privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்வி“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

-

மார்க்ஸ்-எங்கல்ஸ்-லெனின்-ஸ்டாலின்-மாவோதொன்னூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு பொன்னுலகு இந்த பூமியில் கட்டியமைக்கப்பட்டது. அந்த சோசலிச சமூகத்தில் விவசாயிகளும், தொழிலாளர்களும் சுரண்டலற்ற புதியதொரு தலைமுறையையே உருவாக்கினார்கள். சுரண்டல் என்றால் என்ன என்றே அறியாத, முதலாளிகளை நேரிலேயே பார்த்தறியாத சமூகமாக கம்யூனிசத்தின் புதிய தலைமுறை உருவாக்கப்பட்டது.

இன்று சோசலிசம் பின்னடைவுக்குள்ளாகியிருப்பதால் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றோ, முதலாளித்துவம் வென்று விட்டது என்றோ அர்த்தம் அல்ல. முதலாளித்துவம் வெல்லவில்லை அது மக்களை கொல்லும் என்பதற்கு தமிழகத்தில் நாம் அறிந்த சமீபத்திய உதாரணம் நோக்கியா நிறுவனத்தால் படுகொலை செய்யப்பட்ட அம்பிகா.

இது போன்ற எண்ணற்ற கொலைகளும் தற்கொலைகளும் முதலாளித்துவ லாபவெறியின் காரணமாக ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டேயிருக்கிறது. பாபிலோன் நாகரீகத்தை உருவாக்கிய ஈராக்கின் புதல்வர்கள் நாகரீகமற்ற ஏகாதிபத்தியவாதிகளால் நம் காலத்தில், நம் கண்களுக்கு முன்பாகவே அடிமைகளாக்கப்பட்டு குரூரமாக சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

நமது நாட்டிலுள்ள கனிம வளங்களை எல்லாம் ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடித்துச் செல்வதற்காக மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆடு மாடுகளை போல தமது தாய் நிலத்திலிருந்து அடித்து விரட்டப்பட்டு அகதிகளாக்கப்படுகிறார்கள்.

ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கம் காரணமாக இதுவரை இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை முதலாளித்துவத்தின் லாபவெறி பிணங்களாக்கியிருக்கிறது, உயிரோடு உள்ளவர்களை நடை பிணங்களாக்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் கொல்லும் என்பதற்கும்  கம்யூனிசமே வெல்லும் என்பதற்கும் மேற்கூறிய உதாரணங்களும் நேபாளமுமே இன்றைய சான்றுகள்.

லாபத்திற்காக மக்களை கொல்லும் இந்த ஏகாதிபத்தியவாதிகள் தான் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று அவதூறு செய்து கொண்டிருக்கிறார்கள். ”கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரம் தான், வீட்டில் துவங்கி ஆடு, மாடு, கோழி என்று அனைத்தையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். நாலு மாடுகளை வைத்து விவசாயம் செய்து கொண்டிருக்கிற ஒரு விவசாயியிடம் இதை சொன்னால் என்ன ஆகும் ?

அதை உண்மை என்று பயந்து போய் முதலாளித்துவ பொய்ப் பிரச்சாரத்தையே அவரும் தனக்கு தெரிந்த நான்கு பேரிடம் சொல்லிக்கொண்டிருப்பார். நம்முடைய நாட்டில் கம்யூனிசம் பற்றிய முதலாளித்துவ அவதூறுகள் இவ்வாறும் இன்னும் பல வழிகளிலும் பரப்பிவிடப்படுகிறது.

உண்மையில் கம்யூனிசம் தோற்றுவிட்டதா ? இல்லை, சோவியத் குடியரசு உடைபட்டு விட்டதாலேயே கம்யூனிசம் தோற்று விட்டது என்று கூறுவது ஒரு பந்தலுக்கு கீழே நின்று கொண்டு சூரியனை காணோம் என்று கூறுவதற்கு சமமானது. எனினும், கம்யூனிசம் எப்படி அறிவியல் பூர்வமானது, சரியானது என்பதை நிறுவுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல, மாறாக கம்யூனிசத்தை பற்றியும், சோசலிச நாடுகளை பற்றியும் முதலாளித்துவவாதிகள் பரப்பி வைத்துள்ள பொய்களையும், அவதூறுகளையும் உண்மை என்று நம்புபவர்களுக்கு திரையை விலக்கி காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சோவியத் நாட்டில் நிலவிய ஆட்சி முறையையும்,மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உள்ளது உள்ளபடி அறிந்து கொண்டால் மட்டுமே கம்யூனிசம் குறித்த முதலாளித்துவ பொய்களால் கட்டப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபட முடியும். இதற்கு நாம் சோவியத் நாட்டின் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் இருந்து எந்த தரவுகளையும், மேற்கோளையும் இங்கே கொடுக்கப் போவதில்லை. அனைத்தும் இந்த நாட்டிலிருந்து இரசியாவிற்கு சென்று வந்தவர்கள் கூறியவற்றிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

பிழைப்புவாத சாக்கடைக்குள் முக்குளிக்க்கும் நமது சமூகத்தில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிரச்சனை என்றால் தன் வீட்டுக் கதவை சாத்திக் கொள்ள பயிற்றுவிக்கப்பட்டுள்ள மனிதனின் மனநிலைக்கும், சோவியத்தில் ஒரு கூட்டுப் பண்ணையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் பற்றிக் கொண்ட தீயினால் முழு பண்ணையும் எரிந்து நாசமாகி விடக்கூடாதே என்றெண்ணி அடுத்த நொடியே எரிந்து கொண்டிருந்த டிராக்டரில் ஏறி அதை வயலுக்கு வெளியில் ஓட்டிக் கொண்டு வந்து விட்டு விட்டு தனது உயிரையும் விட்ட, அப்போது தான் புதிதாக திருமணம் ஆன 28 வயது சோசலிச இளைஞனின் மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை நாமும் அவனும் மனிதன் என்கிற வகையில் நாம் உரசிப் பார்த்துக்கொள்வதற்கும் இந்த உண்மைகள் நமக்கு உதவும்.

லெனின்-நவம்பர்-புரட்சி

இரசியா: ஐரோப்பிய பிற்போக்கின் கோட்டையை பிளந்தது மார்க்சிய லெனினியம்

இரசியா, ஐரோப்பாவில் பாதி ஆசியாவில் பாதியை கொண்டிருந்த நாடு. அங்கே இல்லாத கொடுமையில்லை தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும். ஒருமுறை தொழிலாளர்கள் முதலாளிகளின் கொடுமைகளை தாங்க முடியாமல் ஜார் மன்னனிடம் மனு அளிப்பது என்று முடிவெடுத்து சில இலட்சம் பேர் அணி திரண்டு அரண்மனையை நோக்கிச் சென்றனர். ஜார் மன்னனுக்கு இந்த முதலாளிகள் செய்யும் கொடுமைகள் தெரியவில்லை, எனவே அதை தெரியப்படுத்துவதோடு சில கோரிக்கைகளையும் மனுவாக கொண்டு சென்றிருந்தனர். காலம் 1905.

