privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்நூல் அறிமுகம்சாதி குறித்து இரண்டு முக்கிய நூல்கள்!

சாதி குறித்து இரண்டு முக்கிய நூல்கள்!

-

“சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்”

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வெளியீடு, விலை ரூ. 60.00

நூலின் முன்னுரை

ஆதிக்க அரசியல் நூல் அட்டைநாய்க்கன் கொட்டாயில் ஒரு கொடிய வன்கொடுமைக் குற்றத்தை அரங்கேற்றியது மட்டுமின்றி, சாதி கடந்த திருமண எதிர்ப்பு, வன்கொடுமைச் சட்ட எதிர்ப்பு என்று ஆதிக்க சாதி வெறியர்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். வன்னிய சாதிப் பெண்களைக் காதலித்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகின்றனர். இவையனைத்துக்கும் இன்று தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் பா.ம.க தலைவர் ராமதாசு, 90 களின் துவக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையின் நாயகனாக காட்டப்பட்டவர்.

எண்பதுகளின் இறுதியில் வன்னியர் சங்கத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசியல் அரங்கில் இறக்கியபோதே, அதன் சாதிய பிழைப்புவாத முகத்தை புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியது. இருப்பினும் எம்.ஜி.ஆருக்கு வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் கட்சியும் கொள்கையும் தயார் செய்து கொடுத்தது போலவே, ராமதாசுக்கு புரட்சி வேசம் கட்டி விடுவதற்கு ஏராளமான அறிஞர்களும் பேராசிரியர்களும் வரிசையில் நின்றனர்.

“இழக்கப் போவது சாதிகளை மட்டுமே! அடையப் போவதோ பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி அதிகாரம்!” “ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே, ஒன்று சேருங்கள்! ஆளும் பாசிச கும்பல்களைத் தூக்கி எறியுங்கள்!” என்ற முழக்கங்களை பா.ம.க. மீது சுமத்தி, ராமதாசுக்கே தோன்றாத கோணங்களில் இருந்தெல்லாம் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அறிவாளிகள் பொழிப்புரை போட்டனர். நிறப்பிரிகை கனவான்கள், ப.கல்யாணி, பழமலய், பிரபஞ்சன், பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் பெ.மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு, சுப.வீ என இவர்களுடைய பட்டியல் மிக நீண்டது. இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதி, சாதி ஒழிப்பு, நாடாளுமன்ற முறை மூலம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் ஆகியவை சாத்தியம் என்ற மாயையை உருவாக்குவதில் மாஜி புரட்சியாளர்கள், மற்றும் அறிவுத்துறையினர் முன்னிலை வகித்தனர்.

சாதிய, வர்க்க ஒடுக்குமுறையை நிலைநிறுத்தும் பொருட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்படும் மேற்படி அரசு அமைப்பு, சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை தாக்கித் தகர்க்கும் அரசியல் புரட்சியின்றி சமூகப் புரட்சி சாத்தியமில்லை. பழைய கட்டுமானத்தின் கீழ் ஒடுக்கப்படும் சாதியினர் சமத்துவம், ஜனநாயகத்தைப் பெற முடியாது என்ற புரட்சிகர அரசியலை நிராகரித்து, அடையாள அரசியலையும் அதன்வழி சாதிய பிழைப்புவாத அரசியலையும் இவர்கள் கொண்டாடினர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை ராஜதுரையும் ராமதாசு, திருமாவளவன் உள்ளிட்டவர்களை நிறப்பிரிகை கும்பலும் துதிபாடினர்.

தங்களால் கொண்டாடப்பட்ட இந்த நபர்கள், காங்கிரசு, பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க என்று மாறி மாறி கூட்டணி சேர்ந்து கொண்டபோது இவர்கள் வாய் திறக்கவில்லை. தாங்கள் முன்வைத்த அரசியல் தவறு என்று ஒப்புக்கொள்ளவோ விளக்கம் கூறவோ இல்லை. தாங்கள் முன்வைத்த கருத்துகளை நம்பி, இந்தப் பிழைப்புவாதிகளின் பின்னால் சென்ற எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்து போனது பற்றியும் இவர்கள் கவலைப்படவில்லை. கம்யூனிசக் கொள்கை மற்றும் புரட்சிகரக் கட்சியின் மீது இளைஞர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை புரட்சிகர இயக்கங்களில் சேரவொட்டாமல் தடுப்பதுமே இவர்களுடைய நோக்கமாக இருந்து வருகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ அல்லது உதவியில்லாமலோ இவர்கள் இந்த ஆளும்வர்க்கத் தொண்டினை நிறைவேற்றி வருகிறார்கள்.

