privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!

ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!

-

2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது.

போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான  டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றக் கோரியும், இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவரான செபஸ்டின் கௌ மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் எதிர்ப்பைக் காட்டி போபால் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இலண்டன் ஒலிம்பிக்கை “டௌ ஒலிம்பிக்” எனக் கூறும் போபால் மக்கள், டௌ வெளியேற்றப்படாவிட்டால், இலண்டன் ஒலிம்பிக்கை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். போபாலைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் இலண்டன் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்குமாறு இந்திய விளையாட்டு துறையையும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியையும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இந்திய ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலையை மட்டுமே இதுவரை செய்துள்ளது.

ஒலிம்பிக்கில் டௌ : நாய் விற்ற காசு குரைக்காது !டௌவுக்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கடிதத்தைக்கூட அதன் ஆதரவாளர்களால்  சகித்துக் கொள்ள முடியவில்லை.  டௌவை ஆதரித்துத் தலையங்கம் எழுதிய தினமணி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதியதற்காக இந்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது. இந்தியாவில் எழுந்துள்ள எதிர்ப்புகளுக்குப் பதிலளித்த இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவர் கௌ, டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

டௌ கெமிக்கல்சுக்கு ஆதரவாகப் பேசும் கௌ முதல் தினமணி வரை எல்லோரும் வைக்கும் வாதம், போபால் படுகொலைகளுக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பாளியாக முடியாது என்பதாகும். அவர்களது வாதப்படி, 1984ஆம் ஆண்டு போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விபத்து நடந்தது; ஆனால், டௌ கெமிக்கல்ஸ் யூனியன் கார்பைடை வாங்கியதோ 2001இல் தான்; அதாவது, விபத்து  நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான். இதனால் போபால் படுகொலைக்கும் டௌவுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள்.

மேம்போக்காகப் பார்த்தால் நியாயம் போலத் தோன்றும் இந்த வாதம் மிகவும் வக்கிரமானது. ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கும் போது அதன் சொத்துக்களை மட்டும் வாங்குவதில்லை. நிறுவனத்தின் பொறுப்புக்களையும் சேர்த்துத்தான்   வாங்குகிறது. யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கும்போது, போபால் படுகொலை பற்றி தெரிந்துதான் டௌ கெமிக்கல்ஸ்  அதனை வாங்கியது. அதுமட்டுமல்லாமல், போபால் படுகொலைக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் தரக் கோரி இந்திய அரசே டௌ கெமிக்கல்ஸ் மீதுதான் வழக்குத் தொடர்ந்துள்ளது. உண்மை இவ்வாறிருக்கையில், போபால் படுகொலைக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பில்லை என இவர்கள் வாதிடுகிறார்கள் என்றால், ஒன்று டௌவிடமிருந்து இவர்கள் பணம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது  நாட்டு மக்கள் குறித்தும், அவர்களது துன்ப துயரம் குறித்தும் கடுகளவும் கவலைப்படாத வக்கிரப் பேர்வழிகளாக இருக்க வேண்டும். செபஸ்டின் கௌ , டௌவை ஆதரிக்க முன்னது காரணம் என்றால், தினமணிக்குப் பின்னது காரணம்.

ஒலிம்பிக்கில் டௌ : நாய் விற்ற காசு குரைக்காது !போபால் படுகொலையை விடுத்துப் பார்த்தால்கூட, டௌகெமிக்கல்ஸ் ஒன்றும் சொக்கத் தங்கமில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கி இன்றுவரை அமெரிக்கா நடத்திவரும் பல படுகொலைத் தாக்குதல்களுக்கு ஆட்கொல்லி நச்சு இரசாயனங்களை உற்பத்தி செய்து தருவது இந்த நிறுவனம்தான். வியட்நாம் போரில் அப்பாவி மக்கள் மீது வீசப்பட்ட “நாபாம்” இரசாயன குண்டுகளை இதே டௌ நிறுவனம்தான் தயாரித்துக் கொடுத்தது. இத்தகைய கொலைகார நிறுவனத்தைத்தான் இவர்கள் மகா யோக்கிய சிகாமணியாகச் சித்தரிக்கிறார்கள்.

இவர்கள்தான் இப்படி என்றால், இந்திய விளையாட்டு வீரர்களின் யோக்கியதையோ அருவருக்கத்தக்கதாக உள்ளது. இந்தியா ஒலிம்பிக்கைப் புறக்கணித்துவிட்டால் போட்டிகளில் பங்கெடுக்கத் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு எங்கே பறிபோய்விடுமோ என அஞ்சும் அவர்கள் போட்டியைப் புறக்கணிக்கத் தேவையில்லை என்கின்றனர்.  காமன்வெல்த் போட்டி நாயகன் என ஊடகங்களால் போற்றப்படும் ககன் நரேங் (துப்பாக்கிச் சுடுதல்), ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பது தவறென்றும் ஒலிம்பிக்குக்குப் பணம் கொடுத்ததன் மூலம் ‘டௌ’ தனது தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ரிஷ்வி எனும் முன்னாள் ஹாக்கி வீரர் கையில் கறுப்பு பட்டை அணிந்து செல்லலாம் என யோசனை சொல்கிறார். நாட்டுப்பற்றோ மக்கள் நலனோ மயிரளவும் இல்லாமல்,  தனது நலனை மட்டுமே பார்க்கும் அற்பவாத அடிமைகளாகக் கிடக்கும் இந்த ‘வீரர்’கள்தான், அர்ஜூனா, கேல் ரத்னா  என நாட்டின் உயர்ந்த விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் போட்டியை ஏதோ புனிதமான நிகழ்வாகவும், அதில் கலந்து கொள்வது ஏதோ மிகப்பெரிய பொறுப்பாகவும் முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் ஒலிம்பிக் என்பது, மிகப்பெரிய அளவில் உலக முதலாளிகள் நடத்தும் வியாபாரம். இதன் காரணமாகத்தான், அதனை நடத்தும் வாய்ப்புக்காக எல்லா நாடுகளும் போட்டி போடுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு, 370 கோடி ரூபாய் என்பது பெரிய தொகையே இல்லை. டௌ கெமிக்கல்சுக்கு இத்தொகையைத் திருப்பிக் கொடுத்து வெளியேற்றிவிடுவதில் அதற்குப் பொருளாதார ரீதியில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால், அவ்வாறு செய்தால்  அந்த நிறுவனத்தைக் கொலைகாரன் என முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதாகிவிடும். அதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தை, தங்களில் ஒருவனை, கொலைகாரன் என முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதை உலக முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறது.  எனவேதான், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி டௌவை ஆதரிக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளைப் பகைத்துக்கொள்ள விரும்பாத இந்திய அரசும் டௌவை ஆதரிக்கிறது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012