privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ் ராகுல் காந்தி : சிறப்பு ஒரு வரிச் செய்தி !

ராகுல் காந்தி : சிறப்பு ஒரு வரிச் செய்தி !

-

ராகுல் காந்தி கார்ட்டூன்செய்தி: ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார்.

நீதி: மன்னர் குல வாரிசுகள் “நியமிக்கத்தான்” படுவார்கள், தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.

_____

செய்தி: “காங்கிரஸ் கட்சி இப்போது எனது வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. இந்திய மக்கள்தான் என் வாழ்க்கை.” – ராகுல் காந்தி

நீதி: “இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா” என்று அவசரகால நெருக்கடி நிலையில் திணிக்கப்பட்ட அடிமை வாசகத்தை பேரன் இப்போது அமைதிக் காலத்திலேயே வீசியிருக்கிறார். ஆனாலும் பாட்டி முதல் பேரன் வரை அதே திமிர்!

_____

செய்தி: “இந்திய மக்களின் நலன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக நான் போராடுவேன். இந்தப் போராட்டத்தில் தோள் கொடுக்க உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்” – ராகுல் காந்தி

நீதி: காங்கிரஸ் கட்சி ஒழிப்பில்தான் இந்திய மக்களின் நலன் அடங்கியிருக்கிறது மிஸ்டர் ராகுல் காந்தி!

_____

செய்தி: “குறிப்பிட்ட சிலர் மட்டுமே அரசியல் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அதிகாரம் என்பது மையப்படுத்தப்பட்டதாக உள்ளது. கீழ் மட்டம் வரை அதிகாரம் பரலவலாக்கப்படவில்லை.” – ராகுல் காந்தி

நீதி: இந்த பொன்மொழிக்கு பொருத்தமான விளக்கம்தான் நேரு குடும்பம் என்பது எடுத்துக்காட்டா, விதிவிலக்கா?

_____

செய்தி: “திறமைக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படாமல் பதவிக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிறோம். பதவி இல்லையென்றால் ஒன்றுமே இல்லை.” – ராகுல் காந்தி.

நீதி: காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் என்பது பதவியா, திறமையா என்று கூட இந்த விரல் சூப்பும் பாப்பாவுக்கு தெரியாதாம்!

_____

செய்தி: “தில்லியில் குவிந்துள்ள அதிகாரத்தை மாநிலங்களுக்கும், கிராம பஞ்சாயத்துகளுக்கும் பரவலாக்க வேண்டும்” – ராகுல் காந்தி.

நீதி: இதனால் எண் 10, ஜன்பத் சாலை, புதுதில்லியில் குவிந்திருக்கும் சோனியா குடும்ப அதிகாரம் உசிலம்பட்டி காங்கிரஸ் கமிட்டிக்கு மட்டுமல்ல, வேட்டிக் கிழிப்பு சத்யமூர்த்தி பவனுக்கும் வரும் என்று யாராவது பந்தயம் கட்டத் தயாரா?

_____

செய்தி: “சமீபகாலமாக இளைஞர்கள் கோபமாக உள்ளனர். இதற்குக் காரணம் அரசியலிலிருந்து தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். தங்களுடைய குரல் நசுக்கப்பட்டதாக அவர்கள் எண்ணுகின்றனர்.” – ராகுல் காந்தி

நீதி: 42 வயது இளைஞர் ராகுல் காந்திக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்ட பிறகு அந்த இளைஞர்கள் கோபம் தணிந்து பிசாவை கடித்துவிட்டு மல்டி பிளக்ஸ் பக்கம் ஒதுங்கி விட்டனர்.

_____

செய்தி: “நீதி, கல்வி, அரசியல், நிர்வாகம், ஆகிய அனைத்து நடைமுறைகளுமே மக்களுக்கு தொடர்பில்லாத வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன” – ராகுல் காந்தி.

நீதி: போபார்சு கொள்ளையனை விடுவித்த நீதி, நேரு குடும்ப பஜனையை பாடத்திட்டமாக வைத்திருக்கும் கல்வி, வாரிசுரிமை கோலேச்சும் காங்கிரசு, அமெரிக்கத் தயாரிப்பான மன்மோகன் சிங் நிர்வாகம் – இவையும் கூட மக்களுக்கு தொடர்பில்லாமல்தான் இருக்கின்றன ராகுல் காந்தி சார்!

_____

செய்தி: “ஊழல் செய்கிறவர்கள் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். நடைமுறை வாழ்வில் பெண்களுக்கு மதிப்பு அளிக்காதவர்கள் பெண்ணுரிமை பற்றி பேசுகிறார்கள்” – ராகுல் காந்தி

நீதி: ஊழலை சட்ட பூர்வமாக்கியது காங்கிரசு கட்சி, சோனியா என்ற பெண்ணை முழு காங்கிரசு கட்சியும் காளியாக தொழுகிறது என்ற பொருளில் ராகுல் சொல்லியிருப்பது சரிதானே?

_____

செய்தி: “வருங்காலத்தில் ஆட்சி, முடிவெடுத்தல், நிர்வாகம், அரசியல் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்” – ராகுல் காந்தி.

நீதி: சரி, சரி அடுத்த பிரதமர் நீங்கள்தான், அதற்காக இந்த பக்கத்து இலை பாயாசம் ரொம்ப பழைய உத்தி!

_____

செய்தி: “தேசிய அளவில் நாட்டை வழிநடத்தும் வகையில் 40 முதல் 50 தலைவர்களை நாம் தயார்படுத்த வேண்டும். இதுபோல் மாநில அளவில் 5 முதல் 10 தலைவர்களை உருவாக்க வேண்டும். இவர்களில் ஒருவரை முதல்வராக்கலாம்” – ராகுல் காந்தி.

நீதி: எப்படி? மன்மோகன் சிங், ப.சிதம்பரங்களை தயாரித்தது போலவா? எனில் உங்களை ஆலோசனையை அமெரிக்காவிடம் தெரிவிக்க வேண்டும் ராகுல்ஜி.

_____

செய்தி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியை நான் ஏற்ற பின்னர் எனது தாய் கண்ணீர் விட்டு அழுதார் என்று ராகுல் காந்தி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

நீதி: பாசிஸ்ட்டே என்றாலும் பிள்ளைப்பாசம் இல்லாமலா போய்விடும்?

_____

செய்தி: “இரவில் எனது அறைக்கு வந்த எனது தாயார் சோனியா காந்தி என்னுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அப்போது அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பதவி, அதிகாரம் என்பது விஷம் போன்றது என்பதை அவர் அறிந்துள்ளதுதான் இதற்குக் காரணம். ஆனால் இது தெரியாமல் பலரும் பதவியைத் தேடி அலைகின்றனர்.

நீதி: அதனால் என்ன? விஷமோ, அமுதமோ மற்றவர்கள் தேடினால்தான் பதவி கிடைக்கும். ஆனால் உங்களுக்கு?

_____

செய்தி: “எனது 42 வயதில் 8 ஆண்டுகள் அரசியலில் இருந்துள்ளேன். இருளில் தோன்றும் சிறிய ஒளியாகவே இது எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்த ஒளி மேலும் வளர்ந்து இந்தியாவையே மாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது” – ராகுல் காந்தி.

நீதி: நான் இந்தியாவின் ஒளி, எதிர்காலம் என்று பச்சையாகவே பேசுவதைப் பார்த்தால் ஒன்று மட்டும் நிச்சயம்! இந்தியாவை இனி ஏழரையோ இல்லை பதினாலரை நாட்டு சனியோ பிடித்து விட்டது மட்டும் நிஜம்!