privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசமயபுரம் மாரியாத்தா ! இந்த பிராடு வேலை எதுக்காத்தா?

சமயபுரம் மாரியாத்தா ! இந்த பிராடு வேலை எதுக்காத்தா?

-

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அட்டை வடிவமைப்பு வேலையாக ஒரு சிறு நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். ஒரு பெண் ஊழியரோடு வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு ஒரு இ-மெயில் வந்ததாகக் கூறி பரபரப்பு அடைந்தார். ஏன் என்று கேட்டேன்.

திருப்பதி லார்டு வெங்கட்டின் மனைவி நாச்சியார் கழுத்திலிருந்து தாலி தவறி விழுந்து விட்டதாம். இதனால் சுமங்கலிப் பெண்களின் கணவன்மார்களுக்கு  ஆபத்தாம். பரிகாரத்திற்கு புது தாலி கட்ட வில்லை என்றால் கணவன் தலை சாயுமாம். இந்த மின்னஞ்சலையும் பத்து பேருக்கு அனுப்ப வேண்டுமாம். பிறகு இந்த தகவல் பலரது எஸ்.எம்.எஸ்ஸூக்கும் பரவியதை அறிந்தேன்.

பிறகென்ன? தி.நகரை மொய்த்த மக்கள் குறிப்பாக பெண்கள் நகைக்கடைகளை நோக்கி படையெடுத்து தாலிகளை துய்த்து ஆபத்தை கடந்தார்கள். இப்படி அடிக்கடி நடப்பதை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்.

தங்க நகை வியாபாரிகள் சிலர் வதந்திகளை உருவாக்கும் கம்பெனிகளை தொடர்பு கொண்டு இது போன்ற மிரட்டல்களை உருவாக்கி, பரப்பி, ஆதாயம் அடைகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் புலனாய்வு செய்து அம்பலப்படுத்த வேண்டும் என்று யோசித்தோம். கைகூடவில்லை.

தற்போது தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தியைப் பாருங்கள்!

“ மைத்துனன், மைத்துனிகள் அண்ணிக்கு தாலி கயிறு – புடவை வாங்கிக் கொடுத்து நூதன பரிகாரம்: சமயபுரம் மாரியம்மன் தாலி கீழே விழுந்ததாக பரபரப்பு! ”

இந்தச் செய்தியின் படி சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ள மைத்துனிகளும், கொழுந்தன்களும், அண்ணன்களின்  மனைவிகளான அண்ணிகளுக்கு சிகப்பு புடவை, தாலி கயிறு, ஜாக்கெட் துணி, குங்குமம் ஆகியவற்றை வாங்கி தாம்பூலத் தட்டில் வைத்து கொடுத்து பரிகாரம் செய்கிறார்களாம்.

இந்த தகவல் நாளுக்கு நாள் அருகாமை கிராமங்களுக்கும் பரவி வருகிறதாம். இதனால் தாலி, புடவை, மங்களப் பொருட்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளதாம்.

திருட்டுபதி லார்டு லபக்தாஸூ போன்ற காஸ்ட்லியான சாமியார்களை வைத்து மட்டுமல்ல மாரியம்மன் போன்ற லோ கிளாஸ் சாமிகளையும் வைத்து இந்த வதந்தி மோசடிகள் திட்டமிட்டு பரபரப்பாக பரப்பப்படுகிறது. மிஸ்ஸஸ் வெங்கட்சலபதியை வைத்து தி.நகரின் தங்க நகை கொள்ளை நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தது போல சேலத்தின் சிறுவியாபாரிகள் ஆத்தாவை வைத்து ஆட்டையை போட்டிருக்கிறார்கள்.

காசுக்கேத்த தோசை, விரலுக்கேத்த வீக்கம், வெங்கிக்கு தி.நகர், மாரியாத்தாளுக்கு ஆத்தூர் கிராமங்கள். அர்பன் மார்க்கெட்டுக்கு அய்யா, ரூரல் மார்க்கெட்டுக்கு  ஆத்தா. இதில் பாமர மக்கள் மட்டும் ஏமாறுவதில்லை. மிகப்பெரும் பணக்காரர்களும் இந்த தெய்வக்குத்த மேனியாவுககு தப்புவதில்லை.

