privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் ! - 15/10/2012

ஒரு வரிச் செய்திகள் ! – 15/10/2012

-

செய்தி: “என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார். பிளாக் மெயில் பேர்வழிகள், மூன்றாம் தர நபர்கள் தான், என் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்,” என, மத்திய சட்ட அமைச்சர், சல்மான் குர்ஷித் காட்டமாகத் தெரிவித்தார்.

நீதி: சரி குற்றம் சுமத்துபவன் யோக்கியனில்லை என்றால் நான் மட்டுமல்ல நீயும் அயோக்கியன் என்றுதானே பொருள்! சொந்த செலவில் சூன்யம் மிஸ்டர் குர்ஷித்!

______

செய்தி: “150 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட வன்னியன் ஏன் இப்போது ஆளமுடிய வில்லை? ஏனெனில் வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை. இதனை நான் 35 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஒட்டுமொத்த வன்னியர்கள் மாம்பழத்துக்கு ஓட்டு போட்டால் வன்னியன் ஆளுவான். மண்ணில் நெற்பயிரோடு வீரத்தையும் விளைவித்தவன் வன்னியன்” – டாக்டர் ராம்தாஸ்.

நீதி: நெற்பயிர் வீரத்தில் திளைத்திருந்த ‘வன்னிய’னுக்கு பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம், சாதிவெறி, குடும்ப ஆதிக்கம் முதலானவற்றையெல்லாம் அறிமுகம் செய்த டாக்டர் ஐயாவுக்குத்தான் எத்தனை அடக்கம்!

_______

செய்தி: விலையில்லா கிரைண்டர், மிக்சி, மற்றும் பேன் வழங்குவதை, தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, அ.தி.மு.க., மந்திரிகள், எம்.எல்.ஏ.,களுக்கு, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர் மின்தடையால், மக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக தேவையில்லாத பிரச்னைகள் உருவாகும் என்ற காரணத்தால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.

நீதி: மின்தடையால் ‘அம்மாவின்’ கருணை உள்ளத் திட்டங்களெல்லாம் கூட கண்றாவிக் கிளிசரின் கண்ணீர் விடுகின்றன!

_______

செய்தி: “அரசியல் கட்சிகள், வெளிநாட்டு கம்பெனிகளிடமிருந்து பெறும் நன்கொடை விவரத்தை கட்டாயம் வெளியிட, தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்’ என, தேர்தல் ஆணையம், அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

நீதி: அரசாங்கம் நடப்பதே அமெரிக்க ஸ்பான்சரில் என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா, தெரியாதா?

_______

செய்தி: மும்பையில் புதிதாகக் கட்டப்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினருக்கான (என்.எஸ்.ஜி.) அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டதால், அக்கட்டடத்தை வீரர்கள் காலி செய்துள்ளனர்.

நீதி: தேசத்தை ‘பாதுகாக்கிறவனுக்கே’ குடியிருக்கிற வீட்டில் பாதுகாப்பில்லை. இந்த இலட்சணத்துல இவங்க எந்த தேசத்தை காப்பாத்துவாங்க?

_______

செய்தி: தமிழகத்தின், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிகல் சயின்ஸ்’ கல்லூரியில், பணியாற்றிய, 35 டாக்டர்கள், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,க்கு தவறான தகவல்களை கொடுத்து, ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இந்த டாக்டர்களின் பெயர்களை, மருத்து கவுன்சில் பதிவேட்டிலிருந்து நீக்கும்படியும், மூன்று முதல், ஐந்தாண்டுகளுக்கு டாக்டராக பணியாற்றுவதற்கும் இவர்களுக்கு, அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதி: டபுள் ஆக்டிங் கொடுக்கும் நடிகர்களுக்கு ஒரு நீதி, 2 கல்லூரிகளில் வேலை பார்ப்பதாக புரூடா விடும் டாக்டர்களுக்கு ஒரு நீதியா?

______

செய்தி: கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்த கேரள மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தனுக்கு அக்கட்சியின் மத்தியக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதி: கண்டனம் இருக்கட்டும், கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கியதற்காக ‘புரட்சித் தலைவிக்கு’ பாராட்டெல்லாம் இல்லையா?

______

செய்தி: அமெரிக்காவிலுள்ள புளோரிடாவில் மகாத்மா காந்தியின் 7 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கலந்து கொண்டு காந்தி சிலையை திறந்து வைத்தார்.

நீதி: உலக ரவுடி அமெரிக்கா… அரசவைக் கோமாளி அப்துல் கலாம்….துரோக வரலாற்றில் இடம்பிடித்த காங்கிரஸ், காந்தி….ஜோடிப்பொருத்தம் டாப் கிளாஸ்!

______

செய்தி: பால் கொள்முதல் விலை மற்றும் பல்வேறு காரணங்களால் பால் விலையை உயர்த்த கேரள அரசு திட்டமிட்டது. இதற்கான ஆலோசனை கூட்டங்கள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி தலைமையில் நடந்தது. இதில், பால் விலையை லிட்டருக்கு ரூ.5 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

நீதி: இனி கடவுளின் தேசத்தில் சேட்டன்களின் சாயா விலையும் உயரும்!

______

செய்தி: மேற்குவங்க மாநிலம், மிரிதி கிராமத்தில் உள்ள தனது பூர்விக வீட்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 20ஆம் தேதி துர்கா பூஜை நடத்த உள்ளார்.

நீதி: ஃபாரின் டிரிப், ரிப்பன் கட்டிங், குத்து விளக்கு, காது குத்தல் இதுதானே ரப்பர் ஸ்டாம்புகளின் கிரமமான வேலை? நடக்கட்டும் நடக்கட்டும்!

______
செய்தி: தலைமை நீதிபதி இக்பால் பேசும் போது, புதிய சிவில் நீதிபதிகளுக்கு, கண்டிப்புடன் கூறிய அறிவுரை வழங்கினார். அதேநேரத்தில், மாவட்டங்களில் பணியாற்றும் நீதிபதிகள் பற்றி, புகார்கள் வருவதாகவும் தெரிவித்தார்.மொத்தம், 500 புகார்கள் ஆய்வில் இருப்பதாகவும், ஊழலில் சமரசம் இல்லை என்றும், “சஸ்பெண்ட்’ உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இக்பால் எச்சரித்துள்ளார்.

நீதி: பிரிட்டானிய 50:50 பிஸ்கெட் மாதிரி தமிழ்நாட்டில் இருக்கிற மொத்த நீதிபதிகளில் பாதிப் பேர் மேல ஊழல் குற்றச்சாட்டு. இனி யுவர் ஆனர்களை கட்டிங் ஓனருண்ணோ, கமிஷன் மண்டி மன்னாருன்னோ கூப்பிடலாம்!