Sunday, May 11, 2025
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 19/12/2012

ஒரு வரிச் செய்திகள் – 19/12/2012

-

செய்தி: அண்மையில் தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ரசிகர்களிடம் புகை மற்றும் மது பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டுகோள் விடுத்தார். இப்படி அவர் ஒரு முறை விடுத்த வேண்டுகோளை நூறு முறை விடுத்த வேண்டுகோளாக ஏற்று புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளனர் சைதை ரசிகர்கள்.

நீதி: தமிழக அரசியலை கலக்கப் போகிறார் என்று அன்று ஊடகங்கள் கொடுத்த பில்டப் இன்று வெறும் தம் அடிப்பதை விடவைத்தார் என்பதாக ஆறுதல் அடைகிறது.

_____

செய்தி: நேரடி மானிய தொகை வழங்கும் ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நீதி: வெளி நாடுகளில் கருப்பாய் இருக்கும் இந்திய மக்களின் பணத்தை மீட்டெடுப்பதற்கு இதே தீவிரம் ஏன் இல்லை என்று நீங்கள் கேட்கக் கூடாது.

____

செய்தி: சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசும் போது, “தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம்” என்று சூளுரைத்தார்.

நீதி: இந்த சூளுரையைப் பார்த்து மின்சாரம் சிரிப்பாய் சிரிக்கிறது.

____

செய்தி: 2ஜி அலைக்கற்றை முறைகேட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜெ.பி.சி) பதவிக் காலத்தை நீட்டித்து மக்களவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.

நீதி: அரசு, நீதிமன்றங்களின் கைங்கரியத்தால் புதைகுழிக்கு போய்விட்ட அலைக்கற்றை ஊழலுக்கு கருமாதி செய்யவா இந்த பதவி நீட்டிப்பு?

____

செய்தி: அமெரிக்காவைச் சேர்ந்த உலக நிதித்துறை ஒருங்கமைவு (ஜிஎஃப்ஐ) எனும் அமைப்பு வெளியிட்டு அறிக்கையின் படி கறுப்புப் பணம் பதுக்கல் முறைகேட்டில் உலகளவில் இந்தியா 8வது இடம் பிடித்துள்ளது. இதன்படி இந்தியாவிலிருந்து சுமார் 6.76 லட்சம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நீதி: அரசவைக் கோமாளி அப்துல் கலாம் கனவின்படி இதிலும் இந்தியா நம்பர் 1ஐ எட்டி வல்லரசாவது உறுதி! ஜெய் ஹிந்த்!!

____

செய்தி: மாயன் காலண்டரை மேற்கோள் காட்டி உலகம் அழியப் போவதாக சீனாவில் வதந்தி பரப்பிய 93 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீதி: மூடநம்பிக்கையை ஒழிக்க முனைப்பு காட்டும் சீன அரசு, உண்மையில் முழு உலகை அழித்து வரும் பன்னாட்டு நிறுவனங்களை தடை செய்யாமல் சீனாவில் அனுமதித்து அரவணைப்பது ஏன்?

____

செய்தி: தாயாரின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் கருக்கலைப்பு செய்வதைச் சட்டபூர்வமாக்கப் போவதாக அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

நீதி: இந்த கத்தோலிக்க முட்டாள்தனத்திற்கு சவிதா என்றொரு பெண்ணை பலி கொடுத்த பிறகுதான் அயர்லாந்து அரசுக்கு அறிவு வந்திருக்கிறது. அமென்!

____

செய்தி: ஊடகங்களில் பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது குறித்து மக்களவையில் எம்.பிக்கள் கவலை தெரிவித்தனர். ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

நீதி: இங்கு கவலை தெரிவித்தவர்களின் கட்சிகளும், இந்த கவலையை செய்தியாக வெளியிட்ட ஊடகங்களும்தான் பணம் கொடுத்து செய்தி வெளியிடும் மோசடியில் பங்கு பெறுகின்றன. என்றால் இந்த கவலை நாடகம் எதற்கு?

____

செய்தி: காங்கிரஸ், பாஜக அல்லாத 3ஆவது அணி அமைப்பதற்கான வாய்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வு செய்து வருகிறது என்று அக்கட்சியின் பொலிட்பிரோ உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார்.

நீதி: இந்த பயங்கரமான ஆய்வைப் பார்த்தால் சிபிஎம் கட்சி தன்னை ஒரு காமடி பீசு என்று மட்டும் சொல்ல வேண்டும் என மன்றாடுகிறது போலும்!

____

செய்தி: மின்வெட்டைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், “திமுகவின்ர் மீதான பழிவாங்கும் போக்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கருணாநிதி கூறினார்.

நீதி: கருப்பு வெள்ளைப் படங்களில் தாலிப்பிச்சை கேட்கும் ‘கற்புக்கரசிகளை’ விஞ்சுகிறது திமுகவின் சர்வைவல் பிச்சை!

____

செய்தி: தேசிய  ஒருமைப்பாட்டுக்கு எதிரான எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையுடன் இந்திய விமானப்படை திகழ்வதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

நீதி: இதற்கு என்ன பொருள்? யாராவது தனிநாடு கேட்டால் விமானப்படை பறந்து சென்று குண்டு போட்டு கொல்லுமா?

____

செய்தி: இந்திய ராணுவத் தலைமைத் தளபதி விக்ரம் சிங், இலங்கையில் புதன்கிழமை தொடங்கி நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நீதி: முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு கை கொடுத்தவர்கள் அவ்வப்போது இத்தகைய விருந்து சுற்றுலாக்கள் சென்று வருவது வழக்கம்.

___
செய்தி: கிரானைட் முறைகேடு வழக்குகளில் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், பங்குதாரர்களை ஜனவரி 21ஆம் தேதி வரை கைது செய்ய தடைவிதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

நீதி: கிரானைட் சொத்துக்களை பறிமுதல் செய்து விட்டோம் என்று ஜெயலிலிதா சவுடால் அளித்திருப்பது பொய் என்பதற்கு இந்த செய்தியே ஒரு சான்று. பேரம் படிந்து நாடகம் முடிகிறது.

____

செய்தி: பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் மல்லையா 3 கிலோ தங்கத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினார். இந்தத் தங்கம் கோயில் கருவறைக்கு முலாம் பூசப் பயன்படும்.

நீதி: அரசு வங்கிகளுக்கு பட்டை நாமம் போட்ட கொள்ளையனின் தங்க நிழலில்தான் மொட்டைகளுக்கு பெயர் போன ஏழுமலையான் இனி வாழப்போகிறார்.