privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்கப் பஞ்சாயத்து, கவுரவக் கொலை காட்டுமிராண்டிகள்!

கப் பஞ்சாயத்து, கவுரவக் கொலை காட்டுமிராண்டிகள்!

-

சாதி வெறிபிடித்த கப் பஞ்சாயத்தால் கொல்லப்பட்ட மனோஜ்-பப்லி
சாதி வெறிபிடித்த கப் பஞ்சாயத்தால் கொல்லப்பட்ட மனோஜ்-பப்லி

ப் சாதி பஞ்சாயத்து தீர்ப்பினால் கொலை செய்யப்பட்ட மனோஜ் மற்றும் பப்லியை யாரும் மறந்திருக்கமுடியாது. அரியானா மாநிலத்தின் கரோரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மனோஜ் மற்றும் பப்லி. இருவரும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். காதலித்து திருமணம் புரிந்து கொள்ளவும் முடிவெடுத்தனர். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

அவர்கள் திருமணம் தொடர்பாகக், கூடிய கப் பஞ்சாயத்து மனோஜ் மற்றும் பப்லியின் திருமணம் செல்லாது என்றும் அவர்கள் பிரிய வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. நேரடியாக இருவருக்கும் உறவுமுறை இல்லாவிட்டாலும், ஒரே கோத்திரத்தில்  பிறந்த இருவரும் சகோதர உறவு என்பதுதான் காரணம்..

போலீசை அணுகிய பப்லி மற்றும் மனோஜ், கோர்ட்டுக்குச் சென்று திரும்பும் வழியில், கடத்தப்பட்டு மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். சில நாட்கள் கழித்து இருவரின் பிணங்களும் ஒரு கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. மனோஜின் தாய் சந்தரபதி கொடுத்த புகாரினால் பப்லியின் உறவினர்கள் நான்கு பேர் மீதும், கப் பஞ்சாயத்து தலைவர் கங்காராஜ் மற்றும் டிரைவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதோடு இவ்விவகாரம் பெரும் விவாதத்தையும் கிளப்பியது.

இக்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் கேட்டுக்கொண்டார். கடந்த 2010, மார்ச் மாதம் இந்த வழக்குக்கு தீர்ப்பும் அளிக்கப்பட்டது. அதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று சில வக்கீல்கள் கருத்து தெரிவித்தனர்.

அந்த தீர்ப்பு இதுதான், கொலை செய்த குடும்ப உறுப்பினர்களுக்கு மரண தண்டனையும் கொலைக்குக் காரணமான கங்காராஜுக்கு ஆயுள் தண்டனையும் கடத்திச்சென்ற டிரைவருக்கு ஏழு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதோடு அசட்டையாக செயல்பட்ட்ட போலிசார் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு, சாதிப்பிடியில் சிக்கியுள்ள  இந்திய நீதிமன்றங்களின் வரலாற்றிற்கு சற்றும் மாறாமல் தற்போது திருத்தி எழுதப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியாணா உயர்நீதி மன்றம் கடந்த 2011 மார்ச் மாதம் கொலைக்குற்றவாளிகள்  நான்கு பேருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியளித்ததோடு, முக்கிய குற்றவாளியான கங்காராஜையும் சதீசையும் விடுதலையும் செய்திருக்கிறது.

இந்த செய்தி, மனோஜின் தாய் சந்தரபதிக்கு மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் தந்திருப்பதாகக் கூறூகிறார், சந்தரபதியின் ஆதரவாளர் ஒருவர். என்ஜிஓ-கள்  மற்றும் ஊடகங்களின் தகவல்கள்படி, ஒரே கோத்திரத்தில் மணம் புரிந்ததற்காக மட்டும், கப் பஞ்சாயத்துகள்  ஒரு வாரத்துக்கு நான்கு பேரை கொலை செய்கின்றன. தாலிபான்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக அழிக்க  இந்தியா முழு ஒத்துழைப்பு நல்கும் என்று  எங்கெங்கோ சென்று முழங்கி வருகிறார்  மன்மோகன்.