அரசன் வெளியே வருவான் என்று கூட்டம் வாயிலை நோக்கி நெருங்க, நெருங்க சுற்றி வளைத்தது ஜாரின் குதிரைப்படை. அடுத்த நொடி துப்பாக்கிகள் சரமாரியாக தோட்டாக்களைப் பொழிந்தன. சற்று நேரத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுட்டுப் பொசுக்கப்பட்டனர். அந்த நாளை இன்றும் இரத்த ஞாயிறு என்றே இரசியர்கள் அழைக்கிறார்கள். இது தான் 1917க்கு முன்பு இரசியாவில் இருந்த அரசியல் நிலைமை.

1917 அக்டோபர் 25 (இரஷ்ய காலன்டரின் படி இருந்த இந்த நாள் பின்பு மேற்கத்திய காலன்டர் படி நவம்பர் 7 என மாற்றப்பட்டது.) அன்று தோழர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் கீழ் அணி திரண்ட லட்சக்கணக்கான இரசிய மக்கள் பிற்போக்கு ஆட்சியை தூக்கியெறிந்துவிட்டு உலகிலேயே முதல் முறையாக உழைக்கும் மக்களின் ஆட்சியை ஏற்படுத்தினார்கள்.

பூவுலகில் ஒரு சொர்க்கத்தை படைத்த இரசிய மக்கள் :

சோவியத்தில் மக்களாட்சிஅரசதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ’உழுபவனுக்கே நிலம்’ என்கிற முழக்கத்தின் அடிப்படையில் கொடுங்கோலர்களான நிலப்பிரபுக்களிடமிருந்தும், மத பீடங்களிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும் என்கிற சோவியத் அரசின் முதல் அரசாணையை தோழர் லெனின் வெளியிட்டார்.

அடுத்தபடியாக நாட்டின் உற்பத்தியை பெருக்குவதற்கும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்குமான திட்டங்கள் கால இலக்குகளுடன் துரிதமாக தீட்டப்பட்டன. அவை திட்டமிட்டிருந்த காலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்டன. அதில் முதன்மையானது மொத்த நாட்டையும் மின்சாரமயமாக்குவது! எந்த நாட்டை ? உலகில் ஆறில் ஒரு பங்கான இரசியாவை! எந்த ஆண்டில்? தொன்னூற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் 1917ல்! எவ்வளவு நாட்களில் ? வெறும் ஐந்தே ஆண்டுகளில்!

மன்மோகன் சிங் போன்ற உலகவங்கியின் குமாஸ்தாவின் ஆட்சியின் கீழே வாழும் நமக்கு இவையெல்லாம் அதிசயமாகத் தான் இருக்கும், ஆனால் சோவியத் மக்கள் அந்த அதிசயத்தை நிகழ்த்தினார்கள், கால இலக்கான ஐந்தாண்டுகளுக்கு முன்னதாகவே மொத்த இலக்கையும் எட்டினார்கள். உலகின் மிகப்பெரிய நாட்டை மின்சாரமயமாக்கினார்கள்.

அடிப்படையான சில விசயங்கள் சோவியத்தில் கட்டாய சட்டமாக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு சுட்டிக்காட்டலாம். அவை, அனைவருக்கும் இலவச கல்வி, கல்வி கற்று முடித்த பின்னர் அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வீடு (1917 க்கு முன்பு மாஸ்கோவின் மொத்த மக்கள் தொகை பதினெட்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர். இவர்களில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் மரக் கொட்டடிகளில் அறைக்கு 15 பேர் வீதம் வசித்து வந்தார்கள்)

அனைத்து வகையான இலவச மருத்துவ உதவிகளையும் பெறும் உரிமை (சோவியத் சட்டத்தின்படி சோவியத் குடிமக்கள் மட்டுமின்றி சோவியத்தில் இருக்கக்கூடிய வெளிநாட்டவர்களுக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டது) முதியவர்களுக்கான ஓய்வுரிமை ஆகியவை அடிப்படை உரிமைகளாக வகுக்கப்பட்டிருந்தவற்றுள் ஒரு சில மட்டுமே, இன்னும் பல்வேறு அடிப்படை உரிமைகள் சட்டங்களாக இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும், இந்த உரிமைகளை மக்களிடமிருந்து பிறர் பறிக்க முடியாதவாறும், அப்படி பறிக்க எத்தனிப்போருக்கு கடுமையான தண்டனைகளையும் சோவியத் சட்டங்கள் உறுதி செய்தன.

உழைப்பில் ஈடுபடும் நேரமும் அடிப்படை சட்டமாக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் அனைவருக்கும் வேலை நேரம் எட்டு மணி நேரம் மட்டுமே. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை ஒரு நாள் விடுமுறை. இவை எல்லாம் எப்படி சாத்தியமானது ?

அங்கே, மக்களின் உழைப்பையும், நாட்டின் கனிமவளங்களையும் மன்மோகன் சிங், ப.சி கும்பல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தூக்கி கொடுப்பதைப் போல கொடுக்காமல் நாட்டின் உற்பத்தியை பெருக்க மக்களிடம் லெனின் ஒரு கோரிக்கையை வைத்தார். அதாவது, விடுமுறை நாட்களில் நாட்டுக்காக இலவசமாக உழைக்க வேண்டும் என்று கோரினார். இது சட்டமல்ல. “விருப்பம் இருந்தால் வேலை செய்யலாம் இல்லையெனில் வேண்டாம்” என்று அறிவிக்கப்பட்டது.

முதலில் சில ஆயிரக்கணக்கானவர்கள் மட்டும் தான் முன் வந்தார்கள். பின்னர் தொடர்ந்து வந்த மாதங்களில் அவ்வெண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்தது. உபரியாக சேர்க்கப்பட்ட உற்பத்தியில் பெறப்பட்ட செல்வங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்கே பல்வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டது. இந்த உழைப்புக்கு பெயர் ‘சப்போத்னிக்’.

தோழர் லெனினுடைய மறைவிற்கு பின் தோழர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றார். புரட்சிக்கு முன்பிருந்த இரசியா என்பது அனைத்து துறைகளிலும் மிக, மிக கீழான நிலையில் இருந்தது. உணவுப்பஞ்சம் ஒரு பக்கம் தலைவிரித்தாடியது. நோய்கள் மற்றொரு பக்கம் மக்களை அள்ளிக் கொண்டு போனது. இந்நிலையில் மந்திரத்தின் மூலமா நாட்டை முன்னேற்ற முடியும்? மக்களின் துணையின்றி வேறு வழி ஏது ?

