privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்இரயாகரனின் குற்றச்சாட்டு : பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறோம் !!

இரயாகரனின் குற்றச்சாட்டு : பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறோம் !!

-

இலங்கையைச் சேர்ந்த டான் டிவி உரிமையாளர் குகநாதன் என்பவரை கடத்தி, சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்த்தாக சபா.நாவலன் (“இனியொரு” இணைய இதழ்), சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அருள் செழியன் மற்றும் அவரது சகோதரர் அருள் எழிலன் ஆகியோர் மீது இரயாகரன் குற்றம் சாட்டி, தமிழரங்கம் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதனை மீள்பிரசுரம் செய்ததுடன், குகநாதனின் பேட்டியையும் வெளியிட்டு தமிழரங்கத்தின் குற்றச்சாட்டினை லண்டனிலிருந்து இயங்கும் தேசம் நெற் என்ற இணையத் தளம் தனக்கேயுரிய பாணியில் வழிமொழிந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து “இனியொரு” தளத்தில் சபா.நாவலன் தனது மறுப்பினை வெளியிட்டிருந்தார். அருள் செழியன், அருள் எழிலன் ஆகியோரும் இனியொரு தளத்தில் தமது மறுப்பை வெளியிட்டதுடன் இக்குற்றச்சாட்டுகளை அவதூறு என்றும் கூறி மறுத்திருந்தனர். இரயாகரன் இக்கட்டுரைகள் மீது குறுக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கி இன்னொரு கட்டுரையை வெளியிட்டார். பிறகு தேசம் நெற், தமிழரங்கம் தளங்களில் இவை தொடர்பான கட்டுரைகள், பின்னூட்டங்கள், விவாதங்கள் தொடர்ந்தன.

“அருள் எழிலன் வினவு தளத்தில் எழுதுகிறார். சபா.நாவலன் பங்கேற்கும் புதிய திசைகள் அமைப்புடன் இணைந்து ம.க.இ.க ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. எனவே வினவு தளம் மற்றும் ம.க.இ.க இது பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று கோரும் பின்னூட்டங்களும், “இதுவரை ம.க.இ.க கருத்து தெரிவிக்காத மர்மம் என்ன” என்று கேள்வி எழுப்பி மகஇகவின் மீது சேறடிக்கின்ற பின்னூட்டங்களும் தமிழரங்கம் மற்றும் தேசம் நெற் ஆகிய இரு தளங்களிலும் பிரசுரமாகின. இலங்கை புதிய ஜனநாயக கட்சியையும் பின்னூட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை. இத்தகைய பின்னூட்டங்களைப் பிரசுரித்த இரயாகரனோ, அல்லது தேசம் நெற் ஜெயபாலனோ அவை பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவர்களுடைய மவுனம் தற்செயலானதல்ல என்றே கருதுகிறோம்.

இப்பிரச்சினையில் குற்றச்சாட்டை முன்வைக்கும்  இரயாகரன், குற்றம் சாட்டப்படும் நாவலன் மற்றும அருள் எழிலன் ஆகியோர் எம்முடன் தொடர்பில் உள்ளவர்கள். குற்றச்சாட்டோ அருள் எழிலனின் சகோதரர், அருள் செழியனுக்கும் குகநாதனுக்கும் இடையிலான பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டு. இது பற்றி இரயாகரன் ஒரு பதிவு எழுதி, தேசம் நெற் அதனை வழிமொழிந்த மறுகணமே, “ம.க.இ.க என்ற அமைப்பு அது பற்றி முடிவு சொல்லவேண்டும்” என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லது வரம்பு மீறிய ஆணவம் என்று கருதுகிறோம்.

“நானே ராஜா நானே மந்திரி” என்ற வகையிலான அமைப்பாக ம.க.இ.க இருக்கும் பட்சத்தில் ஒரு வேளை இக்கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக நாங்கள் ஜனநாயக பூர்வமாக இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கிறோம். மேலும், ஜனநாயக பூர்வமான பரிசீலனையோ ஆய்வோ தேவைப்படாத, அறுதி உண்மையாகவும் இரயாகரனின் “தீர்ப்பை” நாங்கள் கருதவில்லை.

