privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விவீட்டில் தெலுங்கு, வெளியே தமிழ்...நான் யார்? எனது அடையாளம் எது?

வீட்டில் தெலுங்கு, வெளியே தமிழ்…நான் யார்? எனது அடையாளம் எது?

-

கேள்வி :
நான் பிறந்தது முதல் கடந்த 27 வருடங்களாக நம் தமிழ் நாட்டில் வசித்து வருகிறேன்….குறிப்பாக வேலை காரணமாக சென்னையில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். சமீபத்தில் நான் தங்கியிருந்த தனியார் விடுதியில் ஒரு நாள் நான் தெலுங்கில் பேசிய காரணத்திற்காக என் பக்கத்து அறையை சேர்ந்த சில அன்பர்களால் தாக்கப்பட்டேன். என்னை கொல்டி என்றும் வந்தேறி என்றும் அர்ச்சித்து என்னை அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள். நான் என்னை பற்றி எடுத்து சொன்னேன்…நாங்கள் எப்போதோ நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குடிபெயர்ந்து கடந்த சில நூற்றாண்டுகளாகவே தமிழர் பண்பாடோடு கலந்து எங்கள் வாழ்கை முறையை கொண்டுள்ளோம் என்றும்…தெலுங்கில் ஒன்றும் எழுதவோ முழுமையாக பேசவோ வாசிக்கவோ தெரியாது…..எனக்கு தமிழ் தான் எல்லாமும் என்று வாதிட்டேன். பயனாக மேலும் இரண்டு குத்துகள் மார்பில் விழுந்தன. நான் என்னை மனப்பூர்வமாக ஒரு தமிழனாகவே கருதுகிறேன். எனக்கு பல நேரங்களில் என்னைப் பற்றி தர்மசங்கடமாகவே உணர்கிறேன். நான் தமிழன்தான் என்பதை மற்றவர்கள் எப்படி உணர்வார்கள்..?என் தாய் மொழி தெலுங்கு என்ற காரணத்திற்காக நான் தமிழில் சிந்திப்பதை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது அல்லவா? என் கேள்வி இதுதான்…நான் என்னை யாராக நினைப்பது?? இதை பற்றி நியாமான பதிலுக்கு வினவை விட்டால் நாதியில்லை. ஒருவேளை இந்த கேள்வி மிகவும் மொன்னையாகவோ ஒரு சரியான புரிதலுடனோ இல்லாமலிருப்பின் மன்னிக்கவும்.

–       கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்,

உங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து மிகவும் வருந்துகிறோம், கோபம் கொள்கிறோம், கண்டனம் தெரிவிக்கிறோம்.

உங்களை யாராக நினைப்பது என்ற கேள்விக்கு பதில், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தமிழன் என்று தைரியமாக சொல்லுங்கள்! இதில் மூடி மறைப்பதற்கோ, தற்காப்பு நிலையில் நின்று பேசுவதோ தேவையில்லை.

தமிழக எல்லைகளில் வாழும் மக்கள் அனைவரும் இரு மொழிகளையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமிருக்கிறது. கேரள, கர்நாடக, ஆந்திர எல்லையில் இருக்கும் மக்கள் தேவை கருதி இப்படி இரு மொழி பயன்பாட்டுக்காரர்களாக இருக்கிறார்கள். சில நேரம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் எல்லைக்கு அந்தப்புறத்திலும், மற்ற மாநில மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இங்கேயும் வாழவேண்டியிருக்கலாம். எல்லை என்பது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றே அன்றி அதுவே எல்லாமும் அல்ல.

பாக் இந்திய எல்லையில் இருக்கும் மக்களுக்கு இரண்டு நாடுகளும் ஒன்றுதான். இங்கே ஊதிவிடப்படும் தேசபக்தி காய்ச்சலோடெல்லாம் அங்கே  அவர்கள் வாழ முடியாது. அவர்களது கால்நடைகள் எல்லையைத் தாண்டி மேயும். திருமண மற்றும் இதர விசேட நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் அடிக்கடி எல்லையை தாண்ட வேண்டியிருக்கும். இருநாட்டு இராணுவங்களில் யார் தாக்கினாலும் அதன் பாதிப்பு இருநாட்டு மக்களுக்கும் உண்டு. எனவே இந்தியாவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு தேசபக்தி சாமியாடும் அம்பிகளின் மனநிலைக்கும் எல்லையில் வாழும் அந்த மக்களின் மனநிலைக்கும் பாரிய வேறுபாடு உண்டு.

