Thursday, May 13, 2021
முகப்பு சமூகம் சினிமா இதுதான்டா ''மைனர் குஞ்சு''களின் இந்தியா....!

இதுதான்டா ”மைனர் குஞ்சு”களின் இந்தியா….!

-

Mokshagna
மோக்ஷாக்னா

ன்று ஞாயிற்றுக்கிழமை. நள்ளிரவு நேரம். ஆந்திர போக்குவரத்து காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாறுமாறான வேகத்துடன் ஒரு டாடா சஃபாரி வண்டி வந்துக் கொண்டிருந்தது. பார்க்கும் போதே யாரோ குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை உணர முடிந்தது. சட்டப்படி இது தவறு. அதுவும், நள்ளிரவில் போதையுடன் அதி வேகத்தில் பயணம் செய்வது பெரும் குற்றம். எனவே வண்டியை நிறுத்தச் சொல்லி கை காட்டினார்கள். ஆனால், போக்குவரத்து காவலர்களை பார்த்த வண்டி ஓட்டுநர், முன்பை விட அதிக வேகத்துடன் நிற்காமல் சென்று விட்டார்.

உடனே தங்கள் வாகனத்தில் ஏறி, அந்த டாடா சஃபாரியை காவலர்கள் துரத்தினார்கள். கிட்டத்தட்ட 10 கி.மீ. தூரம் சென்ற பிறகே அந்த வண்டியை மடக்க முடிந்தது. பிடிபட்ட அந்த வண்டியின் எண்: AP 16 BK 1. வண்டியினுள் ஐந்து பேர் இருந்தார்கள். ஐவருமே மாணவப் பருவத்தில் இருந்து இளைஞர்களாக மாறிக் கொண்டிருப்பவர்கள். மைனர்கள். ஒருவர் பாக்கியில்லாமல் அனைவருமே குடித்திருந்தார்கள். முழு போதையில் நிற்கக் கூட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஐவரும் யார் யார் என விவரங்களை சேகரிக்க ஆரம்பித்த காவலர்கள், ஒரு கட்டத்தில் தடுமாறி விட்டார்கள். காரணம், ஐவரில் ஒருவர், மோக்ஷக்னா (Mokshagna). மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் பேரன். இந்நாள் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களில் ஒருவரும், நடிகருமான பாலகிருஷ்ணாவின் மகன். மிகப் பெரிய இடம். கை வைக்க முடியாது. அது அரசியல் பிரச்னையாக உருவெடுத்து மாநில சட்ட ஒழுங்கை பாதிக்கும். மீடியாக்கள் அலறும். அரசியல் காரணங்களுக்காக பொய்க் குற்றம் சாட்டி தன் மகனை காவலர்கள் கைது செய்து விட்டதாக திருப்பதி பெருமாள் மீது பாலகிருஷ்ணா சத்தியம் செய்வார். நிலமையை கட்டுக்குள் கொண்டு வர உயர் அதிகாரிகளும் தங்களை சஸ்பெண்ட் செய்வார்கள்.

எதற்கு வம்பு? எனவே அன்றைய இரவு பணியில் இருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டரான கே.பாலகிருஷ்ண ரெட்டி, மற்ற நான்கு பிள்ளைகளை மட்டுமே கைது செய்தார். முதல் தகவல் அறிக்கையில் மோக்ஷாக்னாவின் பெயர், சேர்க்கப்படவே இல்லை. அத்துடன் முதல் வேளையாக பாலகிருஷ்ணாவின் உதவியாளரை தொடர்பு கொண்டு சுயநினைவின்றி இருந்த மோக்ஷாக்னாவை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

ஆனால், தாறுமாறான வேகத்துடன் வண்டியை நள்ளிரவில் குடித்துவிட்டு ஓட்டியது மோக்ஷாக்னாதான்.

நாளை இந்த மைனர் குஞ்சு, தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பார். நாட்டை காக்க தன் உயிரைக் கொடுக்கும் கதாபாத்திரத்தில் தோன்றுவார். தன் பின்னால் பெரும் படையே இருப்பதாக தொடை தட்டுவார். அனல் பறக்கும் பன்ச் டயலாக்குகளை பேசி செவிகளை செவிடாக்குவார். தெலுங்கு தேச கட்சியே தன்னுடையதுதான் என புருவத்தை உயர்த்துவார். முதலமைச்சர் கனவில் மாநிலம் முழுக்க சுற்றுலா செல்வார். ஒருவேளை முதலமைச்சர் ஆனாலும் ஆவார்.

