Saturday, May 10, 2025
முகப்புசெய்திசென்னை புத்தகக்காட்சி : கீழைக்காற்றின் புதிய நூல்கள் !

சென்னை புத்தகக்காட்சி : கீழைக்காற்றின் புதிய நூல்கள் !

-

மருத்துவ அரசியல் புத்தக அட்டை“மருத்துவ அரசியல்” –
கீழைக்காற்று வெளியீட்டகம். விலை – 40.00 ரூ

“ஐயா உங்களைத் தான் கடவுளைப் போல நம்பியிருக்கிறோம்” – கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் மோட்டுவளையைப் பார்த்தவாறே கவலையோடு ‘சிந்தித்துக்’ கொண்டு நிற்க்கும் மருத்துவரைப் பார்த்து சொல்லப்படும் இந்த வசனங்களை நாம் மறந்திருக்க மாட்டோம். உயிரின் மேல் மக்களுக்கு இருக்கும் எதார்த்தமான அச்சமும், வாழ்க்கையின் மேல் அவர்களுக்கு இருக்கும் நியாயமான ஆசைகளும் தான் மருத்துவ வியாபாரிகளின் முக்கியமான மூலதனம். மக்களின் அச்சத்தை மருந்துக் கம்பெனிகள் சாத்தியப்படும் வழிகளில் எல்லாம் காசாக்கும் அயோக்கியத்தனங்களை தோலுரிக்கும் விதமாகவும், மருத்துவ அரசியலின் உள்ளிணைப்புகளின் அரசியலை அம்பலப்படுத்தியும் வினவு தளத்திலும் புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரம் பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.

___________________________

காதல் புத்தக அட்டை“காதல் : வர்க்கம், சாதி, மதம், ஆணாதிக்கம்”  – கீழைக்காற்று வெளியீட்டகம் .
விலை – 40.00 ரூ

காதலைப் பற்றிச் சிலாகித்துப் பேசாதவர்கள் யார்? அநேகமாய் அனைவருக்குமே காதலைப் பற்றி இனிமையாகப் பகிர்ந்து கொள்ள ஏதோவொன்று இருக்கத்தானே செய்கிறது. ஆனால், பேசுவதற்கு இனிமையானதாக இருப்பதைப் போலவே நடைமுறையிலும் இருப்பதில்லை என்பதைத் தான் தருமபுரிக் கலவரம் அறிவிக்கிறது. வாழ்வின் ஒரு சிறிய பகுதியில் சட்டென்று தோன்றி மறையும் மின்னல் கீற்றாக வந்து செல்லும் இந்த உணர்வு வெறும் ஹார்மோன்களின் நடனம் மட்டும் தானா? அல்லது ‘இளைய தளபதி’ செய்யும் காதல் உபன்யாசங்கள் போல் அத்தனை எளிமையானதா? காதலை மட்டுமல்ல – வர்க்கம், சாதி, மதம், ஆணாதிக்கம் என்று பல்வேறு வடிவங்களில் அவதாரமெடுத்து கூத்தாடும் வில்லன்களான காடு வெட்டிகளையும் மிகச் சரியாக உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது இந்தச் சிறு நூல். வினவு இணையதளத்தில் வெளியாகி பெரும் விவாதங்களைத் தூண்டிய கட்டுரைகளின் தொகுப்பு இது.

 

____________________________________

மார்க்சிய நூல்களுக்கு வழிகாட்டி

“மார்க்சிய நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
– மாரிஸ் கார்ன் ஃபோர்த்” கீழைக்காற்று வெளியீட்டகம். விலை – 150.00 ரூ.

மார்க்சியம் என்பது குழப்பகரமான சொல் அடுக்குகள் என்றும், புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான தத்துவம் என்பதைப் போன்றும் பொதுபுத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் சூழல் ஒரு பக்கமென்றால், மார்க்சிய சொல்லாடல்களைக் கொண்டே மார்க்சியத்தை திரித்துக் கூறும் ‘அறிவுஜீவிகள்’ இன்னொரு பக்கம். இந்த இரு தரப்பையும் தவிர, குழப்பமான மொழிக்கட்டுமானத்தோடும், சுற்றிச் சுழலும் திருகலான எழுத்து நடையிலும், வறட்சியான புரிதலோடும் கண்ணோட்டத்தோடும் மார்க்சியத்தை விளக்க முன் வரும் ஒரு கூட்டமும் உள்ளது. இவர்கள் எந்தவகையான நடைமுறையிலும் இல்லாதவர்கள். இவர்களின் எழுத்துகளை எதேச்சையாகக் கடந்து செல்ல நேரிடும் எவருக்கும் மார்க்சியம் என்பது புரிந்து கொள்ளவே முடியாத ஏதோவொரு அமானுஷ்ய சக்தி என்பதைப் போன்ற பிம்பம் தோன்றுவது இயற்கை தான்.