ஆனால் பாராளுமன்றத்துக்கு சற்று அருகிலேயே இந்த கப் பஞ்சாயத்து கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன!

கப் பஞ்சாயத்து - வெறிபிடித்தவர்களின் சாதிமன்றம்
கப் பஞ்சாயத்து – வெறி பிடித்தவர்களின் சாதிமன்றம்

ஒவ்வொரு சாதிக்கும் இங்கு சங்கம் இருப்பதுபோல அங்கு பஞ்சாயத்துகள் இருக்கின்றன. அதனை கப் பஞ்சாயத்து என்றும் கூறலாம். அல்லது கட்டப்பஞ்சாயத்து என்றும் கூறலாம். அந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் வைத்ததுதான் சட்டம். இந்திய சட்டங்கள் எதுவும் அங்கு செல்லுபடியாவதில்லை. சொல்லப்போனால், இந்திய சட்டத்தையே ‘திருத்தி’ எழுத முயன்று கொண்டிருக்கின்றன, இந்த சாதி சங்கங்கள்.

பல்வேறு கோத்திரங்களின் கப் சங்கங்கள் சேர்ந்து சர்வ கப் பஞ்சாயத்தை அமைத்திருக்கின்றன. இந்தியாவில் கப் பஞ்சாயத்துகள் கி.பி 600-ஆம் ஆண்டிலிருந்தே இயங்கிக்கொண்டிருப்பதாக வரலாறு கூறுகிறது.  ஆரம்பத்தில் ஒவ்வொரு  கப் பிரிவினரையும் பாதுகாக்க தனித்தனி பஞ்சாயத்துகள் இருந்திருக்கலாம். ஒவ்வொரு கப்பும், பொதுவாக 84 கிராமங்களை உள்ளடக்கியது.

அந்த கிராமங்களிலிருப்பவர்கள் ஒரே சாதியின் உட்பிரிவினராக இருப்பார்கள். இது போன்ற 300 உட்பிரிவு கப் பஞ்சாயத்தினரை உள்ளடக்கியது சர்வ கப் பஞ்சாயத்து.  அரியானா, பஞ்சாப்,  உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த கிராமங்கள், தோராயமாக 25,000 கிராமங்கள் இந்த சர்ச கப் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தனித்தியங்கும் வல்லமை பெற்ற இந்த கப் பஞ்சாயத்துகள் திக்தத் எனப்படும் ஆணைகளை பிறப்பிக்கும்.

கொலை செய்வதற்கான ஆணைகள், கற்பழிப்புகள், ஆட்கடத்தல்கள் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சினைகள் முதலியன அதில் அடங்கும்.  பெரும்பாலும் குடும்பத்தின் கவுரவம் மற்றும் சாதிப்பெருமையே இதற்கான காரணங்களாக அமையும். இதற்கு அதிகம் இலக்காவது பெண்களே.

அரியானாவில்தான் பெண்சிசுக் கொலை மிகவும் அதிகம் என்பதை இங்கு நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். பழைமையில் ஊறிப்போன இந்த கப் பஞ்சாயத்துத் தலைவர்கள் வைப்பதே சட்டம். உள்ளூர் சட்டமும், போலீசும் இதற்கு அடிபணிவதே வாடிக்கை.

மேலும், போலிசும், கப் பஞ்சாயத்தினரை சேர்ந்தவர்களாகவே இருப்பதால் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதில்லை. இப்படி, ஒரே உட்பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் மனோஜூம் பப்லியும். ஒரே கோத்திரத்தில் பிறந்துவிட்டால் அவர்கள் சகோதர உறவுமுறையினர் என்பதால் அவர்களை கொலைச் செய்ய உத்தரவிடுகிறார் கப் பஞ்சாயத்துத் தலைவர் கங்காராஜ்.

பப்லியின் குடும்பத்தினரும் பப்லிக்கு விசம் கொடுத்தும் மனோஜை அடித்தும் கொடூரமாகக் கொலை செய்கின்றனர். இது வெளிச்சத்துக்கு  வந்த ஒருசில கவுரவக்கொலைகளில் முக்கியமானதொன்று.

