privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?

பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 2

சமயங்களுக்கு இடையே உள்ள தராதரங்களை எவ்வாறு ஒரு பசுவால் உணர்ந்து கொள்ள முடியாதோ அவ்வாறே அவர்களாலும் (ஹரிஜனங்களாலும்) உணர்ந்து கொள்ள முடியாதுகடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பதைப் பாகுபடுத்திப் புரிந்து கொள்ளும் மனமோ, புத்திக் கூர்மையோ, திறமையோ ஹரிஜனங்களுக்குக் கிடையாது.

நீங்கள் வைத்ய உதவி அளிக்கும்போது அதற்கு வெகுமதியாக உங்களின் நோயாளிகள் கிறித்தவ மதத்தில் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்

பொதுவாகக் கூற வேண்டுமெனில் எங்கெல்லாம் கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதோ, அது ஒரு ஆன்மீகச் செயலாக எந்த விதத்திலும் இருந்ததில்லை. இவையெல்லாம் சௌகரியத்திற்காகச் செய்யப்பட்ட மதமாற்றமே”…

கிறித்தவ மத போதனைக் குழுக்கள் தங்கள் பணியை அக்கறையுடன் ஆற்ற வேண்டுமானால், ஹரிஜனங்களை மதமாற்றம் செய்யும் அநாகரிகமான போட்டியிலிருந்து அவர்கள் அவசியம் விலகிக் கொள்ள வேண்டும்”…

இவை கிறித்தவ மதமாற்றம் பற்றிய சங்கராச்சாரியின் அருள் வாக்கல்ல; அல்லது விசுவ இந்து பரிசத்தின் திமிர் பிடித்த கிழட்டுச் சாமியார்கள் யாரும் கூறியதல்ல. இவை மதமாற்றம் குறித்த மகாத்மாவின்கருத்துக்கள். 1936, 37-ஆம் ஆண்டுகளில் தனது ஹரிஜன்பத்திரிகையில் அவர் எழுதியவை. (அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி10).

தமாற்றம் குறித்து ஒரு தேசிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வாஜ்பாயி கூறியவுடனே, ”இதுபற்றி அரசியல் சட்டமும் நீதி மன்றமும் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கின்றன. புதிதாக விவாதம் எதுவும் தேவையில்லை” என்று காங்கிரசு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் பத்திரிகைகளும் மடையடைத்ததற்கான காரணம் நேர்மையானதல்ல. குஜராத்தில் தேவாலயங்கள் கொளுத்தப்பட்டதைக் கண்டித்து ‘இந்து’ ஆங்கில நாளிதழ் (14.1.99) எழுதிய தலையங்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது:

”குஜராத் மாநிலத்தின் இந்து செயல்வீரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று வைத்துக் கொண்டாலும் – அதாவது குஜராத் டாங்ஸ் மாவட்டத்தில் கட்டாயமாகவும், பணத்தாசை காட்டியும் மக்கள் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு – அவற்றைக் கையாள்வதற்கு இப்போது இருக்கின்ற சட்டங்களே போதுமானவை.”

இப்போது இருக்கின்ற சட்டங்கள் என்ன சொல்கின்றன?

”ஏமாற்றியோ, ஆசை காட்டியோ, கட்டாயப்படுத்தியோ மத மாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்று ஒரிஸ்ஸா, ம.பி. ஆகிய இரு மாநில காங்கிரசு அரசுகள் 70களில்  ஒரு சட்டமியற்றின. இந்தச் சட்டத்திற்கு எதிராக ஸ்தனிஸ்லாஸ் என்ற பாதிரியார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இச்சட்டம் அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு வழங்கும் ‘மத உரிமை’ எனும் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்று வாதாடினார். ”மதப் பிரச்சாரம் செய்யும் உரிமை என்பது மதமாற்றம் செய்யும் உரிமை அல்ல” என்று கூறிய உச்சநீதி மன்றம் 1977-இல் அவரது வாழ்க்கைத் தள்ளுபடி செய்தது.

