privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா?

உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா?

-

ம், நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் “உலகக் கோப்பை” தொலையட்டும், அதற்கான விழாக்கள் தொலையட்டும், அரசுகளால் அந்த வீரர்களுக்கு பரிசாக வழங்கப்படும் இலவச நிலங்களும், கோடிக்கணக்கான ரூபாய்களும் தொலையட்டும், ஏன்? இந்த “விழாக்கள்” நடக்கிற இடத்திலிருந்து சில கி.மீ தூரங்களில் எனது உணவுக்கு வழிவகுக்கும் உழவர்கள் மாண்டு கொண்டிருக்கும் போது, நான் எப்படி காலன் கணக்கில் பீரும், மதுவும் அருந்திக் கொண்டு குதியாட்டம் போட முடியும்.

உங்களுக்குத் தெரியுமா, 9 சதவீத வளர்ச்சியுடன் அடுத்த பொருளாதார வளர்ந்த நாடு என்று புகழப்படும், இந்த மிளிரும் நாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக  47 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது.

கடந்த மாதம், மார்ச் 5-ம் நாள், வெள்ளிக்கிழமை மாலை பெங்களூருவின் நீர் நிரம்ப வேண்டிய இடங்களிலெல்லாம் வழிந்து கொண்டிருக்கும் போது, காதைச் செவிடாக்கும் பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் வானை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, ஆடம்பர விடுதிகளில், பாரிஸ்டாசில் உட்கார்ந்து கொண்டு உலகக் கோப்பையில் இந்தியாவின் சந்தர்ப்பத்தை பற்றி சுவாரசியமாய் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அதே பெங்களூருவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் சுவாமிகவுடா, வசந்தம்மா என்ற விவசாய ஜோடிகள் அவர்களது இரண்டு குழந்தைகளை நிற்கதியாய் விட்டுவிட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஏன் அவர்கள் இதைச் செய்தார்கள்?  அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்களா? இல்லை. அவர்கள் குடிகாரர்களா? இல்லை. அவர்களுக்கு தீராத வியாதியா? இல்லை. பிறகு ஏன்? ரூ  80 ஆயிரம் கடன் வாங்கியது சிறிது சிறிதாக கூடி ஒரு லட்சத்தி இருபதாயிரம் வரை உயர்ந்த கடனாகக் கட்ட இயலாமல் போனதே காரணம் (இது கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு ஜோடியின் ஒரு மாத ஊதியம், அவர்கள் 2 அல்லது 3 மாதங்கள் கடனுக்கு கட்டும் மாத தவணை)

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் அந்தக் கடனை தங்களால் எப்போதும் திரும்பக் கட்ட இயலாது என்று, அவர்கள் பாதிப்பிற்குள்ளானார்கள்.  அரசாங்கத்தாலும் பாதிப்படையச் செய்யப்பட்டார்கள்.  30 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கு (பட்டு) சில்க்-ற்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்தது இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்.  அவர்கள் ஏற்கனவே நலிந்து போன பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள்.  இந்த இறக்குமதி வரிச் சலுகையால் சீனாவிலிருந்து மலிந்த விலைக்கு பட்டு முதலான பொருட்கள் நமது நாட்டின் சந்தையில் வந்து குவியும், நமது விவசாயிகள் நிற்கதியாய் நிற்பார்கள்.

கடந்த 15 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 17 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  உங்களால் நம்ப முடிகிறதா? நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த உண்மை தெரியாது. ஏன்? உலகத்திலேயே மிகப்பெரிய ஊடகம் என்று போற்றப்படும், இந்தியாவின் ஊடகங்கள் இத்தகைய தகவல்களை கொடுப்பதில், சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.  ஏனென்றால் அவர்கள் கேளிக்கை விடுதிகளிலும், அரங்குகளிலும், ஆடம்பர அரங்கேற்றங்களிலும், கேளிக்கை களிலும்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.  பாகிஸ்தான் அணி விளையாட்டு தொடர் ஆரம்பிக்க உள்ள நாளுக்கு முதல்நாள் வேர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்யும் போது, ஏன் நமது நாட்டு வீரர்கள் அவ்வாறு பயிற்சி செய்யவில்லை என்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் “பூனம் பாண்டே” (விளம்பர மாடல்) மீது அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

ஊடகங்கள் சனநாயகத்தின் மூன்றாவது கண் என்பார்கள்.  சனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள்? ஆனால், இங்கோ ஊடகங்கள் “தரகர்களாக” மாறிவிட்டன, சுத்தமான வியாபாரம்.

