privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாஎனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

-

அறிமுகம்

சீன தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் செம்படை, நீண்ட பயணத்தை வெற்றிகரமாக முடித்ததன் 70வது ஆண்டு நினைவாக மை லாங் மார்ச் என்ற திரைப்படம் சீனாவைச் சேர்ந்த ஆகஸ்ட் பர்ஸ்ட் பிலிம் ஸ்டுடியோவினால் எடுக்கப்பட்டது.

இந்த திரைப்படம் Axis of War (The First of August, My Long March, Night Raid) என்ற சீனப் புரட்சி தொடர்பான 3 திரைப்படங்களில் இரண்டாவதாக வெளிவந்த ஒன்று. ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்தத் திரைப்படத்தில் குண்டு வீச்சுகளும், போராட்டங்களும், மனித முயற்சிகளும், வலிநிறைந்த அனுபவங்களாக, போராட்டத் துடிப்பின் எத்தனமாக அழுக்கும், ரத்தமும், தூசியுமாக படமாக்கப்பட்டுள்ளன. .

சீன வரலாற்றைக் கற்றுக் கொள்ள விரும்பும் எவரும் பார்க்க வேண்டிய படம். இதன் டிரைலர் யூடியூபில் சேர்க்கப்பட்டுள்ளது திரைப்படத்தின் டிவிடியை இணைய வழியாக வாங்கிக் கொள்ளலாம்.
இத் திரைப்படத்தின் சில பகுதிகளை காண

வரலாற்றுப் பின்னணி

நீண்ட பயணம் சினிமா அறிமுகம்!20-ம் நூற்றாண்டின் முதல் பாதி.

ஐயாயிரம் ஆண்டு பாரம்பரியத்தைக் கொண்ட சீன நாடு மன்னராட்சியிலிருந்து விடுபட்ட பிறகும், தொடர்ந்த அன்னிய ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்தியங்கள் சீனாவின் உள்ளே தமது ஆதிக்கப் பகுதிகளை ஏற்படுத்திக் கொண்டு ‘சுய ராஜ்யம்’ நடத்திக்கொண்டிருக்கின்றன. அதிகாரப் போட்டியில் ஜப்பான் ஏகாதிபத்தியமாக களம் இறங்கத் தயாராகிறது. ஏகாதிபத்திய சுரண்டல் என்ற பெரும் பாரம் ஒரு பக்கம், நிலப்புரபுக்களின் சுமை இன்னொரு பக்கம் என்று சீன மக்களின் முதுகு உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தச் சுமைகளை தூக்கி எறிந்து மக்களை விடுவிக்கும் போராட்டம் வேண்டும். மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்று ‘சொத்துரிமை, பரம்பரை உரிமைகள் என்று பெரும்பான்மை மக்களை புதிய அதிகார வர்க்க சுரண்டலின் கீழ் வைத்திருக்கும் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் ‘தேசிய’ அரசாங்கம் ஒரு பக்கம். ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம், தொழிலாளர்களுக்கு உற்பத்தியில் உரிமை, உழைக்கும் மக்களுக்கு அதிகாரம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சி மறு பக்கம்.

யுத்தப் பிரபுக்களும் தேசியக் கட்சி (கோமிங்டாங்) அரசாங்கமும் நாட்டின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த தென் சீனாவில் ஜியாங்ஷி மாகாணத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் மக்கள் செந்தள பிரதேசத்தை உருவாக்கினார்கள். கம்யூனிஸ்டுகளை தேசத் துரோகிகள் என்று வர்ணித்து அழித்தொழிப்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக பல படைகளை ஏவி விட்டது சியாங் கை ஷேக் தலைமையிலான கோமிங்டாங் அரசாங்கம்.

செம்படையினரின் கொரில்ல போர் முறை இப்படி இருந்தது…

எதிரியை ஆழமாக ஊடுருவச் செய்வதற்கு ஆசை காட்டுதல்

எதிரி முன்னேறுகிற பொழுது நாம் பின்வாங்குகிறோம்

எதிரி நிற்கிற பொழுது நாம் துன்புறுத்துகிறோம்

எதிரி களைப்படையும் போது நாம் தாக்குகிறோம்

எதிரி பின்வாங்கும் போது நாம் துரத்துகிறோம்

‘செம்படையினரை தாக்கி, விரட்டி, துரத்தி முற்றிலும் அழித்து விட வேண்டும்’ என்று சியாங் கை ஷேக் பெரும் ஆயத்தங்களுடன் போர்களை நடத்தினான். பல முறை தோல்விகளைச் சந்தித்த பிறகு இறுதிப் போராட்டத்துக்கு 10 லட்சம் பேரைக் கொண்ட படையைத் திரட்டினான். ஜெர்மன் ஆலோசகர்களின் உதவியுடன் திட்டங்களை வகுத்துக் கொண்டு சண்டையைத் தொடங்கினான்.