உழைக்கும் மக்களின் தலைவரான தோழர் ஸ்டாலினுடைய தலைமையின் கீழ் சோவியத் மக்கள் அனைத்து துறைகளிலும் சாதனை நிகழ்த்தினார்கள். அப்போது உலகப் பொருளாதாரத்தில் சோவியத் யூனியன் தொடர்ந்து முன்னணியில் இருந்தது. ஆம், தோழர் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ’சர்வாதிகார ஆட்சி’ தான் மாபெரும் சோசலிசத்தின் சாதனைகளை படைத்தது !

 

சோவியத்-கூட்டுப்-பண்ணை
சோவியத் கூட்டுப் பண்ணையில்....

கூட்டுப் பண்ணைகள்

புரட்சிக்கு பின்னர் நான்கு ஆண்டுகள் சோவியத் உணவு உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருந்தது. பஞ்சம் தலைவிரித்தாடியது. விவசாயத் துறையில் தன்னிறைவு பெற சோவியத் அரசாங்கம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், அணை கட்டுதல், கால்வாய் வெட்டுதல் போன்ற அடிக்கட்டுமான வேலைகளை எல்லாம் மின்னல் வேகத்தில் செய்து முடித்தது. அதன் தொடர்ச்சியாக மக்களே இணைந்து நடத்தும் கூட்டுப் பண்ணைகளை அமைத்தது.

இக்கூட்டுப்பண்ணைகள் மிகப்பிரம்மாண்டமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருக்கும். அவற்றில் பணி புரியும் விவசாயிகளுக்கான வீடுகளையும் அவர்களுக்கு சொந்தமாக சிறு தோட்டங்களையும் கூட்டுப்பண்ணைக்குள்ளேயே தனி ஒரு இடத்தில் அரசாங்கமே அமைத்துக் கொடுக்கும். கூட்டுப்பண்ணை உற்பத்தி என்பது குழு குழுவாக போட்டி போட்டுக் கொண்டு நடக்கும் உற்பத்தியாக இருக்கும். எந்தக் கூட்டுப் பண்ணையில் யார் அதிக மகசூல் எடுக்கிறார்கள் என்கிற போட்டி விவசாயிகளிடமிருக்கும். தமது பண்ணை தான் நாட்டிற்கு அதிகமாக உற்பத்தி செய்து தர வேண்டும் என்று ஒவ்வொரு பண்ணையும் போட்டி போட்டுக்கொண்டு உற்பத்தியில் ஈடுபடும். உற்பத்தி இலக்கை தாண்டும் பண்ணைகளை அரசு நாடு முழுவதும் மக்களிடம் அறிவித்து கவுரவிக்கும். அந்த பண்ணையைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பரிசுகளளிக்கப்படும்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் எத்தனை பேர் வானூர்தியை அருகில் நின்று பார்த்திருப்பீர்கள். எத்தனை பேர் அதில் பயணம் செய்திருப்பீர்கள்? சோவியத்தில் ஒவ்வொரு கூட்டுப் பண்ணைக்கும் சொந்தமாக சில பத்து குட்டி விமானங்கள் இருந்தன என்று கூறினால் நம்புவீர்களா ? ஆம், அவர்கள் தமது பண்ணைகளில் விளைந்த தானியங்களை நகரத்திற்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்காக அரசு அவர்களுக்கு குட்டி விமானங்களை வழங்கியிருந்தது. ஆனால் இந்திய விவசாயிகளுக்கு மன்மோகன் சிங் பாலிடால் பாட்டில்களை நீட்டுகிறார். அவர்களும் லட்சக்கணக்கில் மரணத்திற்கு பின்னர் வானில் பறக்கிறார்கள்!

எங்காவது பாலைவனத்தில் பருத்தி பயிரிட முடியுமா ?. சோவியத்தில் மக்கள் அதையும் சாதித்திருக்கிறார்கள். சோவியத் ஒன்றியத்தின் உஸ்பெகிஸ்தான் குடியரசிலுள்ள பாலைவனத்திற்கு அருகில் சில மைல்களுக்கு அப்பால் எதற்கும் பயன்படாமல் சதுப்பு நிலத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும். அங்கேயிருக்கும் தண்ணீரை இந்தப் பாலைவனப்பகுதிக்கு வரவழைத்து பயிரிட திட்டமிட்டார்கள். அதை உடனடியாக நடைமுறைப்படுத்த கால்வாய் வெட்டும் பணியில் இறங்கி அதை துரித கதியிலும் முடித்து பாலைவனத்தில் பருத்தி கூட்டுப்பண்ணையையும் சாத்தியமாக்கினார்கள்.

அதே உஸ்பெகிஸ்தான் பகுதியிலுள்ள வேறு ஒரு கூட்டுப்பண்ணைக்கு சென்றிருந்த எழுத்தாளர் அகிலன் அதைப் பற்றி கூறியது.

“பருத்திச் செடிகள் அங்கே ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தன. அளவில் இவ்வளவு பெரிய பருத்தியை இதற்கு முன் நான் கண்டதில்லை. எனவே, உள்ளே புகுந்து ஒன்றை பறிக்க முனைந்தேன். உடனே ஏதோ கத்திக்கொண்டு வேகமாக என்னைத் தடுத்தார் ஒரு உழவர். அவர் என்ன சொல்கிறார் என்று உடன் வந்த சோவியத் எழுத்தாள நண்பரிடம் கேட்டேன்.

‘பருத்திக்காய் இன்னும் முதிரவில்லையாம், பறித்து வீணாக்கிவிடாதீர்கள் என்று சொல்ல வந்தார்’ என்றார்.

நான் திகைத்து போனேன். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள பெரிய தோட்டம் அது. நான் பறிக்கப்போனதோ ஒரே ஒரு பருத்தி. அதுவோ கூட்டுப்பண்ணையை சேர்ந்தது. கூட்டுப்பண்ணையைத் தம் சொந்தப் பண்ணையாக ஏற்றுக்கொள்ளாத ஒருவரால் எப்படி அவ்வாறு பதறி இருக்க முடியும்? நாட்டின் சொத்தை தனது சொந்த சொத்தைப்போல் மதித்து பாதுகாக்கும் பண்பை ஒரு சாதாரண கிராமவாசியிடம் அங்கே கண்டதை என்னால் மறக்க முடியவில்லை” (சோவியத் நாட்டில்: பயண நூல், அகிலன்,பக்கம் 52)

 

சோவியத் ஆட்சி
ஆட்சி அதிகாரத்தில் அனைவருக்கம் வாய்ப்பு

சோவியத் ஆட்சி முறை

கம்யூனிச ஆட்சி என்பதே மக்கள் மீதான சர்வாதிகாரம் என்றும். கம்யூனிச ஆட்சியில் மக்களுக்கு எந்த உரிமைகளும் இருக்காது என்றும் இன்னும் இது போன்ற விதவிதமான கதைகளையெல்லாம் முதலாளித்துவவாதிகள் பரப்பிவைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் எத்தகைய பச்சை பொய்கள் என்பதை இந்த தலைப்பின் கீழ் காணலாம்.