”சட்டப்பிரிவு 25(1) வழங்குகின்ற ‘மனச்சாட்சிச் சுதந்திரம்’ என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளதேயன்றி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனது மதத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது என்பதைக் கடந்து, அடுத்தவரை தன் மதத்திற்கு மாற்றுவது என்ற முயற்சியில் ஒருவர் ஈடுபடுவாரேயானால், அத்தகைய நடவடிக்கையானது மற்ற குடிமக்களின் மனச்சாட்சிச் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும்.”

எனவே, ”ஏமாற்றியோ ஆசை காட்டியோ கட்டாயப்படுத்தியோ மதமாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்று ஒரிசா, ம.பி. மாநில அரசுகள் இயற்றிய சட்டம் செல்லத்தக்கதே என 1977-லேயே உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது. இதுதான் மதமாற்ற உரிமை பற்றிக் கடைசியாக வந்துள்ள உச்சநீதி மன்றத் தீர்ப்பு. இனி, இந்தப் பிரச்சினை குறித்து ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி.சேஷாத்ரி, 5.2.99 அன்று ‘இந்து’ பத்திரிகைக்கு எழுதியுள்ள கடிதத்தின் சில பகுதிகளைப் பார்ப்போம்.

”ஏமாற்றியோ, கட்டாயப்படுத்தியோ, ஆசைகாட்டியோ மத மாற்றம் செய்வது சட்டவிரோதமானது. ஆனால், மேற்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன?” ”எடுத்துக்காட்டாக, பிரச்சாரம் செய்து மக்களைக் கூட்டுவது, இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் எனக்கு வியாதிகள் குணமானது என்று பொய்சாட்சி சொல்லும் நபர்களைக் காட்டுவது, காடுகளில் பழங்குடி மக்களைத் திரட்டி நள்ளிரவு முகாம்கள், விருந்துகள் நடத்தி வீடியோ திரைப்படங்கள் மூலம் மதப்பிரச்சாரம் செய்வது… – மதமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் இந்த வழிமுறைகள் எல்லாம் ‘ஏமாற்று’ இல்லையா?”

”மதம் மாற்றும் நோக்கத்துடன் பணம் கொடுத்தாலும், சோறு போட்டாலும், மருந்துகள் கொடுத்தாலும், ஏன் கல்வியே அளித்தாலும் இவையெல்லாம் ”இவ்வுலக ஆசை”யைத் தூண்டுபவைதானே! இவற்றுக்கும் ஆன்மீக விடுதலைக்கும் என்ன சம்பந்தம்?” ”மகாத்மா காந்தியும், அன்றைய ம.பி.காங்கிரசு அரசு நியமித்த நியோகி கமிசனும் தெளிவாகக் கூறியதுபோல, கிறித்தவ மதத்திற்கு மாறுபவர்கள் தங்களது புராதனமான சமுதாய, கலாச்சார வாழ்வின் இழைகளையெல்லாம் துண்டித்துக் கொள்கிறார்கள்; அழித்துக் கொள்கிறார்கள். மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு இரையாகி விடுகிறார்கள்.”

இதுதான் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர் சேஷாத்திரியின் குற்றச்சாட்டு.

இதுவரை படித்ததை நிதானமாக ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்! ஒரிஸ்ஸா பாதிரியார் கொலைக்குப் பிறகு பாரதீய ஜனதா ஒருபுறமும், அதன் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட பிற கட்சிகள், பத்திரிகைகள், நீதிமன்றம் ஆகிய அனைத்தும் எதிர்ப்புறமும் நின்று மோதிக் கொண்டிருந்தது போலத் தெரிந்த மாயை கலைந்து விடும். மத மாற்றம் குறித்து அரசியல் சட்டமும், அகிம்சா மூர்த்தியும், ஆர்.எஸ்.எஸ். காரர்களும் கூறுவது ஒன்றேதான் என்பது தெளிவாகும்.

மதமாற்றத்தில் ஈடுபடும் பாதிரியார்களை உயிருடன் கொளுத்துவதா, சட்டப்படி தண்டிப்பதா என்பதுதான் இவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு!

பால் பவுடர்லவுகீகம், காமதேனுஆன்மீகம்!