இதுதான் யதார்த்தம்.

ஆந்திர மாநிலத்தில் நடந்த இந்த ஒரு சம்பவம்தான் ஒட்டுமொத்த பணக்கார இந்தியாவின் இன்றைய நிலைக்கான ஒரு சோறு பதம். மேட்டுக்குடி மைனர் குஞ்சுகள் குடித்துவிட்டு தாறுமாறாக நள்ளிரவில் வண்டி ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து எந்த செய்தித்தாளும் பதிவு செய்வதில்லை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் நடக்கும் உயிரிழப்புகளை பட்டியலிட்டால், பெரும் எண்ணிக்கை வரும். குறிப்பாக வார இறுதி நாட்களில் அப்பகுதி மீனவர்களும், உழைக்கும் மக்களும் தங்கள் உயிரை கையில் பிடித்தபடிதான் இரவில் உறங்காமல் உறங்குகிறார்கள்.

நகரங்கள் மட்டுமல்ல, நகரச் சாலைகளும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கின்றன. உழைத்து களைத்து வருபவர்களை மடக்கி, ‘லைசன்ஸ் இருக்கா… வண்டி யாரோடது… இன்னொருத்தன் வண்டியை நீ எப்படி ஓட்டலாம்? திருடினியா..?’ என்றெல்லாம் மீசையை முறுக்கி கர்ஜித்தபடி மாத இறுதியில் நூறு ரூபாயை எதிர்பார்க்கும் காவலர்கள், ஒரு போதும் சீமான்களை மடக்குவதில்லை. முடிந்தால் செல்வந்தர் வீட்டு பொமேரியன் நாய்குட்டிக்கு சலாம் அடிக்கவே காத்திருக்கிறார்கள்.

டெல்லி பாரில் ஜெசிகா லால் எனும் பரிமாறும் பெண்ணை கொன்ற மனுசர்மா முதல், மும்பை, டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை குடித்து விட்டு வேகமாக ஓட்டி பல ஏழைகளைக் கொன்ற சம்பவங்கள் ஏராளமிருக்கின்றன. புத்தாண்டு சமயம் இவர்களது குடியும், வன்முறையும் போதைக்கு போட்டியாக நடக்கும். மேட்டுக்குடி நட்சத்திர விடுதிகளின் நடன அறை துவங்கி பண்ணை வீடு விருந்து வரை இவர்களின் மர்ம உலகம் உருவாக்கும் வன்முறைகள் அதிகம். ஆனாலும் கொலையே நடந்தாலும் இத்தகைய மேன்மக்களை போலீசும், நீதி அமைப்புக்களும் ஒன்றும் செய்து விடாது.

இதுதாண்டா இன்றைய இந்தியா!!!

 1. // கொலையே நடந்தாலும் இத்தகைய மேன்மக்களை போலீசும், நீதி அமைப்புக்களும் ஒன்றும் செய்து விடாது.//

  நாயை வளர்க்கிற வீட்டுக்காரன் போதையில் வந்தாலும்,பொருக்கிதிண்ணுட்டு வந்தாலும் அவனை பார்த்து குரைக்காது. கேட்டுக்கு வேலியெ ரோட்டில் போர நல்லவனைப்பார்தாலும் அந்தநாய் கடிப்பதர்க்கு வெறிபிடித்து ஓடிவரும்.உன்மைதானே வினவு.
  போலீசும், நீதி அமைப்புக்களும் ஆளும் கும்பளுக்கும், அதிகாரவர்க்கத்திர்கும் ஏவல்நாயாகிவிட்ட பிறகு…….