‘பலமான எதிரியை சந்திக்கும் போது பின்வாங்க வேண்டும்’ என்ற கொரில்லப் போர் கோட்பாட்டுக்கு மாறாக நேருக்கு நேர் சண்டையில் அரசுப் படைகளை எதிர் கொண்ட செம்படை பின்னடைவுகளைச் சந்தித்தது. கோமிங்டாங் படையினரின் முற்றுகையிலிருந்து தப்பித்து தமது ஆயுதங்களோடும் படைகளோடும் மக்களோடும் 1934-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைப்பயணமாக கிளம்பியது கம்யூனிஸ்டுகளின் செம்படை.

தொடர்ந்து துரத்தி வந்த அரசுப் படைகளின் தாக்குதல்களை தவிர்த்தபடியே சீனாவின் மேற்குப் பகுதிகள் வழியாக வடக்கு நோக்கி நகர்ந்தது செம்படை. இந்த பயணம் சுமார் 370 நாட்கள் நீடித்து வடமேற்கில் உள்ள ஷான்ஷி மாகாணத்தில் முடிவுற்றது. ஜியாங்ஷியிலிருந்து புறப்பட்ட படையினரில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே பயணத்தை நிறைவு செய்தார்கள். மற்றவர்கள் வழியில் நடந்த போர்களிலும், பயணத்திலும் உயிரிழந்தார்கள்.

திரைப்படக் காட்சிகளும், வசனங்களும் – My Long March

1. விமானப் பயணம்

இந்த நீண்ட பயணத்தில் 15 வயது கிராமத்துச் சிறுவனாகக் கலந்து கொண்ட கதை சொல்லி (வாங் ருய்) 70 ஆண்டுகளுக்குப் பிறகு வயதான மனிதராக தனது ஊருக்குத் திரும்பி வருகிறார். ‘என்னுடைய வாழ்க்கையின் அதிக மகிழ்ச்சியான நிகழ்வுகளும், அதிக சோகமான நிகழ்வுகளும் நீண்ட பயணத்தில்தான் நடந்தன’ என்று அவர் சொல்ல விமானத்தில் பயணிக்கும் அவரது பார்வை  மேகங்களின் ஊடாக  வானத்திலிருந்து குண்டு மழை பொழியும் ஆற்றுப் பாலத்தின் மீது காட்சியாக விரிகிறது.

2. முதல் தாக்குதல்

செம்படை வீரர்கள் படகுகளின் மீது பலகைகளைப் போட்டு அமைக்கப்பட்ட மிதக்கும் பாலத்தின் மீது ஆற்றைக் (ஷியாங் ஆறு) கடக்கிறார்கள். வானத்திலிருந்து குண்டு மழை பொழிகிறது. நூற்றுக் கணக்கான படைவீரர்கள் கொல்லப்படுகிறார்கள். பிழைத்தவர்கள் விடாமல் முன்னேறி செல்கிறார்கள். விமானங்கள் எரிபொருள் தீர்ந்து திரும்பிப் போய் விட்டு வரும் இடைவெளியில் ஒரு 15 வயது சிறுவன் முதுகில் கனமான சக்கரம் ஒன்றை சுமந்து கொண்டே தன் தந்தையைத் தேடி குரல் எழுப்பிக் கொண்டே ஓடுகிறான். அலை அலையாக முன்னேறும் செம்படையினரைத் தாண்டி போகிறான்.

3.  தாக்குதலுக்குப் பிறகு

புகையிலும் அழுக்கிலும் ஊறிப் போயிருக்கும் மனிதர் கூட்டம் அலை அலையாக முன்னேறுகிறது. விமானங்கள் திரும்பி வருவதற்குள் தப்பித்து மறைந்து விட வேண்டும். காயமடைந்தவர்களை தூக்கிச் செல்லும் குழுவினரிடையே தனது அக்காவைப் பார்த்து ‘அப்பாவைக் காணவில்லை’ என்று அழுகிறான் பையன் வாங் ருய்.  அவனை முன்னால் போகச் சொல்லி விட்டு காயமடைந்தவர்களைத் தேடி அக்கா போகிறாள். எதிர்ப்படும் அப்பாவிடம் வாங்ருய் முன்னால் போகும் தகவலைச் சொல்கிறாள்.

சௌ-என்லாய் தொலைபேசியில் தகவல் அனுப்ப முயன்று தோல்வி அடைகிறார். கருவியில் ஏதோ கோளாறு. அவரை பாதுகாப்பாக கரை கடந்து போகச் சொன்னதை கோபமாக மறுத்து கருவியை சரி செய்யச் சொல்கிறார்.

