privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவாய்தா ராணிக்கு சட்டம் ஒரு செருப்பு!

வாய்தா ராணிக்கு சட்டம் ஒரு செருப்பு!

-

வாய்தா-ராணிபெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா கும்பல் வாங்கும் வாய்தாக்கள், நீதிபதி மேலே போடும் மனுக்கள், தன்மீது தொடுக்கப்படும் அவதூறுகள் இதையெல்லாம் பார்த்த பிறகு மனம் வெதும்பி கடந்த 14 ஆம் தேதி தனது அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்து விட்டார், மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா.

1996 இல் போட்ட சொத்துகுவிப்பு வழக்கு ஓரடி கூட நகரவில்லையே என்பதற்காக உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி 2005 இல் பெங்களூருவுக்கு அல்லிராணியின் வழக்கு மாற்றப்பட்டது. ஆறு மாதத்தில் முடியும் என நம்பி அரசு சார்பு வழக்கறிஞராக பொறுப்பேற்றாராம் ஆச்சார்யா. முதலில் வாய்தாவாக நீதிமன்றத்தை புறக்கணித்த அம்மையார் இக்காலகட்டத்தில் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கோ, கொட நாட்டுக்கோ போகத் தவறவில்லை. இதை ஆச்சார்யா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியவுடன் அம்மாவுக்கு கோபம் தலைக்கேறியது. ‘பிடி வழக்கை’ என அவர் மீது கர்நாடக லோக்யுக்த நீதிமன்றத்தில் ஒரு பொய் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், அதன் உள்நோக்கத்தை காரணம் காட்டி ரூ. 50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்டவர்களான ஜெயா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரில் ஏதாவது ஒருவர் மாற்றி ஒருவர் வராமல் இருப்பதன் மூலம் நீதிமன்றத்தில் வாய்தா வாங்கத் துவங்கினர். போதாத குறைக்கு கேள்விகளை மொழிமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி நீதிவிசாரணையை தள்ளிவைக்குமாறு செய்தனர். எப்போதாவதுதான் அல்லி ராணி தன் தர்பாரிலிருந்து நீதிபதி மல்லிகார்ஜூனாவின் கர்நாடக சிறப்புநீதி மன்றத்துக்கு வருகை தந்தார். மற்றபடி இது யாரோ சேர்த்த சொத்துக்கு நடக்கும் விசாரணை போல நடந்து கொண்டார். கடைசியில் நீதிபதியை நியமனம் செய்ய கர்நாடக உயர்நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லை என வழக்கு தொடர்ந்து தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை மேலும் தாமதப்படுத்தினார் ஜெயலலிதா.

“எனக்கு மட்டும் ஒரு 10 வயது குறைவாக இருந்திருந்தால் நானா அவங்களான்னு பார்த்திருப்பேன். இப்போது கையறுநிலையில் இருக்கிறேன். என் மீது நீதிபதிகள், கவர்னர் போன்றவர்களிடம் மனுக் கொடுப்பது, நீதிமன்றத்திலேயே பிட் நோட்டீஸ் கொடுப்பது, செய்தி ஊடகங்களில் அவதூறு பரப்புவது என அதிமுக அனுதாபிகளும், ஜெயாவுக்கு நெருக்கமானவர்களும் தொடர்ச்சியாக மெண்டல் டார்ச்சர் கொடுத்தார்கள். கடைசியில் அவர்கள் விரும்பியது போலவே நானும் விலக நேரிட்டது. இதனை கர்நாடக உள்துறை செயலருக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்திலும் தெரிவித்துள்ளேன்.” என்கிறார் அந்த 78 வயது ஆச்சார்யா.

இவ்வளவும் சொன்ன அவர், வழக்கை இழுத்தடிக்க தேவையான அனைத்தும் அவர்களிடம் இருப்பதை ஒத்துக்கொண்டார். ஆனாலும் மல்லிகார்ஜூனா கொஞ்சம் கண்டிப்பாக இருந்து, இந்த இழுத்தடிப்புகளை தடுத்திருந்தால் வழக்கை முடித்து, அல்லிராணிக்கு தண்டனை வாங்கித் தந்திருக்க முடியும் என நம்புகிறார். நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற மல்லிகார்ஜூனாவையே பதவிநீட்டிப்பு செய்தால் அது நடந்து விடும் என்றும் நம்புகிறார். நீதிமன்றத்தின் மீது ஆச்சார்யாவுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஜெயா நீதிமன்றத்தை கால் தூசிக்கு கூட மதிப்பது கிடையாது என்பதற்கு சமச்சீர் கல்வி தீர்ப்பு போல முன்னுதாரணங்கள் பல கொட்டிக் கிடக்கிறது.

சட்டத்தை புனிதம் என நம்பும் ஆச்சார்யாவின் நம்பிக்கையை வாய்தா ராணி மிதித்து துவம்சம் செய்த நிலையிலும் அந்த பெரியவரின் சட்ட நம்பிக்கை மாறவில்லை. ஆனால் நடைமுறையில் அந்த நம்பிக்கை குலைந்து விட்டதையே அவரது ராஜினாமா விவகாரம் குறிக்கிறது. இந்த ராஜினாமா ஏற்கப்படாமல் மீண்டும் அவர் வந்து வாதிட்டாலும் இன்னும் எத்தனை மாமாங்கம் நீடிக்குமென்று யாருக்கும் தெரியாது. இதற்கு கர்நாடாகாவை ஆளும் பா.ஜ.க கும்பல்வேறு ஆதரவு.

பாசிச ஜெயா சேர்த்த மக்கள் சொத்துக்களை மக்களே அணிதிரண்டு பறிமுதல் செய்யாத வரை நீதிமன்றமும், நேர்மையான ஆச்சார்யா போன்றவர்களும் என்ன செய்து விடமுடியும்?