எனவே எந்த தேசிய இன மக்கள் வாழும் நாட்டிலும் இது போன்ற வேற்று மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள். இங்கே பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் மொழி பேசும் மக்கள் கூட பெங்களூருவிலோ இல்லை மும்பை தாரவியிலோ, திருவனந்தபுரத்திலோ  மொழிச் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இங்கு மற்ற மொழி மக்கள் கேலி செய்யப்படுவது போல அங்கே அவர்கள் மதராசி, பாண்டிக்காரன் என்று கேலி செய்யப்படுகிறார்கள். இதைத் தாண்டி எல்லா இடங்களிலும் உழைக்கும் மக்களிடையே மொழிவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது.

மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல நாயக்கர் காலம் போல பல்வேறு வரலாற்றுக் காலங்களினூடாக தமிழகத்தில் பல்வேறு தேசிய இன மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அதில் மராத்தி, கன்னடம், மலையாளம், உருது,  இந்தி என்று பல மொழி பேசுபவர்கள் உண்டு. இந்தியா முழுவதுமே பல நூற்றாண்டுகளாக இந்த மொழிக் கலப்பு நடந்திருக்கிறது. இதில் தூய தேசிய ரத்தத்தைக் கொண்ட இனம் என்று எதுவும் இல்லை. எனவே வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டவர்கள் ஒரு தேசிய இனத்தில் இருப்பது இந்தியா முழுமைக்கும் உள்ள ஒன்று. இத்தகைய கலப்பு இன்றி எந்த தேசிய இனமும், மாநிலமும் இல்லை.

நீங்கள் கேரளத்தில் கொல்லம் நகர் வரையிலும் முழுக்க தமிழ் மொழி மட்டுமே கூட பேசி வாழ முடியும். முழு கேரளத்திலும் கூட தமிழை மட்டும் வைத்துக் கொண்டு பயணம் செய்யலாம். அதே போல திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் தமிழும் முழுப் பயன்பாட்டில் உள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் வேலூர் வரையிலும் வந்து செல்ல முடியும். கன்னட மொழி பேசும் மக்கள் ஓசூர் வரையிலும் புழங்குகிறார்கள். இவையெல்லாம் யதார்த்தமாக மக்களிடையே தவிர்க்கவியலாமல் இருக்கின்ற மொழிக் கலப்பு அம்சங்கள்.

உங்களைப் போன்ற பின்னணி கொண்டவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே குடியேறி வீட்டில் மட்டும் அதுவும் கொச்சைத் தெலுங்கு பேசிவிட்டு, பொதுவெளியில் தமிழராக வாழ்ந்து வருபவர்கள். ஆனால் தற்போது கூட ஆந்திராவிலோ, இல்லை கேரளாவிலோ இருந்து மக்கள் இங்கு குடியேறி வாழலாம். தத்தமது தாய்மொழிகளைப் பேசும் மலையாளியாகவோ இல்லை தெலுங்கராகவோ தமிழ்நாட்டில் வாழலாம். இதை தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தமிழ்நாட்டில் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்தான் வாழ முடியும் என்பது சட்டப்படியும், தார்மீகரீதியாகவும், யதார்த்தமாகவும் சரியல்ல.

இந்தியாவில்  காலனிய ஆட்சிக் காலத்தில்தான் தேசிய இனங்கள் தத்தமது அடையாளங்களோடு தோன்றத் துவங்கியிருந்தது. அவை முழு நிறைவான வளர்ச்சி பெற்ற தேசிய இனங்களாக மாறிக் கொள்வதற்கு காலனிய ஆட்சி தடையாக இருந்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் தமிழன் என்ற உணர்வோ இல்லை நாடோ இங்கு இருந்ததில்லை. சங்ககாலம் தொட்டு தமிழனது அடையாளங்கள் பாடல்கள் மூலம் பேசப்பட்டாலும் அவை இன்றைய தமிழனது தேசிய உணர்வை கொண்டிருக்கவில்லை, கொண்டிருக்கவும் வாய்ப்பில்லை. அன்று சேர, சோழ, பாண்டிய நாடுகளாகத்தான் மக்கள் இருந்தார்கள். இன்றும் தென்கேரள மக்கள் தமிழ் மக்களை பாண்டிக்காரர்கள் என்றுதான் அழைக்கிறார்கள். இன்று நாம் பேசும் பொதுவான தமிழ்மொழி கூட அன்று இருந்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பொருளாதாரப் பரிவர்த்தனை காரணமாகவே நாம் பேசும் இன்றைய பொதுத் தமிழ் உருவாகியிருக்கிறது. இன்றும் கச்சாவான கொங்கு தமிழ், திருவிதாங்கூர் தமிழ், மலைவாழ் மக்களின் தமிழ், சென்னைத் தமிழ் , தெலுங்குத் தமிழ், கன்னடத் தமிழ், மலையாளத் தமிழ் முதலான வழக்குகளை பொதுவான தமிழர்களே புரிந்து கொள்வது கடினம்.