ஜெபக் கூட்டம் நடத்தி மதம் மாற்றுவது ஏமாற்று! சோறு போட்டும், மருந்து கொடுத்தும் மதம் மாற்றுவது ‘இவ்வுலக ஆசையைத் தூண்டுவது’; காந்தியின் வார்த்தைகளில் சொன்னால் இந்த மதமாற்றங்கள் எல்லாம் ‘ஆன்மீகச் செயல்கள்’ அல்ல – சவுகரியத்திற்காகச் செய்யப்பட்ட லவுகீக (இவ்வுலகம் சார்ந்த) நடவடிக்கைகள்! இகலோக சவுகரியங்களுக்காக மதம் மாறுவது இழிவு, அவ்வாறு மதம் மாறுவதும், மாற்றுவதும் எப்படி என்று வாசகர்கள் தெளிவடைய வேண்டும்.

பைபிளையோ, குர்ஆனையோ வேத புராணங்களையோ ஆதாரமாகக் கொண்டு ”எங்களது சொர்க்கத்தில் ஒயின், ஆட்டிறைச்சி, அப்சரஸ் ஸ்திரீகள் போன்ற இன்னின்ன வசதிகள் உண்டு” என்று ஆசை காட்டலாம். அந்த ஆசையில் மயங்கி இவ்வுலக சிற்றின்பங்களை மறந்து மேற்படி ‘பேரின்பத்தில்’ நாட்டம் கொள்பவர்களை மதம் மாற்றலாம; அதை உச்சநீதி மன்றம் அனுமதிக்கிறது.

புரியும்படி சொல்வதானால் காமதேனு என்று ஆசை காட்டலாம், ஆனால், பால்பவுடர் விநியோகிக்கக்கூடாது; கற்பக விருட்சம் என்று ஆசை காட்டலாம். ஆனால், கல்வி அளிக்கக்கூடாது; கைலாய பதவி உண்டு என்று உத்திரவாதம் தரலாம. ஆனால், சாகக் கிடக்கிறவனுக்கு வைத்தியம் செய்யக்கூடாது. இதுதான் சட்டத்திற்கான விளக்கம். கல்விக்கு சரஸ்வதி, காசுக்கு லட்சுமி, மூளைக் கோளாறுக்கு குணசீலம், அம்மைக்கு மாரியம்மா, இன்னும் வயிற்றுவலி, வாய்க்கோளாறுக்குத் தனித்தனி கடவுள்கள் என்று இவ்வுலக இன்ப – துன்பங்களை இலாகா வாரியாகப் பிரித்துத் தனித்தனிக் கடவுள்கள் வைத்திருக்கும்போது இகலோக ஆசையைத் தூண்டுவதில் என்ன குற்றம்?

கடவுள் வரை போவதற்குக் காலதாமதம் ஆகும் என்பதால், ”உடனடி நிவாரணம் – நீடித்த இன்பம்” என்று பிரச்சாரம் செய்யும் சாய்பாபா, சிவசங்கர் பாபா போன்ற ஆக்ஷன் – 500, வயாக்ரா மாத்திரைகள் எல்லாம் வழங்குவது என்ன பேரின்பமா? ஜெபக் கூட்டங்கள் ஏமாற்று என்றால், மழை வருவதற்கும், வெயில் அடிப்பதற்கும் காஞ்சி ‘முனிவர்’ நடத்தும் வேள்விகள் எல்லாம் பத்தரைமாற்றா? ஆனானப்பட்ட அப்பர் பெருமானே அல்சருக்காக மதம் மாறியவர்தானே, நான் கான்சருக்காக மாறினால் என்ன என்று கூடக் கேட்கலாம். ஆனால், இதற்கெல்லாம் பதில் கிடையாது. அப்பருக்கு வந்தது ‘ஆன்மீக அல்சர்’ என்று விளக்கம் சொல்லி விடுவார்கள்.

திருச்சபைக்குத் தெரியாதா இவர்களின் தில்லுமுல்லு? அதனால்தானே ”ஆத்தும சரீர சுகமளிக்கும் கூட்டம்” என்று சிற்றின்பத்துடன் பேரின்பத்தையும் ஒட்டவைத்து சட்டத்திற்கு டிமிக்கி கொடுத்து விட்டார்கள்.

