privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்கனடாவில் பெண் வாழ்க்கை - ரதி

கனடாவில் பெண் வாழ்க்கை – ரதி

-

உழைக்கும் மகளிர்தின சிறப்புப் பதிவு – 6

மகளிர் தினம்! ஒரு காதலர் தினம் போல் பெரும் கவனயீர்ப்பு, கருத்து முக்கியத்துவம் என்பவற்றை இந்த தினம் பெறுவதில்லை. இது பெண்களுக்குரிய தினம். பெண்கள் பாவப்பட்ட ஜென்மங்கள். எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள், அன்பைப் பொழியுங்கள் என்கிற சுயபச்சாதாப புலம்பல்கள் அல்ல இந்த எழுத்துகள். பிறப்பிலேயே மறுக்கப்பட்ட, சமூக அரசியல் நிர்ப்பந்தங்களால் பறிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளை மீட்பதற்கான ஓர் அடையாள நாள்.

ஆரம்பகால பெண்மீதான அடக்குமுறைகள் ஓர் ஆணுக்கு அடங்கியவளாய் பெண் தன்னை உருவாக்கிக் கொள்வது என்பதோடு ஆரம்பித்து, சமூகத்தில் பெண் என்பவள் ஆணின் “கெளரவம்” என்கிற வரை நீடித்தது. இதைத்தான் வள்ளுவனின் வாசுகி, படிதாண்டாப் பத்தினி, கொலையும் செய்வாள் பத்தினி என்றார்கள் காலங்காலமாய். இயற்கையோடும், இயங்கியலோடும் ஒவ்வாத உவமைகளை சொல்லியே பெண் மனம் மயக்கப்பட்டது. வார்த்தைகளின் மகுடியில் மயங்கிப்போன பெண்மனம் இயல்பாய் அடிமை விலங்கை தனக்குத்தானே பூட்டவும் கற்றுக்கொண்டது. இவாறாக, பெண் தனக்குத்தானே வரித்துக்கொண்டதும், சமூகத்தால் விதிக்கப்பட்டதுமான எழுதாத விதிகளோடும், அழுத்தங்களோடும் வாழவும், குடும்பத்தை கட்டிக்காக்கவும் அன்றுமுதல் இன்றுவரை நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.

என் பார்வையில் பெண்ணுக்கு இரண்டு விதமான விலங்குகள் பூட்டப்படுகின்றன; கண்ணுக்குத் தெரிந்ததும், தெரியாததுமாக. பெண் என்பவளும் காதல், திருமணம் என்கிற இயல்பான உணர்வுகளால் தீண்டப்ப்படும்போது, அது குறித்த கனவுகள், கற்பனைகளில் மூழ்கி தன்னைத்தானே சமூகவிதிகளோடு பொருத்திக் கொள்வதும், தனக்குரிய புதியதோர் அங்கீகாரத்தை தேடுவதும் இயல்பாய் நடந்தேறுகிறது. தனக்குத்தானே ஓர் விலங்கை பூட்டிக்கொள்கிறேன் என்பது பெண்ணின் கண்ணுக்கும், புத்திக்கும் சுலபத்தில் எட்டுவதில்லை.

கண்ணுக்குத் தெரிந்தே பெண்கள் மீது பூட்டப்படுவது “தாலி” என்னும் விலங்கு. தாலி என்பது ஓர் மரபு. ஆணும், பெண்ணும் தங்களை திருமணம் என்கிற பந்தத்தில் இணைத்துக் கொள்வதற்கான அத்தாட்சி. மனித நாகரிகம் வளர்ச்சியடைவதற்கு முன், சட்டங்கள், விதிமுறைகள் இயற்றப்படுமுன் மனிதன் திருமணத்தை அடையாளப்படுத்த கண்டுபிடித்தது. அதில் கூட சந்திரமதியின் தாலி அரிச்சந்திரனின் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்று சொல்லும் அபத்தங்கள்! பெண்ணை இழிவு செய்து, தாலியின் மகிமையை காப்பாற்றுவது தான் இலக்கியம், மரபு, கலாச்சாரம் என்றால் அதுகுறித்து பகுத்தறிவை பெண்கள் வளர்த்துக்கொள்வது தவிர்க்க முடியாததாகிறது.

