privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்'இந்து கடையிலேயே வாங்கு!' வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு.....?

‘இந்து கடையிலேயே வாங்கு!’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு…..?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 11

”இந்துவியாபாரிகளின்கடையில்எல்லாமதத்தெய்வங்களும்இருக்கும். கிறித்துவ – முசுலீம்கடைகளில்அவரவர்தெய்வங்கள்மட்டும்இருக்கும். மேலும்அவர்களுடையமதப்பெயர்களைமறைத்துவிட்டு, ஸ்டார், சந்திரிகா, டீலக்ஸ், கோல்டு, இந்தியா, சங்குமார்க்என்றுபொதுவானபெயர்களைகடைகளுக்குவைத்துக்கொள்கிறார்கள். எனவேஇந்துஉணர்வைக்காட்டும்வகையில், இந்துக்கள்அனைவரும்இந்துக்கடைகளிலேயேபொருள்வாங்கவேண்டும்.”

வருடா வருடம் தீபாவளியின்போது இந்து முன்னணி வெளியிடும் துண்டுப் பிரசுரம்

முசுலீம் எதிர்ப்பு வெறியில் இந்துமதவெறியர்களின் முரண்பாடான பிதற்றலைப் பாருங்கள். சிறுபான்மையினர் தங்கள் கடைகளில் அவரவர் தெய்வங்களை வைத்தால் மதவெறி என்கிறார்கள். கடைப் பெயர்களை மதப்பெயரின்றி ‘தமிழ்நாடு’, ‘இந்தியா’ எனப் பொதுவாக வைத்தால் ‘ஒளிந்து கொள்வதாக’க் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்கள் சிரித்தாலும் குற்றம்; அழுதாலும் குற்றம்.

தமிழகத்தில் 80-களுக்குப் பிறகு இந்து முன்னணி -ஆர்.எஸ்.எஸ்.கும்பல் பரப்பி வரும் பிரபலமான விசமப் பிரச்சாரங்களில் இது முக்கியமானது. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைக் குறிவைத்துப் பரவி வரும் இந்நஞ்சை நாம் முறியடிப்பது அவசியம். இன்று வரையிலும்  இந்து, முசுலீம் உழைக்கும் மக்களிடையே இணக்கமான சமூக உறவு மதபேதமின்றி நிலவி வருகிறது.

ஏழு பார்ப்பனப் பெண்களையும், இரண்டு பார்ப்பனக் குழந்தைகளையும் காப்பாற்றும முயற்சியில் உயிர் துறந்த சையது – பக்ருதீன் என்ற பெரியவரின் சமாதிதான் புதுக்கோட்டை, திருமயத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பாவா பள்ளி வாசலாகும். இதற்கு தொண்டைமான், சேதுபதி போன்ற அரசர்கள் ந்னகொடை அளித்தனர். ஆண்டுதோறும் நிகழும் சந்தனக்கூடு விழாவில் அவ்வட்டாரத்தின் கள்ளர் சாதியினர்தான் பெரும்பங்கு வகிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தர்காக்கள், நாகூர், வேளாங்கண்ணி, மாரியம்மன் கோவில்களிலும் இத்தகைய சூழ்நிலையைப் பார்க்க முடியும். மதவேறுபாடின்றி உழைக்கும் மக்கள் கலந்து கொள்ளும் திருவிழாக்களாக இவை விளங்குகின்றன. நோன்புக் கஞ்சியும், அம்மன்கூழும் மக்களிடம் இயல்பாகப் பரிமாறப்படும்.

உழைக்கும் மக்களிடையே இத்தகைய சமூக உறவுகள் இருந்த போதிலும் இந்து – முசுலீம் இரு மதங்களிலும உள்ள மேல்சாதி மேட்டுக் குடியினர் இப்படி இயல்பாக ஒன்று கலப்பதில்லை. தமது மதப்புனித ஆச்சாரத்தில் தனித்து நிற்கவே விரும்புகின்றனர். அம்மன், சுடலைமாடன் கோவில்களை ‘சிறு தெய்வ வழிபாடு’ என்று பார்ப்பன மேல்சாதியினர் இகழ்கின்றனர். தர்காக்களுக்கு இசுலாத்தில் இடமில்லை என இசுலாமியப் பழமைவாதிகள் தடை போடுகின்றனர். இவர்களிடமிருந்துதான் இருமத அடிப்படை வாதமும் எழுகின்றது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி இந்து மதவெறியர்களின் ‘வர்த்தக அரசியலை’ப் பரிசீலிப்போம்.