இப்பிரச்சினையில் குகநாதனின் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கூறும் இரயாகரனும் சரி, அதனை வழிமொழிகின்ற பெரும்பான்மையான பின்னூட்டக்காரர்களும் சரி, அனைவருமே “குகநாதன் என்பவர் ஒரு பிழைப்புவாதி, அன்று புலிகள் முதல் இன்று ராஜபக்சே, டக்ளஸ் வரை யாருடனும் தனது ஆதாயத்துக்காக கூட்டு சேரக்கூடிய ஒரு நேர்மையற்ற மனிதர், பல பேரை நம்ப வைத்து ஏமாற்றிய மோசடிப்பேர்வழி” என்பதை வெவ்வேறு அளவுகளில் ஒப்புக் கொள்கிறார்கள். “நான் யாரையும் ஏமாற்றியதில்லை” என்று குகநாதனே கூட சொல்லிக்கொள்ளவில்லை. “அவ்வாறு மற்றவர்களை ஏமாற்ற வேண்டிய சூழ்நிலைக்குத தான் தள்ளப்பட்டதை”த் தான் விவரிக்கிறார்.

தங்களாலேயே மோசடிப்பேர்வழி என்று மதிப்பிடப்படும் ஒரு நபர், “சென்னையில் வைத்து தன்னைக் கடத்திப் பணம் பறித்து விட்டதாக” செழியன், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மை இருக்கக் கூடுமோ என்ற ஐயம்கூட இரயாகரனுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. சென்னையில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்படுபவர்கள் ம.க.இ.க மற்றும் வினவு தளத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் என்பது இரயாகரனுக்கு தெரிந்ததுதான். எனினும் இச்சம்பவம் குறித்து எழுதுவதற்கு முன்னால் அவர் எங்களிடம் தொடர்பு கொள்ளவோ, விசாரிக்கவோ இல்லை. இரயாகரன் நீண்ட நாட்களாக எம்முடன் தொடர்பில் உள்ளவர் என்பதால், அவர் இவ்வாறு எங்களிடம் விசாரித்திருக்க கூடும் என்று வாசகர்கள் யாரேனும் தவறாக கருதிக்கொண்டிருந்தால் அதனைத் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை குறிப்பிடுகிறோம்.

எங்களைப் பொருத்தவரை, வினவு தளம் தொடங்கிய பின்னர்தான் எமக்கு சபா.நாவலன் அறிமுகம். புதிய திசைகள் குழுவினருடன் பொது முழக்கங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் – சமீபத்திய நிகழ்வு. அதற்கு முன் மகஇக செயலரின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்திருக்கிறது. புதிய திசைகள் சார்பில் லண்டன் வானொலிப் பேட்டி ஒலிபரப்பானது. ஆபரேசன் கிரீன் ஹன்ட் மற்றும் நேபாளப் புரட்சியில் இந்தியத் தலையீட்டுக்கு எதிராக நாவலன் மற்றும் தோழர்கள் இலண்டனில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

புதிய திசைகள் குழுவினருடன் மகஇக இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்கு தான் முயற்சிப்பதாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என்று இரயாகரன் எழுதியிருக்கிறார். அத்தகைய கருத்து எதையும் நாவலன் எம்மிடம் கூறியதில்லை. இதற்கு மேல் நாவலனுடன் எமக்கு உள்ள தொடர்பு பற்றிய விளக்கங்கள் இங்கே அவசியமற்றவை என்று கருதுகிறோம்.

அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப்பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். தமிழகத்தில் உள்ள பல இளைஞர்களைப் போலவே அவரும் புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை. அவருடன் தீவிர கருத்து வேறுபாடு கொண்ட பத்திரிகையாளர்கள் கூட அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கியதில்லை. அவருடைய சகோதரரான அருள் செழியனுடன் எங்களுக்கு தொடர்பிருந்த்தில்லை.

இக்குற்றச்சாட்டை இரயாகரன் தனது இணையதளத்தில் எழுப்பி, அதனைத் தொடர்ந்து இதில் வினவு, மற்றும் ம.க.இ.க வை தொடர்பு படுத்தும் பின்னூட்டங்கள் வரத் தொடங்குவதற்கு முன்னமேயே, நாவலன், அருள் எழிலன், பிறகு அருள் செழியன் ஆகியோர் எங்களது தோழர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விசயங்கள் குறித்த தமது விளக்கத்தை அளித்தனர். அவர்களது விளக்கங்கள் மற்றும் தமிழரங்கம், தேசம் நெற்றில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை பரிசீலித்ததன் அடிப்படையில், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுளை நாங்கள் நிராகரிக்கிறோம்.