4. இரண்டாம் தாக்குதல்

இதற்கிடையில் அடுத்த விமானத் தாக்குதல் ஆரம்பிக்கிறது. குண்டுகள் தண்ணீரிலும் பாலத்திலும், படைவீரர் கூட்ட நடுவிலும் விழுகின்றன. முதுகில் சுமையுடன் நடக்கும் வாங்ருய் குண்டு வீச்சில் கீழே விழுகிறான். அவனை தூக்கி நிறுத்தும் ஒருவர் அந்தக் குழுவினர் தூக்கி வரும் கனமான பொருட்களை ஆற்றில் தூக்கிப் போடச் சொல்கிறார். ‘அது மிக முக்கியமான கருவி, இதைத் தூக்கிப் போட்டு விட்டால் மேல் மட்டத்தில் எங்களைக் கேட்பார்கள். நீங்க ஒரு ரசீது எழுதி தர முடியுமா’ என்று வாங் தூக்கிப்போடச் சொல்பவரிடம் கேட்கிறார். ‘விட்டா கோயிலைக் கூட தூக்கிக் கொண்டு வருவார்கள், மாவ் சே துங் சொன்னார் என்று பதில் சொல்லுங்கள்’ என்று பதிலளித்து விட்டு நகர்கிறார் அந்த மனிதர். ‘சேர்மன் மாவோ!’ என்று வாய் பிழந்து நிற்கிறார் கிராமத்து மனிதர். சுற்றிலும் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது.

‘நாம் எங்கு போக வேண்டும்?’ என்று அப்பாவிடம் கேட்கிறான் வாங் ருய். ‘செம்படையோடு போ’ என்று பதில் சொல்கிறார் அவர்.

5. சிகிச்சை அறை

தாக்குதல் ஓய்ந்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தொடர்கிறது. வாங் ருய்யின் உறவினன் சாங் (அக்காவின் முறைப்பையன்) தாக்குதலில் காயமடைகிறான். மருத்துவரின் சிகிச்சை மேசையின் மீது படுத்திருக்கும் அவன், ‘இது வரை பல ஆறுகளைக் கடந்து பல உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். இன்னும் பல மலைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. செம்படையின் கடைசி காலம் வந்து விட்டதா! வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தலைவருக்கு, எதிரிகளின் குண்டுகளுக்கு நம் வீரர்களின் உடல்கள்தான் தடுப்பரண்களாக பயன்படுகின்றன என்பது தெரியவில்லை’ என்று தனது படைப்பிரிவுத் தலைவனிடம் கத்துகிறான்.

காயமடைந்த அவனது கையை மயக்க மருந்து இல்லாமலேயே அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். அவனது காதலியான வாங் மெய் ஆறுதல் அளிக்கிறாள். அடுத்து கொண்டு வரப்படுவது வாங்-ருய்யின் அப்பா. அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மகளையும் மகனையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சாங்கிடம் ஒப்படைத்து விட்டு உயிர் துறக்கிறார் அவர். ‘செம்படையுடனேயே தொடர்ந்து போவது’ என்று முடிவு செய்கிறார்கள் மூன்று பேரும்.

6. சுன் யீ (Zunyi) – விவாதக் கூட்டம்

பயணத்தின் ஒரு கட்டத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்கும் இடத்துக்கு பணிக்காக அனுப்பப்படுகிறான் வாங்ருய். இருளில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அந்தப் பிரிவு படைவீரர்களுடன் பேச்சு கொடுக்கிறான். அந்த இடம் குய்சோ மாகாணத்தில் உள்ள சுன்யீ என்றும் அங்குதான் மா சே துங் இருக்கிறார் என்று அறிந்து கொள்கிறான். தனது பணியின் ஒரு பகுதியாக கூட்டம் நடந்து கொண்டிருக்கும் அறைக்கு நூடுல்ஸ் எடுத்துக் கொண்டு போகிறான். உள்ளேயிருந்து கதவைத் திறக்கும் மாவோ, ‘இப்போ நேரம் சரியில்லை, எடுத்துக் கொண்டு திரும்பிப் போ’ என்று கத்தி அனுப்பி விடுகிறார்.

அறையின் உள்ளே மாவோ உரத்த குரலில் விவாதம் செய்வது கேட்கிறது. ‘நாங்கள் வெறுமனே நடந்து கொண்டிருக்க மட்டும் செய்யவில்லை. எதிரியின் தாக்குதல்களை எதிர் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் சௌஎன்லாயை முழுமையாக ஆதரிக்கிறேன்’ என்று வெளிநாட்டு தலைவர்களுடன் விவாதிக்கிறார்.

அறையிலிருந்து வெளி வந்து தொலைபேசியில் தகவல் சொல்லும் சௌஎன் லாய், வாங் ருய்யைப் பார்த்து, ‘நீ கூட்டத்தின் முக்கியமான கட்டத்தில் வந்ததால்தான் அப்படிக் கத்தி விட்டார்’ என்று ஆறுதல் சொல்கிறார். அறையினுள் எரிந்து அணைந்திருந்த மெழுகுவர்த்திகளை பத்திரமாக துணிக்குள் சுருட்டி எடுத்துக் கொள்கிறான் வாங்ருய். அவன் கூடத்துக்குள் வரும் போது மாவோ அவனைப் பார்க்கிறார்.