மனச்சாட்சியை ஆராயும் நீதிபதிகள்!

சரி. இகலோக ஆசை காட்டி மதம் மாற்றுவது குற்றம். அப்படி மாற்றியவர்களைச் சிறையில் தள்ளலாம். மாறியவர்களை எங்கே தள்ளுவது?

பால் பவுடர், பணம் காசு கிடக்கட்டும்; மீனாட்சிபுரத்தில் இசுலாமுக்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள் பகிரங்கமாகச் சொல்கிறார்கள், ”சமமாக டீ குடிக்க வேண்டும், செருப்பணிந்து நடக்க வேண்டும், தோளிலே துண்டு போட வேண்டும், ஒரே கோயிலில் சாமி கும்பிட வேண்டும், சாதி வேறுபாடு இல்லாமல் எல்லோரும் எல்லோர் வீட்டிலும் அமர்ந்து சாப்பிட வேண்டும் – போன்ற இகலோக ஆசைகளுக்காகத்தான் இசுலாமுக்கு மாறினோம்” என்று தெளிவாகச் சொல்கிறார்கள். மதம் மாறுவதற்கு முன் ‘டேய்’ என்று கூப்பிட்டவன் இப்போது ‘பாய்’ என்று கூப்பிடுகிறானென்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.

கோயிலை மசூதியாக மாற்றினான் என்று கூறி, மசூதியை இடித்து அதனை ‘சர்ச்சைக்குரிய இடம்’ என்று பெயரிட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு விட்டவர்கள் மீனாட்சிபுரத்தில் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை என்ன செய்வார்கள்? சட்டவிரோதமாக – கேவலம் செருப்பு அணிந்து நடப்பது போன்ற அற்பமான இகலோக சவுகரியங்களுக்காக – மதம் மாற்றப்பட்ட மக்களை சர்ச்சைக்குரிய மனிதர்களாக்குவார்களா? அவர்கள் இந்துவா முசுலீமா என்பதை உச்சநீதி மன்றம் தீர்மானிக்குமா?

இது குதர்க்கமல்ல; எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கோ, பின்பற்றாமல் இருப்பதற்கோ வழங்கப்பட்டுள்ள ‘மனச்சாட்சி சுதந்திரம்’ என்னும் சுதந்திரத்தின் அடிப்படையில்தான் ஒருவன் மதம் மாறுகிறான். அவன் பால்பவுடரைக் காட்டி மாற்றப்பட்டானா, பரம பிதாவைக் காட்டி மாற்றப்பட்டானா என்பதை ஆராய நீதிமன்றத்திற்கு ஏது உரிமை? மதம் மாறியவர்களின் மனச்சாட்சியை ஆராய்வது இருக்கட்டும்; கட்சி மாறிகளின் மனச்சாட்சியை நீதிமன்றம் ஆராயப்புகுந்ததுண்டா?

பிறப்பால் மதத்தைத் தீர்மானிப்பது இறையியலா, உயிரியலா?

இந்த நாட்டில் ஒவ்வொரு இந்துவும், முசுலீமும், கிறித்தவனும் சுயமாகச் சிந்தித்து ”இந்த வழிதான் எனது ஆன்மவிடுதலைக்கு உகந்தது” என்று தெளிந்து, தனக்குரிய பரலோகத்தால் கவரப்பட்டு அந்தந்த மதத்தில் இருக்கிறானா, அல்லது ‘நாய்க்குப் பிறந்தது நாய்க்குட்டி’ என்பது போல இந்துவுக்குப் பிறந்ததால் இந்து, கிறித்தவனுக்குப் பிறந்ததால் கிறித்தவன் என்ற கணக்கிலா? நடைமுறையில் குடிமக்கள் பலரின் மதத்தைத் தீர்மானித்துக் கொண்டிருப்பது இறையியலா, அன்றி உயிரியலா?

