privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்காலம் மாறிப்போச்சு, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் அவர்களே!

காலம் மாறிப்போச்சு, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் அவர்களே!

-

கான்
எச்.ஆர்.கான் – படம் நன்றி இந்து நாளிதழ்

“நாட்டில் அளவுக்கு அதிகமாக பணம் புழங்குவதுதான் ஊழல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு காரணம்” என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எச்.ஆர். கான் கூறியுள்ளார். அதனால், நாட்டில் புழங்கும் பணத்தின் அளவை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாகவும் அவர் சொல்கிறார்.

படிக்க

இப்போது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுகளின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாக உள்ளது (சுமார் ரூ 8.65 லட்சம் கோடி). “பணப் புழக்கத்தை குறைப்பது மூலம் கட்டுக்கடங்கா ஊழல், நிதி கொள்கைகளை செயல்படுத்துதல்,  வங்கிகளில் பணம் கையாளுதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய முடியும்” என்கிறார் கான்.

தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மொபைல் மற்றும் இணையம் மூலம் வங்கி பரிமாற்றங்களை ஊக்குவித்தல், மின்னணு பண பரிமாற்ற வசதிகளை வழங்குதல் இவற்றின் மூலம் பணப் புழக்கத்தை குறைப்பதற்கு ரிசர்வ் வங்கி முயன்று வருகிறது.

இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்காக பன்னாட்டு கார்ப்பரேட்டுகளும் அவர்களின் இந்திய தரகர்களும் நடத்தும் பேரங்களை பணப் புழக்கத்தை குறைப்பது மூலம் எப்படி ஒழிக்க முடியும்?  2G அலைக்கற்றை ஊழலில் கலைஞர் தொலைக்காட்சிக்கு தரப்பட்ட கொடுக்கப்பட்ட தொகை கட்டுக் கட்டாக கரன்சி நோட்டுகளாக சென்னை வந்து சேரவில்லை. துல்லியமாக திட்டமிடப்பட்டு கச்சிதமாக வங்கிகள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியின் கணக்குக்கு அனுப்பப்பட்டது.

போபார்ஸ் பீரங்கி பேர ஊழலில் ராஜீவ் காந்தியின் உறவினர்கள் வாங்கிய ரூ 64 கோடி கமிஷன் கூட நேராக மின்னணுப் பரிமாற்ற முறையில் ஸ்விஸ் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு விட்ட போது, ஊழலுக்கு நேரடி பணபரிவர்த்தனை தேவையில்லை என்பதுதான் நிதர்சனம்.

விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூலமாக அடித்த ரூ 7,000 கோடி கொள்ளை ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளாக எடுத்துச் செல்லப்படவில்லை. வங்கிகள் கடனை அள்ளிக் கொடுக்க, வங்கிக் கணக்குகள் மூலமாகவே மல்லையா தமது விருப்பம் போல வீணடித்து விட்டு அடுத்து எங்கு கொள்ளை அடிப்பது என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் இரும்பு தாது ஏற்றுமதியில் அடித்த கொள்ளைக்கும் நாட்டில் புழங்கும் கரன்சி நோட்டுகளின் அளவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஒரு வேளை, மளிகைக் கடைக்காரரும், காய்கறி விற்பவரும் கரன்சி நோட்டு வாங்கிக் கொண்டு பொருட்களை விற்பதை ஒழித்துக் கட்ட கான் விரும்புகிறார் போலும். அதன் மூலம் தள்ளு வண்டிக் காரரிடம் போலீஸ் ரவுடிகள் மாமூலாக பணம் வாங்குவதை தடுத்து விடலாம்.  ஆனால், தள்ளு வண்டிக்காரரையும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வைத்து, காய்கறி வாங்குபவரிடமிருந்து பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்றும் பழக்கத்தை உருவாக்கி விட்டாலும், போலீஸ் ரவுடிகள் மாமூலாக பை நிறைய காய்  வாங்கிக் கொண்டு போவார்கள். அல்லது அவர்களது வங்கிக் கணக்கில் மாமூலைச் சேர்க்குமாறு மாறிவிடுவார்கள்.

முதலாளித்துவம் என்ற குட்டையில் உற்பத்தியாகும் ஊழல் கொசுக்கள்தான்  கறுப்புப் பணமும், சுவிஸ் வங்கி கணக்குகளும், பணப் புழக்கமும். குட்டையையே ஒழித்துக் கட்டினால்தான் இந்த கொசுக்களை ஒழிப்பது  சாத்தியமாகும்.

ஆனால் ரிசர்வ் வங்கி கவர்னரோ இன்னும் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன் நம்பியார் சூட்கேசில் கைமாற்றும் பணக் காட்சிகளிலேயே ஊழல் இருப்பதாக நம்புகிறார். நவீன ஊழல்களில் தொழில்நுட்பம் நேரடி பணபரிவர்த்தனையை தேவையற்றதாக்கி விட்டதை அவர் அறியவில்லை. அல்லது அவற்றையெல்லாம் ஊழல் என்று கருதாமல் கலெக்ட்ர் ஆபீஸ் குமாஸ்தா வாங்கும் சில நூறு ரூபாய்களை மட்டும் ஊழல் என்று கருதுகிறாரோ என்னமோ?

படிக்க