7. மாவோவுடன் பேசுதல்

‘நீதான் நூடுல்ஸ் கொண்டு வந்த பையனா?’

‘எனக்கு முன்பே உங்களைத் தெரியும்?’

‘ஆமா, நான்தான் உன் மேல் கோபத்தில் திட்டி விட்டேனே, எப்படி தெரியாமல் இருக்க முடியும்’

‘இல்லை, ஷியாங் பாலத்தில் நான் கீழே விழுந்த போது நீங்கதான் எழுப்பி விட்டீங்க, அப்பவே தெரியும்’

பையனின் ஊர் பெயர் விபரங்களைக் கேட்கிறார். ‘அதுவரை புகைபிடிக்காவிட்டால் இனிமேல் கற்றுக் கொள்ள வேண்டாம்’ என்று அறிவுரை சொல்கிறார். ‘சோவியத் எல்லாம் இல்லாமல் ஆகி விட்டது. நான் சேர்மன் இல்லை, என்னை சும்மா முதிய மாவோ என்றே கூப்பிடு’ என்கிறார்.

‘களைப்பாக இருக்கிறது, தலையை பிடித்து விட முடியுமா’ என்று கேட்க ‘கைகழுவி விட்டு வருகிறேன்’ என்று சொல்பவனை மறுத்து அப்படியே தலையைப் பிடித்து விடச் சொல்கிறார்.

‘இந்த இடம் வரலாற்றில் இடம் பெறும். 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 100 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் இந்தக் கூட்டத்தைப் பற்றிப் பேசுவார்கள்’

‘இங்கு வந்து ஏன் கூட்டம் போடுகிறோம்.’

‘இங்கு எல்லாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். இங்குதான் செம்படை எங்கு போகிறது என்று முடிவு செய்ய வேண்டும்’

‘உங்க குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள்?’

‘4 பேர் எல்லோரும் செம்படையில், அப்பா, அக்கா, நான், அக்கா வீட்டுக்காரர். அக்கா மருத்துவக் குழுவில், நானும் அக்கா வீட்டுக்காரரும் ஒரே படைப்பிரிவில்’

‘அப்பா ஆற்றில் கடக்கும் போது கொல்லப்பட்டார்.’ என்று கண்ணீர் விடுகிறான் வாங்ருய். அவனுக்கு ஆறுதல் சொல்லி ‘தெருவில் போய் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கித் தருகிறேன்’ என்று அழைத்துப் போகிறார்.

தெருவில் ஒரு இடத்தில் அக்காவைப் பார்த்து ஓடிப் போகிறான். ‘வேலையை விட்டு விட்டு வந்து விட்டாயா!’ என்று அவனை கோபிக்கிறாள் அக்கா. ‘நான்தான் ஓய்வெடுக்கச் சொன்னேன்.’ என்று மாவோ பதிலளிக்கிறார்.

அக்காவும், அவளது காதலனும் சேர்மன் மாவோவுக்கு தமது விபரங்களைச் சொல்கிறார்கள். அவரிடமும் ‘செம்படை எங்கு போகிறது’ என்று கேட்கிறான் அக்காவின் காதலன்.

8. குழந்தை பிறப்பு

பயணம் தொடர்கிறது. படைப்பிரிவுத் தலைவன், அவர்களின் பொறுப்பாளர் பேசிக் கொண்டே போகிறார்கள். ஒரு இடத்தில் முகாம் அமைக்கிறார்கள். ‘குழந்தை பிறந்து விட்டதா என்று பார்த்து விட்டு வருமாறு வாங்ருய்யை அனுப்புகிறார்கள்.

குழந்தையை பெற்ற தாய் ‘படைகள் எப்படி இருக்கின்றன’ என்று மருத்துவரிடம் விசாரிக்கிறார். வாங் மெய் உதவியாளராக பணி புரிகிறாள். மாவோ அறைக்குள் வருகிறார். மருத்துவருக்கு நன்றி சொல்லி விட்டு தன் மனைவியிடம் பேசுகிறார்.

‘குழந்தை உன்னை மாதிரி இருக்கிறதா, என்னை மாதிரி இருக்கிறதா?’

‘இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. உங்களை போலத்தான் இருக்கிறது’

‘அழகான பெண் ஆனால் மோசமான நேரத்தில் வந்திருக்கிறார்ள். இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும், வழியில் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படும் என்று தெரியாது. குழந்தையை இங்கேயே விட்டு விட்டுப் போக வேண்டியதுதான்’

‘5 குழந்தைகளை ஒவ்வொரு ஊரில் விட்டு வந்திருக்கிறோம். இது இப்பதான் பிறந்த குழந்தை???’