திருமண பந்தத்தில் தாலி என்கிற சின்னம் மட்டுமே பெண்ணுக்குரிய எந்தவொரு சமூக, பொருளாதார பாதுகாப்பையும், உத்தரவாதத்தையும் வழங்கி விடுவதில்லை. இரண்டு மனங்களுக்கு இடையே உண்டாகும் வேறுபாடுகளை, இடைவெளியை தாலி என்கிற சின்னம் களைந்துவிடுவதுமில்லை. இங்கே திருமணத்தில்  தாலி தேவையா இல்லையா என்பதல்ல கேள்வி. தாலி என்கிற சின்னம் இரண்டு மனங்களை இணைக்கிறதா அல்லது மனிதர்களை இணைக்கிறதா என்பதே கேள்வி.

கனடாவில் உலகின் ஏறக்குறைய எல்லா நாடுகளிலிருந்தும் வந்து குடியேறுகிறார்கள். யாராயினும் தங்கள் தனித்தன்மைகளை பேண கனடிய சட்ட திட்டங்களில் அனுமதியுண்டு. ஈழம், இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே கனடாவில் பிறந்து வளர்ந்த அல்லது இங்கே நீண்டகாலமாக குடியேறி வந்து வாழ்ந்த பெண்களை திருமணம் செய்வது கிடையாது. பல ஆண்களும், சில பெண்களும் தங்கள் சொந்தநாட்டுக்குச் சென்று திருமணம் செய்து, பின்னர் கனேடிய குடிவரவு சட்டதிட்டங்களுக்கமைய தங்கள் துணையை இங்கே அழைத்துக்கொள்கிறார்கள்.

வாழ்க்கையின் ஆரம்ப நிலைகளில் எந்த குறை, நிறைகளும் கண்ணுக்கும், புத்திக்கும் பெரும்பாலும் எட்டுவதில்லை. மணிரத்னம் படத்தில் வரும், “புது வெள்ளைமழை பொழிகிறது…” என்கிற வகையில் வாழ்க்கை இனிக்கும். குறிப்பாக திருமணத்துக்குப் பின் தான் உடலுறவு என்கிற ஒன்றையே உய்த்தும், துய்த்தும் அறியும் பெண்ணுக்கு அந்தக் கணங்கள் போலவே வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களும் இருக்கும், இருக்கவேண்டும் என்கிற விருப்பமும், ஆவலும் இருக்கும்.

ஆனால், “தேனிலவு கட்டம்” (Honeymoon Phase) முடிய கொஞ்சம், கொஞ்சமாய் கணவனின் சுயரூபம் தெரியவர சில பெண்கள் மொழியும், வாழ்க்கையும் புரியாத அந்நிய தேசத்தில் நிர்க்கதியாகி நிற்கத்தான் செய்கிறார்கள். பெண்கள் மீதான வன்முறைக்கு கனேடிய சட்டத்தில் தண்டனை நிச்சயம், அதிலிருந்து தப்பமுடியாது என்று தெரிந்தாலும், தன் மனைவி தனக்கு இழக்கைப்படும் கொடுமையை வெளியே சொல்லமாட்டாள் என்கிற பெண்ணின் மடமைத்தனத்தை ஆண் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான். உடல், உள, பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கு மனைவி என்கிற பெயரில் பெண் பலியாக்கப்படுகிறாள். கணவன் எப்படி மனைவியை பாலியல் வன்முறை செய்ய முடியும் என்று சிலர் கேலியாக கேள்வி கேட்கக் கூடும். மனைவியே ஆனாலும் ஓர் பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளை பாலியல் ரீதியாக கூட துன்புறுத்தக்கூடாது என்பது தான் சட்டம்.

கனடாவே என்றாலும் பெண்கள் கணவன் என்கிற ஆண் மூலம் எப்படி கொடுமைப்படுத்தபடுகிறார்கள் என்பது பற்றி நிறையவே சொல்லலாம். குடும்ப வன்முறை (Domestic Violence) என்பதால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்று சிலர் விதண்டாவாதம் செய்யலாம். எத்தனையோ அறிக்கைகள், ஆய்வுகள், உண்மைக்கதைகளை கேட்டபின் தெரிந்துகொண்டேன்; குடும்ப வன்முறையில் பெண்களே மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.