1917ல் புரட்சி நடந்த சில நாட்களுக்கு பிறகு இரசிய மக்களை நோக்கி தோழர் லெனின் கூறினார்.

“உழைக்கும் மக்களே இப்பொழுது நீங்கள் தான் ஆட்சி பீடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து அரசியல் விவகாரங்களையும் நீங்கள் உங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ளாவிடில் உங்களுக்கு யாரும் துணை புரியப்போவதில்லை. இப்பொழுது முதல் உங்களுடைய சோவியத்துகள் தான் அரசு அதிகார உறுப்புகள், முழு அதிகாரம் படைத்த சட்ட மன்றங்கள். உங்களுடைய சோவியத்துகளின் மூலம் ஒன்று திரளுங்கள், அவற்றை பலப்படுத்துங்கள், நீங்களே நேரில் பணிகளில் இறங்குங்கள்”  (லெனின் நூல் திரட்டு, ஆங்கிலம், தொகுதி26 ப்பக்கம் 297)

சோவியத்தில் ஒன்றியத்தில் யார் வேண்டுமானாலும் உள்ளாட்சி துறை, மற்றும் சுப்ரீம் சோவியத் தேர்தலில் போட்டியிடலாம். தகுதியானவர்களை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களே மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு சென்றனர். இவர்கள் ஒரு தொழிற்சாலையின் தொழிலாளியாகவோ அல்லது மாட்டுப் பண்ணையில் பால் கறப்பவர்களாகவோ கூட இருந்தார்கள்.

மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளை போல ஏதேனும் சிறு தவறு செய்தால் கூட உடனடியாக அவர்களை திருப்பியழைக்கும் உரிமையும் உடனடியாக வேறு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அந்த மக்களுக்கு இருந்தது. இது வெறுமனே ஏட்டில் எழுதி வைத்துக்கொள்வதற்காக அல்ல. அவ்வாறு தவறிழைத்தவர்கள் திருப்பியழைக்கப்பட்டிருக்கிறார்கள். சோவியத் வரலாற்றில் அவ்வாறு சில ஆயிரம் உள்நாட்டு பிரதிநிதிகளையும் சில நூறு சுப்ரீம் சோவியத் பிரதிநிதிகளையும் மக்கள் திருப்பியழைத்திருக்கின்றனர்.

எல்.சூசயெவா என்பவர் கூட்டுப்பண்ணையில் பால்காரப் பெண்ணாக வேலை செய்பவர். மக்கள் அவரை சுப்ரீம் சோவியத்துக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து அனுப்பினர். அங்கே அவர் உரையாற்றுகையில் ஒரு சுவையான அனுபவத்தை கூறினார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சோவியத் இளந்தலைமுறையினர் தூதுக்குழுவில் ஓர் உறுப்பினராக அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன். அங்கே எனக்கு  ஏற்பட்ட அனுபவத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

அமெரிக்கர்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதை எங்களுக்கு காட்ட வேண்டுமென்று அமெரிக்க செனட்டர்களை நாங்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜன்நாயகத்தைப் பற்றி இந்த செனட்டர்கள் நிறையவே பேசினார்கள். அமெரிக்க ஜனநாயகத்தின் சிறப்புகளை சொல்லி தமது சமூக அமைப்பை வானளாவ புகழ்ந்து கொண்டார்கள்.

ஆனால் இங்கேதான் அவர்கள் தோல்வியடைய நேர்ந்தது. நான் யார் என்று என்னிடம் கேட்டார்கள். இரசிய சமஷ்டிக் குடியரசின் சுப்ரீம் சோவியத்தில் ஓர் உறுப்பினர், பசு பராமரிக்கும் பால்காரியாக கூட்டுப்பண்ணையில் பணி புரிகிறேன் என்று சொன்னேன். அமெரிக்க செனட்டர்கள் வியப்புற்றுவிட்டனர், அவர்களுடைய செனட்டில் பால்காரிகள் யாரும் இல்லை. அவர்களுடைய ஜனநாயகம் அதற்கு இடம் தரவில்லை.

நான் சொல்வது உண்மைதானா என்று சோதித்து பார்ப்பது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள், சைராக்கியூசில் திரு லீ என்னுடைய கைகளை காட்டுமாறு கேட்டார். என் கைகளை திறந்து அவரிடம் காட்டி இதோ பாருங்கள் உழைக்கும் பெண்ணின் கைகள் என்றேன்.

ஆனால் அவர்கள் திருப்தியடையவில்லை. திரு லெஷர் என்ற அமெரிக்க விவசாயியின் பால் பண்ணைக்கு நாங்கள் சென்றிருந்த போது, பால் கறந்து காட்டும்படி சொன்னார்கள். நான் கறந்து காட்டினேன். சோவியத் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பால் கறக்கவும் தெரிகிறது என்று புரிந்து கொண்டார்கள். (சோவியத் நாட்டில் மனித உரிமைகளும் சுதந்திரங்களும். ரா.கிருஷ்ணையா,பக்கம் 33)

அதே போல சோவியத் நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு பரந்து விரிந்ததாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள இன்னொரு விசயத்தையும் கூறலாம். சோவியத்தின் புதிய அரசியலமைப்புச்சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்ட்த்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத் மக்கள் இந்த விவாத்த்தில் பங்கெடுத்துக்கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

விவாதம் நடைபெற்ற் மாதங்களில் இது குறித்து பிராவ்தா செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன. இவ்வாறு ஒரு நாட்டின் சட்டம் குறித்து நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு அதை அமுல் படுத்திய சோவியத் யூனியன் ஜனநாயக நாடா ? அல்லது இந்த நாட்டு மக்களுக்கே தெரியாமல் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புமிக்க கனிம வளங்களை உள்ளடக்கிய மாபெரும் மலைகளை யாருடைய அனுமதியும் பெறாமல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எழுதிக்கொடுப்பது ஜனநாயகமா ?

கூட்டுப்-பண்ணைகள்-நவம்பர்-புரட்சி
கூட்டுப்பண்ணைகள் முதல் தொழிலகம் வரை பெண்களுக்கு முழு உரிமை

பெண்களின் நிலை, குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி

காலம் காலமாக ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு வந்த பெண்களுக்கு சமூகத்தின் அனைத்து துறைகளிலும் சம உரிமையை வழங்கியதோடு அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஒரே நாடு  சோவியத் இரசியா மட்டும்தான். ஆண்களைப் போலவே அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை செய்தார்கள். உடல் உழைப்பு மூளை உழைப்பு இரண்டிலும் ஈடுபட்டார்கள். வேலைகளில் ஆண்களுக்கு நிகரான ஊதியமும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டது.