பால் பவுடர் கொடுத்து மதம் மாற்றுபவன் குற்றவாளி என்றால், பாலூட்டி, சோறூட்டி வளர்த்த ஒரே காரணத்தினால் மதமில்லாமல் பிறந்த மனிதக் குழந்தையை இந்துவாகவும், முசுலீமாகவும் மத மாற்றம் செய்யும் பெற்றோர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் என்று கொள்ளலாமே? அல்லது வயது வந்தோர் வாக்குரிமை போல, வயது வந்த ஒவ்வொரு குடிமகனும் எல்லா மக நூல்களையும் கற்று, தன் மனச்சாட்சிப்படி ஒரு மதத்தைத் தெரிவு செய்து தழுவவோ, எதையும் தழுவாமல் இருக்கவோ முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளதா? ஆள்பவனைத் தெரிவு செய்யவே 18 வயதாக வேண்டும் எனும்போது ஆண்டவனைத் தெரிவு செய்ய அதற்கும் மேல் வயதும் அனுபவமும் வேண்டாமா?

இது வேடிக்கையல்ல, குடும்பத்திற்கும் மதத்திற்கும் உள்ள ‘இயற்கையான’ உறவை மீனாட்சிபுரத்தில் துண்டித்து விட்டார்கள். அப்பா மதம் மாறி அப்துல்லாவானார்; மகன் ரங்கசாமியாகவே இருந்து கொண்டான். மதம் மாறிய ஒரு பெண் இசுலாத்தில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பிடிக்காததால் பழைய படி ‘இந்து’வாகி விட்டாள். அவளைத் தாய் மதத்திற்கு வரவழைக்க எந்த விசுவ இந்து பரிசத்தும் போய் சடங்கு நடத்தவில்லை. இவர்களையெல்லாம் நீதிமன்றம் என்ன செய்யும்?

இத்தனை கேலிக்கூத்தான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகள் அவ்வளவு அடிமுட்டாள்களா என்று வாசகர்கள் வியப்படையலாம். இந்துமதச் சார்பை மனதில் வைத்துக்கொண்டு மதச் சார்பின்மை வேடம் அணிந்து கொள்ளும்போது அதன் விளைவு சட்டரீதியான கோமாளித்தனமாகி விடுகிறது. அவ்வளவுதான்!

படிப்பது கிறித்தவப் பள்ளி இடிப்பது மாதாகோயில்!

கோமாளித்தனம் கிடக்கட்டும். பார்ப்பன இந்து மத வெறியர்களின் அயோக்கியத்தனத்தைக் கொஞ்சம் ஆராய்வோம். ”மதம் மாற்றும்  நோக்கத்துடன் பணம் கொடுத்தாலும், சோறு போட்டாலும், மருந்து கொடுத்தாலும், ஏன் கல்வியே அளித்தாலும் அவையெல்லாம இவ்வுலக ஆசையைத் தூண்டுபவைதானே” என்கிறார் ஆர்.எஸ்.எஸ். செயலர் சேஷாத்ரி.

அப்படியே வைத்துக் கொள்வோம். கிறித்தவராக மதம் மாறியவர்கள் யாரும் மாதாக்கோயில் மணியோசையால் கவர்ந்திழுக்கப்படவில்லை எனும்போது தேவாலயங்களுக்கு நெருப்பு வைப்பானேன்? இவ்வுலக ஆசையைத் தூண்டி இந்துக்களை மதமாற்றம் செய்கின்ற பொறிகளான கிறித்தவப் பள்ளி கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் அல்லவா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அடித்து நொறுக்கவேண்டும்!

ஆனால், அதைச் செய்ய முடியாது. காரணம் மனிதாபிமானமல்ல; அவை தேவைப்படுகின்றன. தோன்போஸ்கோவும், லயோலாவும், செயிண்ட் ஸ்டீபனும் இன்ன பிற பள்ளிகளும் கல்லூரிகளும் பார்ப்பன உயர் சாதி இந்துக்களுக்குத் தேவை. சர்ச் பார்க் கான்வென்டு, தோடர்கள் – இருளர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பதற்காகவா, கட்டப்பட்டிருக்கிறது? மதமாற்றச் சதியின் கூடாரங்களாக சேஷாத்ரி குறிப்பிடும் கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர்கள்தான் பாரதீய ஜனதாவின் பல தலைவர்கள் என்று ஒரு பட்டியலே வெளியிட்டிருக்கிறது ‘அவுட்லுக்’ வார ஏடு!

படிப்பது கிறித்தவப் பள்ளி, இடிப்பது மாதாகோயில்! ஆர்.எஸ்.எஸ்.கும்பலின் இந்த ‘ஆன்மீக வலிமை’ தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் இல்லாமற் போனதற்காக அவர்கள் பெருமைப்பட வேண்டுமா அல்லது வருத்தப்பட வேண்டுமா?

மதம் மாறுபவன் தேசத் துரோகி! தேசம் மாறினால் தேசபக்தன்!

”கிறித்தவ மதத்திற்கு மாறுபவர்கள் தங்களது புராதனமான சமுதாய கலாச்சார வாழ்வின் இழைகளையெல்லாம் துண்டித்துக் கொள்கிறார்கள். மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு இரையாகி விடுகிறார்கள்” என்று வருத்தப்படுகிறார் சேஷாத்திரி. விசுவ இந்து பரிசத்தின் தலைவரோ ”கிறித்தவர்கள் மேலை நாடுகளுக்கும் முசுலீம்கள் பாகிஸ்தானுக்கும்தான் விசுவாசம் காட்டுகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார். ”மதமாற்றம் என்பது தேசிய மாற்றம்தான்” என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

குஜராத்திலும், ஒரிசாவிலும் மதம் மாறிய பழங்குடிகள் அதே காட்டில் தான் சுள்ளி ஒடித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்தவராக மதம் மாறிய மீனவர்களை விசைப்படகிலேறி அப்படியே அமெரிக்காவிற்கு ஓடவிடவில்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் வெட்டுப்படுவதற்காக மண்டைக்காட்டுக்குத்தான் திரும்பி வருகிறார்கள். இவர்களெல்லாம் மதம் மாறியும் தேசத்தை மாற்றிக் கொள்ளாத ‘தேசத் துரோகிகள்’.

மதம் மாறாமலேயே தேசத்தை மாற்றிக்கொள்ளும் ‘தேச பக்தர்களை’ப் பார்க்க வேண்டுமா? அதிகாலை 5 மணிக்கே சென்னை அண்ணா மேம்பாலத்தின் மேல் நின்றபடி அவர்களைப் பார்க்கலாம். அமெரிக்க கான்சல் அலுவலகத்தின் வாயிலில், அந்தக் காம்பவுண்டு சுவரை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருப்பார்கள்.

பாரதமாமாவின் மடியிலிருந்து தப்பி ஓடும் அந்த ”வெளிநாட்டில் குடியேறவிருக்கும் இந்தியர்”களில் இந்துக்கள் எத்தனை பேர், கிறித்தவர்கள் எத்தனை பேர் என்று ஆர்.எஸ்.எஸ் கணக்கெடுக்குமா? இராமனும், கிருஷ்ணனும், ரிஷிகளும், முனிவர்களும் அவதரித்த இந்தப் புண்ணிய பூமியை விட்டு ஓடுகிறார்களே, அவர்களை ஆசை காட்டி இழுப்பது யார்? அமெரிக்கப் பாதிரியார்களா? அவர்கள் பால்பவுடருக்கு மதம் மாறும் புளியந்தோப்பு, வியாசர்பாடி இந்துக்களல்ல; டாலருக்காக தேசம் மாறும் மயிலாப்பூர், மாம்பலம் இந்துக்கள். கட்டாய மதமாற்றம் போல இவர்கள் கட்டாயமாக தேசிய மாற்றத்துக்கு ஆளாகிறார்களோ? இல்லை. அன்றும் இல்லை, இன்றும் இல்லை.

பிஜியின் கரும்புத் தோட்டத்தையும் இலங்கையின் தேயிலைத் தோட்டத்தையும், மலேசியாவின் ரப்பர் தோட்டத்தையும் உருவாக்கக் கட்டாயமாகக் கப்பல் ஏற்றப்பட்ட உழைக்கும் சாதியினர் அகதிகளாகத் திரும்பி வந்தார்கள். கேம்பிரிட்ஜிற்கும்,  ஆக்ஸ்போர்டிற்கும் கப்பலேறிய அவாள், ஐ.சி.எஸ். அதிகாரிகளாகவும், ஐகோர்ட்டு வக்கீல்களாகவும் திரும்பி வந்தார்கள். இன்று வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களாகத் திரும்பி வருகிறார்கள். பார்ப்பான் கப்பலேறினால் சாதி – மதத்தை விட்டு நீக்க வேண்டும் என்று பேசியவர்கள், இன்று பகவானையே கப்பலேற்றி அனுப்புகிறார்கள்.

மதமாற்றத்திற்குத் தடை விதிக்கக் கோரும் பாரதீய ஜனதா, இந்தத் தேச மாற்றத்துக்குத் தூபம் போட்டு வளர்க்கிறது. ஏனென்றால் அவர்கள் அமெரிக்காவில் ஆலயம் அமைக்கிறார்கள். தியாகய்யர் உற்சவம் நடத்துகிறார்கள், அனைத்துக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ்.ஸூக்கும் அள்ளித் தருகிறார்கள்.

சட்டத்தினால் ஒரு கொட்டடி!

அவர்கள் வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்கள். கிறித்தவர்களும் முசுலீம்களும் இந்நாட்டில் குடியேறிய அந்நியர்கள்! தேசத்தையே மாற்றிக் கொண்டாலும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையும், இந்தியக் குடிமக்களைவிட மேலதிக உரிமைகளையும் பாரதீய ஜனதா வழங்கும். ஆனால், சாதிக்கொடுமையிலிருந்து தப்பிக்க கிறித்தவத்திற்கோ, இசுவாமிற்கோ மதம் மாறினால் தாழ்த்தப்பட்டவர்களின் இடஒதுக்கீடு உரிமையை ரத்து செய்யக்கோரும்.

இதுதான் கட்டாயம். இதுதான் மிரட்டல். ஏனென்றால் ஆசை காட்டிக் கவர்ந்திழுப்பதற்கு இந்து மதத்தில் எதுவும் இல்லை. கிறித்தவத்திற்கும் இசுலாத்திற்கும் மாறிய சூத்திர பஞ்ச சாதியினருக்குச் சேவை செய்து அவர்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கவர்ந்திழுக்க முடியாது. ஏனென்றால் இவாளுக்குச் சேவை செய்வதற்காகவே அவர்களை நியமித்திருக்கிறது இந்துமதம். மதமாற்றம், ‘சகோதரன் பிரிந்து விட்டானே’ என்ற துயரத்தை இந்து மத வெறியர்களுக்குத் தோற்றுவிக்க வில்லை. ‘வேலைக்காரன் ஓடி விட்டானே’ என்ற ஆத்திரத்தைத் தான் உண்டாக்குகிறது.

அதனால்தான் அடிமைத்தனத்திலிருந்து தப்பியோட முயன்ற கறுப்பின மக்களை அமெரிக்க வெள்ளை நிறவெறியர்கள் கொட்டடியில் அடைத்ததுபோல, கிறித்துவத்துக்கும் இசுலாமுக்கும் தப்பியோடி விடாமல் தடுக்க, சட்டத்தால் ஒரு கொட்டடி கட்ட முயல்கிறார்கள் இந்து மதவெறியர்கள். ‘ஆசை காட்டுவதற்கு’ப் பாதிரியாரும், அரபுப் பணமும் இல்லாமல் போனாலும் அறுத்துக்கொண்டு ஓடுவதற்கு அநேகம் பேர் தயாராக இருப்பதால்தான் கொட்டடியைப் பூட்டிவிட முயல்கிறார்கள்.  ஆசை காட்டுபவனைத் தண்டிக்கத் தானே சட்டம் இருக்கிறது. ”அறுத்துக் கொண்டு போகவே முடியாது” என்று சட்டம் போட்டுவிட்டால் சநாதன தருமத்தை நிரந்தரமாக்கி விடலாமே என்று திட்டம் போடுகிறார்கள்.

பார்ப்பன மதத்திற்கு மாற முயன்றதற்காக அன்று நந்தன் எரிக்கப்பட்டான். பார்ப்பன மதத்தைவிட்டு மாற முயற்சிப்பதற்காக இன்று நந்தனின் வாரிசுகள் எரிக்கப்படுகிறார்கள்.

– தொடரும்

பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

_________________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்