சில கணவன்மார்களுக்கு மனைவியை ஒதுக்கி வைக்க காரணங்கள் தாராளமாகவே கிடைக்கிறது. கனேடிய சட்ட திட்டங்களுக்கு அமைய ஸ்பொன்சரில் ஒருவர் வாழ்க்கைத் துணையை அழைத்து வந்தால் குறைந்தது பத்து வருடங்களுக்கு அவரே தன வாழ்க்கைத் துணைக்குத் தேவையான எல்லா செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டும். இல்லையென்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இது போன்ற, எங்கே தங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பி விடுவார்களோ என்கிற பயம் ஒருபுறமும், தன் பிறந்த வீட்டை எப்படி சமாளிப்பது என்கிற கிலியிலுமே பல பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்வதில்லை.

சில பெண்கள் மனநோயாளிகளாகவும் ஆகியிருக்கிறார்கள் என்று பெண்கள் அமைப்புகள் சொல்கின்றன. இதன் காரணமாக குழந்தைகளை, குழந்தைகள் காப்பக அமைப்புகள் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறார்கள். எப்படியோ, கட்டிய கணவனின் கொடுமைகளை இனியும் பொறுக்க முடியாது என்கிற நிலை வரும்போது கணவனை விட்டு விலகிச் சென்று தங்கள் வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப நிறையவே சிரமப்பட்டு பலர் வெற்றியும் அடைகிறார்கள். .

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பெரும்பாலும் பெண்களுக்குரிய தற்காலிக வதிவிடங்களில் (Shelters) தங்கவைக்கப்படுகிறார்கள். எதுவுமே இல்லாமல் பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இந்த நாட்டில் இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ, அவர்களின் வாழ்க்கையை மீளவும் அவர்களின் சொந்த முயற்சியிலேயே கட்டியெழுப்ப நிறையவே அரசின் திட்டங்கள் இருக்கின்றன. வாழ்க்கையில் எந்தப் பிரச்சனை வந்தாலும் பெண்கள் பெரும்பாலும் பிறந்த வீட்டை நோக்கியே ஓட நினைப்பார்கள். ஆனாலும், எல்லாப் பெண்களுக்கும் அந்த ஆதரவு கிடைக்குமா நிச்சயமாக தெரியவில்லை. ஒரு முக்கிய காரணம் பெண் கணவனைப் பிரிந்து வந்தால் அது பெரும்பாலும் பெண்ணின் பிழையாகவே பார்க்கப்படுகிற ஓர் குறைபாடு எம் சமூகத்தில் நிலவுகிறது.  அதன் காரணமாகவே சில பெண்கள் இவாறான பிரச்சனைகள் வரும்போது பிறந்தவீட்டை தவிர்க்கிறார்கள்.

தனிமனித சுதந்திரங்கள் பறிக்கப்படும்போது  அது சார்ந்த சமூக கட்டமைப்பு அர்த்தமற்றதாகிப்போகிறது. கணவன் என்கிற உறவும், பெண்ணுக்கு விரோதமான சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பெண்ணுக்கு அபத்தமாய் தோன்றினால் அது அவர்கள் சமுதாயப் பிறழ்தல் ஆகவும் உருவாக காரணமாகிறது. அப்போது பாதிக்கப்படுவது அந்தப் பெண் மட்டுமல்ல அவளைச் சார்ந்து வாழும் குழந்தைகளும் தான்.

பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ்வது, விவாகரத்து கோருவது என்பது சமூகப் பிரச்சினையாய் மட்டும் பார்க்கப்படாமல், அது தனிமனிதப் பிரச்சனையாகவும்  பார்க்கப்பட்டால் தான் அதற்குரிய தீர்வை எட்டமுடியும் என்பது என் கருத்து. தாலி என்கிற கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்கிற வேலிகள், தடைகளாக உருவெடுக்காமல் பெண்களும் சுதந்திரமாய் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், பெண்களுக்கு கல்வி, சுயமாய் முடிவெடுக்கும் திறன் மற்றும் தைரியம் என்பன வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதேவேளை, பெண்ணுரிமைகள் அரசியல் ரீதியில் வென்றெடுக்கப்பட வேண்டுமானால் அதற்குரிய பலம்வாய்ந்த அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். வெறும் தேர்தல் அரசியல் ஜனநாயக ஒற்றை வாக்கு என்கிற ஒன்று மட்டும் பெண்ணுரிமையை அரசியல் ரீதியாகப் பெற்றுக் கொடுக்காது. பலம் வாய்ந்த அமைப்புகளாயும், அதனோடு தங்களை இணைத்துக்கொள்வதன் மூலமே பெண்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் முடியும்.

____________________________________________________________

ரதி

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010