முன்னர் வட்டாரத் தமிழ் வழக்கு மட்டும் பேசி வந்தவர்கள் இன்று உள்ளூரில் மட்டும் அப்படிப் பேசிவிட்டு பிழைக்க வந்த இடத்தில் பொதுத் தமிழை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இப்படித்தான் பத்திரிகைகள், சினிமா, இலக்கியம், அலுவலங்களில் பயன்படும் பொதுத் தமிழ் உருவாகியிருக்கிறது.

ஆங்கிலேயருக்கு முன்னர் தமிழ்நாட்டு மக்களிடையே ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான பொருளாதாரத் தேவையோ, சாத்தியமோ இருந்ததில்லை. ஒரு நபர் என்ன மொழியைப் பேசுகிறார் என்பது அவருடைய சமூக – பொருளாதார வாழ்க்கையே தீர்மானிக்கின்றது. நாமக்கல் லாரி டிரைவர்கள் வட இந்தியாவுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் இந்தி மொழியைக் கற்கின்றனர். பஞ்சாபிலிருந்து இங்கு வரும் சிங் டிரைவர்கள் தமிழைக் கற்கின்றனர். கன்னியாகுமாரியில் மணல், சிப்பி விற்கும் சிறுவன் ஐந்தாறு இந்திய மொழிகளைப் பேசுகிறான். சென்னை அண்ணா சமாதியில் மீன் வருவலை விற்கும் மீனவர் வங்க மொழியை சரளமாகப் பேசுகிறார். மும்பையில் வாழும் பிற தேசிய இன மக்கள் தத்தமது தாய் மொழியோடு மராத்தி, இந்தி, உருதுவை கற்றுத் தேர்கின்றனர். இன்று தமிழகத்தில் அதிகார, நிர்வாக, பொழுது போக்கு துறைகளில் ஆங்கிலம் கோலேச்சுகிறது. ஏழை எளிய மக்கள் கூட சரளமான ஆங்கில வார்த்தைகளை தமது பயன்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர். இவற்றை யதார்த்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இயல்பாகவே இப்படி மொழிக்கலப்பு ஏற்படுவதை, ஏற்பட்டு விட்டதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மேலும் பல்வேறு தேசிய இன மக்கள் இப்படி கலந்து வாழும் சூழலை நாம் கைதட்டி வரவேற்க வேண்டும். சாதிகளுக்குள் சாதி மறுப்பு மணம் நடக்க வேண்டும் என்று விரும்புவது போல தேசிய இனங்களுக்குள்ளும் இனமறுப்பு மணங்கள் நடக்க வேண்டும் என்கிறோம். எதிர்காலத்தில் இத்தகைய இனங்கள் கலந்து மனித இனம் ஒன்றே எனும் நிலை வருவதே தேவையானது, சாத்தியமானது, அறிவியல் பூர்வமானது, எதிர்காலத்தைக் கொண்டிருப்பது என்கிறோம். அப்பா பஞ்சாபியாகவும், அம்மா தமிழாகவும் இருந்தால் பிள்ளைகள் இரண்டு மொழிகளையும் தெரிந்து கொள்வதோடு, இரு மாநில பண்பாடுகளையும் அறிந்து கொண்டு முன்னோக்கி செல்லும். மக்களிடையே ஒற்றுமை வளரும். இப்படி தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு, மராத்தி, பீகாரி, உ.பி என எல்லா இனங்களும் கலக்க வேண்டும். நம்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் இப்போது இருக்கும் இனங்கள் எதிர்காலத்தில் இப்படித்தான் கலந்து எழும். தூய இனம் என்பதற்கு வரலாற்றில் எதிர்காலமில்லை.