இவர்களுக்கிடையில் எந்தவிதமான பாண்டித்ய மொழிப் பாசாங்குகளும் இன்றி எளிமையான மொழிநடையில் பொருத்தமான உதாரணங்களோடு மார்க்சிய மூல நூல்களை அறிமுகம் செய்கிறார் மாரிஸ் கார்ன் ஃபோர்த். உயிரோட்டமான மார்க்சியம் என்பது நடைமுறையில் பற்றி நிற்கும் ஒருவரிடம் இருந்து மட்டுமே வெளிப்பட முடியும்; அந்த வகையில் மாரிஸ் தனது வாழ்நாள் முழுவதும் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலான முரண்பாடுகளோடு ஒரு இயங்கியல் ரீதியிலான போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தவர். மார்க்சியத்தை நேர்மறையில் கற்றுக் கொள்ள நினைக்கும் எவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

_________________________________

அந்நியப்படும் கடல்

“அந்நியப்படும் கடல் – வறீதையா கான்ஸ்தந்தின்”
– கீழைக்காற்று வெளியீட்டகம். விலை 35 ரூ

சாதாரண பிக்பாக்கெட்டை பின்மண்டையில் தட்டி தரதரவென்று இழுத்துச் செல்லும் போலீசு ஒரு மாவட்டத்தில் மலைகளையே விழுங்கி ஏப்பம் விட்ட பி.ஆர்.பியை பயபக்தியோடு கோர்ட்டுக்கு இழுத்து வருவதைத் தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் திகைத்துப் போயிருப்பார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது என்று குழம்பிப் போயிருப்பார்கள். ஆனால், இது பி.ஆர்.பிக்களின் காலம் – ஏனெனில், இது தரகர்களின் பொற்காலம். நிலம், நீர், காற்று, ஆகாயம் என்று இயற்கை மக்களுக்கு வழங்கியிருக்கும் கொடைகள் ஒவ்வொன்றையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குக் கூறு கட்டிப் படையல் வைத்துக் கொண்டிருக்கும் தரகர்களின் கையில் தான் இன்றைக்கு ஆட்சியதிகாரம் குவிந்து கிடக்கிறது. அந்த வகையில், தொன்மையான தமிழகக் கடல் பழங்குடிகள் மீதான அறுபதாண்டு கால அரசின் கொள்கை ரீதியிலான வன்முறைகளை விவரிக்கிறது வறீதையாவின் இச்சிறு நூல்.

தங்கள் வாழ்க்கையையே பணயமாக வைத்து நம் நாவின் ருசிக்காக மீன்களைப் பரிசளிக்கும் இந்தத் தொல்குடிகளுக்கு கடலில் என்ன நேர்ந்ததோ அதே தான் நமக்கும் நிலத்தில் நேர்ந்து வருகிறது. அவர்களின் எதிரிகளும் நமது எதிரிகளும் வேறு வேறு அல்ல. அவர்களை இனம் கண்டு புரிந்து கொண்டால் தான் முறியடிக்க வேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் நாம் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

_____________________________________

கம்யூனிசத்தின் கோட்பாடுகள் புத்தக அட்டை

“கம்யூனிசத்தின் கோட்பாடுகள்  – பிரெட்ரிக் எங்கெல்ஸ்”. கீழைக்காற்று வெளியீட்டகம். விலை 25 ரூ

கம்யூனிசத்தின் அடிப்படையான கோட்பாடுகளைப் பற்றி எளிமையாக அறிமுகம் செய்து வைக்கிறார் எங்கெல்ஸ். மார்க்சியம் எளிய மக்களுக்கான தத்துவம், எனவே அதன் மூலவர்களின் எழுத்துக்கள் எப்போது சிக்கலான பொருளாதாரச் சூத்திரங்களையும் எளிமையாகப் புரியும் வண்ணம் எழுதியுள்ளனர். எங்கெல்ஸின் எழுத்துக்களில் இதை நாம் காணமுடியும். 40 பக்கங்கள் கொண்ட இந்தச் சிறு நூல் பல்வேறு எல்லைகளுக்கும் செல்லும் வாசல்களைத் திறக்கிறது. மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ள எதிலிருந்து துவங்கலாம் என்கிற கேள்விக்கு இந்நூல் தான் பதில்.