பெண்களை இழிவு படுத்தும் பத்திரிக்கைகளோ, சினிமாவோ, நாடகங்களோ எதுவும் சோவியத்தில் கிடையாது. அவ்வாறு பெண்களை இழிவுபடுத்தியோ அல்லது ஆபாசமாகவோ சித்தரித்தால் அதற்கு சட்டப்படி கடும் தண்டனை உண்டு. நமது வீட்டுப் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களையும், நாடகங்களையும் நாம் அனுமதிக்க முடியுமா ? முடியாதல்லவா ? அதே போலத் தான் சோவியத் அரசாங்கம் தனது நாட்டு பெண்கள் எந்த விதத்திலும் ஆபாசப் பொருளாகவோ, போகப் பொருளாகவோ சித்தரிக்கப்படுவதை அனுமதிப்பதில்லை. அங்கே பெண்களை இழிவுபடுத்தும் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. வறுமையையும், தற்குறித்தனத்தையும் ஒழித்துக்கட்டியதைப் போலவே விபச்சாரத்தையும் ஒழித்துக்கட்டிய ஒரே நாடு சோசலிச இரசியா மட்டும் தான்.

பெண்களுக்கு அவர்கள் கருவுற்றிருக்கும் காலங்களில், குழந்தை பிறப்பதற்கு முன்னால் 52 நாட்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு 52 நாட்களுக்கும் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டன. கர்ப்பகாலத்தில் வீடு தேடி வந்து மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கான சத்துணவு மிகக் குறைந்த விலைகளில் விற்கப்பட்டன. அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை என்பதால் பெண்கள் நாட்டின் அனைத்துத் துறையிலும் தலைசிறந்து விளங்கினர். சமூகத்தில் சோவியத் பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை என்பதை அகிலனின் கீழ்கண்ட சித்திரம் எடுப்பாக உணர்த்துகிறது.

ஆல்மா ஆட்டாவில் ஓட்டல் ஆல்மா ஆட்டா வின் எட்டாவது மாடியில் இருந்த என் அறையில் நின்றபடி தெருவில் பெய்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்தேன். காலை நேரத்தில் இளம்வெயில் அடித்தபின் திடீரென பெருமழை பிடித்துக்கொண்ட்து. தெருவில் தண்ணீர் ஓடியது. அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு லாரி வந்து தெருவில் நின்றது. அதிலிருந்து மழைக்கோட்டும் குல்லாயும் கால்களில் நீண்ட்தொரு பூட்சும் அணிந்த ஒரு பெண்மணி குதித்தார். கையில் நீண்ட ஒரு கம்பி.

தெருவிலிருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தின் இரும்பு மூடியைத் திறக்கத் தம் கடப்பாறையால் போராடி நெம்பினார். மூடியை நகர்த்தியவுடன் நீஇர் உள்ளே பாய்ந்த்து. பிறகு மூடியை முன் போல் இணைத்து விட்டு, கடப்பாறையை லாரியில் போட்டார். அவர் ஏறிக்கொண்டவுடன் லாரி நகர்ந்த்து. (அகிலனின் மேற்கூறிய நூல், பக்கம் 69)

சோவியத்தில் பெண்கள் வேலை செய்யாத துறை என்று ஒன்றுமே இல்லை என்பதை புரிந்து கொள்வதற்கு மேற்கூறிய ஒன்றே போதுமானது.

சோவியத்-குழந்தைகள்-காப்பகம்
மாஸ்கோவில் ஒரு குழந்தைகள் காப்பகம்

அப்படியானால் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது? என்கிற கேள்விக்கு விடை தான் ”யாஸ்லிகள்” . இந்த யாஸ்லிகள் என்பது குழந்தைகளை வளர்க்கும் நம்ம ஊர் பாலவாடிகள் போன்றது (ஆனால், நம்ம ஊர் பாலவாடிகளை போன்று கேவலமாக இருக்காது) இவை அரசாங்கத்தால் நடத்தப்படுபவை. பெற்றோர்கள் வேலைக்கு செல்கையில் இந்த யாஸ்லிகளில் தமது குழந்தைகளை விட்டுச் செல்கின்றனர். யாஸ்லிகளில் குழந்தைகள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கான சூழலில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு தாய் தன்னுடைய குழந்தையை கவனித்துக் கொள்வதை போலவே அக்கரையோடு வளர்க்க பல தாதியர்கள் யாஸ்லிகளில் இருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளைத் தாலாட்டி தூங்க வைப்பதிலிருந்து குளிப்பாட்டி, உணவூட்டி, விளையாட்டுப் பொருள்களை கொடுத்து அவர்களோடு விளையாடுவது வரை இன்முகத்துடன் செய்கின்றனர்.

அங்கு தவறாது குழந்தைகளுக்கும் சரிவிகித உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு யாஸ்லிகளிலும் பல மருத்துவர்கள் இருப்பார்கள். அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து அவர்களில் ஏதேனும் நோயுற்ற குழந்தை இருந்தால் அக்குழந்தையை மட்டும் தனியே வைத்து மருத்துவம் செய்கிறார்கள். அந்த குழந்தையின் உடல் நிலை முழுமையாக சரியான பிறகு தான் மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாட அனுமதிப்பர்.

எல்லாம் சரி தான். தாயைப் போல் அன்பு செலுத்தலாம். அக்கறை காட்டலாம், ஆனால் தாய்ப்பால் ? அதையும் திட்டமிட்டுத்தான் இந்த யாஸ்லிகள் அனைத்தும் தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலைகளில் அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை குழந்தைகளுக்கு பால் கொடுக்க சென்று வர அனுமதிக்கப்படுகிறது. ஒரு வேளைக்கு அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு போய் வரும் 1 மணி நேரமும் அவர்களுடைய வேலை நேரத்தில் சேர்த்தே கணக்கிடப்படுகிறது.

