privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!

நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!

-

டந்த வாரம் வெள்ளிக்கிழமை விசவாயு கசிவினால் 250க்கும் மேற்பட்ட ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது நீங்கள் அறிந்ததே. இதனால் மூன்று நாட்கள் ஆலையில் உற்பத்தி நடைபெறவில்லை. பின்னர் நிர்வாகம் எதுவுமே நடக்காகதது போல உற்பத்தியை ஆரம்பித்தது. ஊடகங்களிலும் இந்தப் பிரச்சினை குறித்த முழுமையான தகவல் வெளிவரவில்லை.

ஆனால் தொழிலாளர்கள் இந்த அநீதியைக் கண்டு குமுறியவாறே இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவுப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்த்தை ஆரம்பித்தனர். வெள்ளிக் கிழமை முழுவதும் நீடித்த இந்த வேலை நிறுத்தம் மூலம் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் காட்டுதர்பாரை வெளியுலகிற்கு அறிவித்திருக்கின்றனர். தன்னெழுச்சியான இந்த போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள்:

விசவாயு விபத்தின் உண்மையான காரணங்களையும், இனி அந்த விபத்து நடைபெறா வண்ணம் உத்திரவாதத்தையும் ஃபாக்ஸ்கான் நிர்வாகம் அறிவிக்க வேண்டும். மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்த தொழிலாளர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியில் ஈடுபடாமல் இருந்த அனைத்து தொழிலாளிகளுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் விபத்துக்களிலிருந்து நிவாரணம் பெறும் வண்ணம் காப்பீடு ஏற்பாடு செய்யவேண்டும். தொழிலாளர்களை அடக்குமுறை மூலம் எதிர்கொள்ளும் சில மேலாளர்களை நீக்க வேண்டும். இவையே அவர்களது கோரிக்கைகள்.

இதில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு என்பதைத் தவிர மற்ற கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்கமறுத்துவிட்டது. முக்கியமாக இந்த விபத்து ஏன் நடந்தது, எதிர்காலத்தில் நடக்கா வண்ணம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் வாயைத் திறக்கவேயில்லை. அதே போல சில அதிகாரிகளை நீக்குவதற்கும் தயாராக இல்லை. எனவே தொழிலாளர்கள் தங்களது நீதிக்கான போராட்டத்தை வேறுவழியின்றி வேலை நிறுத்தமாக ஆரம்பித்தனர்.

இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு இன்று அவர்கள் வேலைக்கு திரும்பியிருக்கின்றனர். இனி சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் தொழிலாளர்  ஆணையர் அலுவலகத்தின் முன் வரும் ஒன்பதாம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக சில தொழிலாளிகள் தெரிவித்தனர். ஃபாக்ஸ்கானில் இருக்கும் நிர்வாகத்தின் அடியாளாய் தி.மு.க தொழிற்சங்கம் வழக்கம் போல பஞ்சாயத்து செய்து தொழிலாளர்களை தணிக்க முயன்றது.

ஒரு சரியான தொழிற்சங்கம் இல்லாமல், தன்னெழுச்சியாக போராடும் தொழிலாளிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைமையின்றி இருப்பதனால் இது ஒரு தேக்க நிலையில் இருக்கிறது. ஆனால் ஆடி மாத விரதம் மூலமாகத்தான் மயங்கினர் என்று கூசாமல் பொய்யுரைத்த நிர்வாகத்தின் அலட்சயத்தினை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. விபத்து குறித்து ஒரு முடிவுக்கு வராமல் அவர்கள் பணிந்து போவதற்கும் தயாராக இல்லை.

தொழிலாளர்களிடையே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிரச்சாரம்!

ஃபாக்ஸ்கான் விபத்து குறித்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமை சுரண்டல் பற்றியும் துண்டறிக்கை மூலம் பு.ஜ.தொ.மு தோழர்கள் விரிவாக பிரச்சாரம் செய்தனர். வினவில் வெளிவந்த கட்டுரையின் முக்கிய அம்சங்களை அச்சடித்து பூந்தமல்லியில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தில் இருக்கும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர்கள் பேருந்தும் பூந்தமல்லி வழியாக இயக்கப்படுகிறது. அந்த பேருந்துகள் நிற்கும் இடத்தில் இந்த துண்டறிக்கை ஆயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்டன. பல தொழிலாளர்கள் ஆதரித்தனர். முக்கியமாக ஹூண்டாய் தொழிலாளர்கள் பு.ஜ.தொ.முவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த்தோடு ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களை எப்போதும் ஆதரிப்போம் என்றும் உற்சாகப்படுத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை அடக்குவதில் மட்டும் மும்மூரமாக இருக்கின்றனர். அத்தகைய அடக்குமுறை இருந்தால் மட்டுமே சுரண்டலை தங்கு தடையின்றி தொடரமுடியும். ஆயினும் இந்த அடிமைத்தனத்தை தொழிலாளிகள் இனி ஏற்கப்போவதில்லை என்பதையே தற்போதைய சூழல் காட்டுகிறது.

________________________________________________________________________