இப்படி மற்ற தேசிய இனமக்கள் தமிழ்நாட்டில் குடியேறினால் தமிழர் வளம் அழியும் என்று தமிழின வெறியர்கள் கூப்பாடு போடுவார்கள். இது உண்மையெனக் கொண்டால் இன்று ஈழத்தமிழர்கள் ஐரோப்பாவிலும், கனடாவிலும் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். இவர்களைப் போன்ற அகதிகள் அங்கே வாழ்வதால் அந்தந்த நாடுகளின் வெள்ளையர்களுக்கு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று அங்கே புதிய நாசிசக் கட்சிகள் தோன்றி ஓரளவுக்கு செல்வாக்கோடு இருக்கின்றன. தமிழ்நாட்டில் மற்ற மொழிக்காரர்கள் இருக்க்க் கூடாது என்று பாசிசம் பேசும் தமிழினவெறியர்கள் ஐரோப்பிய பாசிஸ்ட்டுகள் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று மும்பையில் ஏழை பீகாரிகளை வெறிகொண்டு தாக்கும் சிவசேனா வெறிநாய்களை மனிதநேயம் கொண்டோர் எவரேனும் ஏற்றுக் கொள்வார்களா? தமிழ்நாட்டில் இருக்கும் அதுவும் டாடா சுமோவில் நிரப்புமளவு தொண்டர் படையுள்ள கட்சிகளைச் சேர்ந்த சில தமிழின வெறியர்கள்தான் அப்படி ராஜ்தாக்கரேவுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள். தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டு தெருக்களையும், கழிப்பறைகளையும் தெலுங்கு பேசும் அருந்ததி இன மக்கள்தான் சுத்தம் செய்கின்றனர். எங்கள் கழிவுகளை அகற்றுவதற்குத் தெலுங்கர்கள்  தேவையில்லை, இனி நாங்களே முதலியார், கவுண்டர், தேவர், கோனார் என்று முறை வைத்து சுத்தம் செய்து கொள்கிறோம் என்று சுத்த தமிழர்கள் முன்வருவார்களா? அதே போன்று இரவுக் காவல் காக்கும் நேபாளத்து கூர்காக்கள், தச்சு வேலை செய்யும் ராஜஸ்தானத்து தொழிலாளர்கள், காங்கிரீட் கலவை போடும் தெலங்கு தொழிலாளர்கள், சாலையில் குழி பறிக்கும் கன்னட தொழிலாளர்கள், உணவகங்களில் மேசையை துடைக்கும் வடகிழக்கு தொழிலாளர்கள் என்று இவர்களது வேலையை தமிழன்தான் செய்ய வேண்டும் என்று யாராவது கேட்க முன்வருவார்களா என்ன?

அதே போன்று நாமக்கல் முட்டை, கோழியை மலையாளிகளுக்கு விற்க கூடாது, கம்பத்தின் காய்கனிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லக்கூடாது, ஈரோட்டின் மஞ்சள் தமிழக எல்லையைத் தாண்ட முடியாது, திருப்பூரின் உள்ளாடைகள் மற்ற மாநிலங்களுக்கு விற்க கூடாது என்று தூய தமிழினவாதிகள் பிரச்சாரம் செய்தால் மக்களே நையப் புடைப்பார்கள். அதே போன்று இன்று தமிழகம் சாப்பிடும் சோறு, காய்கள், மளிகைப் பொருட்களில் கணிசமானவை அண்டை மாநிலங்களிலிருந்து வருவபைதான்.

இன்று தமிழக வளத்தை அப்படியே கொள்ளையடிப்பவர்கள் மலையாளிகளோ, தெலுங்கர்களோ அல்லர். பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும்தான் நம் வளத்தை சுருட்டிக் கொண்டு செல்கின்றனர். இவர்களுக்கெல்லாம் இன அடையாளம் ஏதுதமில்லை. ரிலையன்ஸ், ஹூண்டாய், ஃபோர்டு, செயின்ட் கோபெய்ன் முதலான நிறுவனங்களை வெளியேற்றுவதற்கு இந்த தமிழினவாதிகள் வருவார்களா? மாட்டார்கள். மாறாக டீக்கடை வைத்திருக்கும் மலையாளிகளை விரட்ட வேண்டுமென்று துள்ளிக் குதித்து வருவார்கள். இதுதான் இவர்களது தமிழ் வீரத்தின் இலட்சணம்.