முதல் மூன்றாண்டுகள் இந்தக் குழந்தைகள் யாஸ்லிகளில் வளர்க்கப்படுகிறார்கள். இந்தப் பொழுதில் குழந்தைகளுக்கு தெளிவாக பேசுதல், எந்த வேலையையும் சீராகச் செய்தல் போன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த யாஸ்லி முறை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கூட்டுணர்வை ஏற்படுத்தி அவர்களுடைய மனதில் கூட்டுறவு சிந்தனை முறையையும், கூட்டுறவு வேலை பாணியையும் கற்றுத்தருகிறது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு குழந்தையின் ஏழாம் வயது வரை இக்குழந்தைகள் தோட்டப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். தோட்டப் பள்ளிகளில் குழந்தைகளை யாரும் படி.. படி.. என்று கொடுமைப்படுத்தி மொக்கைகளைப் போல புத்தகப் புழுக்களாக வளர்ப்பதில்லை! குழந்தைகளுக்கு விருப்பமான கலைகளில் அவர்கள் சிறந்து வளர உதவப்படுகிறது. மாதமொரு முறை காடு, மலை, அருவி போன்ற பகுதிகளுக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு நேரடியாக இயற்கையை பற்றிய அறிவு ஊட்டப்படுகிறது. இங்கு கூட்டாக சுத்தம் செய்தல், தாம் சாப்பிட்ட பாத்திரங்களைத் தாமே கழுவுதல் போன்ற வேலைகளைக் குழந்தைகளையே செய்யச் சொல்லி சுய ஒழுங்கு கற்றுத்தறப்படுகிறது. எந்தத் தொழிலும் இழிந்தது அல்ல என்ற உணர்வு குழந்தை பருவத்திலேயே ஊட்டப்படுகிறது.

தோட்டப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு அவர்களது தாய்மொழி, ரஸ்ய மொழி, மற்றுமொரு கட்டாய அயல்நாட்டு மொழி சொல்லித்தரப் படுகிறது. இது தவிர அறிவியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்கள் நேரடியான பல சோதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டப்பட்டு பயிற்றுவிக்கப் படுகிறது.

இவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்பவர்கள் சாதாரண ஆட்களாக இருக்க முடியாது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பரீட்சை உண்டு. அவர்கள் அங்கு தேர்ச்சியடைந்தால் தான் குழந்தைகளுக்கு ஆசிரியராக நீடிக்க முடியும். மாணவர்கள் படிக்கும் போதே பகுதி நேரமாக தொழிற்கூடங்களில் நேரடிப் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் படிக்கையில் அந்த அந்தப் பாடத்தில் உள்ளவற்றை நடைமுறையோடு பொருத்தி தெளிவாக புரிந்து கொள்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. இங்கு கல்வி அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இலவசமாக சொல்லித் தரப்படுகிறது. இதன் காரணமாக சோசலிச இரசியாவில் இரு பத்தாண்டுக்குள்ளாகவே படிக்காதவர்கள் இல்லை என்னும் நிலை உருவானது. முதியவர்களும் கூட இரவு நேர கல்விக் கூடங்களில் கற்றனர்.

இத்தகைய அறிவியல் பூர்வமான கல்வியைப் கற்று வளர்ந்த மாணவர்கள் தான் அறிவியல் விஞ்ஞானத் துறையில் சோவியத் நாடு தலை சிறந்து விளங்க காரணமானவர்கள்.

சோவியத்தில்-அனைவருக்கம்-வீடு
சோவியத்தில் அனைவருக்கம் வீடு

அனைவருக்கும் வீடு:

சோவியத் நாட்டில் அனைவருக்கும் அரசாங்கம் வீட்டு வசதி செய்து தந்தது. வீட்டிற்கு வாடகை எவ்வளவு தெரியுமா ? அந்த வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்களோ அவர்களுடைய சம்பளத்தில் வெறும் 4சதவீதம் மட்டுமே வாடகை. அதாவது, 4000 ரூபாய் வாங்கினால் 160 ரூபாய் வீட்டு வாடகை. சோவியத்தில் சொந்த வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று கூறி பலர் பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஆனால் அங்கு கூட்டு மாடி வீடுகளை (apartments) கட்டிக் கொள்ள அரசாங்கமே 60சதவீத தொகையை கடனாகக் கொடுக்கிறது. அந்த கடனை 10 முதல் 15 வருடங்களில் திருப்பி செலுத்தினால் போதுமானது. ஆனால், ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே உரிமையாக இருக்க முடியும்.

இந்த வீடு பிரச்சினை குறித்தும் அகிலன் எழுதியுள்ளார். அவர் கூறுவதாவது,

”உறைவிடத்தைப் பொறுத்த வரையில் நான் அங்கு கண்டது இதுவே, வீடில்லாமல் எந்த குடிமகனும் எந்த நகரத்திலும் கிராமத்திலும் நடுத்தெருவில் திரிந்து அலையவில்லை. வசதியான வீடு இன்னும் சிலருக்கு கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் எல்லோருக்குமே அங்கு உணவும், உடையும் கிடைத்துள்ளதை போல உறைவிடமும் கிடைத்துள்ளது என்பது தான் முக்கியமானது.” (அதே நூல், பக்கம் 61)

மேலும் சில விசயங்கள்..

உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்இரசிய மக்கள் என்றுமே தங்கள் தாய்நாட்டை எதற்காகவும் விட்டுத்தராதவர்களாய் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு நாடு என்றால் மனிதர்களும் சேர்ந்ததே ஒழிய அவர்கள் வரைபட தேசபக்தர்கள் அல்ல. இங்கோ எரியும் இந்தியக் கொடியை அணைப்பவனே மிகப் பெரிய தேசபக்தன். அங்கு ஒவ்வொருவனும் தேசப் பற்றாளன் தான். சோசலிச சமுதாயத்தை அவர்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்தார்கள். உதாரணத்திற்கு பல நிகழ்வுகளைக் கூறலாம்.

ஒருமுறை என்.எஸ்.கிருஸ்ணனும் அவருடைய நண்பரும் சோவியத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். இதனை ஒரு மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துக் கூறிக் கொண்டிருந்தார். என்.எஸ்.கேயின் நண்பர் “எங்கள் நாட்டின் காந்தியமும் உங்கள் நாட்டின் சோசலிசமும் ஒன்று தான்” என்று கூறினார். மொழிபெயர்ப்பாளர் இதனை மொழிபெயர்க்க மறுத்து விட்டார். பொய் சொல்கிறார்கள் என்று கூறி மொழிபெயர்க்க முடியாது என்றும் கூறிவிட்டார். இதிலிருந்து தெரியவில்லையா அவர்கள் சோசலிசத்தை எவ்வளவு நேசித்தார்கள் என்று.