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இசுலாமியப் பெயர் வைத்தால் தங்கள் வர்த்தகம் பிரபலமடையாது என்பதால்தான் இசுலாமிய வியாபாரிகள், திரையுலக நடிகர்கள் தங்களது மத அடையாளம் தெரியாமல் மறைத்துக் கொள்கிறார்கள். அல்லது அவர்களில் சிலரது மதச்சார்பற்ற உணர்வுகூட காரணமாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மை மதத்தினரிடம் வளர்க்கப் படும் வகுப்புவாத உணர்வும், வெறியுமே இதற்கு அடிப்படையான காரணம்.

‘இந்துக்களிடமே’ இல்லாத விநாயகர் ஊர்வலத்தை தூத்துக்குடியிலும், திண்டுக்கல்லிலும் முசுலீம்கள் மாலை போட்டு வரவேற்றார்கள் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் சில ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் பிரசுரிக்கின்றன. தமது மதக் கோட்பாட்டைத் தாண்டி புதிதாகப் பல இடங்களில் இசுலாமியர்கள் இப்படிச் செய்வதற்குக் காரணம் இந்து மதவெறி குறித்த அவர்களது அச்சம்.

ஒரு கடையில் தெய்வங்கள் படம் வைப்பதும், வைக்காததும் அவரவர் விருப்பம். கிறித்தவமும், இசுலாமும் ஓரிறைக் கோட்பாட்டு மதங்கள் என்பதால் பொதுவாக வேறு கடவுளர்களை அவர்கள் வணங்குவதில்லை. மேலும் ‘ஒரு கடவுள் கொள்கை’ என்பது புராதன இனக்குழு – வழிபாட்டிலிருந்து பிறந்து வளர்ந்து முன்னேறிய மதத்தின் முக்கியமான அம்சமாகும். சாதியத்தில் வேறூன்றியிருக்கும் பார்ப்பனிய இந்துமதம் – மதம் என்ற வகையில் பின்தங்கியே இருக்கிறது. காரணம் அது பல கடவுள் மதமாக இருக்கிறது.

இந்து மதத்தில் ஏற்கனவே முப்பது முக்கோடி தேவர்கள் இருக்கும்போது அல்லாவையும், இயேசுவையும் சேர்த்துக்கொள்வதில் பிரச்சினை இல்லை. மேலும் இந்து வியாபாரிகளின் கடையிலிருக்கும் கடவுளர்கள் கூட சாதிக்கேற்பவே மாறுபடுவார்கள். மதுரை வீரன், முனியாண்டி, சுடலைமாடன், இசக்கி, மாரியாத்தா போன்ற  சூத்திர – பஞ்சமச் சாமிகளை – ஐயர், ஐயங்கார், சைவப்பிள்ளை, ரெட்டி, நாயுடு, முதலியார் கடைகளில் பார்க்க முடியாது. பிள்ளையார் கொழுக்கட்டையை விழுங்குவதற்காக கருணாநிதியை வம்படியாக அழைக்கும் இராம.கோபாலன், ஆத்தாளுக்குப் படைக்கப்படும் ஆட்டுக்கறியை என்றைக்கும் உண்ண மாட்டார்.

இந்தக் ‘கடைப் பிரச்சினை’யின் மையம் என்ன? ஒரு வியாபாரியின் நோக்கம் லாபம் ஈட்டுவதுதான். தமது மதத்துக்குச் சேவை செய்வது அல்ல. அதைப் போல வாங்குகின்ற நுகர்வோருக்கு பொருளின் தரம், மலிவு விலை, கடைக்காரர் அளிக்கும் சேவை – இவைதான் முக்கியம். தத்தமது மதக் கடைகளில் வாங்கினால் ‘சொர்க்கம்’ கிட்டும் என்பதல்ல.

கடை வைத்து விற்பனை செய்யும் இந்துக்களைவிட வாங்குகின்ற நுகர்வோரான இந்துக்கள்தான் கோடிக்கணக்கில் அதிகம். இங்குதான் கீதா ரகசியம் போன்ற சூட்சுமம் உள்ளது. பொருள் வாங்கும் கோடிக்கணக்கான ‘இந்துக்களின்’ நலனை முன்னிறுத்தி ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்து முன்னணியும் தமது முழக்கத்தை முன் வைக்கவில்லை.

அப்படி வைப்பதாக இருந்தால் ‘இந்துக்களுக்கு மட்டும் விற்பனை செய், இந்துக்களுக்கு மட்டும் தள்ளுபடி கொடு’ என்று இந்து முதலாளிகடம் கேட்க வேண்டும். கேட்காததற்குக் காரணம், பார்ப்பன, பனியா தரகு முதலாளிகள்தான். இவர்களே ஆர்.எஸ்.எஸ். கும்பலின் எசமானர்களாக உள்ளனர். ‘எங்கள் இந்து முதலாளிகள் லாபம் பார்க்க இந்துக்களே உதவுங்கள்’ என்று அவர்களால் கோர முடியாது. அதனால்தான் ‘இந்து உணர்வைக் காட்டும்  வகையில் இந்துக் கடைகளில் வாங்குங்கள்’ என்று மக்களிடம் கோருகின்றனர். ஆக, இந்து உணர்வு மக்களுக்கும், வியாபாரத்தின் இலாபம் முதலாளிக்கும் சரியாகப் போய்ச் சேருகின்றது. மொத்தத்தில் முதலாளி ஆதரவு, முசுலீம் வெறுப்பு, மக்களிடம் மதமெறி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கின்றனர்.