இன்னும் வெளியே சொல்லப்படாத எண்ணற்ற கொலைகள் மவுனமான முறையில் நடந்தபடி இருக்கின்றன. பெரும்பாலும் அவை பெற்றோராலும் குடும்பத்தினராலுமே நடத்தப்படுகின்றன. மேலும், அக்கொலைகள் மூடி மறைக்கப்படுகின்றன. கொலையுண்டவர்களின் பிரேதங்கள் வீட்டுக்கு முன்பாக மரங்களில் தொங்க வைக்கப்படும்.

காதலர்களுக்கு மரண பயத்தை கிளப்பும்படியும், இளந்தலைமுறைக்கு படிப்பினையாகவும், தங்கள் பிள்ளைகளை கொலை செய்த குடும்பத்தினரை, ’தீயனவற்றை அழித்த  வீரர்களாக’ போற்றப்படும் கொடுமையும் நடக்கும்.

ஒரே கோத்திரத்தில் மணம் புரிந்த  தங்கள் பிள்ளைகளை யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிடுவது கப் பஞ்சாயத்துக்கு காட்டும் விசுவாசமென்றும் கூறுகிறார் கப் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒருவர். இதிலிருந்தே கப் பஞ்சாயத்துகளைப் பற்றி கற்பனைச் செய்து கொள்ளலாம். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது தவறு, அந்த தவறுக்கு மரண தண்டனையே சரியென்று கிராமத்தினர் நினைக்கின்றனர்.

கொலை செய்யத்தூண்டும் கப் பஞ்சாயத்தினரோ கொலை செய்பவர்களோ கிராமத்தினருக்கு ஒரு போதும் கொலையாளிகளாகவோ வில்லன்களாகவோ தோன்றியதில்லை.

இப்படித்தான் மனோஜ் மற்றும் பப்லியின் கொலையும் கவுரவமாக எண்ணப்பட்டது. சகோத உறவினர் மணம் செய்து கொள்ள முடியாது. சட்டமும் நீதிமன்றமும் அதனைப் புரிந்து கொள்வதில்லை. பெண்ணின் உறவினர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதால் என்ன பயன்?

அந்த திருமணம் மிகவும் தவறானது, நீதிமன்றத்தின் தீர்ப்பும் தவறானது என்ற எண்ணமே கிராமத்தினருக்கு இருந்தது. சாட்சி சொல்லவும் யாரும் வரவில்லை. மீடியாக்களின் பிரச்சினைகளுக்குப் பிறகே போலீசு சந்தரபதியின் வழக்கை பதிவு செய்தது. மனோஜின் உறவினர்கள் கைது செய்யப்பட்டபோது  தீர்ப்பினால் குற்றவாளிகளின் குடும்பங்கள் பாதிக்கப்படுமென்று உள்ளூர் செய்திதாள்கள் எழுதின. ஆனால் மனோஜின் குடும்பம் பாதிக்கப்பட்டதை மறந்துவிட்டன,போலும்!

கிராமத்தினருக்கு வயல்வெளிகளைத் தாண்டி வெளி உலகம் சற்றும் பரிச்சயம் இல்லை. இந்த கப் பஞ்சாயத்து இந்துக்கள் பெரும்பாலானோர் சிறு விவசாயிகள். வளர்ந்துவரும்(!) இந்தியப் பொருளாதாரத்தால் கைவிடப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள். இன்றைய நிலையில் விவசாயம் இவர்களுக்கு பெரும் பலனை தராத பொய்த்துப்போன தொழில்.

சாதிப்பெருமையும் ஆதிக்கசாதி திமிரினாலும் வேறு தொழில்களை மேற்கொள்ளவும் மறுக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அப்படி மீறினாலும் பிழைப்பதற்கு வேறு தொழில் எதுவும் இல்லை. தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயமாக்கத்தின் மூலம் இவர்களது வாழ்க்கைநிலை மேலும் கவலைக்குரியதாக தள்ளப்பட்டிருக்கிறது.