ஓட்டுக்கட்சித் தலைவர்கள் கூட தமது அரசியல் சந்தர்ப்பவாதங்களுக்கு மக்களிடம் விளக்கமளிக்கிறார்கள். அவற்றின் விளைவாக மதிப்பிழக்கிறார்கள். ஆனால் அடையாள அரசியல் என்ற பெரில் சாதிய பிழைப்புவாதிகளையும், சாதி வெறியர்களையும் உருவாக்கி, வளர்த்து விட்ட இந்த அறிவுத்துறையினர் மட்டும், தாங்கள் தயாரித்த தீவட்டிகள் ஊரையே கொளுத்துவது தெரிந்தும், ஒரு பாசிஸ்டுக்குரிய அலட்சியத்துடன் மவுனம் சாதிக்கிறார்கள். தாங்கள் பிரச்சாரம் செய்த கருத்துகளின் சமூக விளைவுகளுக்குப் பொறுப்பேற்காமல் நழுவுகிறார்கள். பின் நவீனத்துவம், பெரியார், அம்பேத்கர், காந்தி, முகமது நபி என்று காற்றடிக்கும் பக்கமெல்லாம் பறந்து, பசையுள்ள இடங்களில் ஒட்டிக் கொள்கிறார்கள்.

நாடாளுமன்ற அரசியலின் சீரழிவு, சாதிய பிழைப்புவாதிகளை சுயேச்சையாகத் தோற்றுவிப்பதையும், அடையாள அரசியல் அத்தகைய பிழைப்புவாதங்களுக்கு கவுரவமும் அந்தஸ்தும் அளித்து, ஜனநாயகப் புரட்சி அரசியலை சீர்குலைப்பதற்கு பயன்படுவதையும் இந்நூலின் கட்டுரைகளை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும்.
_____________________________________________________________________________________________________________

சாதி – தீண்டாமை ஒழிப்பு: என்ன செய்யப் போகிறீர்கள்?

விலை ரூ.10 – மகஇக-புமாஇமு-புஜதொமு-விவிமு-பெவிமு, வெளியீடு

சாதி ஒழிப்பு நூல் அட்டை1997ல் கொடியங்குளம் ‘கலவரத்தை’ ஒட்டி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்து கோயில் நுழைவு, பொதுக்கிணற்றில் நீர் எடுத்தல், தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை உடைப்பு, அடிமைத் தொழில் செய்ய மறுப்பு, சாதி-தீண்டாமை மறுப்புத் திருமணங்கள் போன்ற வடிவங்களில் எமது அமைப்புகள் சாதி வெறிக்கு எதிரான போராட்டத்தை நடத்தின. ஆதிக்க சாதி வெறி கருத்துக்களை அம்பலப்படுத்தும் இந்த சிறு வெளியீடும் பல்லாயிரக் கணக்கில் கொண்டு செல்லப்பட்டது.

அன்று போக்குவரத்துக் கழகத்துக்கு விடுதலை வீரன் சுந்தரலிங்கத்தின் பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்த சாதிவெறியர்கள், இன்று சாதி கடந்த காதல் திருமணங்களை எதிர்த்து நாயக்கன் கொட்டாய் சாதி வெறித் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். பா.ம.க. தலைவர் ராமதாசு, அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை என்ற சாதிவெறி அமைப்பு உருவாக்கியிருக்கிறார். காதல் திருமணங்களாலும் வன்கொடுமை வழக்குகளாலும் ஆதிக்க சாதியினர் பாதிக்கப்பட்டிருப்பது போல சித்தரிப்பதன் மூலம், சாதி-தீண்டாமை கருத்துக்களை இக்கும்பல் புதுப்பிக்கிறது.

இதன் பொருட்டு இவர்கள் இன்று முன் வைக்கும் வாதங்கள் அனைத்தும், அன்றும் முன்வைக்கப்பட்டவைதான். அவ்வாதங்களை முறியடிக்கும் இவ்வெளியீடு சாதி வெறியை முறியடிக்கும் கையேடாக பயன்படும் என்பதால், அதனை மீண்டும் பதிப்பித்திருக்கிறோம்.

______________________________________________________________________________________________________________

புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்

  1. 23.01.2013 வரை
    கீழைக்காற்று கடை எண்: 551-552
    36வது சென்னை புத்தகக் காட்சி,
    ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை
  2. முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
    கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
    தொலைபேசி – 044-2841 2367
  3. புதிய கலாச்சாரம்
    16, முல்லைநகர் வணிக வளாகம்,
    2-வது நிழற்சாலை, அசோக்நகர்,
    சென்னை – 600083
    தொலைபேசி – 044 – 2371 8706, 99411 75876

வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் vinavu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
______________________________________________________________________________________________________________

    • புதிய கலாச்சாரம் அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – செல்பேசி எண் 99411 75876-ல் தொடர்பு கொள்க!

  1. சரியான நேரத்தில் இவ்விரு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கின்றனர் தோழர்கள்.பாராட்டுக்கள்.

    அடையாள அரசியல் பிழைப்புவாத கும்பல்கள்,ஆதிக்கச் சாதி வெறி கும்பல்கள் இனி பம்முவதற்குக் கூட இங்கே இடமில்லை.

  2. ஒருத்தரை மட்டும் பெயரை குறிப்பிடாமல் நிறப்பிரிகை கனவான் என்றது ஏன்?

    • நிறப்பிரிகை கனவான்கள் : ரவிக்குமார், அ.மார்க்ஸ், பொ. வேல்சாமி ஆகிய மூவரின் கூட்டனி

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க