இப்பிரச்சினையில் எது உண்மை என்ற முடிவுக்கு வருவதில், ஆவணங்கள், சாட்சியங்கள், சத்தியப் பிரமாணங்கள் ஆகியவை ஒரு அளவுக்குத்தான் பயன்படுகின்றன. சத்தியம் செய்பவனின் யோக்கியதை என்ன என்பது பற்றிய நமது மதிப்பீடு, அவர்களது வாயிலிருந்து வரும் சொல்லை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக இருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுடைய சமூக செயல்பாடு, நடைமுறை ஆகியவற்றிலிருந்தே இத்தகைய மதிப்பீட்டை நாம் வந்தடைகிறோம். குகநாதன் இந்தப் புறம். நாவலன், அருள் எழிலன் அந்தப்புறம் – இவர்களது கூற்றுகள் நடந்த நிகழ்ச்சி பற்றி இரு வேறு சித்திரங்களை வழங்கும் நிலையில் நாங்கள் எழிலனையும் நாவலனையும் நம்புகிறோம். செழியனுடன் இத்தனை காலம் எங்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததில்லையெனினும், அவர் குறித்த எழிலனின் மதிப்பீட்டை நம்புகிறோம். இது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல.

இரயாகரனும் ஜெயபாலனும் குகநாதனை நம்புகின்றனர். “குகநாதன் தவறான நபராகவே இருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் அவர் கூறுவது உண்மையாக இருக்க முடியாதா?” என்ற கேள்வி எழலாம். அந்த சாத்தியக்கூறை நாங்கள் நிராகரிக்கவில்லை.

அதே நேரத்தில், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் இரயாகரனுடைய கட்டுரை, அவருடைய விசாரணை முறை, விவாத முறை, தீர்ப்பு வழங்கும் முறை, குகநாதனுக்கு அவர் வக்காலத்து வாங்கும் முறை ஆகியவை பற்றியெல்லாம் எங்களுக்கு விமரிசனங்களோ கேள்விகளோ இல்லை என்று கருதிவிடவேண்டாம். இப்பிரச்சினையை பொதுத் தளத்துக்கு அவர் கொண்டு வந்துவிட்டதால், அவை குறித்து அவருடன் தனிப்பட்ட முறையில் பேசவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. அது சரியும் அல்ல.

குகநாதனிடம் கேட்பதற்கும், குகநாதனின் பேட்டியை வெளியிட்ட தேசம் நெற் ஜெயபாலனிடம் கேட்பதற்கும் கூட எங்களிடம் கேள்விகள் உள்ளன.

அத்தகைய கேள்விகளை நாங்கள் இணையத்தில் எழுப்புவதும் விவாதிப்பதும், கொசிப்புக்கும் அரட்டைக்கும் மட்டுமே பயன்படும். குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை ஒருபோதும் பயன்படாது என்று கருதுகிறோம்.

ஆகவே, இத்தகையதொரு பிரச்சினையில் இணையத் தளத்திலேயே குறுக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது, பெயர் தெரியாத நபர்களின் கட்டுரையை வெளியிட்டு, முகவரியை வெளியிட விரும்பாத பின்னூட்டக்காரர்களின் மூலம் சேறடிப்பது என்ற வழிமுறைகளை உண்மையை அறிய விரும்பும் யாரும் ஏற்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.

நாவலன், எழிலன், செழியன் ஆகியோர் மீது இரயாகரன் வைத்திருப்பது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. அதற்கு அவர் நாவலனிடம் கோரியிருப்பது சுயவிமரிசனம். “ஆள் கடத்தல், பணம் பறித்தல், மஃபியா வேலை, மாமா வேலை”  என்று அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சுயவிமரிசனம் எப்படி தீர்வாகும்? இது என்ன வகை மார்க்சிய லெனினிய நடைமுறை என்று எங்களுக்கு விளங்கவில்லை. இரயாகரன் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதே எம் கருத்து.

ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதைப் போல இப்பிரச்சினையில் நாவலன், எழிலன் ஆகியோர் பற்றி நாங்கள் தெரிவித்திருப்பது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல. முழுமையானதொரு விசாரணை இப்பிரச்சினையில் நடந்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை. யாரும் அவ்வாறு கருதவும் இடமில்லை.