எனவே ஊடகங்கள்  மூலம் இத்தகைய சாவுகளை தெரிந்து கொள்வது சாத்தியமற்றது.  பிறகு யார் இருக்கிறார்கள்?  அரசாங்கம் செய்யுமா?  ஆனால் நமக்கெல்லாம் தெரியும் அரசாங்கம் எப்படி செயல்படுகிறதென்று.

பிறிதொருநாள் நான் பெங்களூருவின் விஞ்ஞான் சபா (சட்டசபை) பக்கம் கடந்து போக வேண்டியிருந்தது. அங்கே நான் வாசித்த ஒரு வார்த்தை இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது.  அங்கே ஓரிடத்தில் “அரசாங்கத்தின் வேலை ஆண்டவன் வேலை” என்று எழுதப்பட்டிருந்தது.  அப்போதுதான் புரிந்தது அரசாங்கம் தங்களது எல்லாப் பணிகளையும் ஆண்டவனிடத்தில் விட்டு விட்டார்கள் என்பது.

கர்நாடக முதல்வர் திருவாளர் எடியூரப்பா அனைத்து வீரர்களுக்கும் நிலம் பரிசாக வழங்கப் போவதாக அறிவித்தார்.  ஆனால் நிலம் எங்கே?  பெங்களூரிலேயேவா? திருவாளர் முதலமைச்சரை நீங்கள் கேலியாக பார்க்கிறீர்கள்.  உடனே திருவாளர் முதலமைச்சர் தனது முடிவை மாற்றிக் கொண்டு பணமாக கொடுக்க தீர்மானிக்கிறார்.  ஆனால், அதுவும் எங்கிருந்து வரும்?  உங்களது, எனது வரிதான் உள்ளதே.  ஏற்கனவே கோடிக் கணக்கில் பணம் ஈட்டும் அந்த கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும், அதிகம் பணத் தேவையில் பாடுபடுபவர்கள் இந்த ஏழை விவசாயிகள் இல்லையா?

அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கி நீங்கள் ஒரு “மெர்சிடீஸ் பென்ஸ்” கார் வாங்க கடன் கேட்டால் 6 சதவீத வட்டிக்கு கடன் கொடுப்பார்கள்.  ஆனால் அதே வங்கியில் ஒரு விவசாயி டிராக்டர் வாங்க கடன் கேட்டால் வங்கி எவ்வளவு வட்டி கேட்கும் தெரியுமா? 15 சதவீதம்.  ஏற்றத் தாழ்வின் ஆழத்தைப் பாருங்கள்.  தண்ணீர் பாட்டில் ரூ15-க்கு விற்கப்படும் போது, செல்போனின் சிம் கார்டு இலவசமாக கொடுக்கப்படுகிறது.  இனி எவ்வளவு காலத்திற்குத்தான் நமக்கு உணவளிக்கும் உழவர்களின் கையைக் கடிக்கப் போகிறோம்.  சமீபத்தில் வெங்காய விலை ஒரு உதாரணம்.

2008ல் லக்மே இந்தியா ஒரு அலங்கார காட்சி ஒன்றை மும்பையில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்தியது.  அதில் 500 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.  அந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பொருள் “பருத்தி”.  இந்த ஆடம்பர ஹோட்டலிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ள இடங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 லிருந்து 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  எத்தனை தொலைக்காட்சி நிருபர்கள் இதைப் படம் பிடித்திருப்பார்கள்?  ஒருவருமில்லை.

60 சதவீததத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் ஒரு நாளைக்கு ரூ 20-ல் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டுள்ளனர்.  டயட் என்ற நாம் அருந்தும் ஒரு கோக் பானத்தின் விலை அவர்களது ஒரு நாளைய வாழ்க்கை.  ஒரு நாள் இரவு-பகல் கிரிக்கெட் ஆட்டத்திற்கு செலவிடப்படும் மின்சாரம், விவசாயி பல வாரங்களுக்கு பயன்படுத்த போதுமானது.  உங்களுக்கு ஒன்று தெரியுமா?  மின்சார நிறுத்தம் கூட வர்க்க நலன் சார்ந்ததாக உள்ளது. பெரும் நகரங்களுக்கு 2 மணிநேரம், சிறு நகரங்களுக்கு 4 மணிநேரம், கிராமங்களுக்கோ 8 மணி நேரம், இப்போது யாருக்கு அதிக மின்சாரம் தேவைப் படுகிறது.  இரவு பகலாக தனது மோட்டாரை இயக்கி, நீர் பாய்ச்சி பயிர் வளர்க்கும் விவசாயிக்கா, இலகுவாக கிடைக்கும் வருமானத்தை செலவு செய்து கணினியில் இந்திய லீக் கிரிக்கெட் பார்க்கும் சில மேற்குடி அலுவலர்களுக்கா?

