privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 23/11/2012

ஒரு வரிச் செய்திகள் – 23/11/2012

-

செய்தி: நாட்டின் வர்த்தக தலைநகர், மும்பைக்குள் நுழைந்து, ஈவு இரக்கமின்றி, 166 பேரை கொன்று குவித்த, பாகிஸ்தானின், லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகளில், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்புக்கு, 25, புனே நகரின், எரவாடா சிறையில் கடந்த புதனன்று முடிவுரை எழுதப்பட்டது. அன்று காலை, கசாப் தூக்கிலிடப்பட்டான்.

நீதி: நாட்டிலேயே அதிக தனிநபர் வருமானம் கொண்ட குஜராத்தில் ஈவு இரக்கமின்றி 2000த்திற்கும் அதிகமாக இசுலாமிய மக்களை கொன்ற மோடி தலைமையிலான கூட்டத்திற்கு இன்னும் முடிவுரை எழுதப்படவில்லை. குறிக்கப்படும் தேதிக்காக தூக்கு கயிறுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

______

செய்தி: சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பார்லி., குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் பணிகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நீதி: பருவங்கள் மாறினாலும் பிரச்சினைகள் அணிவகுத்தாலும் பாராளுமன்றம் பன்றிகளின் கூடம்தான்! புழுக்கைகளின் கோட்டைதான்!!

______

செய்தி: மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசுக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.

நீதி: மம்தாவின் தீர்மானத்திற்கு தோல்வி நிச்சயமென்று ஆதரவு மறுத்த மார்க்சிஸ்டு கட்சிக்கும் மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. அடிக்கிற மாதிரி அடி, அழுவுற மாதிரி அழு சண்டைகளில் வெற்றியை கொண்டாடுவதோ தோல்விக்கு துவளுவதோ கிடையாதே?

______

செய்தி: புதனன்று துவங்கிய, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு நேற்று விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். விருந்தில் பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித்தலைவர் அருண்ஜேட்லி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

நீதி: பகலில் அமளி, இரவில் விருந்து என்றால் என்ன பொருள்?

_____

செய்தி: மூணாறில் கொலை பட்டியல் வெளியிட்ட, மார்க்சிஸ்ட் மாஜி மாவட்ட செயலாளர் மணி, நேற்று கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, இடுக்கி மாவட்டத்தில் இன்று “பந்த்’ நடக்கிறது.

நீதி: உதார் போதையில் குற்றங்கள் வெளிவந்து கைது வரை போயிருப்பதால் இனி காமரேடுகள் உணர்ச்சி வசப்படாமல் ‘கவனமாக’ பேசுவார்கள்!

_____

செய்தி: “சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால், இந்தியா மீண்டும் ஆங்கிலேயருக்கு அடிமையாகும்,” என, சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

நீதி: ஆங்கிலேயருக்கு அடிமை ஊழியம் பார்த்தவர்கள், வாஜ்பாயி காலத்திலேயே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கொண்டு வர முயன்றவர்கள், சுதேசி குறித்தும் சுதந்திரப் போராட்டம் பற்றியும் பேசினால் விதேசி பற்றும், அடிமைத்தனமும் வெட்கம் கொள்ளாதா?

______

செய்தி: நீண்ட தூரம் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை தயாரிப்பதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் இந்திய பாதுகாப்பு படையில் மேலும் ஒரு மைல் கல்லாக, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை பெற்ற சூப்பர்சானிக் ஏவுகணையை இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

நீதி: நாளை பாக்கிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது என்று செய்தி வரும். இங்கேயுள்ள அணுகுண்டு அங்கேயும் உண்டு என்பதை நினைவில் கொள்க!

______

செய்தி:  விழுப்புரம் மாவட்டம் அய்யூர் அகரம் பெருமாள் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகர பேரரசர் காலத்தைச் சேர்ந்த செப்பேட்டில் உள்ள தகவல்கள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ரமேஷ் கூறியதாவது: விஜயநகர பேரசர் காலத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயில் வெண்கலத் தேர் ஓடுவதற்கு கேரளாவைச் சேர்ந்த அமைச்சர் ஓருவர் தன் மனைவி, மகன் உள்பட 3 பேரை நரபலி கொடுத்து தேரை இழுத்தது குறித்து செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதி: இந்துஞான பாரத பண்பாட்டு பொற்கால மரபு என்பதே இத்தகைய காட்டுமிராண்டித்தனங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு மற்றுமொரு சான்று!

______

செய்தி: மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மர்மக் காய்ச்சலால் 4 பேர் வியாழக்கிழமை இறந்தனர்.

நீதி: மக்கள் என்ன நோயில் இறந்தார்கள் என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாதா இந்த நாடுதான் வல்லரசாம்!

______

செய்தி: வேலூரில் கடந்த அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்ட பாஜக மாநில மருத்துவர் அணிச் செயலர் டாக்டர் வி. அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில், கூலிப் படையைச் சேர்ந்த 6 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நீதி: கூலிப்படையை வைத்து கொலை செய்யுமளவு ரெட்டி காரு என்ன ‘தொழில்’ செய்து வந்தார்?

______

செய்தி: முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்டதை நாடு முழுவதும் உள்ள மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். எனவே ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகளையும், பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளையும் உடனே தூக்கில் போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதி: ஈழத்தில் இந்திய அமைத்திப்படையை அனுப்பி செய்த படுகொலை, பாலியல் வன்முறை கொடுமைகளுக்கு யார் யாரையெல்லாம் கைது செய்து தூக்கில் போட வேண்டும் இளங்கோவன், பதில் சொல்லுங்கள்!

_____________