நடந்திருக்கும் பிரச்சினையின் அடிப்படை ஒரு பணப்பரிவர்த்தனை விவகாரம். இதில் நியாயம் பேச வருபவர்கள் என்ன நடந்தது என்று இரு தரப்பினரையும் முழுமையாக கேட்கவேண்டும். தீர்ப்பு கூற வருபவர்கள் அந்த தீர்ப்பின் அமலாக்கத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்களும், குற்றம் சாட்டுபவர்களும் விசாரணையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளிக்க வேண்டும்.

எமது தரப்பில் நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோரிடம் இதனைக் கூறிவிட்டோம். குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் சென்னை நகரத்தில் ஒரு பகிரங்க விசாரணைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பகிரங்க விசாரணைக்குத் தயார். தங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் கடமை.

இப்பிரச்சினையில் எந்த விதத்திலும் மகஇக விற்கு தொடர்பில்லை என்ற போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா என்று அறிந்து கொள்வதில் இரயாகரனை விடவும், ஜெயபாலனை விடவும் நாங்கள் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறோம். ஏனென்றால், உங்களது இணையத்தளங்களில் நாங்கள் சேறடிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம்.

குற்றம் சாட்டுகின்ற இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் சென்னைக்கு வரட்டும். அவர்களது நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் மற்றும் நாவலன், செழியன், எழிலன் ஆகியோரின் நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் ஆகியோரின் முன்னிலையில் ஒரு பகிரங்க விசாரணையை ஏற்பாடு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அந்த விசாரணையை நாங்கள் நடத்தவில்லை. வழக்குரைஞர்களோ, நடுநிலையாளர்களோ விசாரணையை நடத்தட்டும். கேள்விகள், பதில்கள், குறுக்கு விசாரணைகள் ஆகிய அனைத்தும் வெளிப்படையாகப் பார்வையாளர் முன்னிலையில் நடக்கட்டும். புனை பெயர்களில் பின்னூட்டம் போட்டவர்கள், மகஇக வின் மீது சேறடித்தவர்கள், தம் கையில் ஆதாரம் இருப்பதாக மார்தட்டுபவர்கள் என யாராக இருந்தாலும் நேரில் வரலாம். தமது குற்றச்சாட்டுகளை கூறலாம். முறையாக விசாரணை நடப்பதை உறுதி செய்து கொள்ள அவை அனைத்தையும் ஒளிப்பதிவும் செய்து கொள்வோம்.

குகநாதன் சட்டப்படி கைது செய்யப்பட்டாரா- கடத்தப்பட்டாரா, தற்போது “கட்டப் பஞ்சாயத்து” என்று கூறும் ஏற்பாட்டுக்கு அவர் அன்று உடன்படக் காரணம் என்ன, எவ்வளவு பணம் கொடுத்தார், யாரிடம் வாங்கிக் கொடுத்தார், இதில் நாவலனின் பாத்திரம் என்ன, குகநாதனுக்கும் செழியனுக்கும் இடையிலான வணிக உறவில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் என்ன, அவற்றில் ஏமாற்றியது யார்-ஏமாந்தது யார், குகநாதன்-புலிகள், குகநாதன்-டக்ளஸ், குகநாதன்-ராஜபக்சே அரசு இவர்களுக்கிடையிலான உறவு என்ன, 2008 நவம்பரில் நாவலனை அவதூறு செய்த தேசம் நெற்றை மறுத்து, நாவலனின் நடத்தைக்கு நற்சான்றிதழ் வழங்கிய இரயாகரன் தற்போது அவரைக் “கிரிமினல்” என்றும் குகநாதனை “சூழ்நிலையின் கைதி” என்றும் மதிப்பிடுவதற்கான பின்புலம் என்ன.. என்பன போன்ற எல்லாக் கேள்விகளுக்கான விடையையும் அனைவர் முன்னிலையிலும் சம்மந்தப் பட்டவர்கள் கூறட்டும்.

இறுதியில் விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம். அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், அவதூறு பரப்பியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை பாதிக்கப் பட்டவர்கள் கூறட்டும்.

விசாரணையின் முடிவில் ஒத்த கருத்து எட்டப்படாமலும் போகலாம். ஆனால் விசாரணையின் ஒளிப்பதிவைப் பார்க்கின்றவர்கள், உண்மை யாரிடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும். இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து நீதிமன்றத்தில் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்பினால், அதற்குத் தேவையான வழக்குரைஞர்களையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம்.