இந்து மதவெறியர்களுக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில், மதப்பிரிவினையால் தமது இலாபத்தை இழக்க முதலாளிகளும், வியாபாரிகளும் தயாராக இல்லை. முசுலீம் – கிறித்தவர்களுக்கு விற்காதே, ரம்சான், கிறிஸ்துமஸ், புத்தாண்டில் தள்ளுபடி விற்பனை செய்யாதே என இந்து முன்னணி தங்கள் முதலாளிகளிடம் கேட்க முடியுமா? புற்றீசல் போல் இந்தியாவை மொய்த்து வரும் பன்னாட்டு நிறுவனங்களை ‘கிறித்தவன்’ எனத் தடை போட முடியுமா? வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயை ‘இசுலாமியப் பெட்ரோல்’ என்று ஒதுக்க முடியுமா? முன்பு விலையேற்றத்தைத் தடுக்க வெங்காயத்தை ஈரானிலிருந்தும், சர்க்கரையை பாகிஸ்தானிலிருந்தும் இறக்குமதி செய்தது பா.ஜ.க. அரசு. வெங்காயம், சர்க்கரையை மட்டும் வெட்கம் கெட்டுத் தின்னலாமா?

இப்படி ‘வியாபாரத்தில்’ இந்து மத வெறியைத்  திணித்தால் சிக்கல் அவர்களுக்குத்தான். பொருள் வியாபாரத்தில் மட்டுமல்ல, ‘உழைப்பு வியாபாரத்திலும்’ இந்து உணர்வைப் புகுத்தினால், கீழ்க்கண்டவற்றை இந்து முன்னணி கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

‘இந்துக்களே துபாய்க்கும், சவுதி அரேபியாவுக்கும் போகாதீர்கள்’ என்று தடுக்க வேண்டும்; சென்னை – அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் இராப்பகலாக வரிசையில் நின்று ‘கிறித்தவ’ அமெரிக்காவிற்குப் போகத் துடிக்கும் பார்ப்பன அம்பிகளைப் பிடித்து உதைக்க வேண்டும். கிறித்தவன் கடையில் பொருள் வாங்குவதைவிட அவன் நாட்டிற்குக் கைகட்டிச் சேவகம் செய்வது இழிவில்லையா? மாறாக அமெரிக்காவிலிருக்கும் அம்பிகளிடம் வசூல் செய்வதற்கென்றே பல்வேறு பினாமி அமைப்புகளை அங்கே ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது.

இவையெல்லாம் போகட்டும், பார்ப்பன – பனியா – மார்வாடி முதலாளிகள் தங்கள் பொருள்களை ‘கிறித்தவப்’ பெயர்களில் விற்கிறார்களே, அதையாவது தடுக்கலாமே? டி.வி.எஸ்.அய்யங்கார் அறிமுகப்படுத்தியிருக்கும் சாமுராய், ஸ்கூட்டி போன்ற இருசக்கர வண்டிகளெல்லாம் இந்துப் பெயர்களா? விஜய் மல்லையாவின் மெக்டோவல், பிளாக்நைட் போன்ற சாராய அயிட்டங்களுக்கு ராமன் – கிருஷ்ணன் என்று பெயர் மாற்றக் கேட்டுப் பார்க்கலாமே? ஆணுறைகளில் கூட, நிரோத், பியல்டா, டியூரக்ஸ், மூட்ஸ் போன்ற கிறித்தவ சமாச்சாரங்களைத் தவிர்த்துவிட்டு, காமசூத்ரா போன்ற இந்து மணம் கமழும் ஆணுறைகளைத்தான் வாங்க வேண்டும் என்று இந்து முன்னணி தட்டி எழுதி வைக்க வேண்டாமா?

வியாபாரிகளை இந்து – முசுலீம் எனப் பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ். இந்து வியாபாரிகளைச் சாதிவாரியாகப் பிரிக்கத் தயாரா? பார்ப்பனர், பனியா, மார்வாடி, சேட், செட்டியார் போன்ற சாதிகள் மட்டுமே தரகு முதலாளிகளாக இருக்கும் மர்மம் என்ன?

– தொடரும்.

_________________________இதுவரை …………………………………………..

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்