நமது பிறந்த நாள் விழாக்களில் எத்தனை ஆயிரம் ரூபாய்களை வாரி இறைக்கிறோம்.  குளிர் சாதனம் பொருத்தப்பட்ட கார்களில் அங்கும் இங்கும் பறக்கிறோம்.  வார இறுதியில் கூர்க்கு (மலைவாழ் சுற்றுலாத்தலம்) செல்ல நமது குளிரூட்டப்பட்ட அறைகளில் மெத்தை போன்ற சோபாக்களில் அமர்ந்து கொண்டே திட்டமிடும் போது, அந்த வழியாக போகும் போது, அதற்கு மிக அருகில் உள்ள கிராமங்களில் ரூ 10 ஆயிரம் கடனுக்காக விவசாயிகள் பூச்சி மருந்து குடித்தோ, தூக்கில் தொங்கியோ தங்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்களே அது குறித்து நாம் எண்ணியதுண்டா?

பன்றிக் காய்ச்சல் வந்த போது ஒரே அமளி, ஆர்ப்பாட்டம்.  ஒவ்வொரு இறப்பும், ஒவ்வொரு நிமிடமும், ஊடகங்களில் காட்டப்பட்டது, ஏன்?  ஏனென்றால் இந்த நோய் அபரிமித மாத வருமானம் வாங்கும் கணணி பொறியாளர்களை, மத்திய தர வர்க்கத்தினரை நேரடியாகத் தாக்கியதே காரணம். அங்கே உடனே முக்கியத்துவம் வந்தது.  நிவாரண முகாம்கள் தோன்றியது.  அரசாஙகத்தாலேயே விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டது இந்த வர்க்கத்தினரை திருப்திப் படுத்துவதற்காக. ஆனால் மறுபுறம், ஒவ்வொரு நாளும் 47 பேர் கடந்த 15 ஆண்டுகளாக மடிந்து வருகிறார்கள்.  யாராவது இதைத் தடுக்கவோ, அதைப்பற்றி கவலைப்படுவதோ இல்லை ஏன்?

ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்ட ஒரு மாதத்திற்குள் அவனது மனைவி தனது குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் குடித்து மடிவது அல்லது குழந்தைகளை அநாதையாக விட்டு விட்டு தான் மட்டும் மடிவது என்ற நிலைதான் நிலவுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தப்பூரில் ஒரு துயருற்ற விவசாய பெண்மணி அரசு நடத்தும் விதைக் கடையில் கடனுக்கு பூச்சி மருந்தை வாங்கிக் குடித்துவிட்டு உயிரை விட்டார்.  வாழ்நாள் முழுவதும் கடனில் இருந்தவள், இறந்த பின்னும் கடனை விட்டுச் செல்ல வேண்டிய பரிதாப நிலை.

பல நூற்றாண்டுகளுக்கு முன் ரோம் சாம்ராஜ்யத்திற்க நீரோ என்ற பேரரசன் இருந்தான்.  அவன் பலமான அரசனாக இருந்தான்.  ஆனால் அதே நேரத்தில் கலை, கவிதை, குடி என்று வாழ்க்கை முழுவதும் கேளிக்கையாகவே வாழ்க்கையை நடத்தினான்.  ஒரு முறை அவன் மிகப் பெரிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அதற்கு சமுதாயத்திலுள்ள கவிஞர்கள், ஓவியர்கள், அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் என்று அனைவரையும் அழைத்திருந்தான்.  ஒவ்வொருவரும் மகிழ்ச்சியில் குடிக்கவும், உண்ணவும், சிரித்தும் மகிழ்ந்திருந்தார்கள்.  நேரம் ஆக ஆக கேளிக்கை அதன் உச்சத்தை அடைந்தது.  இரவும் வந்தது.  அதை அப்படியே தொடர வேண்டும் என்றான் நீரோ மன்னன்.  இந்த நேரத்தில் அந்த மன்னன் அவனது நாட்டு சிறையிலிருந்த அனைத்து குற்றவாளிகளையும் அவன் தோட்டத்தை சுற்றி நிற்க வைத்து அனைவரையும் தீயிலிட்டான்.  அது அவனது விருந்தினர்களுக்கு, கேளிக்கை தொடர்வதற்கு தேவையான வெளிச்சத்தை கொடுத்ததாம்.  அந்த விருந்தினர்களுக்க மகிழ்ச்சியான நேரம்தான்.  ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட விலை குறித்து அவர்களுக்கு தெரியுமா?  அந்த விருந்தினர்களுக்கு என்ன நிலையான மனசாட்சி இருந்திருக்கும்.