 2. இது போன்ற நேற்று முன் தினம் (26-09-2012) இரவு 8.10 க்கு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்தது. இரு கார்கள் போலோ, ஏ ஸ்டார் என இரண்டும் ரேஸ் வைத்துக் கொண்டு வந்தன. சாலையை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு வந்த கார்கள் எதிரில் டிவிஎஸ் ல் வந்த வயது முதிர்ந்த தம்பதியினர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. காவல் துறைக்கும் உடனடியாக தகவல் சொல்ல கோவை மாநகர காவல் 20 நிமிடம் கழித்தே வந்து சோ்ந்தனர். நடை பயிற்சியில் ஈடுபட்டுருந்தவர்கள் 108க்கு தகவல் சொல்ல ஆம்புலன்ஸ் 15 நிமிடம் கழிந்த பின்னரே வந்து சேர்ந்தது. கேரளாவில் பதிவு செய்யப்பட்ட அந்த வாகனங்கள் பதிவு என் 1600 மற்றும் 999 நாள்தோறும் இது போன்று பந்தயம் நடத்துவதாக அங்கிருந்தவர்கள் தெளிவாக காவல் துறையினரிடம் கூறினார்கள். இருப்பினும் இது வரை அந்த விபத்து குறித்து எந்த நான்காம் தூணும் செய்தி வெளியிடவில்லை. அடிபட்ட இருவருக்கும் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. விலை படிந்திருக்கும் என்பது மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. (நிகழ்ச்சி நடந்த பகுதியில் மேற்கு மண்டல காவல் அலுவலகம், பி4 காவல் நிலையமும் உள்ளன. அரசு மருத்துவமனை 1கிமீ தொலைவில் உள்ளன)

 3. விவேகானந்தா கல்லறையில் மன்னிக்கவும் கலவி நிறுவனத்தில் ஒரு மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார் .
  அந்த மாணவி கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்.
  அதை செய்தது அந்த கலவி நிறுவனத்தின் முதலாளி கருணாநிதியும் அவனது அல்லக்கை ஒருவனும் .
  அந்த செய்தி வெளி வராமல் பார்த்து கொள்ளப்பட்டு விட்டது.
  தயவு செய்து அதைப பற்றி ஒரு கட்டுரை எழுதவும்

 4. இந்த விவேகானந்தா கலவி நிறுவனத்தை பற்றி கண்டபடி கேள்விப்படுகிறோம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் இந்த நிறுவனத்தின் பரந்து விரிந்த வளாகத்தில் என்னென்னமோ நடப்பதாக கூறுகிறார்கள். குறிப்பாக கல்லூரி விடுதிகளில் நிலைமை ரொம்ப மோசம் என்றும் பேச்சு. மேலும் இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களையும் விரிவுரையாளர்களையும் நிர்வாகத்தினர் கடுமையாக டார்ச்சர் செய்து வேலை வாங்குவதாகவும் கூறப்படுகிறது. வேலை இல்லாமல் போகும் என்ற பயத்தில் அங்கு பணி செய்பவர்கள் வெளியே சொல்வதில்லை என்கிறார்கள். இது பற்றி விசாரித்து ஒரு கட்டுரை போட்டால் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கும்.

 5. மேற்படி படுகொலையை எந்த ஊடகமும் முக்கியமான செய்தியாக வெளியிடவில்லை. மாறாக கல்லூரி நிர்வாகத்தின் சொல்படி ஊடகங்களும் போலீசும் நடந்துகொள்கின்றன. இந்த பெண்ணின் உடலை பரிசோதித்தவர் இது ஒரு கொலை அல்லவென்று ரிப்போர்ட் தந்துள்ளார், இதை பற்றி ஒரு பதிவை வெளியிடலாமே…

 6. //நாளை இந்த மைனர் குஞ்சு, தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பார். நாட்டை காக்க தன் உயிரைக் கொடுக்கும் கதாபாத்திரத்தில் தோன்றுவார். தன் பின்னால் பெரும் படையே இருப்பதாக தொடை தட்டுவார். அனல் பறக்கும் பன்ச் டயலாக்குகளை பேசி செவிகளை செவிடாக்குவார். தெலுங்கு தேச கட்சியே தன்னுடையதுதான் என புருவத்தை உயர்த்துவார். முதலமைச்சர் கனவில் மாநிலம் முழுக்க சுற்றுலா செல்வார். ஒருவேளை முதலமைச்சர் ஆனாலும் ஆவார்.//
  வனவாசத்தில் எழுதியிருந்ததுபோல இரவில் ரிக் ஷாவில் வலம் வந்தவர்தானே தமிழகத்தை 5 முறை ஆட்டையை மன்னிக்கவும் ஆட்சிசெய்தார். மைனர் குஞ்சுகள் ஆட்சியைபிடிப்பது ஒன்னும் புதிதல்ல. நம்ம ஜனநாயகம் அப்படி.