கப் பஞ்சாயத்தினர் சொல்வதே வேதவாக்கு. மேலும், இந்த குடும்ப கவுரவத்தை காப்பதற்கு பெண்னே முக்கியமான கருவி. இந்த மனோபாவத்திற்கு மட்டும் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை. பெண் உயர்ந்த சாதியாகவும், ஆண் தாழ்ந்த சாதியாகவும் இருந்துவிட்டால் தண்டனைகள் காட்டுமிராண்டித்தனத்தை மிஞ்சி விடும். பார்ப்பன இந்து மதவெறிக்கு பலியாவது காதலர்கள்தான்.

சென்ற வருடத்தில், கவுரவத்திற்காக ஒரு பெண் பத்திரிக்கையாளர் தனது குடும்பத்தாலே கொலை செய்யப்பட்டதை அறிந்திருப்பீர்கள். இத்தனைக்கும் அந்தப்பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் உயர் படிப்பு படித்தவர்கள், பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள். அந்தப் பத்திரிக்கையாளர் தாழ்ந்த சாதி ஆணை காதலித்ததே அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம்.

படித்த படிப்பும், பதவியும் சாதியத்தை அவர்களது மனங்களிலிருந்து மாற்றிவிட்டதா என்ன?

இந்த சாதி மனோபாவம் நீதிமன்றங்களையும் விட்டுவைக்கவில்லை என்பதற்கு மனோஜ் பப்லி வழக்கின் தீர்ப்பும் ஒரு சான்று. இந்த தீர்ப்பு பல கங்காராஜுகளுக்கு சட்டப்பூர்வமாக கொலை செய்யும் அங்கீகாரத்தை வழங்கியிருக்கும் தீர்ப்பு.

கவுரவக்கொலைகள் போன்ற குற்றங்களுக்கு எப்படிப்பட்ட தண்டனையை வழங்கியிருக்கவேண்டும்? மாறாக, முன்னேறிய சமூகத்தில் இதற்கெல்லாம் இடமில்லை என்பதாக எப்படி உரத்துச் சொல்லியிருக்க வேண்டும்? மாறாக, சென்ற வருடத்தின் தீர்ப்பு ஏற்படுத்திய நம்பிக்கைகளை முற்றாக குலைத்து போட்டிருக்கிறது தற்போது உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு.

எத்தனையோ ஆபத்துகளுக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து சாதி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றிருக்கிறார்கள். சொல்லப்போனால், சந்தரபதிதான் அரியாணா மாநிலத்தில் முதன்முதலாக கவுரவக் கொலைகளை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர். இந்நிலையில் கப் பஞ்சாயத்து தலைவர் கங்காராஜின் விடுதலையானது எத்தனைபேரின் நம்பிக்கையை குலைத்து போட்டிருக்கிறது!

சொல்லப்போனால், சந்திரபதியின் வாழ்க்கை தற்போது பேராபத்தில் இருக்கிறது. விடுதலை செய்யப்பட்ட கொண்டாட்டத்தில் இருக்கும் கங்காராஜ் இன்னும் எத்தனை கவுரவக்கொலைகளை சட்டத்தைப் பற்றி சற்றும் பயமின்றி, தைரியமாகச் செய்யப்போகிறானோ? இனி பாதிக்கப்பட்ட பெண்கள், சாதிவெறியும், ஆணாதிக்கமும் நிறைந்த கப் பஞ்சாயத்து அநீதியை எதிர்த்து நிற்பார்களா?

அல்லது  நீதிமன்றத்தையோ போலீசையோதான் நாடிவர  தைரியம் கொள்வார்களா?