அங்கு இரயில்களில் செக்கிங் கிடையாது. சோவியத் இரசியாவில் பூட்டு தயாரிக்கப்படுவதில்லை! ஏனெனில், வீடுகளில் பூட்டை மாட்ட கொண்டியே இருக்காது. ஏனெனில் அது திருட்டே இல்லாத நாடு! மக்கள் யாரும் யாரையும் ஏமாற்றுபவர்களாக இல்லை. பஸ்ஸில் ஏறும் போதும் டிக்கெட்டை நாமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை இங்கிருந்து சென்ற காங்கிரஸ் தலைவர் காமராஜர் டிக்கெட்டை எடுக்காமல் பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அருகில் இருந்த சோவியத்தை சேர்ந்த தோழர் இவரையே கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஒன்றிரண்டு நிறுத்தங்கள் வரைப் பார்த்தவர் மூன்றாவது நிறுத்தம் தாண்டிய பிறகும் காமராஜர் பயணச்சீட்டு வாங்காததால் நேராக அவரே எழுந்துச் சென்று தனது பணத்தை போட்டு பேருந்து செல்லும் கடைசி நிறுத்தம் வரைக்கும் டிக்கெட்டை எடுத்து வந்து அதை அவருடைய கையில் கொடுத்து விட்டு அமர்ந்தார். அங்கே யாராவது தவறு செய்ய நினைத்தாலும் அதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அந்த மக்களின் தேசப் பற்று என்பது இதுதான்.

கவிஞர் கண்ணதாசன், அங்கு சென்று தனது கோணல் புத்திக்கு ஏற்றவாறு, ஒரு ஹோட்டல் பணிப் பெண்ணிடம் கேட்டாராம் “ உங்கள் நாட்டில் விலைமாதுக்கள் உண்டா?” என்று. அந்தப் பெண் ’இல்லை’ என்று பதிலளித்திருக்கிறார். ”நான் உன்னை இங்கு பலவந்தப்படுத்தினால் என்ன செய்வாய்?” என்றாராம். பதிலுக்கு “எனது துப்பாக்கிக்கு வேலை வரும். அவ்வளவு தான்” என்று கூறிச் சென்றாளாம் அந்தப் பெண்.

சோவியத்தின் விஞ்ஞான வளர்ச்சி பற்றி யாரும் தனியே சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வான்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு முன்னதாக சாதித்துக் காட்டியது இரசியா தான். மருத்துவத் துறையில் மிகச்சிறப்பான பல சாதனைகளை செய்ததும் இரசியா தான். விளையாட்டில் அது அள்ளிச் சென்ற பதக்கங்கள் தான் எத்தனை ? எத்தனை ? இவ்வாறு அறிவியல்துறையிலும், மருத்துவத் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் பல சாதனைகளை எவ்வாறு ரசியாவால் சாதிக்க முடிந்தது ?

அங்கே கல்வி தனியாரிடம் இல்லை. கல்வி காசுக்காக நடைபெறும் வியாபாரமாக இல்லை. அங்கு அனைவருக்கும் விளையாட்டுப் பயிற்சி நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை இலவசமாக கிடைக்கப்பெற்றன. அனைவரும் தனது நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பணியாற்ற,  பயிற்சி எடுக்க சிறந்த சோதனைச் சாலைகளும் விளையாட்டரங்குகளும் இருந்தன. இவையெல்லாம் எப்படி வந்தன ? கல்வியை வியாபாரமாக்கி கடை நடத்தும் ஓட்டுப்பொறுக்கிகள் அங்கே இல்லை.

ஒரு ரூபாய்க்கு அரிசியும், கலர் டிவியில் மானாட மயிலாடவை போட்டுவிட்டு கோவணத்தை உருவும் கொள்ளைக்காரர்கள் அங்கு இல்லை, மொத்தத்தில் நாட்டை முன்னேற்றுகிறேன், நாட்டை முன்ன்னேற்றுகிறேன்னு நாட்டை காட்டி கொடுக்கிற கைக்கூலி ஆட்சியாளர்கள் அங்கு இல்லை, எனவே தான் சோவியத் அந்த சாதனைகளை நிகழ்த்த முடிந்தது. அது நம்மாலும் முடியும். ஆம், இரசியாவை போலவே சாதனை நிகழ்த்திய சீன மக்களின் உதாரணம் ஒன்று கீழே.

ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் ’தி டைம்ஸ்’ என்கிற பத்திரிகைக்கு 1970ல் பீகிங்கிலிருந்து அனுப்பிய பத்திரிகை செய்தி.

பீகிங்கிலிருந்து பன்னிரெண்டே மைல் தொலைவில் ஒரு லட்சம் சீனர்கள் இரவு பகல் பாராமல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரு நதியின் போக்கை மாற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கருவிகளாக அவர்களிடம் உள்ளவை தள்ளுவண்டிகள், மண்வெட்டிகள், கொந்தளங்களும் மா சே துங்கின் சிந்தனைகளும் தான்.

தலை நகருக்கு தென் கிழக்கே உள்ள விமான நிலையத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கிற அயல் நாட்டுத்தூதுவர் யாராக இருந்தாலும் சரி அனைவருமே வென் யு நதியின் மீதுள்ள பாலத்தைத் தாண்டும் பொழுது தங்கள் கார்களின் வேகத்தை குறைத்துக்கொண்டு அடிவானம் வரை கருந்திட்ட்டாய் விரிந்து, எறும்புக் கூட்டம் போல் இயங்கும் மனிதர்களையும், அவர்களிடையே புள்ளிகளாய் செறிந்து கிடக்கும் எண்ணற்ற செங்கொடிகளையும் பேராச்சரியத்துடன் உற்றுப்பார்க்கிறார்கள்.

விடியும் காலை ஒளியில் இக்காட்சி மேலும் வசீகரமாய் தெரிகிறது. இதை காணும் எவரும், சீன நடப்பு இது தான் என அயல் நாட்டினருக்கு காட்டுவதற்காகத் தயாரிக்கப்பட்ட வழக்கமான மாதிரிக்காட்சிகளில் இதுவும் ஒன்றோ என்று எண்ணத் தூண்டப்படலாம்.

வென் யு நதி வளர்ச்சித் திட்டமானது வட கிழக்கு சீனாவில், ஹாய் நதி பாயும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே என்று அதிகாரிகள் விளக்குகிறார்கள். ஹாய் நதியின் வரலாற்றில் வெள்ளங்களும், வறட்சியும் ஏராளம், ஏராளம்.

ஹாய் நதியை ’பணிய’ வைக்குமாறு 1963 ல் மாவோ அறைகூவல் விடுத்த போது, பல நூறாயிரம் உழவர்கள் அதற்கு செவி மடுத்தனர் என சீனப் பத்திரிகைகள் கூறுகின்றன. அன்று தொட்டு உலகைச் சுற்றி 37முறை – 3அடி உயரமும் அதே அளவு அகலமும் கொண்ட தடுப்புச் சுவரொன்றை எழுப்புவதற்குத் தேவைப்படும் மண் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

ஹாய் நதியில் இணையும் 19 முதன்மையான துணை நதிகளுக்கு, வடிகால்களும், 900மைல்கள் நீள மண் கரைகளும் எழுப்பியதால் நதியின் முக்கியமான வடிகால் பகுதியான சியண்ட்சினில் வினாடிக்கு 9000 கன அடிகளாக இருந்த நீர்ப்பாய்வு, வினாடிக்கு 1,27,000 கன அடிகளாக உயர்ந்து விட்ட்து. இதனால் 8,25,000 ஏக்கர் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தால் ஏற்படும் தேசங்களிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டன.

