Tuesday, May 6, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம மக்களின் போராட்டம்!

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம மக்களின் போராட்டம்!

-

ஏரிவிழுப்புரம் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் பல ஏரிகள் பல்வேறு ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அவ்வப்போது நாளேடுகளில் செய்திகள் வந்துள்ள நிலையில், இப்பகுதியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் கடந்த ஜூன்ஜூலை மாதங்களில்  கிராமங்கள் தோறும் ஆய்வு செய்தபோது, பண்ருட்டி வட்டாரத்தில் மட்டும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் துணையோடு 40 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஏறத்தாழ ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இதை அம்பலப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, ஏரிகளைத் தூர்வாரி ஆழப்படுத்தி விவசாயத்துக்குப் பயன்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜூலையில் சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஆக்கிரமிப்புகளால் விவசாயம் பாதிக்கப்பட்டு வேதனையில் துவண்டிருந்த இவ்வட்டார விவசாயிகள், இப்பிரச்சாரத்தை வரவேற்று தங்கள் ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

பண்ருட்டி வட்டம் ஒரையூர் கிராமத்தில் கடந்த 20 ஆண்டு காலமாக 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் ஏறத்தாழ 80 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக இக்கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வி.வி.மு.வின் சுவரொட்டிப் பிரச்சாரத்தால் உற்சாகமடைந்து, கடந்த ஆகஸ்டு முதல் நாளன்று தங்கள் சொந்த செலவில் மூன்று மண்வாரும் எந்திரங்களை வரவழைத்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து ஆக்கிரமிப்பை அகற்ற வருமாறு கோரினர்.  நில அளவை செய்துவிட்டுச் சென்ற அதிகாரிகள், வருவதாகச் சொல்லிவிட்டு ஒருநாள் முழுக்கவும் வரவில்லை. இதில் முன்முயற்சியுடன் செயல்பட்ட தே.மு.தி.க.வைச் சேர்ந்த கவுன்சிலர் கார்த்திக், காளிதாஸ் ஆகிய தன்னார்வலர்கள் வி.வி.மு. தோழர்களைத் தொடர்பு கொண்டு, நீங்களே வந்து இந்த ஆக்கிரமிப்பு அகற்றலைத் தொடங்கி வைக்குமாறு கோரினர். அதன்படி வி.வி.மு. தோழர்கள் ஆகஸ்டு 2ஆம் தேதியன்று செஞ்சட்டையுடன் அணிதிரள, ஆக்கிரமிப்பாளர்கள் அரண்டு போயினர். ஏரியில் கால் வைக்கக் கூட முடியாமல், ஆடுமாடுகள் கூட மேய்ச்சலுக்குச் செல்ல முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டு குமுறிக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அணிதிரண்டு தாங்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதைத் தொடர்ந்து ஏரியின் கரை மடிக்கப்பட்டது. இந்தச் செய்தி காட்டுத் தீ போல அருகிலுள்ள கிராமங்களுக்கும் பரவியதால், பலரும் தங்கள் கிராமத்திலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை நிற்குமாறு வி.வி.மு.விடம் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

வி.வி.மு. தோழர்களின் துணையோடு கிராம மக்கள்  ஒற்றுமையாக அணிதிரண்டு ஏரியை மீட்ட இச்சம்பவம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளதோடு வி.வி.மு. மீது புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________