ மட்டும் பார்க்கிறார்கள். ஆனால் குஷ்பு அதைத் தாண்டி அந்த உள்கூட்டணியின் நோக்கில் பார்த்திருக்கிறார் என்பது இப்போது தெரிகிறது.
________________________________________________

ஒரு சீமாட்டி கவிதை எழுதினாலும், கற்பு குறித்து பயமுறுத்தினாலும் அவர்களை மாதர் குல மாணிக்கங்களாய் சம்பளம் வாங்காமால் இலவசமாய் பாராட்ட தமிழகத்தில் சில பின்நவீன பண்டிதர்கள் உண்டு. தங்கள் வாழ்க்கையில் கலகத்தை சொற்களாய் மட்டும் பருகியிருப்பவர்களுக்கு இத்தகைய ஜோடனைகள் ஆசுவாசப்படுத்துகின்றன. ஆனால் இவையெல்லாம் இந்திய முதலாளிகளின் அஜெண்டாவில் விற்பனைத் தந்திரங்களாக மிகச் சாதாரணமாக இருக்கின்றன என்பதோ, அதன் விற்பனையாளர்களாக உச்சநீதிமன்றம், காங்கிரசு, இந்தியாடுடே, தி.மு.க இருக்கின்றன என்பதோ இந்தக் கலக கடுகுமணிகளுக்கு புரிவதில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததுமே தனியாளாய் தான் நடத்திய நெடும் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் பரிசு என்பதாய் குஷ்பு வீரவசனம் பேசிய போது “இனி அரசியல்தான், காங்கிரசில் சேருவேன்” என்பதை பக்காவான டைமிங்கில் நெத்தியடியாய் அடித்தார். கட்சி, அரசியல், பிரபலம், சர்ச்சை எல்லாம் சேர்ந்து டெல்லி, பாராளுமன்ற உறுப்பினர், முடிந்தால் மந்திரி என்பதெல்லாம் அவருக்கு அவ்வ்வளவு கஷ்டமான விசயங்களில்லையே?

ஆனால் திடீரென்று தி.மு.கவை எப்படி தேர்ந்தெடுத்தார்? அல்லது தி.மு.கதான் காங்கிரசாய் மாறியது எப்படி?
__________________________________________________

எப்படிப் பார்த்தாலும் இது சரியான பொருத்தமான முடிவுதான். இதன் சாமர்த்தியம் தி.மு.கவிற்கா, இல்லை குஷ்புவுக்கா இல்லை இருவருக்குமே கூட இருக்கலாம்.

“உலக அளவில் சிந்தித்து உள்ளூர் மணத்துடன் விற்கவேண்டும்” என்று சொல்வார்களே அதற்கு பொருத்தமான அரசியல் எடுத்துக்காட்டாய் குஷ்பு தி.மு.கவில் இணைந்ததை சொல்லலாம்.

காங்கிரசில் இணைவேன் என்று அவர் சொன்னது தமிழகத்திற்கு அவ்வளவு எடுப்பாக பொருந்தாது. ஒருவேளை அவர் இந்தி நட்சத்திரமாகி, டெல்லியில் வாழ்ந்து, கற்பு மேட்டருக்காக அவரை லல்லு, மாயாவதி எதிர்த்திருந்தால் காங்கிரசில் சேருவது பொருத்தமாக இருந்திருக்கும். தமிழகத்தில் காங்கிரசு ஒரு கட்சியென்றே கூற முடியாது. பல ரோட்டரி, லயன் கிளப் கனவான்கள் ஆளுக்கொரு தொழிலையும், ஒரு கோஷ்டியையும் வைத்து கருணாநிதியின் டெல்லி வருமானங்களுக்காக காட்டும் கருணையில், இங்கே ஒரு கட்சியை சத்தியமூர்த்தி பவனை தலைமையிடமாகக் கொண்டு நடத்தி வருகிறார்கள்.

ஆக தமிழக காங்கிரசின் தலைமைகள், கோஷ்டிகள், வாரிசுகள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லான நிலையில் குஷ்பு காங்கிரசை தெரிவு செய்திருந்தால் அவரது எதிர்காலக் கனவுகளுக்கு வாய்ப்பிருந்திருக்காது. இந்த இடத்தில்தான் தி.மு.கவை அவர் தெரிவு செய்தது ஒரு நிர்ப்பந்தம் என்று சிலர் நினைக்கலாம். இல்லை அது சாமர்த்தியமான தெரிவு என்கிறோம்.

