privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?

ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?

-

தனது இரு மகன்களுடன் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெயின்ஸ் பாதிரியார் - அவரை படுகொலை செய்த இந்து மதவெறியன் தாராசிங்
தனது இரு மகன்களுடன் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெயின்ஸ் பாதிரியார் – அவரை படுகொலை செய்த இந்து பயங்கரவாதி தாராசிங்

ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர்.  இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 குற்றவாளிகளுள் மகேந்திரா ஹெம்ப்ராம் என்பவனின் தண்டனையை மட்டும் உறுதி செய்து, மீதி 11 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

ஒரிசா உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இம்மி பிசகாமல் உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.  “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் அந்தந்த சம்பவத்தின் உண்மை நிலை, சூழ்நிலையை பொறுத்தே அமைய வேண்டும்; இவ்வழக்கில் பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு, தாரா சிங்கின் தண்டனை குறைக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறது.  இவ்வழக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன?  அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.

இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ்.  இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது.  இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது.  நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது போல ஸ்டெயின்ஸ் பாதிரியாருக்கு ஒரு பாடம் புகட்டுவது மட்டும்தான் தாரா சிங்கின் நோக்கம் என்றால், அவர் தனது இரு குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஜீப்பைக் கொளுத்தியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது.  அவரை எழுப்பி மிரட்டிவிட்டு, ரெண்டு தட்டுதட்டிவிட்டுப் போயிருக்கலாம்.  ஆனால், தாரா சிங் தலைமையில் வந்த கும்பலோ, மனோகர்பூர் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், அக்கிராமத்தின் தகவல் தொடர்புகளைத் துண்டித்தனர்.  தீ வைக்கப்பட்ட ஜீப்பில் இருந்து அம்மூவரும் தப்பித்துவிடாதபடி ஜீப்பைச் சுற்றி நின்றுகொண்ட அக்குண்டர்கள், அம்மூவரும் கருகி இறந்தபின்தான் அக்கிராமத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.

ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதம் மாற்றும் பாதிரியார்கள், மதம் மாறிய பழங்குடியினரை மட்டுமின்றி, நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினர் மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை.  இந்தியத் தண்டனைச் சட்டங்களின்படி பயங்கரவாதக் குற்றமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டிய இக்கொலையை, நீதிபதிகள் சாதாரண கொலை வழக்காக நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.

ஒரு உயிரற்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், அப்பாவியான அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை அளிக்கத் தயங்காத உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்டு மூவரை உயிரோடு கொளுத்திக் கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல் கருணை காட்டியிருக்கிறது.  எப்பேர்பட்ட நடுநிலை! எப்பேர்பட்ட மதச்சார்பின்மை!

இப்படுகொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வாத்வா கமிசன், “1991-க்கும் 1998-க்கும் இடைபட்ட காலத்தில் ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் – படுகொலை நடந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் மாவட்டம் – குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இக்காலகட்டத்தில் கிறித்தவ மக்கள் தொகை அதற்கு முந்தைய காலத்தைவிட 575 எண்ணம்தான் அதிகரித்திருக்கிறது.  இது இயற்கையான உயர்வுதான்” எனக் குறிப்பிட்டுள்ளது.  ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ இந்த உண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மதம் மாற்றுவதைத்தான் அபாயகரமானதைப் போலத் தீர்ப்பு எழுதியுள்ளனர்.

‘‘பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்ற நீதிபதிகளின் சூக்குமமான  வார்த்தைகளுக்கு, “கிறித்தவர்கள் மருந்து கொடுத்து, கல்வி கொடுத்துப் பழங்குடியின மக்களை மதம் மாற்றுவது சட்டப்படி குற்றம்” என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கையைத்தான் பொழிப்புரையாக எழுத முடியும்.

இக்காவித் தீர்ப்பைக் கண்டித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவுடன், “பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” என்ற வரிகள் வரும் பத்தியைத் தீர்ப்பில் இருந்து நீதிபதிகள் நீக்கிவிட்டனர்.

இதை நீக்கியவுடன்,  ” தாரா சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வி வந்துவிடும் என்பதை உணர்ந்திருந்த நீதிபதிகள், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை அதிகரிக்கத் தேவையில்லை” எனத் தீர்ப்பைத் திருத்தியும் விட்டனர்.

தாரா சிங்கிற்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் நீதிபதிகள் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

600-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட மும்பக் கலவரம் நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன.  2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம் நடந்து 8 ஆண்டுகள் மறைந்துவிட்டன.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பார்த்தால், இக்குற்றச் செயல்களைப் புரிந்த இந்து மதவெறி பயங்கரவாதிகளுள் ஒருவருக்குக்கூட அதிகபட்ச தண்டனை அளிக்கவே முடியாது.

“பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்பதற்குப் பதிலாக, “மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையீடு செய்வதையும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பு தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.  முழுக்க நனைந்த பின்னும் முக்காடு போட்டுத் திரிவது   என்பது இதுதானோ!
__________________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2011
__________________________________________________