_________________________________________________

அரசும் புரட்சியும் புத்தக அட்டை

“அரசும் புரட்சியும் – லெனின்” கீழைக்காற்று வெளியீட்டகம். விலை 90.00 ரூ

அரசியலைப் பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம்? தேர்தல்கள், ஓட்டுக்கு நோட்டு, எம்.எல்.ஏ குதிரை பேரங்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள், சதிகள், பொய்கள்… இவைகளைத் தாண்டி நமது ‘அரசியல்’ பத்திரிகைகள் என்று அறியப்படுபவைகள் நம்மிடம் அரசியலைப் பற்றிச் சொல்வதெல்லாம் கிசுகிசுக்கள் தான். சில தனிநபர்களின் தனிப்பட்ட தன்னகங்கார நடவடிக்கைகளும் திமிர்த்தனங்களுமே அரசியல் என்பதாகச் சொல்கின்றன இந்தப் பத்திரிகைகள். “அரசியல் என்றாலே சாக்கடை சார்” என்கிற சலிப்புகளை எத்தனை பேரிடம் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த எதிர்மறை சடைப்புகள் மட்டும் தான் அரசியலா?

அரசியல் என்றால் என்ன, அரசு என்றால் என்ன, புரட்சி என்றால் என்ன என்பவற்றைப் பற்றி நேர்மறையில் நமக்குக் கற்றுத் தருகிறார் லெனின். அரசியலையும் அரசின் தன்மையையும் புரிந்து கொள்ள விரும்பும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

_____________________________

வழக்கு எண் புத்தக அட்டை

“வாழ்வும் கலையும் – வினவு திரைப்பட விமர்சனம்”
– கீழைக்காற்று வெளியீடு. விலை 15 ரூ

“சார், சினிமாவை சினிமாவா பாருங்க சார். பிடிச்சா பாருங்க இல்லாட்டா விடுங்க சார்” வினவின் அநேகமான சினிமா விமர்சனங்களில் மேற்படி புலம்பலைப் பார்க்க முடியும். இப்படி ‘ஆராயாமல் அனுபவிக்கும்’ கோஷ்டிகள் தங்கள் வாழ்வோடு சம்பந்தப்பட்ட சகலத்திலும் அப்படித்தான் இருக்கிறார்களா என்றால் இல்லை. கூடையில் கத்தரிக்காய் சுமந்து வரும் வயதான பெண்மணியிடம் உலக பொருளாதாரத்திலிருந்து உள்ளூர் பங்குச்சந்தை நிலவரம் வரைக்கும் நொட்டை சொல்லி பேரம் பேசும் இவர்கள், அந்தப் பெண் சொல்லும் விலையை அப்படியே ஆராயாமல் அனுபவிப்பவர்கள் இல்லை என்பது தற்செயலானதல்ல.

வழக்கு எண் விமரிசனம் என்பது வெறும் சினிமா விமரிசனம் மட்டுமல்ல, ரசனையின் மீதான விமரிசனமும் தான். வழக்கு எண் திரைப்படத்தின் விமரிசனத்தோ டு சேர்த்து ஒரு கலைப் படைப்பை ரசிக்கக் கற்றுத் தருகிறது இந்தச் சிறு வெளியீடு.

______________________________________

நித்தியானந்தா புத்தகம் அட்டை

“ஆபாசத்தில் விஞ்சி நிற்பது நித்தியா? இந்துமதமா?” – கீழைக்காற்று வெளியீடு. விலை 15 ரூ

நித்தியானந்தாவைக் கடந்தாண்டின் மிகச் சிறந்த காமெடியன் என்பதைப் போல் முதலாளித்துவ ஊடகங்கள் முன்னிருத்தின. நித்தியை வரம்பு கடந்து பரிகசிப்பதன் ஊடாக இந்தப் பொருளை விளைவித்த விளை நிலமான இந்துமதத்தை நிரபராதியாக்க வேண்டுமென்ற முனைப்பு அப்பட்டமாக வெளிப்பட்டது. அப்படி நித்தியை கேலி பேசியோர் எவரும் அவரது லீலா வினோதங்களைச் சுவைபட விவரித்து கல்லா கட்ட தயங்கவில்லை. ஆக, இதில் குற்றவாளி  யார்? நித்தியா, அவரை உலகுக்குத் தந்த இந்து மதமா அல்லது அவரைக் கடைவிரித்து விற்ற ஊடகங்களா? விரிவாக அலசுகிறது இந்தச் சிறு வெளியீடு.  வினவில் ஐந்து பாகங்களாய் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற கட்டுரைகள் இப்போது ஒரே நூலாக வந்துள்ளது.
_______________________________________________________________________________________________________