இதனால் இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறை இல்லை என்று பொருளல்ல. பார்ப்பனிய இந்து தேசிய ஒடுக்கு முறையினால் தமிழ் மட்டுமல்ல பிற தேசிய இனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால்தான் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்கிறோம். மொழி, பண்பாடு, கல்வி என்று எல்லாத் துறைகளிலும் இந்த ஒடுக்கு முறையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக நாம் மைய அரசை எதிர்த்து போர்க்குணத்தோடு போராட வேண்டும். மாறாக அதன் பொருட்டு கன்னட, மலையாள மக்களை இனவெறி கொண்டு பகைத்துக் கொள்வதில் பயனில்லை.

எனினும் இந்திய மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது பொது எதிரியை அவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதிலேயே வரும். அதை பிரிந்து கொண்டு செய்வதால் பயனில்லை. சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சொல்வதோடு இந்தியாவின் தேசிய இன மக்கள் வர்க்க ரீதியாக ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்பதையும் சேர்த்தே சொல்கிறோம். அதே போன்று ஒவ்வொரு தேசிய இனத்தின் தனித்தன்மை என்பது அதனுடைய ஜனநாயக விழுமியங்களுக்காகவே போற்றப்படவேண்டும். அவற்றில் இருக்கும் நிலவுடமை பிற்போக்குத்தனங்களை எதிர்க்க வேண்டும்.

தமிழிசை மரபு, பார்ப்பனிய எதிர்ப்பு மரபு போன்றவைதான் தமிழின் போற்றுதலுக்குரிய மரபுகள். இதைத் தவிர தமிழில் இன்று கோலேச்சுவது சாதிய ஆதிக்கம்தான். தாழத்த்தப்பட்ட தமிழர்களை ஊருக்குள் செருப்போடு செல்லக்கூடாது என்றுதான் ஆதிக்க சாதி தமிழர்கள் நடத்துகிறார்கள். இந்நிலையில் தலித் தமிழன் எங்கனம் தமிழனென்று உணர முடியும்? இப்படி சாதியால் மட்டுமல்ல வர்க்க ரீதியாகவும் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். டி.வி.எஸ் அய்யங்காரும், ஸ்பிக் முத்தையா செட்டியாரும், பொள்ளாச்சி மகாலிங்கமும் வேண்டுமானால் முதலாளிகள் என்ற முறையில் தமிழன் என்று பேச முடியும். ஆனால் இவர்களோடு சரிக்கு சமமாக தொழிலாளிகள், நிலமற்ற விவசாயிகள் தமிழனென்று பழக முடியுமா என்ன?

ஆகவே சாதி, மத, மொழி அடையாளங்களையெல்லாம் விட வர்க்க அடையாளமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற ஒன்றாக இருக்கிறது. கார்த்திகேயன், அதன்படி நீங்கள் உங்களை உழைக்கின்ற வர்க்கமாக நினைத்து வாழுங்கள். உழைக்கும் வர்க்கத்தில் விவசாயிகள், தொழிலாளிகள், நடுத்தர வர்க்கம் போன்றவர்களோடு இணைந்து எழும் அந்த வர்க்க உணர்வே நமது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்க்கும் வல்லமையை தரும்.

எனினும் தமிழின வெறியர்களுக்கு எதிர்காலமில்லை என்று நாம் அவரசமாக முடிவெடுத்துவிடக்கூடாது. இன்று வட மாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் தமிழகம் வந்து வேலை செய்கின்றனர். நாளை இவர்கள் இன வேறுபாடு கடந்து தமிழக தொழிலாளிகளோடு சேர்ந்து போராடும் நேரத்தில் முதலாளிகள் இதை திட்டமிட்டு பிரிக்கும் வண்ணம் தமிழின வெறியை தூண்டிவிடலாம். அப்படித்தான் மும்பை டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர் சங்கங்களை உடைப்பதற்கு முதலாளிகள் சிவசேனாவை வளர்த்து விட்டனர்.

தமிழகத்தில் அப்படி ஒரு நிலை வந்தால் நாம் இனவேறுபாடு இன்றி தொழிலாளிகளை அணிதிரட்டி முதலாளிகளையும் அவர்களது காசில் வரும் தமிழின வெறியர்களையும் வேரறுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் அதை நிச்சயம் செய்வோம். மதவெறி, சாதிவெறிக்கு மட்டுமல்ல இனவெறிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்று காட்டுவோம்.

கார்த்திகேயன்,

இந்த பதில் உங்களது குழப்பத்தையும், துயரத்தையும் தணித்து விட்டு தலைநிமிர்ந்து வாழும் தைரியத்தை தந்திருக்கிறதா? அறிய ஆவலாயிருக்கிறோம். நன்றி

_____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்