‘இது என் குழந்தையும்தான். நான் கல் மனம் படைத்தவன் இல்லை. ஆனால் இந்தச் சூழலில் வேறு வழி இல்லை’

குழந்தையைப் படுக்கையில் போடச் சொல்கிறார் தாய்.  ‘குழந்தைக்குப் பேர் கூட வைக்கவில்லை’ என்று மாவோவிடம் கேட்க ‘நாம் திரும்பி வராவிட்டால் உள்ளூர் குழந்தையாகவே வளரட்டும், அதுதான் நல்லது’ என்று பதில் சொல்கிறார்.  ‘நாங்கள் செம்படை, வேறு வழியில்லாததால் விட்டு விட்டுப் போகிறோம். நன்கு வளர்க்கவும்’ என்று கடிதம் எழுதி  வைத்து விட்டு போகிறார்கள்.

13. லோங்ஷான் கணவாய்

பயணம் தொடர்கிறது. ‘சீஹ் ஷூய் ஆற்றை திரும்பத் திரும்ப பார்க்கிறோம்’ என்று சாங் சொல்ல, ‘அது மாவோவின் தந்திரம். எப்படியோ மேலும் உயிர்ச்சேதம் இல்லாமல் போகிறோம். மாவோவின் தலைமையில் நம்பிக்கை இருக்கிறது’ என்று பிரிவுத் தலைவன் பதில் சொல்கிறான்.

‘நான் நேற்று மாவோவைப் பார்த்தேன். மாவோ வயிற்றில் கை வைத்துக் கொண்டிருந்தார், பசியாக இருக்குமோ?’ என்கிறான் வழிகாட்டி.

‘ரூய் ஆர், இதைக் கொண்டு சேர்மன் மாவோவிடம் கொடு. துப்பாக்கியை கையில் எடுத்துக்கோ’ என்று கொழுக்கட்டைகளைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

எதிரிப் படையுடன் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமாகிறது. காயம் இன்னும் ஆறாத நிலையிலும் சாங் சண்டையில் கலந்து கொள்கிறான். மாவோவைத் தேடிப் போகும் வாங்ருய் கொல்லப்பட்ட ஒரு செம்படை வீரனின் இடத்தில் துப்பாக்கியை இயக்கி பல எதிரி வீரர்களை வீழ்த்துகிறான்.

திரும்பி வந்தவனை ‘ஏன் இவ்வளவு நேரம். மாவோவைப்  பார்த்தாயா, கொழுக்கட்டைகளைக் கொடுத்தாயா’ என்று கேட்கிறார்கள்.

‘நான் ஆறு சாப்பிட்டேன், 6 எதிரிகளை சுட்டேன் அதில் ஒரு படைத்தலைவன் கூட உண்டு’ என்கிறான்.

‘உண்மையிலேயே ஆறா? நீதான் உண்மையான வீரன், நீயே சாப்பிடு’ என்று பாராட்டுகிறார்கள்.

‘ஜியாங்ஷியிலிருந்து புறப்படும் போது நாம் ஓடினோம், இப்போது தாக்குகிறோம். இனிமேல் நமக்கு வெற்றி மேல் வெற்றிதான்’ என்று பேசிக் கொள்கிறார்கள்.

16. மாவோவுடன் உரையாடல்

மாவோ செம்படை வீரர்களை பார்க்க வரும் போது வாங்ருய் ஓடிச் சென்று வணக்கம் சொல்கிறான் வாங் ருய்.

‘ரூய்ஆர் ஆறு பேரைக் கொன்றான். இனிமேல் அவன் சின்ன பையன் இல்லை. ஒரு ஹீரோ’ என்று தகவல் சொல்கிறார்கள்.

‘நீங்கள் வயிற்றைத் தொட்டதாக சொன்னார்கள். பசியாக இருக்குமோ என்று கொழுக்கட்டை அனுப்பினார்கள். இதோ இருக்கிறது’

‘உணவுப் பொருட்கள் கிடைப்பது கஷ்டம். நான் சாப்பிடுகிறேன்’ என்று இரண்டு பேரும் சாப்பிடுகிறார்கள்.

‘செம்படை எங்கு போகிறது என்று எனக்குத் தெரிந்து விட்டது, வெற்றியை நோக்கி’ என்கிறான் வாங்ருய்.

‘சரியாகச் சொன்னாய், நமது பாதை நீளமானது, ஆபத்தானது. ஆனால் நாம் அதை வெற்றிகரமாக கடப்போம்’

17. கோட்டை உடைப்பு

சிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதிகளில் பயணம் தொடர்கிறது. கோட்டை ஒன்றை உடைத்து நுழைகிறார்கள் செம்படை வீரர்கள்.

‘செம்படை உங்களைக் காப்பாற்ற வந்து விட்டது. பயப்படாதே!’ என்று ஒரு இளைஞனை காப்பாற்றுகிறார்கள். அவன் கத்தியைப் பிடுங்கிக் கொண்டு ஓடி விடுகிறான்.