ஹாய் நதியின் துணை நதியான வென் யு வில் 34 மைல் பரப்பில் வேலை செய்ய, அக்டோபர் மாத இறுதியில் ஹோபெய் மாநில உழவர்கள், படை வீரர்கள், துணைப் படை வீரர்கள், மற்றும் பீகிங் நகர மக்கள் ஆகியோரை அதிகாரிகள் ஒன்று திரட்டினர்.

நான்கு மாதங்கள் எடுத்திருக்க வேண்டிய இப்பணியில் ஏற்கெனவே ஐந்தில் நான்கு பங்கு முடிந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அண்மையில் நான் வேலை நடக்கும் இடங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு எந்திரங்களின் இரைச்சல் ஏதும் இருக்கவில்லை,கொந்தாளங்களை ஓங்கிப் போடும் மனிதர்களின் மூச்சொலிகள், மட்டக் குதிரைகளின் கனைப்புகள், வண்டியோட்டிகளின் கூச்சல்கள், தொழிலாளர்களின் முழக்கங்கள் ஒலி பெருக்கிக் கருவிகளில் இசைக்கப்பட்ட புரட்சிக் கீதங்களின் இன்னிசை ஆகியவை மட்டுமே வெளியை நிரப்பிக்கொண்டிருந்தன.

ஆற்றுப்படுகையில் மண் தோண்டி எடுக்க, மூடிக்கிடக்கும் பணி பாளத்தை எடுப்பது அவசியம். இருந்த போதும் தன் கொந்தாளத்தை  வீசுவதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக, இடுப்புவரை திறந்த மேனியுடன் நிற்கும் ஒரு அறுபது வயது மனிதர் வேலை செய்து கொண்டிருப்ப்பதைக் கண்டேன்.

இரவும், பகலும், இடைவிடாது, எட்டெட்டு மணி நேர வேலைகளில் சில சமயம் உறை நிலைக்கும் கீழாகி போன கடும் குளிரிலும், அடுத்தடுத்து பணியாற்றும் அணியினர் ஆற்றுப்படுகையை ஆழப்படுத்துகின்றார்கள், மண் கரைகள் எழுப்புகிறார்கள், ஆற்றுக்கு ஒரு புது படுகையை உருவாக்குவதற்காக பல துணை நதியை அழித்து வருகிறார்கள்.

மாவோவின் அறைகூவலுக்கு செவி சாய்ப்பதில் எத்தகைய வேலை முறைகளும் தொழிலாளிகளுக்கு ஏற்புடையனவாகிவிடுகின்றன. அவர்கள் தம் உடல் பாரத்தைக் கொண்டே வேரோடு மரங்களைச் சாய்த்து விடுகிறார்கள்.

இவர்கள் குடிசைகளிலோ அல்லது பணிக்காற்றைத் தடுப்பதற்காக சிறிய மண் சுவர்களாலும் வைக்கோலாலும் சூழப்பட்ட பெரிய கூடாரங்களிலோ வசிக்கிறார்கள். பெரிய பெரிய பானைகளில் ஆவி பறக்கும் உணவு, வேலை நடக்கும் இட்த்திற்கே கொண்டு வரப்படுகிறது

(மார்க்ஸ் முதல் மாவோ வரை, பக்கம் 193)

தோழர் ஸ்டாலின்ரசியாவிலும், சீனாவிலும் சோசலிச மக்கள் படைத்திட்ட சாதனைகள் தான் எவ்வளவு அருமையானது, லாபவெறி பிடித்தலையும் முதலாளித்துவவாதிகளின் சுரண்டலை ஒழித்துக்கட்டி, அடிமைகளாக்கப்பட்டிருந்த உழைக்கும் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும், அனைத்து மகிழ்ச்சியையும் வழங்கி நல்வாழ்வளித்த நவம்பர் புரட்சி தான் எவ்வளவு மகத்தானது!!. இரண்டரை கோடி மக்களை பலி கொடுத்து பாசிஸ்ட் இட்லரிடமிருந்து இந்த உலகை காப்பாற்றிய சோவியத் மக்களின் தியாகம் எவ்வளவு உயர்ந்தது. அந்த சோவியத்தையும், சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் சர்வாதிகாரம் என்றும், அதன் தலைவர்களை கொலைகாரர்கள் என்றும் அவதூறு செய்பவர்கள் யார் ? உழைக்கும் மக்களா ? இல்லை, கம்யூனிசத்தின் எதிரிகள் யாரோ அவர்கள் தான் இத்தகைய அவதூறுகளை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கில் செலவு செய்து பரப்பி வருகிறார்கள்.

ஏனெனில், கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் ஓட்டைக் குடிசையிலும், குப்பைத் தொட்டிகளிலும் வாழ்ந்து வரும் பல கோடி மக்கள் முதலாளிகள் மீது அதிகாரம் செலுத்துவார்கள். அப்போது அம்பானி என்கிற இரத்தக்காட்டேரி 5000 கோடி ரூபாய்க்கு மாளிகை கட்ட முடியாதல்லவா? உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்க முடியாதல்லவா? எனவே தான் கம்யூனிசம் குறித்த பொய்களையும், புளுகுகளையும் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவை அனைத்தையும் மேற்கண்ட உண்மைகள் அம்பலமாக்கியிருக்கின்றன.

கம்யூனிசம் தோற்றுப்போய் விட்டதென்றால் சின்னஞ்சிறிய நாடான நேபாளத்தைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சுவது ஏன்? வல்லரசாகப்போகிற இந்தியா அஞ்சுவது ஏன்? ஏனெனில், கம்யூனிசம் தோற்கவில்லை என்பது அதன் கையால் புதைகுழிகளுக்குள் தள்ளப்படப்போகிற இவர்களுக்கு நன்றாக தெரியும்.

முதலாளித்துவம் யாரைக்கண்டு அஞ்சி நடுங்குகிறதோ அந்த பூதம், கம்யூனிசம் என்கிற அந்த கோடிக்கால் பூதம் வந்தே தீரும், அது இவர்களுடைய அனைத்து அநீதிகளுக்கும் தீர்ப்புகளை வழங்கியே தீரும்!

கோடிக்கணக்கான மக்களுக்கான சொர்க்கத்தையும், சுரண்டல் கூட்டத்தின் மீதான ’சர்வாதிகாரத்தை’ யும் நமது நாட்டிலும் ஏற்படுத்த நக்சல்பாரி பாதையில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் இந்த நவம்பர் புரட்சி நாளில்.

அனைவருக்கும் நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள் !

___________________________

–    சர்வதேசியவாதிகள்
___________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்