நீரோவின் விருந்தினர்கள்

அன்று நீரோ மன்னனின் விருந்தில் என்ன நடந்ததோ அதற்கும் இன்று நம் நாட்டில் நடந்து கொண்டிருப்பதற்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை.  மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த, கைநிறைய சம்பாதித்து, கடைவீதிகளைச் சுற்றி வரும், கிரிக்கெட் மோகத்திலிருக்கும், விருந்து பிரியர்களான நாம்தான் நீரோவின் விருந்தாளிகள். மடிந்து போகும் நம் விவசாயிகளின் உயிரில் அந்த கேளிக்கைகளை நாம் அனுபவிக்கிறோம்.  ஒவ்வொரு ஆண்டின் அரசின் பட்ஜெட்டும் வசதியானவர்களுக்கு சாதகமானதாக இருக்கிறது.  அவர்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்கு நமது விவசாயிகளிடமிருந்து நிலங்களை புடு்ங்கி கொடுப்பதுடன், புதிய தாராளமயக் கொள்கையென்ற பெயரில் அவர்களுக்குத்தான் அதிகமான வரிச்சலுகை, இறக்குமதி வரிகுறைப்பு.  லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு தகுதியற்ற தயாரிப்பாக இருந்தாலும், அவர்களின் கடன்களுக்கு அதிகமான வட்டிச் சலுகைகள் என்று அபரிமிதமாக கொடுக்கப்படுகிறது.  ஏனென்றால் நாமெல்லாம் நீரோவின் விருந்தினர்கள் இல்லையா?

நான் இந்த விழாக்களுக்கெல்லாம் எதிரியல்ல.  நான் கிரிக்கெட் விளையாட்டிற்கு கூட எதிரியல்ல.  உலகக் கோப்பைக்கு எதிரானவனல்ல.  எனது நாட்டு மக்கள், விவசாயிகள், கிராமத்து மக்கள் எல்லோரும் இணைந்து குதூகலிக்கும் போது, எனது விவசாயிகள் கொடூரமாக தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளாத போது, மெர்சிடீஸ் பென்சுக்கும், டிராக்டருக்கும் கடனுக்கு ஒரே மாதிரி வட்டி விகிதம் வசூலிக்கப்படும் போது, இந்தியா உலக அளவில் ஒன்றை சாதிக்கிறதென்றால், முதலில் குதூகலிப்பவன், கூச்சலிடுபவன் நானாகத்தான் இருக்கும். அந்த நாளில்தான் கையில் இந்தியக் கொடியை ஏந்திக் கொண்டு பாரத் மாதாவிற்கு ஜே என்று கோஷமிட்டுக் கொண்டு மோட்டார் பைக்கில் வலம் வருவேன்.  ஆனால் இல்லை.  இன்றில்லை.  எனக்கு உணவு கொடுக்கும் விவசாயிகள் துயரத்திலில்லை என்பது வரை நான் இதைத்தான் சொல்வேன்.  உங்களது ஆடம்பர கடை வீதிகளும் நாசமாய் போகட்டும்மென்று.  உங்களது இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாசமாய் போகட்டுமென்று. உலகக் கோப்பை நாசமாய் போகட்டுமென்று.  உங்களது அனைத்து கொண்டாட்டங்களும் நாசமாய் போகட்டுமென்று.

_______________________________________________

உழவர்கள் மடியும் போது ” உலகக் கோப்பை,” ஒரு கேடா?
– நரேந்திர ஷெகாவத்,
நன்றி – தி ஹிந்து 24.04.11

தமிழில் – சித்ரகுப்தன்

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்