‘என் கத்தியைத் பிடுங்கி விட்டு ஓடி விட்டான்’ என்று தகவல் சொன்னதும் ‘கத்தி உன் ஆயுதம், அதை எப்படி இழந்தாய்?’ என்று திட்டு கிடைக்கிறது.

18. பழங்குடி வீரன் செம்படையில்

படையினர் பயணத்தைத் தொடரும் போது அந்த பழங்குடி இளைஞன் இவர்களைத் தொடர்ந்து வருகிறான்.

‘என்ன செய்கிறாய்? என் கத்தியைக் கொண்டு வந்தாயா? எங்கள் கூடவே ஏன் வருகிறாய்? பேசுவது புரிகிறதா?’ என்று கத்தியை வாங்கிக் கொண்டு அவனை திரும்பி அனுப்ப முயற்சிக்கிறார்கள். ஒரு இடத்தில் ஓய்வு எடுக்க உட்காருகிறார்கள். சுருட்டு செய்யும் சாங்கிடம் ‘எங்கிருந்து புகையிலை கிடைத்தது? நீ புகைக்க மாட்டாயே’ என்று கேட்கிறார் வாங்ருய்.  ‘உங்க அப்பாவுக்காக  செய்தது.’

அந்த சிறுபான்மை இன இளைஞன் அவர்கள் அருகில் நிற்கிறான்.

‘ஏன் எங்க பின்னாலேயே வருகிறாய்? ஒருவேளை உனக்கு மாண்டரின் புரியவில்லையா, என்ன?’

‘பழி வாங்க வேண்டும்’

‘தலைவரிடம் சொல்லி அனுமதி வாங்க வேண்டும்’ என்கிறான் பிரிவுத் தலைவன்.

படைப் பிரிவுத் தலைவர் வருகிறார். ‘என்ன சொல்ல வேண்டும்? கூட வர விரும்பினால் தாராளமாக வரட்டும். உழைக்கும் மக்கள் விரும்பினால் செம்படையில் சேர்ந்து கொள்ளலாம். தா ஆர் ஹூவா, நீ இந்தப் பிரிவில் சேர்ந்து கொள். உனக்கு ஆயுதம் இல்லை. சாங், உன் கத்தியை இவருக்குக் கொடு. எங்கள் கூட வந்தால், யீ பகுதிக்குத் திரும்பி திரும்பி வர 4, 5 ஆண்டு ஆகலாம், நன்கு பார்த்துக் கொள்’

‘வா நண்பா, உட்கார். இது என்ன பெரிய போர்வை போல இருக்கு’

‘இதன் பெயர் சார்வா. பகலில் உடுப்பு, இரவில் போர்வை. குடும்பம் யாரும் இல்லை. எல்லோரையும் கொன்று விட்டார்கள்’

வாங்ருய் தாஆர்ஹூவாவின் தலை முடியை ஒதுக்கப் போக, தூக்கி எறிந்து அடித்து விடுகிறான். ‘இது என் முடி இல்லை, புத்தா! இவன் செம்படையினராக இல்லாவிட்டால் கொன்றிருப்பேன்.’ என்று உறுமுகிறான்.

‘தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும், அவன் முடியைத் தொட்டது என் தவறுதான்’

‘அவன் தவறை ஒத்துக் கிட்டான் அவ்வளவுதான். இனிமேல் இரண்டு பேரும் நண்பர்கள்’

20. முட்டுச்சந்து

தொடரும் பயணத்தில் கிராம மக்கள் ஆயுதங்களுடன் செம்படையினரை எதிர்கொள்ள வருகிறார்கள்.

‘யாரும் சுடாதீங்க’

‘நாங்க செம்படை, உங்கள் நண்பர்கள்’

என்று சொல்லச் சொல்ல தா ஆர்ஹூவா மொழிபெயர்த்து சொல்கிறான்.

‘இப்படி எதிரெதிராக நிற்பது சரியில்லை. இரண்டு பேரை அனுப்புவோம்.’

‘நான் போறேன். நான் பெண் நம்புவராகள்’ என்கிறாள் வாங் மெய். கூடவே வாங் ருய்யும் புறப்படுகிறான். தாஆர்ஹூவா உள்ளூர் ஆளாகப் போகிறான்.

‘ஒரு பையன், ஒரு பெண், ஒரு yifu ஆள்.

பயமாக இருக்கு என்று சொல்லும் தம்பிக்கு தைரியம் ஊட்டப் பாடுவதாகச் சொல்லி, வாங் மெய் பாடுகிறாள். பாடல் முடிந்ததும் மக்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கட்டிப் போடுகிறார்கள். ‘திரும்பிப் போ சுடாதீங்க’ என்று செம்படையினருக்குச் சொல்கிறாள் வாங்மெய்.

அவர்களைப் பார்க்க பெண்கள் வருகிறார்கள். உரையாடலை தாஆர்ஹூவா மொழிபெயர்க்கிறான்.

‘இது என் அக்கா’ என்கிறான் வாங்ருய்.