காங்கிரசு ஒரு தரகு முதலாளித்துவக் கட்சி அல்லது இந்திய முதலாளிகளின் பிரதிநிதியாய் செயல்படும் கட்சி. பா.ஜ.கவும் அப்படித்தான். என்ன இங்கு தீவிர இந்துத்துவம் என்றால் அங்கே கொஞ்சம் மிதவாக இந்துத்வம். மற்றபடி இருவருமே முதலாளிகளின் விருப்பத்திற்குரிய பிரதிநிதிகள்தான்.

தி.மு.க, அ.தி.மு.க போன்ற பிராந்திய கட்சிகள் இப்படி அகில இந்திய அளவில் செயல்படும் முதலாளிகளின் பிரதிநிதிகளாக செயல்படுமா என்ற கேள்வி இப்போது இல்லை. வள்ளலார், ஆர்.எஸ்.எஸ், ஜெயமோகன் வாசகர் என்று முகம் காட்டும் தரகு முதலாளியான பொள்ளாச்சி மகாலிங்கம் அமெரிக்க கோக்கின் முகவராக இருக்கும் போது, இந்த கட்சிகள்தான் தமிழகத்தில் தமது அடியாட்களாக அரசியல் செய்வார்கள் என்பதை முதலாளிகள் உணர்ந்தே இருக்கிறார்கள். சரத்குமார் அ.தி.மு.கவில் சேர்வதற்கு விஜய் மல்லையா தனி விமானம் அனுப்புவதும், தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா தனியார் தொலைத்தொடர்பு முதலாளிகளின் ஏவலாளாக பணிபுரிவதும் எதைக்காட்டுகிறது?

மேலதிகமாக இந்த இருகட்சிகளின் தலைமையுமே தரகு முதலாளிகளாக உயர்ந்து விட்டனர். தொலைக்காட்சிகள், மதுபான ஆலைகள், தெற்காசிய பணக்காரர்களின் பட்டியல் என்று ஆளாகிவிட்ட நிலையில் இனியும் தி.மு.கவை பாமரர்களின் கட்சி என்று அழைப்பதை அக்மார்க் தி.மு.க தொண்டன் கூட ஒத்துக் கொள்ளமாட்டான். அ.தி.மு.க தொண்டனும் அப்படித்தான். காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளில் கடுகளவு கூட தி.மு.கவிற்கு மாறுபாடில்லை. கனிமொழி தனது கன்னி பாராளுமன்ற பேச்சைக் கூட இந்திய அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தை பாராட்டுவதற்குத்தான் அர்ப்பணித்தார். மதுரை ரவுடி அழகிரி இன்று இந்திய அரசின் அமைச்சராக ஆஸ்திரேலியா, அமெரிக்காவிற்கு பறக்கிறார். சென்னை வரும் பன்னாட்டு முதலாளிகளை முதல் ஆளாய் ஸ்டாலின் வரவேற்கிறார். ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு நிறைவேறுகின்றன.

விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்காக போலிக் கம்யூனிஸ்டுகள் காட்டும் வறண்டு போன அழுகை எதிர்ப்புகள் கூட கருணாநிதியிடமிருந்து வருவதில்லை. தமிழ், தமிழினம், செம்மொழி மாநாடு, புதிய சட்டப்பேரவை வளாகம் என்று லோக்கல் ஃப்ளேவரில் தி.மு.க முதலாளிகளின் பாதந்தாங்கியாக மாறிவிட்டது. ஆனானப்பட்ட மவுண்ரோடு மகாவிஷ்ணு கூட இன்று கருணாநிதியன் புகழ்பாடவேண்டுமென்றால் அது வர்க்க நலனின்றி சாத்தியமில்லை.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம், மக்களுக்கு தடையற்ற மின்தடை என்று இருந்தாலும் ஊடகங்களில் இலவச தொலைக்காட்சிதான் சாதனையாக வலம் வருகிறது. கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளுமே இன்று தி.மு.கவின் கொ.ப.செயலாளர்களாக இருப்பதும் தி.மு.க முதலாளிகளின் கட்சியாக மாறிவிட்டதும் வேறு வேறல்ல.

இன்று தி.மு.கவின் கூட்டங்கள் ஒட்டுமொத்தமாக கான்ட்ராக்ட்டுக்கு விடப்பட்டு நடத்தப்படுகின்றன. தோரணம் கட்டுவதோ, சுவரொட்டி ஒட்டுவதோ, பிளக்ஸ் பேனரை நிறுத்துவதோ இன்று தி.மு.க தொண்டன் செய்யும் வேலையில்லை. மேல்மட்டம் தரகு முதலாளிகளாக உருவெடுத்த மாதிரி அடுத்த தலைமை லோக்கல் முதலாளிகளாக மாறிவிட்டனர். சுயநிதிக் கல்லூரி இல்லாத தி.மு.க தலைவரைப் பார்ப்பது கடினம்.