கங்காராஜுக்கு ஒரு அரசியல் பின்புலம் இருப்பதும் இன்னொரு காரணம்.  இங்கு இருக்கும் வாக்கு வங்கி காரணமாக எந்த அரசியல்வாதிகளும் கப் பஞ்சாயத்தினரை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. சாதி இந்துக்களுக்காக சட்டத்தை வளைக்கவும் அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

தேர்தலின்போது எந்த வேட்பாளரை ஆதரிக்கவேண்டுமென்று கப் பஞ்சாயத்தினர் கூறுகிறார்களோ அவர்களுக்கே மொத்த சமூகமும் வாக்களிக்கிறது. சில அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே கப் பஞ்சாயத்துகளை ஆதரிப்பதாக சொல்கின்றனர். தங்கள் ஓட்டு வங்கியை இழக்க விரும்பாத அரசியல்வாதிகள் கப் பஞ்சாயத்தை ஆதரிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இதில் சித்தாந்த ரீதியாக பா.ஜ,க இந்த கப் பஞ்சாயத்து காட்டுமிராண்டித்தனத்திற்கு நெருக்கமாக இருக்கிறது.

இன்று கங்காராஜையும் கொலையாளிகளையும் விடுவிக்க முடியுமெனில், கப் பஞ்சாயத்தினருக்கு எதிரான சட்டங்களோ மசோதாக்களோ இன்னமும் எந்த வடிவத்துக்கும் வரவில்லையென்றுதானே பொருள்?

சட்ட அமைச்சரும்,மாவோயிஸ்டுகளால் பல பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று நயவஞ்சகமாகக் கதறும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கப் பஞ்சாயத்துக்கு கொலைகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது அன்னா ஹசாரேதான் கவுரவக் கொலைகளுக்கு எதிராக கப் பஞ்சாயத்தினருக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பாரா? மாறாக, சாதி இந்துக்களின் கோரிக்கைக்கு அல்லவா அதிகார வர்க்கம் மறைமுகமாக செவிசாய்க்கிறது?

அரியாணாவின் முதலமைச்சரும் இவ்விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டார். ”கவுரவக்கொலைகள் சமூகப்பிரச்சினை, இதைப்பற்றிய எந்த முடிவை எடுக்கவும் சமூகத்திற்கு உரிமை இருக்கிறது” என்று முடித்துக்கொண்டார். எந்த அரசியல் கட்சியும் கவுரவக்கொலைகளை பற்றி பேசக்கூட தயாராக இல்லை. காங்கிரஸ் எம்.பி நவீன் ஜிந்தால் வெளிப்படையாகவே கப் பஞ்சாயத்தினருக்கு தனது ஆதரவை வழங்கியிருக்கிறார்.

இந்த தைரியத்தில்தான், கப் பஞ்சாயத்தினர் இந்திய திருமண சட்டத்தில் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக்கொள்வதை சட்டரீதியாகவும் தடுக்கும்படி திருத்தங்கள் கொண்டுவர கூறுகிறார்கள். தங்களிடம் ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்களிடமும் அதையே வலியுறுத்துகிறார்கள்.இப்போது புரிந்திருக்குமே, கங்காராஜின் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கும் ரகசியம்!

இந்த பின்னணியில்தான், கொலையாளிகள் நான்குபேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக மாறியிருக்கிறது. முக்கிய குற்றவாளியும் விடுதலை செய்யப்படுகிறார். இந்தத் தீர்ப்பு, சாதிக்கு நீதிமன்றங்களும் விதிவிலக்கல்ல என்பதைத்தான் காட்டுகிறது!

இந்தியா அதாகி விட்டது இதாகி விட்டது என்றும் சொல்லப்படுவதை தாண்டி, சற்று நிதானமாக உரித்து பார்த்தால் காணக்கிடைப்பது இதுதான் – பார்ப்பனிய சாதியமைப்பும், அதைப் பாதுகாக்கின்ற அரசு, அரசியல், நீதிமன்றங்களும்தான் இந்த வட இந்தியக் காட்டுமிராண்டித்தனத்தின் பாதுகாலவர்கள். சொந்த நாட்டு காதலர்களைக்கூட காப்பாற்ற வக்கில்லாத இந்த நாடுதான் 2020இல் வல்லரசாகப் போகிறதாம்!

__________________________________________

– சந்தனமுல்லை
__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: