privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விதலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

-

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங்

டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங், ஒரு தலித் மாணவன். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இவர் நன்றாகப் படிக்கும் மாணவர். பள்ளியில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். மருத்துவர் ஆக வேண்டும் என்பது மட்டுமே அவரது இலட்சியம், கனவு. ஆனால் அந்தக் கனவு நிறைவேற இந்த சமூகம் அனுமதிக்கவில்லை.

ஜஸ்ப்ரீத் சிங் வறுமையால் வாடும் சாதாரண தலித் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். வீட்டின் மூத்த பிள்ளையான இவரோடு, மற்ற மூன்று இளைய சகோதரிகளையும் உள்ளடக்கியது அவரது குடும்பம். தந்தை வேலைக்குப் போகிறார். தாய் வீட்டு வேலைகளையும் கவனித்தபடியே தூங்கும் நேரம் தவிர எப்போதுமே தையல் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார்.

படிப்பில் திறமையுடன் விளங்கிய ஜஸ்ப்ரீத்தின் படிப்புக்காக மொத்தக் குடும்பமுமே ரத்தத்தை வியர்வையாக்கி, உழைத்துத் தியாகம் செய்தது. மகனை ஒரு ஊர் போற்றும் மருத்துவனாகப் பார்க்க அந்தத் தாயும் ஆசைப்பட்டாள். மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரதட்சிணைக்கு பொருள் சேர்க்க வேண்டிய நமது இந்தியச் சூழலில் தனது மகனது கனவுப் படிப்புக்காகவும் அந்தத் தாய் ஓய்வறியாமல் வேலை செய்து வந்தார்.

சண்டீகர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜஸ்ப்ரீத் சிங் தனது மருத்துவப் படிப்புக்காக சேர்ந்தார். முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டீகரில் தனது மேற்படிப்பான எம்.டி படிப்பை படிக்க வேண்டும் என்பதுதான் ஜஸ்ப்ரீத் இன் திட்டம். இத்திட்டத்தின்படி நான்கு ஆண்டுகள் இளநிலை மருத்துவப்படிப்பில் பெரிய பிரச்சினைகள் இல்லாமல்தான் கழிந்த்து.

அதன் பிறகுதான் அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சியடைந்த ஜஸ்ப்ரீத் இன் வாழ்வில் சூறாவளி வீசத் துவங்கியது. இறுதியாண்டு படிக்கும்போதுதான் பேரா. என்.கே. கோயல் என்பவரது மூலம் தொல்லை ஆரம்பமானது. சாதி வெறியனான என்.கே. கோயல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜஸ்ப்ரீத் சிங்கை சாதியின் பெயரால் அவமானப்படுத்தினான்.

“தலித் என்பதால்தான் உனக்கு இங்கே படிக்க அனுமதி கிடைத்துள்ளது. எப்படியோ மருத்துவப் படிப்பில் இடம் பிடித்து விட்டாய். ஆனால் உன்னை தேர்ச்சியடைய விட மாட்டேன். உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள். நான் உன்னை மீண்டும் முதலிலிருந்து மருத்துவப் படிப்பை மேற்கொள்ளச் செய்யாமல் விட மாட்டேன்” என்றெல்லாம் சவால் விட்டுள்ளான்.

இதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் முக்கியப் பாடங்களில் ஒன்றான கம்யூனிட்டி மெடிசின் பாடத்தில் வேண்டுமென்றே ஜஸ்ப்ரீத் சிங்கை தோல்வியடையச் செய்தான். இந்த அநீதியைத் தனது சக மாணவர்களிடமும், பிற பேராசிரியர்களிடமும் எடுத்துரைக்க முற்பட்டார் ஜஸ்ப்ரீத். மீண்டும் தேர்வு எழுதியும் ஒரு மதிப்பெண் குறைவாகப் போட்டு அவரை தேர்வில் தோல்விடைய வைத்தான் சாதி வெறி பிடித்த கோயல்.

மனம் கலங்கிய மாணவர் ஜஸ்ப்ரீத் இதனைத் தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். தாயும் மகனைத் தேற்றி வரும் தேர்வில் நன்றாக எழுத ஊக்கம் கொடுத்துள்ளார். ஆனால் சாதிவெறி என்ற எதார்த்தத்தில் தனது கனவு நனவாகப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்ட ஜஸ்ப்ரீத் ஜனவரி 27, 2008 அன்று தனது 22 வது வயதில் கல்லூரி நூலகத்தின் ஐந்தாவது மாடியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது சட்டைப் பையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், அநீதி இழைத்த கோயலையும் குறிப்பாக எழுதி வைத்துவிட்டு மறைந்து விட்டார் ஜஸ்ப்ரீத் சிங்.

தன்னுடைய ஒரே மகனை இழந்த பெற்றோருக்கு கிடைத்த அந்தத் துருப்புச் சீட்டைக் கொண்டே காவல் நிலையத்தில் புகார் செய்தனர் அந்தப் பெற்றோர். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. உடனே அங்கிருந்த காவல்துறைக் கண்காணிப்பாளரை வேறு இடத்திற்கு மாற்றல் செய்தது அரசும், ஆளும் வர்க்கமும். இந்த வழக்கில் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த ஏழைத் தந்தையின் தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் பிறகே தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கினைப் பதிவு செய்தனர்.

அதன் பிறகு சில உண்மைகள் வெளி வந்தன. முதலாவதாக தற்கொலைக் குறிப்பு ஜஸ்ப்ரீத் எழுதியதுதான் என நிரூபணமானது. அடுத்ததாக, அவர் தேர்ச்சியடையவில்லை என கோயலால் நிராகரிக்கப்பட்ட ஜஸ்ப்ரீத் இன் கம்யூனிட்டி மெடிசின் தேர்வுத்தாள் அனைத்தும் மூன்று வெவ்வேறு பேராசிரியர்களால் மறு மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் ஜஸ்ப்ரீத் தேர்ச்சி பெற்றிருப்பது தெரிய வந்தது. ஆனால் இந்தச் செய்தியைக் கேட்க அதனை எழுதிய ஜஸ்ப்ரீத் உயிரோடு இல்லை.

இவ்வளவு ஆதாரப்பூர்வ தகவல்கள் இருந்தும் என்.கே. கோயல் ஒருநாள் கூட சிறையில் இருக்கவில்லை. பேராசிரியராக, துறைத்தலைவராக இன்றும் தொடருகிறான். என்ன நடக்கும் என இலக்குத் தெரியாமலேயே இந்த வழக்கைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது அந்தக் குடும்பம். மறு ஆண்டு சகோதரத்துவத்துக்காக கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தன்று தனது இயலாமை, பிரிவுத்துயருடன் கோபத்தை அடக்க முடியாத ஜஸ்ப்ரீத் சிங் இன் இளைய சகோதரி நீதி வேண்டி தனது உயிரையே மாய்த்துக் கொண்டாள்.

சாதிவெறி ஆட்டத்தால், கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம்வயதினர் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். இதனை ஒரு பொருட்டாகவே மதிக்காது, நீதி வழங்குவதை தவிர்த்து ஒரு தலித் வாழ்வின் மதிப்பு இவ்வளவுதான் என உறுதிசெய்யும் அரசின் கொட்டத்தை நேரில் அனுபவித்திருந்தாலும்  தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் சரி, நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம் எனத் தொடர்ந்து போராடி வருகிறார்கள் ஜஸ்ப்ரீத் சிங்கின் குடும்பத்தார்.

டாக்டர் ஜஸ்பிரீத் சிங் கொலை – ஆவணப்படம்

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
டாக்டர். பால் முகுந்த்

தொடர்ச்சியாக தலித் மாணவர்கள் மீதான தாக்குதல் பல கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு மேலும் ஒரு உதாரணம் மருத்துவர் பால்முகுந்த் பார்தி என்ற தலித் மாணவனின் கதை. மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணதேஸ்வர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இவர். ஒடுக்கப்பட்ட  சாம்பர் இனத்தைச் சேர்ந்த இவர் நன்றாகப் படிக்கக் கூடியவர். மேல்நிலை வகுப்பில் 78 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அதற்காகக் குடியரசுத் தலைவர் விருதையும், ஐஐடி நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 8 வது இடத்தையும் பெற்றுள்ளார். கால்நடை மருத்துவப் படிப்பில் முதலில் சேர்ந்த அவருக்கு ஆறு மாதம் கழித்து AIIMSஇல் இருந்து அழைப்பு வந்தது. மருத்துவத் துறையில் ஆர்வம் இருந்த காரணத்தால் அங்கிருந்து வந்த அழைப்பை ஏற்று மருத்தவப் படிப்பில் சேர்ந்துள்ளார். CMBT தேர்வில் கூட வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வுக்கும் தன்னைத் தயார் செய்து வந்தார். கல்விப்புலத்தில் மிகச்சிறந்த நபராகத்தான் இருந்து வந்தார் பால் முகந்த்.

அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான சூழலில் இருந்தது. இரண்டு மகன், ஒரு மகள் என்ற அந்தக் குடும்பத்தில் தந்தை மட்டுமே வேலைக்குப் போகிறார். தாய் வீட்டைக் கவனித்துக் கொள்கிறாள். படிப்பில் சிறந்து விளங்கியதால் மொத்தக் குடும்பமுமே பால் முகுந்தை மருத்துவராக்க தன்னாலியன்ற வரை முயற்சி செய்துள்ளது. வங்கியில் மாத்திரமன்றி வெளியிலும் கடன் வாங்கித்தான் அவரை படிக்க வைத்துள்ளனர். அவரது தந்தைக்குக் கூலி சில சமயங்களில் மூன்று மாதமாகக் கூட கைக்கு வந்து சேராமல் இருக்கும். அதுபோன்ற தருணங்களில் திருமணமான சகோதரி கூட தலா 2500 ரூபாய் வரை மாதந்தோறும் கொடுத்து உதவியுள்ளார்.

இது வெறும் குடும்பப் பாசம் மட்டுமல்ல, அந்த சமூகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஒருவர் கூட கண்டறியாத கனவு மருத்துவராவது. இவர் மூலமாக அச்சமூகத்தின் பிற இளைஞர்களும் உந்தப்பட்டு உயர்வடைவார்கள் என அக்குடும்பத்தினர் கருதினர். ஆனால் அவர்களது இந்த கனவுக்கோட்டையை சாதி என்னும் கருங்கல் வந்து சுக்குநூறாக நொறுக்கியது.

டாக்டர் பால் முகுந்த் இன் சாதி இன்னது என அறிந்த AIIMS பேராசிரியர்கள் அவரை முதல் நாளில் இருந்தே அவமானப்படுத்தத் தொடங்கி விட்டனர். படிப்பில் சிறந்து விளங்கிய அவரை, வெறும் சாதி அடிப்படையில் மட்டுமே தகுதிபெற்று மருத்துவம் படிக்க வந்தவர் என்று கேலி செய்தனர். முதலாமாண்டு துவங்கிய இந்த அவமானப்படுத்தல்கள் அவர் தற்கொலை செய்து கொண்ட இறுதி ஆண்டு வரை தொடர்ந்தது. இப்படிச் செய்தவர்களில் ஐவர் பேராசிரியர்கள். இது தவிர்த்து கல்லூரி முதல்வரும் “தலித் ஆகிய நீங்கள் எல்லாம் மருத்துவராக முடியாது” என்று அவரிடம் சவால் விட்டுள்ளார். பிரச்சினையைப் பெரிதுபடுத்தினால் தனது எதிர்காலம் பாதிக்கப்படுமே என்று கருதி, அதனைப் பொருட்படுத்தாமல் படிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தார் பால் முகுந்த்.

பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரிடம் தான் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளையும், அதனால் ஏற்படும் மனவருத்தத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். தங்களை சாதியைச் சொல்லியே பேராசிரியர்கள் அழைப்பதையும், தங்களைப் பார்க்க மற்றும் பேச அவர்கள் மறுப்பதையும் மிகுந்த மனவேதனையுடன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தலித் மாணவர்கள் வகுப்பில் கேட்கும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்குப் பேராசிரியர்கள் பதிலளிக்க மறுப்பதை எடுத்துச்சொல்லி புலம்பியுள்ளார். செய்முறைத் தேர்வுகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் தேர்ச்சியடைய விடாமல் தடுப்பதுதான் இந்தப் பேராசிரியர்களின் தலையாய பணியாக இருந்திருக்கிறது.

இதனையெல்லாம் பார்த்த பால் முகுந்த் படிப்பு முடிந்தவுடன் இந்தியாவை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்று தனது வீட்டாரிடம் கூறியுள்ளார். தன்னுடைய குடும்பப் பெயரையும், சாதியையும் மாற்ற முடியுமா என்றெல்லாம் முயற்சி செய்துள்ளார். ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்தச் சாதிக்கொடுமையைச் சகித்துக் கொண்டிருக்க முடியாமல், அதே நேரத்தில் தனது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் நிலையை உணர்ந்த பால் முகுந்த் இறுதியாண்டு படிக்கும்போது மார்ச் 3, 2010 அன்று தற்கொலை செய்து கொண்டார். அதற்கு இரு நாட்களுக்கு முன்னர்தான் அவரது தற்கொலை முயற்சி ஒன்று அவரது நண்பனால் தடுக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை அப்படியே விட்டுவிடுமாறு AIIMSஇன் டீன் ராணி குமார், பால் முகுந்த் இன் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டாராம். அதற்கு அவர்கள் மறுக்கவே “எங்கு சென்றாலும் நீங்கள் ஜெயிக்க முடியாது” என்று சவால் விட்டு, மன உளைச்சல் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி வழக்கை முடிக்கப் பார்க்கிறது கல்லூரி நிர்வாகம். பால் முகுந்த் இன் மன உளைச்சலுக்கு யார் அல்லது எது காரணம் என்று பெற்றோர் கேட்கும் கேள்விக்கு நிர்வாகம் பதில் அளிக்க மறுக்கிறது.

என்ன நடந்தாலும் சரி, நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறது பால் முகுந்த் இன் குடும்பம். “எங்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. எனவே இந்திய அரசிடம் நீதி கேட்டு இறுதிவரை போராடுவோம். நீதி கிடைக்காதபட்சத்தில் நாங்களும் தற்கொலை செய்து கொள்வோம்“ என்று கூறிவிட்டு அழத் துவங்குகிறார் பால் முகுந்த இன் தந்தை. மகனை இழந்த தாயோ “புத்திசாலியான என் மகனைக் கொன்று விட்டார்களே. என் மகனே ! என்னை விட்டு எங்கு சென்று விட்டாய்” என்று ஒப்பாரியுடன் அழது கொண்டே இருக்கிறாள்.

டாக்டர் பால் முகுந்த் கொலை – ஆவணப்படம் பாகம் 1 – பாகம் 2

டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் டாக்டர் பால் முகுந்த் பார்த்தி ஆகியோரின் தற்கொலை பற்றி ஒரு செய்திப் படம் எடுக்கப்பட்டுள்ளது. டெத் ஆஃப் மெரிட் என்ற அந்த ஆவணப் படத்தில் சம்பவங்களுடன் இளைஞர்களின் குமுறல்களும் இடம்பெற்றுள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் இவ்வாறு மேற்படிப்புக்குப் போய் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட தலித் மாணவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை ஐஐடி இல் பி.டெக் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த 2007 புத்தாண்டுப் பிறப்பன்று இக்கணக்கைத் துவக்கி வைத்தார். ஐஐஎஸ்சி இன் ஆய்வு மாணவர் அஜய் எஸ்.சந்திரா, ஹைதராபாத் பல்கலை இயற்பியல் ஆய்வு மாணவர் செந்தில்குமார், கான்பூர் ஐஐடி இன் பி.டெக் மாணவர் பிரசாந்த் குரீத், எம்.டெக் மாணவன் ஜி.சுமன், அங்கித வெக்தா என்ற அகமதாபாத் நர்சிங் மாணவி, ஷியாம் குமார் என்ற பிடெக் மாணவர், அமராவதி என்ற ஆந்திரப் பிரதேச குத்துச்சண்டை வீராங்கனை, அவ்வூரைச் சேர்ந்த பி.காம் மாணவி பாந்தி அனுஷா, புஷ்பாஞ்சலி பூர்தி என்ற பெங்களூரு எம்பிஏ மாணவி, லக்னோ மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் சுசீல்குமார் சவுத்ரி,பெங்களூரில் விவசாய விஞ்ஞானம் படித்த ரமேஷ், கான்பூர் ஐஐடி இல் பிடெக் படித்த மாதுரி செல், ஹைதராபாத் இல் பிடெக் மாணவியான வீ. வரலட்சுமி,ரூர்கி இன் பிடெக் மாணவன் மணீஷ் குமார், லினேஷ் மோகன் காவ்லே என்ற டெல்லி பிராந்திய பொறியில் கல்லூரி ஆராய்ச்சி மாணவன் என அப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

புதிதாக இப்பட்டியலைப் பார்ப்பவர்களுக்கு இத்தனை சாதிக் கொடுமைகள் நம் நாட்டிலா ? என்று ஆச்சரியமாக இருக்கலாம். இவை அனைத்தும் கணக்கில் வந்தவை. ஆகவே இவை விதிவிலக்கானவைதான். எல்லாவற்றையும் தொகுத்தால் பட்டியல் தாங்காது. இந்தத் தற்கொலைகள் கோழைத்தனமானவையா? இல்லை, நிச்சயம் இல்லை. இவை ஆதிக்க சாதி வெறி நடத்தியிருக்கும் படுகொலைகள்.  வல்லரசாகப் போகும் இந்தியாவின் சாதனைகள் இந்தக் கொலைகள்.  தாங்கள் நாகரீக உலகைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரையும் கூனிக்குறுக வைக்கின்றன இந்தக் கொலைகள்.

இவை பார்ப்பனியத்தின் சாதி ரீதியான அடக்குமுறை என்று மாட்டும் பார்க்க கூடாது. அடித்தட்டு வர்க்கங்களிலிருந்து மருத்துவர்கள் வந்தால் அவர்கள் எப்படி மக்களது சிரமங்களைப் புரிந்துகொண்டு மக்கள் மருத்துவராகப் பணியாற்றுவார்கள் என்பதறிவோம். அந்த வகையில் இந்த நாட்டின் ஏழைகளுக்கான மருத்துவர்களை வரவிடாமல் செய்யும் நாசகாரச் செயலாகத்தான் இந்தக் கொலைகளைக் கருது முடியும். ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்கும் உரிமையை பல நூற்றாண்டுகளாக மறுத்து வரும் பார்ப்பனியத்தை என்றைக்குக் கல்லறைக்கு அனுப்புகிறோமோ அன்றுதான் நம் நாட்டு மக்களுக்கு சமூக விடுதலை கிடைக்கும்.

அதுவரை இன்னும் எத்தனை இளைஞர்களை இழக்கப் போகிறோம்?

_______________________________________________________________

– ஜென்னி, புதிய கலாச்சாரம், ஜூலை – 2011

________________________________________________________________

படிக்க

  1. //இவை ஆதிக்க சாதி வெறி நடத்தியிருக்கும் படுகொலைகள். வல்லரசாகப் போகும் இந்தியாவின் சாதனைகள் இந்தக் கொலைகள். தாங்கள் நாகரீக உலகைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரையும் கூனிக்குறுக வைக்கின்றன இந்தக் கொலைகள்.//

  2. ஹைதராபாத் பல்கலை இயற்பியல் ஆய்வு மாணவர் செந்தில்குமார் என்னுடன் படித்தவர். சேலம் மாவட்டதில் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் தலித் குடும்பதில் பிறந்தவர்.அவ்ரது குடும்பமெ உழைத்து அவர் படித்தார். சிறந்த மானவர். ஜாதி வெறி நாய்கள் அவரை கொன்று விட்டார்கள்.

  3. இறந்தவர் கணக்கை மட்டும் பார்த்தால் பற்றாது. அகில இந்திய மருத்துவ நிறுவனம் மற்றும் முதுகலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் பயின்ற தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எத்தனை பேர் முதல் தடவை தேர்ச்சியுறுகிறார்கள், தேர்வில் கழுத்தறுக்கப் படுகிறார்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். சிற்சில பிரிவுகளில் அனேகமாக அனைவருமே தோல்வியுறச் செய்யப்பட்டவர்களாகவே இருப்பர்.

    காரணம் கேட்டால் அவர்கள் ‘கோட்டா மாணவர்கள்’ (இந்த அவமானகரச் சொல்வழக்கு வட இந்தியாவில் மிக பிரபலம்), அவர்களுக்கு இடங்கிடைத்தது சாதியால்தான், சொந்த அறிவு மற்றையோரை விடக் குறைவு என்று மதிப்பிற்குகந்த பேராசிரியர்கள் கூறுவார்கள்.

    இத்தகைய நிலையில்தான் அங்கு கல்வி கற்று வெளிவருகிறார்கள். ஆனால் முதுகலைப் படிப்பிலும் நிபுணத்துவ படிப்பிலும் இவர்கள் போட்டியிட்டு அதிலும் வெற்றிபெறவே செய்கிறார்கள்.

    இந்த நிலை முன்னெப்போதும் விட சில வருடங்களுக்கு முன் வடநாட்டில் நடந்த இடஒதுக்கீட்டிற்கெதிரான போராட்டத்திற்குப் பின்னரே இவ்விதமான தீண்டாமை கொடுமைகள் தீவிரமடைந்துள்ளன. அப்போது அ இ ம நி யின் இயக்குநரான இதய அறுவையியல் நிபுணரான வேணுகோபால் என்னும் பிராமணர் இட ஒதுக்கீட்டிற்கெதிரான போராட்டத்தில் பகிரங்கமாகவே தனது ஆதிக்க சாதியுணர்வைக் காட்டினார்; போராட்டத்தை மிகத் தீவிரமாக ஆதரித்தார். அவர் தலைமையில் அந்த நிறுவனத்தில் சாதிவெறி தலைவிரித்தாடியது. இன்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி விடுதிதான். பொது இடத்தில் விளையாட முடியாது. ஒருவித அச்சவுணர்விலேயே வாழ வேண்டும். வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்தாக வேண்டும். ஒரு உயர்சாதி இந்து சொன்னார் “If you cannot avoid rape try enjoying it.” இதுதான் அங்கு நிலைமை.

    மரு. வேணுகோபால் அப்போதைய சுகாதார அமைச்சரான மரு. ராமதாசால் பதவிநீக்கம் செய்யப்பட்டபோது மகிழ்ச்சியுறாதவர் யாரும் இருக்க முடியாது. ஆனால் மநுநீதிவழுவா உச்சநீதிமன்றத்தால் திரும்ப பதவியமர்த்தப் பட்டார். சாதியின் வீச்சு அவ்வளவு வலியது.

    சாவு என்பது ஒரு முடிவு. அதன் பின்னர் ஏற்படுபவை இறந்தவரை பாதிக்காது. தேர்வில் தோல்வியுறுதல் அப்படியல்ல. சாவினும் கொடுமையானது. உணர்ந்தவருக்கே அது புரியும். தன்னம்பிக்கையை தகர்த்தல், தன்னிரக்கங்கொள்ளுதல், கையறு நிலை, கொடுமையிழைப்பவனையே அண்டிநிற்றல், அவனிடம் இரக்கம் எதிர்பார்த்தல் இவற்றை விட சாவு மேலானது.

    • கட்டுரை ஆசிரியருக்கு,
      தலித் என்று எழுதி இருந்தீர்கள், யார் தலித்? தலித் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தக் கூடாட்கு என்று உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்து உள்ளது, அதையும் மீறி எழுதினால் உங்களிடம் தான் சாட்கி வெறி இருக்கிறதே தவிர மற்றவர்களிடம் இல்லை. முதலில்நீங்கள் திருந்தி விட்டு, அப்புறம் அடுத்தவர்களை பற்றி பேசுங்கள். யாரையும் தலித் என்று சொல்பவர்களை தான் முதலில் தண்டிக்க வேண்டும்..
      தேவேந்திரன்…

    • “மரு. வேணுகோபால் அப்போதைய சுகாதார அமைச்சரான “மரு. ராமதாசால்”

      பதவிநீக்கம் செய்யப்பட்டபோது மகிழ்ச்சியுறாதவர் யாரும் இருக்க முடியாது. ஆனால்

      மநுநீதிவழுவா உச்சநீதிமன்றத்தால் திரும்ப பதவியமர்த்தப் பட்டார். சாதியின் வீச்சு

      அவ்வளவு வலியது.”

      “மரு.அன்புமணி ராமதாசால்” என்று இருக்கவேண்டும்.

      பார்ப்பனியத்தின் கொடுங்கரங்களை கொள்ளி வைத்துதான் பொசுக்கவேண்டும்.

      • நன்றி. டைப் பண்ணும் போது விட்டுப்போய் விட்டது. தரவேற்றம் செய்யப்பட்ட பின்தான் தவறு தெரிந்தது. மரு. ராமதாசும் அவரது மகனும் கொள்கைகளில் எவ்வளவோ காம்ப்ரமைஸுகள் அட்ஜஸ்டுமென்டுகள் செய்து கொண்டாலும் இந்த ஒன்றில் நடந்துகொண்ட விதம் மட்டும் பாராட்டுதலுக்குறியது.

    • கோட்டாவில படிக்க வற்radhu அப்புறம் குத்துதே குடையுதேன்னா எப்படி?

      • அப்படி என்ன கான்டு,
        மருத்துவ படிப்பு மட்டுமல்ல பொறீயியல்,கலை என அனைத்து கல்லூரியிலும் யிந்த பார்வைகள் ,அவமானங்கள் தொடருமானால் தலித் கள் ஆயுதத்துடன் கல்வி கற்க செல்லவேண்டும்,ஒரு ளேப் டாப் போல.

        மெய்தேடி

  4. காவியால்
    கட்டுண்டுகிடக்கும்
    சாதீயப் புற்றை
    சிறிதேனும்கூட
    அனஸ்தீசியா கொடுக்காமலே
    அறுத்தெடுக்க முயல்கிறோம்,
    டாக்டர் ஜஸ்ப்ரீத்!!

    டாக்டர். பால் முகுந்த்…

    எங்களின்
    இந்த அறுவை சிகிச்சை
    கத்திகளால் கீறப்படுவதல்ல;
    வாட்களால் வெட்டப்படுவது.
    அறுவைச் சிகிச்சையும்
    நோய்க்கானதல்ல;
    நோய்க் கிருமிகளுக்கானது.

    கடவுளின் பெயரால்
    இரத்தக்காவு கேட்கும்
    காவிக் காட்டேரிகளின்
    தலைகள்மீது
    தயவு பாராத ஜில்லட்டின்கள்
    இறங்கும்வரை…
    இங்கே
    ஆண்டுகள் பல கடந்தாலும்
    பாசக் கயிறாய் வீசப்பட்ட
    தூக்குக் கயிறுகள் நம்மை
    துறத்திக்கொண்டுதானிருக்கும்.

    ஆதலால்
    இந்த அறுவை சிகிச்சை
    கத்திகளால் கீறப்படுவதல்ல;
    வாட்களால் வெட்டப்படுவது.
    அறுவைச் சிகிச்சையும்
    நோய்க்கானதல்ல;
    நோய்க் கிருமிகளுக்கானது.

    சாதி நோயால்
    காவு வாங்கப்பட்ட
    உங்கள் உயிருக்காக
    நீதிமன்றங்களின் நியாயம்
    நிச்சயம் கிடைக்காது.
    அதை
    ஓர் நாள்
    மக்கள் மன்றம்
    மீட்டுக்கொடுக்கும்!

  5. இழிபடுத்தப்படும் சாதி இழி செயல்களுக்கு தீர்வும் பதிலும் கிடைக்க ஓரணியில் படையாய்
    செம்படையாய் எவ்வளவுக்கு எவ்வளவு திரளுகிறமோ,அவ்வளவுக்கு நல்லது.

  6. evan Quota illama padikkiraanu solla mudiyuma Mister.. EVen brhamins kooda quota than padikkiraanga… ungalai mathiri aatgal intha mathiri mindset ullavangalaal thaan saaathiya theendaamai paravi varuthu…

  7. //வல்லரசாகப் போகும் இந்தியாவின் சாதனைகள் இந்தக் கொலைகள். தாங்கள் நாகரீக உலகைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரையும் கூனிக்குறுக வைக்கின்றன இந்தக் கொலைகள்.//-

    உண்மையில் இந்த போன்ற கொடுமைகள் நடக்கும் நாட்டில் இருப்பது, மனசாட்சியுள்ள எவரையுமே வேதனைக்குள்ளாக்கும். ஆதிக்க சாதியினரை சாடி எழுதும் பொழுது, வினவுதான் சாதி வெறியுடன் கட்டுரைகள் எழுதுவதாக புலம்பும் நண்பர்கள் இம்மாதிரியான கட்டுரைகளின் பக்கம் வராதது ஏனோ?

  8. இதில் கொடுமை என்னவென்றால், இந்த பே(மானி)ராசிரியர்கள் எல்லாம் பெரிய மருத்துவர்களாம். போங்க்டாங்க்க்க்க்க்க்க்…. எங்க வீட்டில் எல்லாம் யாரேனும் நன்பர்கள் வந்தால் என்னிடம் அவர்க்ளின் சாதியை கேட்ப்பார்கள். இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை என்பது சட்று ஆறுதலாய் உள்ளது. எப்போதுதான் நம் நாட்டவர்கள் திருந்துவார்களோ.

  9. 1100 மதிப்பெண் எடுத்த பிற்படுத்தப்பட்ட மாணவனுக்கு மருத்துவம் படிக்க இடம் இல்லை.. ஆனால் வெறும் 700 மதிப்பெண் எடுத்து விளிம்பில் தேறும் தாழ்த்தப்பட்ட (எ) பழங்குடி மாணவனுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இட ஒதுக்கீடு எனும் மட ஒதுக்கீடு மூலம் கிடைக்கிறது.. இது முறையா? அந்த மாணவனால் சிறப்பாக மருத்துவம் படித்து முடிக்க முடியாமல் , அங்கேயும் விளிமிபில் தேறி விட்டேத்தியாக அரசு பணியை இட ஒதுக்கீட்டில் பெற்று அரசு மருத்துவமனையில் அமர்ந்து உயிர் விளையாட்டு விளையாட அனுமதிக்கலாமா…?

    மருத்துவம் உயிர் விவசாயம் அல்லவே? அதிலும் ஒதுக்கீடு கேட்கலாமா?

    சாதி பெயரை சொல்லி கூபிடாதே என்று சொல்லும் நீ உன் சாதி பெயரை வைத்துதானே உள்ளே நுழைகிறாய்? உன் தேவைக்காக நீ உபயோகப்படுத்தும் ஆயுதமாக தானே இந்த சாதியை பார்க்கிறாய்… இந்த தலித் என்ற வார்த்தைதான் உனக்கு எத்தனை வசதிகளை தருகிறது… உயர் கல்வி, அரசு வேலை, ஸ்காலர்ஷிப், தகுதி வயது தளர்வு, தகுதி மதிப்பெண் தளர்வு, மற்றும் எதிரிகளின் மேல் பிரயோகிக்க வன்கொடுமை எனும் சட்ட ஆயுதம்… அப்பப்பா…

    முதலில் நீ உன் வசதிக்கு உன் சாதியை உபயோகப்படுதத்துவத்தை நிறுத்து .. அனைவரும் நிறுத்திவிடுவார்கள்… ரெடியா?

    • \\1100 மதிப்பெண் எடுத்த பிற்படுத்தப்பட்ட மாணவனுக்கு மருத்துவம் படிக்க இடம் இல்லை.. ஆனால் வெறும் 700 மதிப்பெண் எடுத்து விளிம்பில் தேறும் தாழ்த்தப்பட்ட (எ) பழங்குடி மாணவனுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இட ஒதுக்கீடு எனும் மட ஒதுக்கீடு மூலம் கிடைக்கிறது.. இது முறையா? //

      1120 மதிப்பெண் எடுக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவனுக்கு இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கிறது.ஆனால் 1125 எடுக்கும் உயர்சாதி மாணவனுக்கு இடம் இல்லாமல் போவது சரியா.
      மனிதா,அது முறைதான்.இது சரிதான்.அதுதான் இட ஒதுக்கீட்டின் பொருள்.அதுவே நியாயம்.

      இந்தியாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அனைவருக்கும் போதுமானதாக இல்லை என்பதால் இருக்கும் இடங்களை நியாயப்படி பகிர்ந்து கொள்வதற்குத்தான் இட ஒதுக்கீடு அமுலில் உள்ளது.இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சலுகையல்ல.அது அவர்களின் உரிமை,அது மட்டுமல்ல நாடு முன்னேறுவதற்கு அவசியமானதும் கூட.

      ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறினால் மட்டுமே சாத்தியமாகும்.வெறுமனே உற்பத்தியை பெருக்குவதால் மட்டுமே பொருளாதாரம் முன்னேறி விடாது.உற்பத்தியான பொருட்கள் நுகரப்பட வேண்டும்.அதற்கு மக்களிடம் வாங்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.
      வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் நிலையில் பெரும்பகுதியான மக்கள் வாழும் நாட்டில் பொருளாதார முன்னேற்றம் என்பது குதிரை கொம்புதான்.அப்படி பின்தங்கிய மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து வரும் பணியில் இட ஒதுக்கீடு கணிசமான பங்களிப்பு செய்கிறது.அப்பன் செய்த தொழிலையே பிள்ளையும் செய்து கொண்டிருந்தால் ஒரு நாளும் முன்னேற்றம் சாத்தியமில்லை. வெள்ளையன் எந்த நிலையில் விட்டு சென்றானோ அப்படியே இருந்திருக்க வேண்டியதுதான்.

      கல்வியில் இட ஒதுக்கீடு கொடுப்பதால் தரம் தாழ்கிறது என்பதும் ஒரு மோசடியான வாதம். கல்லூரியில் நுழைவதற்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரப்படுகிறது. பாடத்திட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்.தேர்வு முறையும் ஒன்றுதான்.பிறகு எப்படி தரம் தாழும். அப்படி தரம் இல்லை என்றால் அதற்கு பாடத்திட்டமும் தேர்வுமுறையும்தான் காரணமாக இருக்க முடியுமேயன்றி மாணவர்களை குற்றம் சொல்லமுடியாது.

      இட ஒதுக்கீட்டின் கீழ் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்கள் குறைவாக நிர்ணயம் செய்யப்படுவதும் குறையாக சொல்லப்படுகிறது.தகுதிதேர்வுகளிலும் நுழைவு தேர்வுகளிலும் முன்னேறிய,நகர்ப்புற மாணவர்கள் எப்படி கூடுதல் மதிப்பெண் பெறுகிறார்கள்.பல லட்சம் உருவாக்கள் செலவில் தனிப்பயிற்சி பெற்றுதான் அந்த மதிப்பெண்களை ”ஈட்டுகிறார்கள்”.யாருக்கு வாய்ப்பு என்பதை மதிப்பெண்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டு விட்டால் ”காசுக்காரனுக்கு இட ஒதுக்கீடு” என்பதுதானே அதன் பொருள்.
      மேலும் கல்விக்காக அரசு செலவிடுவதும்,அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுவதும் யாருடைய பணம்.அது மக்களின் வரிப்பணமல்லவா.அந்த வரியை செலுத்தும் மக்கள் அந்த நிறுவனங்களில் இடம் பெற முடியாதென்றால் அது அநீதியல்லவா.
      ஆகவே கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அவசியமானது.அது மக்களுக்கு உரிமையானது.

      \\மருத்துவம் உயிர் விவசாயம் அல்லவே? அதிலும் ஒதுக்கீடு கேட்கலாமா?//

      காசுக்கு மருத்துவ கல்வியை எப்படிப்பட்ட முட்டாளாக இருந்தாலும் அவனிடம் விற்கும் தனியார் மருத்துவ கல்லூரி நடத்தும் கல்வி கொள்ளையர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.இடம் மாறி வந்து, இட ஒதுக்கீட்டின் மூலம் இடம் பிடித்தாலும் தரமான கல்வி பெற்று வெளியே வரும் மருத்துவ கல்லூரி மாணாக்கர்களிடம் கேட்கிறீர்கள்.

      • திப்பரே!!! … கடைசி கேள்விக்கும் மீசையில் மண் ஒட்டாத அளவுக்கு ஒரு பதிலை எதிர் பார்க்கிறேன்…!!!

        • எனது வாதத்திற்கு எதிர்வாதம் வைக்க வக்கற்ற உங்களுக்கு ”மீசையில் மண் ஒட்டவில்லை” என்று எகத்தாளம் ஒரு கேடா.

          கடைசி கேள்வி பார்த்த மாத்திரத்திலேயே சாதிவெறி பிடித்தோரின் வழக்கமான கள்ளப் பரப்புரை என்று புரிந்து கொள்ளும் வகையில்தான் உள்ளது.இதற்கு தனியாக விளக்கம் தேவையில்லை என்று கருதி விட்டு விட்டேன்.நீங்கள் ஆசைபடுவதால் அதையும் பரிசீலித்து விடலாம்.

          \\சாதி பெயரை சொல்லி கூபிடாதே என்று சொல்லும் நீ உன் சாதி பெயரை வைத்துதானே உள்ளே நுழைகிறாய்?//

          ஆம்.சாதியின் பெயரால்தான் இட ஒதுக்கீடு பெற்று தலித்கள் அரசு நிறுவனங்களில் நுழைகிறார்கள்.அது நியாயமானது,அவர்களுக்கு உரிமையானது,அதுதான் சரியானது என்று முதல் பின்னூட்டத்திலேயே விளக்கி இருக்கிறேன்.உங்களை போன்றோருக்கு அது வேப்பங்காயாக கசந்தாலும் அதுதான் உண்மை.

          \\உன் தேவைக்காக நீ உபயோகப்படுத்தும் ஆயுதமாக தானே இந்த சாதியை பார்க்கிறாய்… இந்த தலித் என்ற வார்த்தைதான் உனக்கு எத்தனை வசதிகளை தருகிறது//

          நீங்களெல்லாம் கண்ணை திறந்து எதார்த்த உலகை பார்க்க மாட்டீர்களா.சாதிவெறி கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு பார்த்தால் உண்மை விளங்கும்.

          ”தலித் என்ற சொல் ஏகப்பட்ட வசதிகளை”தந்த பின்னால்தான் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் சாலையோர நடைபாதையில் வாழ்வோர் அத்தனைபேரும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருக்கிறார்கள்.ஆடு,மாடுகளுக்கு கூட கொட்டகை கிடைக்கிறது.ஆனால் அந்த மக்களோ வனவிலங்குகளை போல வெயில். மழை, குளிர் என்று இயற்கையின் தாக்குதல்களை எதிர்கொண்டு வாழும் நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.அவர்கள் ஏகப்பட்ட வசதிகளை பெற்று வாழ்கிறார்கள் என்று சொல்லத்துணிகிறீர்கள் என்றால் உங்கள் மனம் எந்த அளவுக்கு சாதி வெறியால் வக்கிரம் பிடித்ததாக இருக்க வேண்டும்.

          ”தலித் என்ற சொல் ஏகப்பட்ட வசதிகளை”தந்த பின்னால்தான் இந்த நாட்டில் துப்புரவு பணியாளர்கள் அத்தனைபேரும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருக்கிறார்கள்.அதிகாலை ஆறு மணிக்கே சிற்றூர்,நகரம் என அனைத்து ஊர்களிலும் குப்பை,மலம் வாரி கொட்டினால்தான் சோறு என்ற நிலையில் வாழும் அவர்கள்,பாதாள சாக்கடை இல்லாத ஊர்களில் மனிதக் கழிவு தொட்டிகளை [septic tank] அள்ளி தூய்மை செய்து பிழைப்பு நடத்தும் அவர்கள், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டால் ஒட்டு துணியை கோவணமாக கட்டிக்கொண்டு சாக்கடை குழியில் இறங்கி தூய்மை செய்யும் அவர்கள், ஏகப்பட்ட வசதிகளை பெற்று வாழ்கிறார்கள் என்று சொல்லத்துணிகிறீர்கள் என்றால் உங்கள் மனம் எந்த அளவுக்கு சாதி வெறியால் வக்கிரம் பிடித்ததாக இருக்க வேண்டும்.

          ”தலித் என்ற சொல் ஏகப்பட்ட வசதிகளை”தந்த பின்னால்தான் இந்த நாட்டில் சுமை தூக்கும் கூலித்தொழிலாளர்கள் 99 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்ட மக்களாக இருக்கிறார்கள். மாடு வண்டியிழுப்பது போல் பெரும்பார வண்டிகளை இழுத்து பிழைக்கும் அவர்கள் ஏகப்பட்ட வசதிகளை பெற்று வாழ்கிறார்கள் என்று சொல்லத்துணிகிறீர்கள் என்றால் உங்கள் மனம் எந்த அளவுக்கு சாதி வெறியால் வக்கிரம் பிடித்ததாக இருக்க வேண்டும்.

          ”தலித் என்ற சொல் ஏகப்பட்ட வசதிகளை”தந்த பின்னால்தான் அவர்கள் நகரமானாலும்,சிற்றூர் ஆனாலும் சேரிகளில் வாழ்கிறார்கள்.மாட்டு தொழுவம் போன்ற அந்த சேரி மக்கள்தான் ஏகப்பட்ட வசதிகளை பெற்று வாழ்கிறார்கள் என்று சொல்லத்துணிகிறீர்கள் என்றால் உங்கள் மனம் எந்த அளவுக்கு சாதி வெறியால் வக்கிரம் பிடித்ததாக இருக்க வேண்டும்.

          \\உயர் கல்வி, அரசு வேலை, ஸ்காலர்ஷிப், தகுதி வயது தளர்வு, தகுதி மதிப்பெண் தளர்வு, //

          முந்தைய பின்னூட்டத்தில் சொல்லப்பட்ட இட ஒதுக்கீடு நியாயமானதுதான் என்பதற்கான விளக்கமே இதற்கும் பொருந்தும்.

          \\மற்றும் எதிரிகளின் மேல் பிரயோகிக்க வன்கொடுமை எனும் சட்ட ஆயுதம்… அப்பப்பா…
          முதலில் நீ உன் வசதிக்கு உன் சாதியை உபயோகப்படுதத்துவத்தை நிறுத்து .. அனைவரும் நிறுத்திவிடுவார்கள்… ரெடியா?//

          இந்த வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பதே ஏட்டளவில்தான் உள்ளது.இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் தீர்ப்பு சொல்லப்படாமல் வெகு காலம் இழுத்தடிக்கப்படுகின்றன. அப்படியே தீர்ப்பு சொல்லப்பட்டாலும் குற்றம் நிரூபிக்கப் படவில்லை என குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள்.தண்டனையின் விழுக்காடு 15.71 தான்.தீர்ப்பு வழங்காமல் தூங்கும் வழக்குகள் 85.37 விழுக்காடு.இ.த.சட்டப்படி தண்டனையின் விழுக்காடு 40. ஆதாரம்.
          http://azadindia.org/social-issues/status-of-dalits.html

          இந்த நிலையைதான் தலித்கள் வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என கூசாமல் பொய்யுரைக்கிறீர்கள்.அதேசமயம் தலித்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை எழுதி மாளாது.

          தீண்டாமை சுவர்கள்,இரட்டை குவளை,தனி சுடுகாடு.பொது பாதை வழியாக தலித்கள் பிணத்தை தூக்கி செல்ல கூடாது, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கலவரங்களில் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள்,அவர்களின் குடிசைகளுக்கு தீயிடுதல்,கீழவெண்மணி,விழுப்புரம்.திண்ணியம்.ஊஞ்சனை,மேலவளவு, தோட்டக்குறிச்சி,கொடியங்குளம் என தொடரும் படுகொலைகள் இவ்வளவு அநீதிகள் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக இழைக்கப்படுவதை பார்த்த பின்னும் தலித்கள் உயர்சாதியினரை கொடுமை படுத்துகிறார்கள் என்று சொல்வது எத்தகைய மோசடி.

          லச்சார் படுகொலைகளையும்,கயர்லாஞ்சி படுகொலைகளையும் எண்ணிப்பார்த்தால் கல்நெஞ்சும் கரைந்து விடும்.ஆனாலும் தலித்கள் மீது இவ்வளவு வன்மம் பாராட்டுகிறீர்கள் என்றால் எத்தகைய பாறை நெஞ்சு படைத்தவராக நீங்கள் இருக்க வேண்டும்.

          • நண்பரே. இப்படிப்பட்டவர்களிடம் பேசாமல் இருப்பதே அன்று. இந்த வகையறாக்களுக்கு சொல்லும்படி சொன்னால்தான் உறைக்கும். நம் காலம் வரும். அப்போது மண்டியிட்டு பின்தொடர்வார்கள்

  10. இங்கே பாதிக்கப்பட்டவர்கள் தலித்கள் என்பதால் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். எத்தனையோ பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்களும் இந்த உயர் சாதி வெறியர்களுக்கு மத்திய அரசுநிறுவனங்களில் பலியாகி இருக்கிறார்கள். இந்த OBC மாணவர்களின் துயரங்களை ஏன் நீங்கள் கண்டு கொள்வதில்லை?.

  11. இந்தியாவின் எந்த மூலையிலும் ஒதுக்கீடு யில்லாமல் இல்லை?- ஆனாலும் ஆதிக்கம் அப்படியே தான் உள்ளது!!! காரணம் என்ன???

    Pl c link which is self explanatory:
    http://obcreservation.net/ver2/reservation-mainmenu-9/statictics-mainmenu-101/obc-job-status-mainmenu-79.html

    பந்தியில் உக்காந்தாச்சு -இலையும் போட்டாச்சு! – சாப்பாடு போட்டால் தானே???ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும்- இதுக்கு ஒரு வைக்கம் போராட்டம் வரவேண்டுமோ???

Leave a Reply to ceebee பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க