Thursday, May 1, 2025
முகப்புசெய்திசினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது…

-

cinema-thirai-copy

நூல் : சினிமா திரை விலகும்போது..

புதிய கலாச்சாரம் இதழில் வந்த திரைப்பட விமரிசனங்கள், பிப்ரவரி, 2004.

நூலின் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

தமிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகத் திரையுலகின்பால் கொண்டிருக்கும் உணர்ச்சிகரமான ஈடுபாடு என்பது, 365 நாட்களும் திரையுலக மாந்தர்களின் நிழல் மற்றும் நிஜக் கதைகளைக் கண்டு, கேட்டு, படித்தும்தான் கழிக்க முடியும் என்றாகிவிட்து. பொங்கலும், தீபாவளியும் ஏன் அரசு விழாக்களான குடியரசு, சுதந்திர தினங்கள் கூட வெள்ளித் திரையின்றிக் கொண்டாட முடிவதில்லை. திரையுலக் கிசுகிசுக்களைப் படிக்கும் வழக்கம் நமது மக்களின் வாசிப்பு முறையையே மாற்றி விட்டது. செய்தி ஊடகங்களும் அரசியல் – சமூகச் செய்திகளைச் சினிமா போல சூடு குறையாமல் பரபரப்புடன் விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் திரைப்பட விமரிசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாலும், சினிமா மீது சமூக நோக்கிலான விமரிசனக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதையே தமிழ்ப் பத்திரிகைகள் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு திரைப்படத்தில் விறுவிறுப்பு இருக்கிறதா, இல்லையா என்ற மலிவான ரசனையைத்தான் குமுதம், விகடன் முதலான வணிகப் பத்திரிகைகள் விமரிசனமென்ற பெயரில் கற்றுத் தருகின்றன. இதை ‘ தினத்தந்தி ‘ பாணி விமரிசனம் என்று தரங்குறைந்ததாகக் கருதும் சிறு பத்திரிகைகளோ, சினிமா என்ற அறிவியலின் தொழில் நுட்பங்கள் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்று தமது விமரிசனப் புலமையைப் பறைசாற்றுகின்றன. முன்னது ரசிகனது கைதட்டலையும், பின்னது படைப்பாளியின் ‘ மேதைமையையும் ‘ வியந்தோதுகின்றன.

எமது விமரிசனங்கள் இவ்விரண்டிலிருந்தும் வேறுபாடுகின்றன. ஒரு இயக்குநரின் வாழ்க்கை குறித்த கண்ணோட்டம், அது காதல், குடும்பம், தேசபக்தி, மதநல்லிணக்கம் என எதுவாக இருந்தாலும் சினிமா என்ற முன்னேறிய கலையின் மூலம் யாருடைய நலனுக்காக, எப்படி வெளிப்படுகிறது, ஒரு ரசிகனை உணர்ச்சிவசப்படுத்துவதன் மூலமாக எவ்வாறு பலவீனமாக்குகிறது என்பதைத்தான் எமது விமரிசனங்கள் கண்டு பிடிக்க விரும்புகின்றன. முக்கியமாக ஆளும் வர்க்கக் கண்ணோட்டம் ஒரு இயக்குநரின் அற்பவாத உணர்ச்சி என்ற ஃபார்முலாவில் குழைக்கப்பட்டு, ஒரு ரசிகனின் சமூகக் கருத்தை மறைமுகமாகப் பாதிப்பதுதான் சினிமாவின் பலம். இந்த ரசிகர்களில் சாதரண நபர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அறிவுஜீவி ரசிகர்களும், இன்னபிற அறிவாளி, பேராசிரியப் பெருமக்களும் உண்டு.

அதனால்தான் எம்மால் விமரிசனம் செய்யப்பட்ட படங்கள் பல இவர்களால் பாராட்டும், பிரிசும் கொடுத்துப் புகழப்பட்டன. பம்பாய், மகாநதி, வேதம் புதிது, அழகி இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். அவ்வகையில் எமது விமரிசனப் பார்வை தமிழில் தனித்து நிற்கின்றன. அதேசமயம் எந்த அளவுக்குத் தனித்து நிற்கின்றனவோ அந்த அளவுக்கு மக்கள் நோக்கிலான ஒரு சமூகக் கண்ணோட்டத்தைக் கூர்மையாக உருவாக்கியும் வருகின்றன.

செல்வாக்குமிக்க திரையுலக ரசனையிலிருந்து மக்களை மீட்டெடுத்து புதிய ஜனநாயகப் பண்பாட்டை, அதன் உண்மையான அழகை அடையாளம் காட்டுவதற்கு இவ்விமரிசனங்கள் உதவி செய்யும். அவ்வகையில் தமிழ் மக்கள் இசைவிழாவின் பதினொன்றாம் ஆண்டில் இந்நூல் வெளிவருவது பொருத்தமானதே. புதிய கலாச்சாரம் ஏட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக ஹாலிவுட் முதல் தமிழ்த் திரையுலகம் வரை பல படங்கள் மீது வெளியான இவ்விமரிசனங்கள், எந்த ஒரு திரைப்படத்தையும் சமூக நோக்கிலிருந்து அணுகுவதற்கு வாசகருக்குப் பயனளிக்கும்.

– ஆசிரியர் குழு, புதிய கலாச்சாரம், பிப்ரவரி, 2004

நூலில் இடம்பெற்ற விமரிசனங்கள்:

மகாநதி‘: மகாநதி அல்ல கானல்நீர்

வீடு: ஒரு நடுத்தர வர்க்க கனவு

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை: கூடி வாழ்வதில் லாபமில்லை, பிரிந்து போவதில் நட்டமில்லை!

காதல் கோட்டை, காதல் தேசம் : கவலைப்படு சகோதரா!

காதலுக்கு மரியாதை : காதலுக்கு அவமரியாதை

அழகி : ஒரு அற்மனிதனின் அவலம்!

அஞ்சலி: அனுதாபத்திலும் ஆதாயம் தேடுகிறார் மணிரத்தினம்

ரோஜா‘ அரசாங்கச் செய்திப் படம்!

வேதம் புதிது

தாக்கரேயின் ஆசிபெற்ற மணிரத்தினத்தின் பம்பொய்

ஜென்டில்மென்: 21ஆம் நூற்றாண்டின் சாணக்கியன்

தமஸ் ‘ இருளிலிருந்து ஒளி பிறக்கட்டும்!

பாரதி : பாரதி அவலம்

இருவர்: இருவரின் வெற்றி! மணிரத்தினத்தின் தோல்வி !

ஹேராம் : கதையா? வரலாறா?

அன்பே சிவம்: சி.பி.எம்இன் திரை அவதாரம்

சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை!

ராம்போ : ஒரு ஏகாதிபத்தியக் கனவு!

பொதெம்கின், டைட்டானிக் : வரலாற்றுக் கப்பலும் வரவுக் கப்பலும்

ஹாலிவுட் : பிரம்மாண்டமான பொய், கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு

பி.பி.சி செய்திப்படம்: சாயம் பூசப்பட்ட குழந்தைகள்: பிஞ்சுக் குமரிகள்

தீக்கொழுந்து : உருவாகிய கதை

இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 – 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன்  புதிய கலாச்சாரம் அலுவலகத்தில் பெற முடியும். முகவரி,

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876