தி.மு.கவின் கவுன்சிலர் கூட இன்று ஸ்கார்ப்பியோவிற்கு கம்மியாக பவனி வருவதில்லை. வட்டத்தலைவர் பதவி கூட பெரும் செலவழிப்புகளுடன் அடையும் ஒன்றாக மாறிவிட்டது. சலூனில் முரசொலி படித்து விவாதிக்கும் தொண்டனை இன்று வலைவீசித் தேடினாலும் காணமுடியாது. ரியல் எஸ்டேட் தரகனாக வேலை பார்த்துவிட்டு சன் டி.வியோ, கலைஞர் டி.வியோ பார்ப்பவன்தான் இன்று உண்மையான தி.மு.க தொண்டன்.

இப்படி காங்கிரசு போல தி.மு.கவும் மாறிவிட்ட நிலையில் தமிழகத்தில் முதலாளிகளுக்கான தீர்மனகரமான கட்சியாய் ஆதிக்கம் செய்யும் நிலையில் குஷ்பு எடுத்திருக்கும் முடிவை ஒரு நிர்ப்பந்தம் என்று பரிதாபப்படுபவர்கள் அறிவிலிகளே.

அடுத்து இந்தியாடுடேயின் நாயகியான குஷ்புவை தி.மு.கவும் பயன்படுத்தவேண்டியிருக்கிறது என்பது அதன் வர்க்க சாய்வுக்கு அடுத்த எடுத்துக்காட்டாகும். என்ஜியனரிங், மருத்துவம், அமெரிக்கா, பங்குச்சந்தை என்று மாறிவிட்ட மேல்தட்டு நடுத்தரவர்க்கமும், இந்த வாழ்வை எட்ட முடியாவிட்டாலும் இதையே முன்னுதாரணமாக கொண்டு வாழும் நடுத்தர வர்க்கமும் இன்று தமிழகத்தின் முக்கிய பகுதி மக்களாகி விட்டனர். இவர்களது உலகத்தை ஊதிப்பெருக்கும் இந்தியாடுடே போல, தி.மு.கவும் அதைச் செய்யவேண்டியிருக்கிறது.

இந்த வர்க்கத்திற்கு இனியும் தமிழ், தமிழன் என்ற உணர்ச்சிகரமான ஆனால் என்றோ உணர்ச்சியை இழந்துவிட்ட மனோகரா டைப் வசனங்களெல்லாம் பலனில்லை. சொந்த வாழ்க்கை முன்னேற்றத்தை மட்டுமே தாரக மந்திரமாக வைத்து வாழும் மக்களிடையே அப்துல் கலாம் மட்டுமல்ல, குஷ்புவும் தேவைப்படுகிறார். அதனால்தால் குஷ்பு துணிந்து விடுதலை சிறுத்தைகளையும், பா.ம.கவையும் தி.மு.கவில் சேர்ந்த பிறகு கேலிசெய்கிறார்.

தான் ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்கிறேன் என்று அவர் சொல்வதெல்லாம் பிரச்சினையல்ல. அவையெல்லாம் தி.மு.க என்ற உள்ளூர் மணத்தின் பொருட்டு ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறது என்பதே. ஆனால் அவர் கூறிய “பாதுகாப்பான உறவு குறித்து தனது கருத்தை மாற்றவில்லை” என்பதும், “தி.மு.கதான் தனக்கு கருத்துச்சுதந்திரம் கொடுக்கக்கூடிய ஒரு கட்சி” என்பதும்தான் முக்கியமான விடயங்கள். கருணாநிதியும், கனிமொழியும் கூட சங்க கால கள்ள காதல் குறித்த தமிழர்களது மரபை குஷ்புவுக்காக மீள் நினைவு செய்கிறார்கள். குஷ்புவின் கருத்துரிமையும், தி.மு.கவின் புதிய வர்க்க சேர்க்கைகளும் இப்படி பரஸ்பரம் கச்சிதமாகப் பொருந்துகின்றன. காங்கிரசுக் கட்சியின் முதலாளித்துவ தாராளவாத ஜனநாயகம் என்ற பண்பாடு திராவிடக் கட்சியான தி.மு.கவிற்கும் உண்டு என்றால் அது ஒரு பெரிய மாற்றம் இல்லையா?

இப்போது சொல்லுங்கள்!

தி.மு.கவில் குஷ்புவா, தி.மு.கவுக்காக குஷ்புவா?

____________________________