 7. னம்மையெல்லாம் பொனால் பொகிரதென்ரு நம்மையெல்லாம் இங்கு இருக்க விட்டிருக்கிரார்கலெ அதர்கெ பெரிய நன்றி சொல்ல வெண்டும். [தமிழ் மிக கொடுமையாக இருக்கிரது.எப்படி டைப் செய்வதென்ரு தெரியவில்லை. மன்னிக்கவும்.]

 8. வணக்கம். சரியான அறிக்கை. என்.டி.ஆர். வாரிசுகள் மட்டுமல்ல நாட்டில் பெருபுள்ளிகள் வாரிசுகள் எல்லாமே இப்படித்தான் இருக்கின்றன. இவர்களை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது அவசியம். நீங்கள் அந்தப்பணியை சரியாக செய்திருக்கிறீர்கள். நானறிந்த உள்ளூர் பையன் ஒருவன் ஒரு காசுக்கும் உதவாதவன் பேராசைக்கார அப்பனை மிரட்டி குடித்து வாழ்பவன் முதல் இரவன்றே குடிட்துவிட்டு தலை நிற்காமல் பள்ளி அறைக்குச் சென்றிருக்கிறான். அந்தப் பெண் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக தமது வீடு சென்று விட்டாள் . இந்த குடிகார அரசுகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திராவில் எப்போதுமே இளைஞர்களை குடிகாரர்களாக மாற்றி வரும் இளந்தலைமுறைகளைக் கெடுத்து நாட்டையே குட்டிச் சுவராக மாற்றி விட்டன. தீர்வு என்னவெனில் முதற்கட்டமாக இந்த குடிகார நாய்களை அம்பலப்படுத்துவதுதான். இந்த வேலையை நான் உள்ளூரில் செய்து நிறைய வேதனைப்பட்டு வருகிறேன். நன்றி. இதற்கு துணை போகும் காவல் துறை இவர்களுக்கு சல்யூட் செய்யும் சட்டம் ஒழுங்கு இவை எல்லாம் சரி செய்யப்பட வேண்டியவை. நல்ல நபர்கள் அந்த இடங்களைப் பிடிப்பதன் மூலம்.

 9. இவர்களைப் போன்ற பெரிய இடத்து “குடிமக்கள்” பொதுமக்களிடம் பிடிபடும்போது “ஏவல்துறை”யினருக்கு தெரிவிப்பதற்கு முன் தாங்களே தக்க “தர்ம அடி” கொடுத்து விடுவதுதான் அவர்களுக்கு சிறிதளவாவது அச்சத்தை ஏற்படுத்தும்.

 10. உதயநிதி ஸ்டாலின் இன்னொரு மைனர் குஞ்சு பேட்டி பாருங்க…

  http://www.youtube.com/watch?v=tjCSDI4CHyY

  நேற்று ஸ்டார் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஒரு வருடமாக சும்மா தான் இருந்திட்டு இப்பதான் வந்தேன் என்கிறார்.

  http://www.youtube.com/watch?v=tjCSDI4CHyY

  சும்மா இருந்திட்டு நயந்தாரா, ஹன்சிகாவுடன் உதயநிதி நடிக்கும் படத்திலும் சும்மா லும்பனாக தான் வருகிறார்.

  சும்மா இருப்பதையே படத்திலும் நடிக்கும் பேரன் மூலம் டாஸ்மாக் போதை போல சூது கவ்வும் வசனம் போல வேலை வெட்டி இல்லாமல் ஆடம்பர கார்கள், வாழ்க்கை என பேரன்களை வளர்த்து வருகிறார் தமிழிழிழிழிழின தலீவர் கலைஞர் அவர்கள்.

Leave a Reply to கலாஷ்னிக்கோவ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க