Wednesday, May 14, 2025
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 8/11/2012

ஒரு வரிச் செய்திகள் – 8/11/2012

-

செய்தி: : நிதின்கட்காரியை நீக்குவது என்பது பா.ஜ.வின் உள் விவகாரம் இதில் ஆர்.எஸ்.எஸ். தலையிடாது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நீதி: ஊரறிந்த ஊழல் பெருச்சாளியை மறைக்க முடியாது என்பதால் பாசிசம் ஜனநாயகம் குறித்து வகுப்பு எடுக்கிறது.

_______

செய்தி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுழற்சி முறையில் பா.ஜ. ஆட்சி முடிவடைவதையொட்டி, கூட்டணி கட்சியான ஜார்‌க்கண்ட் முக்தி மோர்ச்சா, முதல்வர் பதவி கேட்டு கெடுவிதித்துள்ளது.

நீதி: கூட்டணி ஆரம்பித்த நேரத்தில் நட்பும், சுழற்சி முறையின் முடிவில் பகைமையும் ஓட்டுப் பொறுக்கி ஜனநாயகம் உருவாக்கியிருக்கும் ‘நண்பேண்டா’ கலாச்சாரம்.

______

செய்தி: பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் அத்வானிக்கு இன்று 84வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியை சேர்ந்த பலர் அவருக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, தனக்கு பிரதமர் ஆசை எல்லாம் எதுவும் கிடையாது. என்று கூறினார்.

நீதி: வரும் தேர்தலில் பிரதமர் பதவியைப் பெறுமளவு பா.ஜ.க வெற்றி பெறாது என்பதை பெருசு எவ்வளவு நாசூக்காக சொல்கிறது பாருங்கள்!

______

செய்தி: டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ,”ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல; ஆனால், பயணிகளுக்குப் பாதுகாப்பான பயணம் மற்றும் சிறந்த சேவையை வழங்குவதே எங்களது இலக்கு. தவிர்க்க முடியாத சில காரணங்களால், ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.” என்றார்.

நீதி: ரயில் கட்டண உயர்வு இல்லையென்றால் பயணத்தில் மரணம் நிச்சயம் என்கிறாரோ?

_____

செய்தி: மத்திய அரசு, நடப்பு நிதியாண்டின், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், கூடுதலாக, 20 ஆயிரம் கோடி ரூபாய்கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி தெரிவித்தார். அரசின் வருவாயை விட, செலவுகள் அதிகரித்துள்ளதால், ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு, வெளிச் சந்தையிலிருந்து, கடன் வாங்கி வருகிறது.

நீதி: வருமானம் குறைந்தால் வயிற்றையும், வாயையும் கட்டுவது மக்கள் வழக்கம். அமைச்சர்கள் இன்ப சுற்றுலாவிற்கும், இந்திய ராணுவம் வேலையில்லாமல் தின்று தீர்ப்பதற்கும் கடன் வாங்கி செலவு செய்வது அரசின் பழக்கம்.

_______

செய்தி: “கல்வி அறிவே வன்முறைக்கு மிகச்சிறந்த மாற்று மருந்து,” என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

நீதி: எனில் அமெரிக்காவில் யாரும் படிக்கவில்லையா?

______

செய்தி: “ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளைச் சுட, நக்சலைட்டாக மாறவும் விரும்புகிறேன்,” என, பிரபல இந்தி திரைப்பட நடிகர், பரேஷ் ரவால் கூறியுள்ளார்.

நீதி: கருப்புப் பணத்தை வைத்து தயாரிக்கப்படும் பட முதலாளிகளை சுட்டுக் கொல்வதற்கு தயாரா? இல்லை ஊழலுக்கு அடிப்படையாக இருக்கும் முதலாளிகளை பதம் பார்க்க தயாரா? சினிமாக்காரர்களின் சண்டைக்காட்சி உதாருக்கு நக்சலைட்டுகளும் தேவைப்படுகிறார்கள், அவ்வளவுதான்.

_______

செய்தி: நவ.30-ல் ‌ தேசிய இயக்கம் துவங்க திட்டமிட்டிருப்பதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

நீதி: கேஜ்ரிவாலுக்குப் போட்டியா? கட்டதுரை அடங்குனாலும் கைப்புள்ள அடங்கமாட்டாரா?

______

செய்தி: கடந்தாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் ரூ. 468.66 கோடியாக இருந்தது. தற்போது அது ரூ. 754 கோடியாக உயர்ந்துள்ளது.

நீதி: இந்த நஷ்டம் பொதுத்துறை வங்கிகள் கொடுத்த பணம் என்பதால் ஊதாரி மல்லையாவுக்கு என்ன கஷ்டம்?

______