கர்நாடக பா.ஜ.க அரசில் அமைச்சர்களாய் அங்கம் வகிக்கும் ரெட்டி சகோதரர்கள் சட்ட விரோதமாக தாது கனிமத்தை 20,000 கோடி ரூபாய்க்கு வெட்டி எடுத்து மோசம் செய்திருக்கிறார்கள் என்று எதிர்கட்சிகள் சவுண்டு விட்டு வருகின்றன. ரெட்டி சகோதரர்களின் பெட்டிக்குள் அடங்கியிருக்கும் பா.ஜ. க அரசும், ரெட்டி காருக்களை கைவிட மாட்டோம் என்று அறிவிததிருக்கிறது.

லவுகீக உலகில் உள்ள கட்சிகள், அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட அதிகார பீடங்கள் அனைத்தையும் பெட்டிக்குள் அடக்கியிருந்தாலும், ஆன்மீக உலகத்தின் அதிகாரமான ஆண்டவனுக்கும் பவுசு கொடுத்துவிட்டால் பாதுகாப்பாக இருக்கலாம் என்பது ரெட்டிகாருக்களின் அபிப்ராயமாக இருக்கக் கூடும்.அதன் படி தமிழ்நாட்டின் தென்காசி நகரத்திலிருககும் மௌனசாமி மடத்தில் பெரும் யாகம் நடைபெற்று முடிந்திருக்கிறது.

இந்த யாகத்தில் ரெட்டியின் மனைவி கலந்து கொள்வதற்காக பெல்லாரியிலிருந்து தனி விமானத்தின் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தென்காசி போவதாகத் திட்டம். காலநிலை காரணமாக பறக்க முடியவில்லை என்பதால் யாகத்திற்கு செல்ல முடியாமல் பின்னர் கர்நாடகம் திரும்பினாராம்.

புரட்சித் தலைவி ஜெயலலிதா எதில் புரட்சி செய்தாரோ இல்லையோ யாகங்கள் நடத்துவதில் மட்டும் மாபெரும் புர்ரட்சி செய்தவர். மிளகாய் யாகம், கஜமுக யாகம், என்று அடிக்கடி செய்து பலன்களை ஸ்விஸ் வங்கியில் சேமித்து வருகிறார். புதுடெல்லியில் இருக்கும் தலைவர்கள் பலர் சாமியார்களின் காலில் விழுந்து தமது அரசியல் வினைகளுக்கு அங்கீகாரம் தேடுகின்றனர். கதவைத்திற புகழ் நித்தியானந்தா கூட இப்போது தினசரி நெருப்பு தியானம் செய்கிறாராம். உடலில் உள்ள காம நெருப்பை பேலன்ஸ் செய்வதற்கு இந்த மண்ணெண்ணெய் ஊற்றிய நெருப்பு. நெருப்பை நெருப்பால் அணைப்பது என்பது இதுதான் போலும். அந்த மண்ணெண்ணெய் கூட ரேசன் கடைகளில் ஏழை மக்கள் வாங்கும் ஒதுக்கீட்டிலிருந்து சுடப்பட்டிருக்கிறது.

இப்படி இந்தியாவின் சுவாசமே மூடநம்பிக்கைகளின் வழியாக இயங்கிக் கொண்டிருப்பதால் முதலாளிகள், வியாபாரிகள் அதை அறுவடை செய்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் அட்சயத் திரியை என்றால் யாருக்குத் தெரியும்?

எனவே எதிர்காலத்தில் கடவுள் மாம்ஸ்களை வைத்து என்னென்ன வதந்திகள் உருவாக்கப்பட்டு என்னென்ன பொருட்கள் திடீரென்று விற்கப்படும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த புனித பால் என்ற ஆக்டோபசின் உதவியால் கண்டு பிடித்திருக்கிறோம்.

1.    அமர்நாத்தில் சிலமாதம் மட்டும் புடைக்கும் ஜஸ் குச்சி லிங்கத்திற்கு கட்டப்பட்ட பட்டுத் துணி, ஜஸ் உருகிய போது கீழே விழுந்து விட்டதாம். இது அம்மாக்களுக்கு ஆகாதாம். இதனால் மகன்களும், மகள்களும், அப்பாக்களும் பனாரஸ் பட்டுச்சேலை எடுத்து கொடுத்து பரிகாரம் செய்ய வேண்டுமாம்.

2.    காசி விஸ்வநாதருக்கு போடப்பட்டிருந்த உருத்திராட்ச மாலையிலிருந்து ஒரு முத்து கீழே விழுந்து உடைந்து விட்டதாம். இது வழுக்கைத்தலை உடைய ஆண்களுக்கு ஆபத்து ஏற்படுத்துமாம். முடி பிளான்டிங் ஆபரேஷன் செய்தால்தான் தப்பிக்க முடியுமாம்.