தான் சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகவும், சென்னை வருவதில் தனக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்றும் தேசம் நெற்றில் குகநாதன் கூறியிருக்கிறார். ஒரு வேளை அவருக்கு வேறு வழக்குகளோ சிக்கல்களோ இருந்தாலும் அவற்றை சமாளிக்க வேண்டியது குற்றம் சாட்டியவரது தனிப்பட்ட பொறுப்பு. குகநாதனை அழைத்து வரவேண்டியது, அவரது குற்றச்சாட்டை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கிய இரயாகரனின் பொறுப்பு.

இது போகிறபோக்கில் ஒருவர் மீது மேலோட்டமாகத் தெரிவிக்கப்பட்ட விமரிசனம் அல்ல. அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருக்கும் ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. எனவே, குற்றத்தை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் பொறுப்பு. அந்தப் பொறுப்பிலிருந்து வழுவும் உரிமை அவர்களுக்கு கிடையாது.

“குற்றம் சாட்டப்படுபவன்தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளவேண்டும்” என்பது இந்தியாவில் அமலில் இருந்த பொடா சட்டத்தின் அணுகுமுறை. இந்து பாசிஸ்டுகள்தான் இச்சட்டத்தின் தீவிர ஆதரவாளர்கள். எனவே இத்தகைய நீதி வழங்கும் முறையை பாசிஸ்டுகளின் அணுகுமுறை என்றும் கூறலாம். புலிப்பாசிசத்தை எதிர்ப்பதாக கூறுபவர்களின் விசாரணை முறை ஜனநாயக பூர்வமானதாக இருக்கவேண்டும்.

பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல, அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும், ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது. “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு சீர்கெட்டிருக்கும் இந்தச் சூழலைக் காட்டிலும் எதிரிகளுக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. இப்பிரச்சினை விவாதிக்கப்படும் முறையையும், இதற்கு வரும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, அம்சா தன்னுடைய பணியை இலண்டனில் திறம்பட செய்து வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நாவலன், அருள் எழிலன் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளினால் எங்கள் மீது விழுந்திருக்கும் களங்கத்தை துடைப்பதற்காகத்தான் இப்படி ஒரு விசாரணையை முன்மொழிகிறோம் என்று யாரும் தவறாக கருதிக் கொள்ளவேண்டாம். மகஇக வின் நேர்மையின் மீது எமது அரசியல் எதிரிகள் கூட கேள்வி எழுப்பியதில்லை. மக்கள் மத்தியில் நாங்கள் பெற்றிருக்கும் மதிப்பை ஐரோப்பிய தளங்களில் அனானிப் பெயர்களில் போட்டுக் கொள்ளப்படும் பின்னூட்டங்களால் எதுவும் செய்து விட முடியாது.

இந்தக் குற்றச்சாட்டு தவறு என்று நாங்கள் கருதுகிறோம். அவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கி நிற்பது சரியல்ல. எனவே, தலையிடுகிறோம். ஒருவேளை எங்கள் மதிப்பீடு தவறு என்று விசாரணையில் தெரிய வருமானால், எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வதில் எங்களுக்குத் தயக்கமில்லை. எனவேதான், தைரியமாகத் தலையிடுகிறோம். எல்லோர் மீதும் எல்லோரும் காறி உமிழ்ந்து கொள்ளும் இத்தகைய விசாரணை முறையிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்களின் இணைய உலகத்தை விடுவிப்பதற்கான சிறிய முயற்சியாகவும் நாங்கள் தலையிடுகிறோம். அங்கே காறி உமிழ்ந்த எச்சில் எங்கள் மீதும் பட்டுத் தெறிக்கின்ற காரணத்தினாலும் தலையிடுகிறோம்.

இதுதான் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாங்கள் முன்வைக்கும் வழிமுறை. குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் இந்த விசாரணையில் பங்கு பெறுவது குறித்த தங்களது பதிலை தம் இணையதளத்தின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தொலைபேசியிலோ, மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்தில் புழங்கும் மகஇக வின் ஆதரவாளர்கள், பதிவர்கள் யாரும் “நல்லெண்ண முயற்சி” என்று கருதிக் கொண்டு, இரயாகரன், ஜெயபாலன், நாவலன் போன்ற இப்பிரச்சினையில் தொடர்புள்ள யாருடனும் இது குறித்துத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுருத்துகிறோம்.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அவதூறு பரப்பும் இரயாகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !!