Tuesday, May 6, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்டீசல் விலைஉயர்வு : நாடெங்கும் மீனவர்கள் வேலை நிறுத்தம் !

டீசல் விலைஉயர்வு : நாடெங்கும் மீனவர்கள் வேலை நிறுத்தம் !

-

மீன்பிடி படகுகள்டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநில மீனவர்களும், புதுச்சேரி காரைக்கால் மீனவர்களும், தமிழ்நாட்டில் நாகப் பட்டினம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 17ம் தேதி மத்திய அரசு அறிவித்த டீசல் விலை உயர்வில் மீன் பிடித் தொழிலை தொழில் நடவடிக்கையாக வரையறுத்து அதற்கான மானியத்தை முற்றிலும் ரத்து செய்திருக்கிறது. அரசு பேருந்துகளுக்கும், ரயில்வேக்கும் உயர்த்தப்பட்டதைப் போல ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ 11.62 உயர்த்தப்பபட்டு ரூ 61.17க்கு விற்கப்படுகிறது.

கோவாவில் ஆண்டுக்கு 7 கோடி டன் மீன் பிடிக்கும் 1,200 மீன்பிடி படகுகள் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. வேலை நிறுத்தம் காரணமாக கட்போனா, பெடிம், சாபோரா ஆகிய மூன்று மீன் பிடி துறைமுகங்களிலிருந்தும் எந்த படகும் கடலுக்குப் போகவில்லை.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க போகவில்லை. சுமார் 2,500 படகுகள் கடலூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பரங்கிப்பேட்டை மீனவர்கள், 10வது நாளாக மீன்பிடிக்கப் போகவில்லை.

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 11,000 மீனவர்கள் ஞாயிற்றுக் கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகம் மற்றும் அரசலாற்றில் வரிசையாக கட்டி வைக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்தின் பழையாறு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 10 நாளாக கடலுக்குப் போகாமல் வேலை நிறுத்தம் செய்கின்றனர். 300 விசைப் படகுகளும், 1000 பைபர் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 5,000 மீனவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் 5 ஆயிரம் விசைப்படகுகளும் விசைப்படகு மீனவர்கள் 45 ஆயிரம் பேரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் 4வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நாகை துறைமுக பகுதியில் உள்ள கடுவையாற்றில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விசை மற்றும் பைபர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு 1,500 – 2,000 லிட்டர் டீசல் தேவைப்படும் ஆழ்கடலுக்குச் சென்று 3 – 4 நாட்கள் தங்கி மீன் பிடித்து வருவதற்கு 6,000 லிட்டர் வரை டீசல் தேவைப்படும்.

‘உயர்த்தப்பட்டுள்ள இவ்விலைக்கு டீசல் வாங்கி தொழில் செய்வது மீனவர்களால் ஆகாத காரியம்’ என்கிறார் காரைக்கால் மாவட்ட மீனவர் நடராஜன்.

‘எங்கள் தொழிலுக்கே ஆதாரமான டீசல் விலை உயர்வு சுமக்க முடியாத சுமை’ என்கிறார் கோவா மாநில மீனவர்கள் சங்கத் தலைவர் ஜான் மேண்டேஸ்.

‘எங்கள் உயிர் போக நேரிட்டாலும், எங்கள் கோரிக்கைகளை காதுக்கொடுத்து கேட்க, அரசு முன்வரும் வரை படகுகளை கடலுக்குள் செலுத்தப் போவதில்லை’ என்கிறார் மகாராஷ்டிரா மீனவர் சங்க உறுப்பினர் ஒருவர்.

தங்கள் வாழ்வாதாரமே ஆட்டம் கண்டு, இந்த விலை உயர்வை எதிர்த்து போராடும் மீனவர்களின் துயரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, அவர்களின் போராட்டத்தினால் ஏற்பட்ட மீன் விலை உயர்வையும், சந்தையில் மீன் வரத்து குறைந்ததையும் குறித்து உச்சுக்கொட்டி எழுதுகின்றன பத்திரிகைகள்.

‘முதலாளிகளின் நலன்களுக்கான கொள்கைகளை வகுத்து, சட்டங்களை உருவாக்குவோம், மக்களுக்கு வரும் கஷ்டமும், நஷ்டமும் மக்களுடைய பிரச்சனை’ என்று கார்ப்பரேட்டுகளையும் அன்னிய முதலீட்டாளர்களையும் மகிழ்விப்பதிலேயே குறியாக இருக்கும் அரசாங்கம் 10 நாட்களாக நடக்கும் மீனவர் போராட்டங்களை பொருட்படுத்தவில்லை.

கார்ப்பரேட்டுகளுக்கு 21 லட்சம் கோடி ரூபாய் வரி விலக்கை அள்ளிக்கொடுக்கும் அரசாங்கம், ஏழை, உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கத் தயங்குவதில்லை என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம்தான் மீனவர்களின் வாழ்வாதாரங்களை குலைத்துள்ள டீசல் விலையேற்றம்.

மக்களுக்கான அரசு அமைப்போம் என்று தேர்தல்களில் ஓட்டுப் பொறுக்கி ஆட்சிக்கு வரும் இவர்கள், பதவிக்கு வந்ததும் மக்கள் விரோத அரசாக செயல்பட்டு உண்மை முகத்தைக் காட்டுவது தான் இன்றைய போலி ஜனநாயக அரசியலின் அவலநிலை.

காவிரி டெல்டாவில் விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் அழிப்பு, விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை, கடற்கரை பகுதிகளில் மீனவர்களின் தொழில் நிறுத்தம், மின்வெட்டால் சிறுதொழில்கள் அழிப்பு என்று நாட்டையே சுடுகாடாக்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மலிவு விலையில் விற்று விட தயாரிப்பதுதான் இந்த மன்மோகன் சிங் – ப சிதம்பரம் – மான்டேக் சிங் அலுவாலியா கும்பலின் புதிய பொருளாதார கொள்கை.

மேலும் படிக்க