3.    வங்கத்து காளிக்கு போடப்பட்டிருந்த குங்குமப் பொட்டில் சாயம் வெளுத்துவிட்டதாம். இதனால் சகோதரிகளுக்கு திருமணம் நடக்காதாம். பரிகாரமாய் லாக்மே மேக்கப் கிட் வாங்கி குடும்பத்தினர் கொடுக்க வேண்டுமாம்.

4.    பூரி ஜெகன்னாதரின் தேர் இந்த வருசம், ஒரு பள்ளத்தில் இறங்கி ஜாம் ஆகி நின்று விட்டதாம். இதனால் பதினைந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படுமாம். பரிகாரமாய் குழந்தைகளுக்கு நீட் ஃபார் ஸ்பீட் வீடியோ கேம் – லேட்டஸ்ட் எடிசன் வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.

5.    திருப்பதி ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட லட்டுவில் உள்ள முந்திரிப் பருப்பை எலி ஒன்று கடித்து விட்டதால் சாமி கடும் கோபத்தில் இருக்கிறாராம். இதற்காக இருநூறு நாட்களுக்கு  முந்திரிப் பருப்பை சமையலில் சேர்க்காவிட்டால் இல்லத்தரசிகளுக்கு ஆபத்தாம்.

6.    மயிலை கபாலியின் வஸ்திரத்தில் பல்லி கக்கா போய்விட்டதாம். பரிகாரமாக மயிலாப்பூர் குளக்கரையில் கும்பல் கும்பலாக நிற்கும் புரோகிதப் பெருமக்களுக்கு ராம்ராஜ் காட்டனில் ஒரு வேட்டியும், மினிஸ்டர் காட்டனில் ஒரு சட்டையும் எடுத்துக் கொடுக்க வேண்டுமாம்.

7.    திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் செய்த போது அது தயிராகிவிட்டதாம். இதனால் தாய்மார்களுக்கு புத்திர பாக்கியம் ஆபத்தாம். புத்திர தோஷ பரிகாரமாக இன்னும் ஒரு மண்டலத்துக்கு தாய்மார்கள் பாலில் உறை ஊற்றி தயிராக்கக் கூடாதாம். டப்பா தயிர் வாங்கி பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்ய வேண்டுமாம், அதிலும் நெல்லே தயிர் என்றால் ரொம்ப விசேசேமாம்

8.    ஸ்ரீரங்கத்தில் ஹாயாக படுத்திருக்கும் ரெங்கநாதன் வேலை வெட்டி இல்லாமல் தினசரி அக்கார அடிசலையும், வெண் பொங்கலையும் வெளுத்துக் கட்டியதில் கடும் கேஸ்டிரிக் பிராபளமாம். இறைக்கு வந்த இந்த பிரச்சனையால் பக்தர்களின் இரைப்பைக்கு ஆகாதாம், பரிகாரமாய் ரங்கனுக்கு ஜெலுசில் லிக்விட் தினசரி ஒரு பாட்டில் ஒரு மண்டலத்துக்கு படைக்கவேண்டுமாம்.

9.    பெற்றோருடன் கோபித்துக் கொண்டு பழனியில் நிலை கொண்ட முருகனின் கோவணம் திடீரென விழுந்து விட்டதாம். திருமணமாகாத இளைஞர்களுக்கு இதனால் ஆண்மைக்குறைவு பிரச்சினை வருமாம். தப்பிக்க வேண்டுமென்றால், சிவராஜ் சித்தவைத்திய சாலைக்கு செல்வதுடன், ஜாக்கி உள்ளாடைகளை ஐந்து வருடத்திற்கு பயன்படுத்த வேண்டுமாம்.

10.    குருவாயரப்பனுக்கு போடப்பட்ட வைரமாலை திடீரென கீழே விழுந்து விட்டதால், ஓராண்டில் நடக்கும் திருமணங்களுக்கு பிரச்சினை ஏற்படுமாம். ஜாய் ஆலுக்காசில் வைர மாலை வாங்கி மூகூர்த்தமன்று போட்டுக் கொண்டால் ஆபத்தை கடந்து விடலாம்.

இதுக்கு மேல முடியல. கஷ்டமாக இருக்கிறது. மிச்சத்தை நீங்களே சொல்லுங்கள்! சிறந்தவைகளுக்கு பாண்டி பஜார் வியாபாரிகள் நிச்சயம் பரிசளிப்பார்கள்.

_______________________________________________