‘இது என் அக்கா’ என்கிறான் அந்தப் பெண்ணின் தம்பி.

‘நானும் உன் அக்கா’ என்கிறாள் வாங்மெய்.

‘அக்கா’ என்று வாங்மெய்யை அழைக்கிறான் அந்தச் சிறுவன்.

‘நல்லது’ என்கிறாள் வாங்மெய்

‘நானும் உன் அக்கா’ என்று வாங்ருய்யிடம் சொல்கிறாள் கிராமத்துப் பெண்.

‘அக்கா’ என்று அவளைக் கூப்பிடுகிறான்

‘நல்லது’ என்று எல்லோரும் சிரிக்கிறார்கள்.

கிராம மக்களுடன் நடனம் ஆடுகிறார்கள்.

23. மாவோவுடன் பேசுதல்

அங்கு சேர்மன் மாவோ வருகிறார். அவருக்குப் பின்னால் போய் கண்ணைப் பொத்துகிறான் வாங்ருய்.

‘யாரு? பையனாக்கதான் இருக்க வேண்டும்.’ என்று கையை பிரிக்கிறார் மாவோ.

‘சீஹ் ஆற்றை தாண்ட வழி காட்டியவர் இதைக் கண்டுபிடிக்க மாட்டாரா’ என்று பக்கத்தில் ஒருவர் ஐஸ் வைக்கிறார்.

‘வாங் ருய் வளர்ந்து விட்டான். இனிமேல் அவன் ஒரு ஹீரோ’

‘இது தாஆர்ஹூவோவாக இருக்க வேண்டும்.  நான் அதிகாரி இல்லை. செம்படையில் எல்லோரும் தோழர்கள்தான். 3 நாள் முன்பு சேர்ந்தார். சிறுபான்மை இனங்களின் ஆதரவைப் பெற்றதால்தான் யீ பகுதியை தாண்டி செம்படை போக முடிந்தது’ என்கிறார் மாவோ.

இரவில் தாஆர்ஹூவாவும் சுவோ மாவும் சேர்ந்து வெளியில் போகிறார்கள்.

25. மருத்துவமன தாக்குதல்

அடுத்த நாள் காலையில் எல்லோரும் கூடியதும் ‘மருத்துவமனை தாக்கப்பட்டுள்ளது, காப்பாற்றுவோம்’ என்று உத்தரவு வருகிறது. தனது அக்கா அங்குதான் இருந்தாள் என்று உணர்ந்து வாங்ருய் சண்டையில் ஆக்ரோஷமாக கலந்து கொள்கிறான்.

‘சரணடைந்து விடுங்கள்’ என்று மருத்துவமனையைத் தாக்கிப் பிடித்திருந்த எதிரிப் படையினரை சுற்றி வளைத்து கைது செய்கிறார்கள்.

‘அக்கா எங்கே? என் அக்கா எங்கே?’ என்று தேடி ஒரு இருட்டு அறைக்குள் போனால், வாங்மெய் கொல்லப்பட்டிருக்கிறாள்.

‘அக்கா..கொல்லாம விட மாட்டேன்’ என்று கத்தியை உருவிக் கொண்டு ஓடுகிறான்.

அவன் கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி விட்டு, செம்படையின் நடத்தை விதிகளை நினைவுபடுத்துகிறான் பிரிவுத் தலைவன்.

‘கைதிகளை துன்புறுத்தக் கூடாது.’

27. தாவி ஆறு

பயணம் தொடர்கிறது. அடுத்து முக்கியமான ஆற்றுப் பாலத்தை கைப்பற்றி பின்தொடர்ந்து வரும் மற்ற படையினருக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு இந்த பிரிவுக்குத் தரப்படுகிறது.

‘மூன்று படகுகள்தான் உண்டு. எல்லோரும் படகில் போனால் 1 ஆண்டு ஆகும். இதற்கிடையில் சிசுவான் படைகள் பாலத்துக்குப் போய் விடும். 3 நாள் பயணத்தில் மலைப்பாதை வழியாகப் போய்ச் சேரலாம். 320 மைல்கள் தூரம். தாதூ ஆற்றுப் பாலத்தை எதிரிகள் வருவதற்கு முன்பு நாம் கைப்பற்ற வேண்டும்’ என்று படைப்பிரிவை அனுப்புகிறார்கள்.

‘மே 29ம் தேதிக்கு முன்போ போய் சேர வேண்டுமா? அது நாளைக்கு! ஏற்கனவே ஓடிக்கிட்டு இருக்கோம், 80 மைல்கள்தான் ஆச்சு. இன்னும் 240 மைல்கள் ஒரே நாளில் எப்படி’ என்று உத்தரவு கொண்டு வரும் தூதுவனிடம் படைத்தலைவன் கேட்க,  ‘இது மேலிட உத்தரவு’ என்று சொல்லி விட்டு திரும்பிப் போகிறான்.

‘வேகமாக ஓடுங்கள்’. கால் வலிக்கிறது என்று புகார் செய்யும் வாங்ருய்யை இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்

‘எதிரியும் அங்கே போறான்’ என்று ஆற்றின் மறு கரையில் போகும் அரசு படையினரிடம் ‘நாங்களும் குவோமின்தாங் தெரியுமா’ என்று பொய்யாக குரல் கொடுக்கிறார்கள். நிலச்சரிவு ஒன்றின் கற்களை நகர்த்தும் போது வாங்ருய் கால் தவறி கீழே விழப் போக அவனைக் காப்பாற்ற படைத்தலைவன் விழுந்து விடுகிறான். சத்தமாக அழக் கூட முடியவில்லை. எதிர்க்கரையில் எதிரிகள் கேட்டு விடுவார்கள்!

28. கட்சியில் சேருதல்

பாலத்தை தாக்குவதற்கு முன்பு 8 பேர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடக்கிறது. ‘வாங்ருய்க்கு ஆறு மாதம் வயது குறைவாக இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்கிறோம்’ என்று சொல்லும் பிரிவுத் தலைவன்

‘முதன் முறையாக உன்னை தோழர் என்று அழைக்கிறேன். படைத்தலைவர் உன்னைக் காப்பாற்ற உயிர் விட்டார். நீ எதற்கு கட்சியில் சேருகிறாய்?’ என்று வாங்ருய்யை கேட்கிறான்.

‘செம்படையின் வெற்றிக்காக! ஏழைகளின் விடுதலைக்காக!. என் உடல், ரத்தம், உயிரைக் கொடுத்து அவற்றுக்காக போராடுவேன்’ என்று பதில் சொல்கிறான்.

29. இறுதிக் காட்சி

கடும் சண்டையில் பலத்த உயிரிழப்புக்குப் பிறகு செம்படை லூதிங் பாலத்தைத் தாண்டிப் போய் எதிரிகளை முறியடித்து, பின்வரும் படைகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. சண்டையில் பிரிவுத் தலைவனும், சாங்கும் இறந்து விடுகிறார்கள்.

வெறித்துப் போய் உட்கார்ந்திருக்கும் வாங்ருய்க்கு மாவோ ஆறுதல் கூறுகிறார். ‘புரட்சி வென்றதும் இந்த சண்டையில் உயிர் நீத்தவர்களுக்கு பெரிய நினைவுச் சின்னம் அமைப்போம்’ என்று வாக்களிக்கிறார்.

‘உனது தலைமுடி கலைந்திருக்கிறது’ என்று சொல்லி தலையைப் பிடித்து விடுகிறார்.  ‘நீ 16 வயது பையன் இல்லை. செம்படை வீரன். நாம் இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று தெரியாது.’

‘நான் செம்படையுடன் கூடவே போவேன்’ என்கிறான் வாங்ருய்

‘உன்னைப் போன்ற வீரர்கள் இருக்கும் போது செம்படை நிச்சயம் தனது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கும்’

 

–  அப்துல்

  1. Everything is well-narrated and it is indeed a moving account. But what about this same red-army’s invasion into Tibet? and its tacit support to the killing of Tamils in Eelam?

  2. […] https://www.vinavu.com/2012/01/28/my-long-march-movie-review/ Advertisement GA_googleAddAttr("AdOpt", "1"); GA_googleAddAttr("Origin", "other"); GA_googleAddAttr("theme_bg", "ffffff"); GA_googleAddAttr("theme_border", "dddddd"); GA_googleAddAttr("theme_text", "666666"); GA_googleAddAttr("theme_link", "026acb"); GA_googleAddAttr("theme_url", "026acb"); GA_googleAddAttr("LangId", "1"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d"); GA_googleFillSlot("wpcom_sharethrough"); Share this:TwitterFacebookLike this:LikeBe the first to like this post. By தமிழக மீனவர்கள் • Posted in அரியாங்குப்பம் 0 […]

  3. அருமையான பதிவு. படத்தில் நடந்தாக சொல்லப்படும் கதை போல் இல்லாமல், புரட்சியிபடையில் நாமும் ஒருவர் போரவும். அந்த படையில் பயணம் செய்தது போல் ஒரு உணர்வும் இருந்தது.

  4. அவருகிட்ட இருந்து நீங்க எதுவுமே கத்துக்கிட்ட மாதிரி தெரியவில்லையே சந்தர்ப்பவாதம் + குறுங்குழுவாதம் = வினவு அன் கோ

  5. படம் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.
    அருமையான அறிமுகம். பதிவை படிக்கும் போதே படத்தை பார்க்கும், நீண்ட பயணத்தில் வாங் ருய் உடன் சேர்ந்து பயணிக்கும் அனுபத்தை தருகிறது.
    நன்றியுடன், வாழ்த்துக்கள் தோழர் அப்துல்.

Leave a Reply to வேணி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க