privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்ஆமா துட்டு வாங்க்கிணுதான் நியூஸ் போட்றோம் , இன்னான்ற ?

ஆமா துட்டு வாங்க்கிணுதான் நியூஸ் போட்றோம் , இன்னான்ற ?

-

கட்டண செய்தி கார்ட்டூன்
மனிதாபிமானமே எங்க குறிக்கோள்!
பொதுநலமே எங்க இலக்கு! பணம் ஒண்ணுமேயில்ல!

ட்டணச் செய்தி என்பது “பணம் அல்லது வேறு விதமான சலுகைகளை விலையாகக் கொடுத்து வெளியாகும் செய்தி” என்று இந்திய பிரஸ் கவுன்சில் வரையறுக்கிறது.

கட்டணச் செய்தி வழக்குகளுக்கெல்லாம் முன்னோடி மகாராஷ்டிராவின் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் சவான் சம்பந்தப்பட்ட வழக்குதான். 2009 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது அசோக் சவானைப் பற்றிய முழுப் பக்க செய்திகள் டஜன் கணக்கில் வெளியிடப்பட்டன. அத்தகைய செய்திகளில் ஒன்றில் கூட போகார் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட மாதவ் கின்ஹல்கரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. திரு சவானுக்கு புகழாரம் சூட்டும் கட்டுரை ஒன்று மூன்று நாளிதழ்களில் வெவ்வேறு நபர்கள் எழுதியதாக ஆனால் ஒரு வார்த்தை கூட மாறாமல் வெளியாகியிருந்தது.

பல வழக்குகளுக்கு முன்னோடியாக அமைந்த அசோக் சவான் வழக்கு, தேர்தல் ஆணையத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தேங்கியுள்ளது. அதே போல முன்னாள் ஜார்கண்ட் முதலமைச்சர் மது கோடாவின் வழக்கும் நீதிமன்றங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

டிசம்பர் 2012 குஜராத் தேர்தல்களின் போது கட்டணச் செய்திகள் பெருமளவு வெளியிடப்பட்டன என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி காட்ஜூ நியமித்த குழு கண்டறிந்துள்ளது.

உத்தர பிரதேச பிசௌலி சட்டசபை உறுப்பினர் உம்லேஷ் யாதவ் 2007 தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்திகள் வெளியிடுவதற்காக செலவழித்த பணத்தைப் பற்றிய தகவல்களை மறைத்திருந்தார். அதற்குத் தண்டனை, தேர்தல் செலவுகள் பற்றிய சரியான கணக்குகளை தராததற்கான தகுதி நீக்கமாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது.

நவம்பர் 2008 சட்டசபை தேர்தல்களின் போது மத்திய பிரதேச பா.ஜ.க. அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மிஸ்ராவைப் பற்றி வெளியான 42 செய்திகளைக் குறித்து டாக்டர் மிஸ்ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ‘அந்தச் செய்திகள் தேர்தல் விளம்பரங்கள் போல இருக்கின்றனவே தவிர, பத்திரிகைச் செய்திகள் போல இல்லை’ என்று அது சுட்டிக் காட்டியிருந்தது. தைனிக் பாஸ்கர், நயீ துனியா, ஆச்சரண், தைனிக் தட்டியா பிரகாஷ் என்ற நான்கு செய்தித் தாள்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தன. தைனிக் பாஸ்கர் நாட்டிலேயே இரண்டாவது அதிகம் படிக்கப்படக் கூடிய நாளிதழாகும்.

‘டாக்டர் மிஸ்ரா தொடர்பான 42 செய்திகளும், செய்தி என்ற போர்வையில் வெளியான விளம்பரங்கள்’ என்றும் ‘அவை கட்டணச் செய்தி என்ற வரையறைக்குள் வருகின்றன’ என்றும் தேர்தல் ஆணையத்தின் கட்டணச் செய்தி விசாரணைக் குழு முடிவு செய்தது. நரோத்தம் மிஸ்ரா, “சட்டப்படி தனது தேர்தல் செலவுகளை முறையாக சமர்ப்பிக்கத் தவறினார்” என்று தேர்தல் ஆணையம் ஜனவரி 15ம் தேதி அறிவித்தது. அதற்கான தண்டனையாக அவர் சட்டசபை உறுப்பினர் பதவியை இழக்க நேரிடலாம்.

2010 பீகார் சட்டசபை தேர்தல்களின் போது நாட்டிலேயே அதிகம் படிக்கப்படும் தைனிக் ஜாக்ரன் நாளிதழும், தைனிக் ஹிந்துஸ்தான், ஹிந்துஸ்தான் டைம்ஸ், தைனிக் ஆஜ், பூர்வாஞ்சல் கி ராஹி, ராஷ்டிரிய சஹாரா, உத்யோக் வியாபார் டைம்ஸ், பிரபாத் கபர் ஆகிய நாளிதழ்களும் கட்டணச் செய்திகளை வெளியிட்டதாக இந்திய பத்திரிகைகள் கழகம் சென்ற மாதம் முடிவு செய்தது. தேர்தல் ஆணையம் அனுப்பிய விபரங்களின் அடிப்படையில் இந்திய பிரஸ் கவுன்சில் இந்த நாளிதழ்களுக்கு ஜூலை-செப்டம்பர் 2011ல் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியிருந்தது.

இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வேட்பாளர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் ‘செய்திகள் வெளியிடுவதற்காக அவர்கள் செலவழித்த தொகையை தேர்தல் செலவு கணக்கில் சேர்த்துக் கொண்டு” தமது குற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள். தாம் “செய்தி”யை விலைக்கு வாங்கியதாக வேட்பாளர்கள் ஒத்துக் கொண்ட கடிதங்கள் முசாபர்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியின் வசம் உள்ளன.

பிரபாத் கபர் என்ற பத்திரிகையும், அத்தோடு குற்றம் சாட்டப்பட்ட வேட்பாளரும் மட்டும் குற்றச்சாட்டை உறுதியாக மறுத்தனர். கட்டணச் செய்தி கலாச்சாரத்தை எதிர்த்து பிரபாத் கபர் நடத்தியிருந்த பிரச்சார இயக்கம் அதற்கு துணையாக இருந்தது. ஆதாரங்களை தேர்தல் ஆணையம் காண்பித்தால் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக அந்த நாளிதழ் சொன்னது.

மற்ற நாளிதழ்கள் குற்றச் சாட்டுகளை மறுத்தாலும் அவற்றுக்கு பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட வேட்பாளர்கள் தமது குற்றத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒத்துக் கொண்டிருந்தனர். அந்த நாளிதழ்கள் பிரஸ் கவுன்சிலின் அதிக பட்ச தண்டனையை எதிர் நோக்கியுள்ளன.

தொடர்ந்து இந்தத் தவறை செய்யும் ஊடகங்கள் எந்த விதமான தண்டனையை சந்திக்கின்றன? “அதிக பட்ச தண்டனை” என்பது ‘ஏன் இப்படி செய்தீர்கள்’ என்ற பிரஸ் கவுன்சிலின் கண்டனம் மட்டும்தான். தமது பத்திரிகையில் வெளிப்படையாக மன்னிப்பு கூட அவர்கள் கேட்கத் தேவையில்லை என்பதுதான் நிலை.

கட்டணச் செய்திகள் தேர்தல்கள் தொடர்பாக மட்டுமே கண்காணிக்கப்பட்டாலும் பெரும்பாலான ஊடகங்களில் அது ஒரு தினசரி நடைமுறையாக உள்ளது. பெரிய கார்ப்பரேட்டுகள் பற்றி வெளியாகும் வயிற்றைக் குமட்டும் ஊடக கவரேஜ்களில் கட்டணச் செய்தியின் நாற்றம் கடுமையாக அடிக்கிறது. அரசு விளம்பரங்கள் மூலம் ஆளும் கட்சிகளும் பத்திரிகைகளில் சாதகமான செய்தி வெளியீட்டை விலைக்கு வாங்குகின்றன.

டாவோசில் நடக்கும் உலக பொருளாதார மன்ற கூட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து போகும் பத்திரிகையாளர்களுக்கும் தொலைக்காட்சி சேனல்களுக்கும் யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் பல ஆச்சரியங்கள் கிடைக்கலாம்.

(கட்டண செய்தி குறித்து பி சாய்நாத் எழுதி இந்து நாளிதழில் வெளியான செய்தியை தழுவி எழுதப்பட்டது)

மேலும் படிக்க